Friday, May 10, 2019

ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்!

ராதே கிருஷ்ணா 11-05-2019




ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (1)

எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05மே
2019 
00:00

உலக வரைப்படத்தில் மட்டுமே அமெரிக்காவை பார்த்திருந்த எனக்கும், என் மனைவிக்கும், அமெரிக்கா செல்லும் வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது.
அமெரிக்காவில் உள்ள என் மருமகன் மூலம், சென்னை அமெரிக்க துாதரகத்தில், 'ஆன்லைனில்' விசாவிற்கு விண்ணப்பித்து, நேர்காணல் தேதி வாங்கினோம்.
அமெரிக்க விசா வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நடைமுறையில் பெரிய சிரமமாக இருக்கவில்லை. நேர்காணல் தேதியன்று சென்னை, அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துாதரகத்திற்கு சென்றோம்.
வரிசையில் காத்திருந்தோம். அருகில் இருந்தவர்கள், 'என்ன கேள்வி கேட்பர், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும்...' என்று பேசி, பதில்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் பயமும், பதற்றமும் எங்களையும் தொற்றிக் கொண்டது.
எங்களுக்கு முன் இருந்தவர்களை அழைத்து, சில கேள்விகளை கேட்ட அமெரிக்க துாதரக பெண் அதிகாரி, அவர்களின் விசா விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார். இது, எங்களை மேலும் கலங்கடித்தது.
அடுத்து எங்கள் முறை. 'வணக்கம், வாருங்கள்...' என, தமிழில் அழைத்தார். தயக்கத்துடன் இருவரின் பாஸ்போர்ட்டை நீட்டினோம். அவற்றை சரி பார்த்த அப்பெண்மணி, எங்களை மீண்டும் பார்த்தார்.
'எத்தனை நாட்கள் அமெரிக்காவில் தங்க உள்ளீர்கள்...' எனக் கேட்டார். 'அதிகபட்சமாக ஆறு மாதம்...' என்றோம். சிறிது நேரம் கழித்து, 'உங்களுக்கு, விசா வழங்கப்பட்டு விட்டது; உங்கள் அமெரிக்க பயணம் இனிதாக வாழ்த்துக்கள்...' என்று ஆங்கிலத்தில் கூறி, பாஸ்போர்ட்களை வைத்துக் கொண்டார். விசா முத்திரையிட்டு, 'கூரியர்' மூலம் வீடு வந்து சேரும் என்று கூறப்பட்டது.
விசா கிடைத்த சந்தோஷத்தில், விமான பயணத்திற்கான டிக்கெட் போடும் வேலையில் இறங்கினோம். 'எமிரேட்ஸ்' விமானத்தில், துபாய் வழியாக, சிகாகோ சென்று திரும்புவதற்கான டிக்கெட், கைக்கு வந்து சேர்ந்தது.
'கையுடன் எடுத்து செல்லும் சுமைகளையும் சேர்த்து, ஒரு நபர், அதிகபட்சமாக, 53 கிலோ எடுத்து செல்லலாம்...' என்று கூறினர். சுமைகளை எடை போட்டு, 'பேக்' செய்து கொண்டோம். எதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது என்பதற்கு, விமான நிறுவனத்தில் இருந்து ஒரு பட்டியல் கொடுத்தனர். அவற்றை தவிர்த்து, மற்றவற்றை எடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு சென்றோம்.
அதிகாலை, 4:30 மணிக்கு விமானம். குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, விமானத்தில் ஏறினோம். அதுவரை பெரிய விமானங்களில் நான் பயணித்தது இல்லை. 'போயிங் 777' ரக விமானம் அது; கப்பல் போல இருந்தது. எங்களுக்கு உரிய இருக்கையில் அமர்தோம்.
சரியான நேரத்தில், விமானம் துபாய் நோக்கி பறக்கத் துவங்கியது.
இந்த நேரத்தில், என்னை அறியாமல், என் முதல் விமானப் பயணம் நினைவிற்கு வந்தது. கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கு முன், 'ஏர்டெக்கான்' விமான நிறுவனம், சென்னை - டில்லி இடையே, குறைந்த கட்டண சேவையை துவங்கியது.
இந்த விமானத்தில், பத்திரிகையாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். என்னையும், புகைப்பட நண்பர், மாரியப்பனையும், 'தினமலர்' சார்பில், அனுப்பி வைத்தார், அந்துமணி. டில்லி சென்று, ஒரு நாள் முழுவதும் நகரை சுற்றிப் பார்த்து, மாலை அதே விமானத்தில், சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், மழை பெய்ய துவங்கியது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகமும், மழைப் பொழிவும் அதிகரித்ததால், அவ்வப்போது விமானம் தள்ளாடத் துவங்கியது.
முதல் பயணம் என்பதால், மிகவும் பயந்து விட்டோம். நண்பர் மாரியப்பனோ, பிள்ளை குட்டிகளை நினைத்து அழும் நிலைக்கு சென்று விட்டார். ஒரு வழியாக விமானம், சென்னையில் தரையிறங்கியதும் தான் எங்களுக்கு மூச்சே வந்தது.
மறுநாள் காலை, அழைத்தார், அந்துமணி.
'டில்லி பயணம் எப்படியிருந்தது?' என்று கேட்டார்.
விமானத்தில் பட்ட பாட்டை வரி விடாமல் கூறினேன். அதைக் கேட்டு, குலுங்கி குலுங்கி சிரித்த அவர், 'முதல் விமானப் பயணம் அப்படி தான் பயமாக இருக்கும். அடுத்தடுத்து சென்றால் சரியாகி விடும்...' எனக் கூறினார்.
அந்த நினைவுகளை அசை போட்டபடியே, விமானத்தில் அமர்ந்திருந்தேன். கிட்டத்தட்ட நான்கு மணி நேர பயணத்திற்கு பின், துபாயை அடைந்தது, விமானம். அங்கு, சிகாகோ புறப்படும் விமானத்திற்கு மாற வேண்டும். சிரமமில்லாமல், அந்த விமானத்தையும் பிடித்தோம்.
பல்வேறு நாடுகளில் இருந்து, சிகாகோ செல்ல வரும் பயணியர் ஒருங்கிணைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படுகின்றனர். கிட்டத்தட்ட, 350 பயணிகளுடன், அந்த விமானம் புறப்பட்டது. '15 மணி நேர பயணத்திற்கு பின், சிகாகோவில் தரையிறங்கும்...' என்று, விமானி அறிவித்தார்.
இருக்கைக்கு முன் வைக்கப்பட்டுள்ள கையடக்க, 'டிவி'யில், விமானம் எவ்வளவு உயரத்தில், எத்தனை கி.மீ., வேகத்தில், எந்த நாட்டிற்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் வந்தபடி இருந்தன. மேலும், திரைப்படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் சில ஆங்கில, தமிழ் படங்களை பார்த்து, நேரத்தை கடத்தினோம்.
நாங்கள் சென்ற விமானம், 50 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு, 950 கி.மீ., வேகத்தில் பறந்து கொண்டிருப்பதாக, 'டிவி'யில் தெரிய வந்தது; பிரமித்துப் போனாம்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், காலை உணவு வந்தது. டிக்கெட் வாங்கும்போதே, சைவம் என்று குறிப்பிட்டிருந்ததால், வெண் பொங்கல், 'ஸ்டப்டு' பஜ்ஜி, சாலட் என, உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஜூஸ், காபி, டீ, 'உற்சாகபானம்' என, எது வேண்டுமானாலும் தருகின்றனர்.
ஒரு கப் டீ சாப்பிட்டுவிட்டு, கண் அயர்ந்த சமயம், எங்கள் இருக்கைக்கு பின் இருந்து, ஒரு பெண், அலறும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்தபோது, ஒரு இளம் பெண், இருக்கையின் மீது எழுந்து நின்று, புரியாத பாஷையில் கத்திக் கொண்டிருந்தார்...
— தொடரும்.

எஸ்.உமாபதி 





ஒரு சாமான்யனின் அமெரிக்க பயண அனுபவம்



பதிவு செய்த நாள்

12மே
2019 
00:00


விமான பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண் திடீரென அலறியதில், பயணிகள் அனைவரும் அரண்டு போயினர். விசாரித்ததில், அப்பெண், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக பெற்றோருடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவதும் தெரிய வந்தது. இதையறிந்த பயணிகள், அமைதி அடைந்தனர்.
சிறிது நேரத்தில், எங்கள் அருகில் காலியாக இருந்த இருக்கையில், அப்பெண் அமர்ந்தார். உள்ளுக்குள் லேசான உதறல். முதலில் அமைதியாக இருந்த அவர், பின்னர் சரளமான ஆங்கிலத்தில், எங்களுடன் பேச துவங்கினார்.
ஆங்கிலம் எனக்கு சரியாக தெரியவில்லை என்றாலும், அவர் பேசியதை புரிந்து கொள்ள முடிந்தது. அரைகுறை ஆங்கிலத்தில் நானும், என் மனைவியும் பதில் அளித்தோம். 'கொஞ்ச நேரத்திற்கு முன் கூச்சலிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணா இவர்...' என்று நினைக்கும் அளவிற்கு, மிகவும் புத்திசாலித்தனமாக பேசினார்.
அருகில் அமர்ந்திருந்த தன் தாய், தொந்தரவு செய்ததாலேயே சத்தம் போட்டதாக கூறினார். மிகவும் அழகான அந்த இளம் பெண், விரைவில் குணமாக, கடவுளை வேண்டிக் கொண்டோம்.
கிட்டத்தட்ட, 15 மணி நேர பயணத்திற்கு பின், விமானி பேசினார்...
'நாம் அமெரிக்காவின் அழகிய நகரான, சிகாகோவில், இன்னும் சில நிமிடங்களில் இறங்கப் போகிறோம்...' என, அறிவித்தார்; மனம் துள்ளல் போட்டது. அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தேன். மேகக் கூட்டம் விலகி, வானளாவிய கட்டடங்கள் தெரியத் துவங்கின. சில விநாடிகளில் விமானம், சிகாகோவில் தரையிறங்கியது.
எங்களை வரவேற்க மகள், மருமகன் மற்றும் பேத்தி வந்திருந்தனர்.
10 நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு வெளியேறி, சிகாகோவின் புறநகரில் உள்ள வீட்டிற்கு சென்றோம்.
சிறிது ஓய்விற்கு பின், அமெரிக்காவை சுற்றிப் பார்க்க வேண்டிய பயண திட்டங்களை கூறினார், மருமகன். சிகாகோவில் இருந்து புறப்பட்டு,
ஆறு நாள் பயணமாக, பல நகரங்களுக்கு, திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை பயண நிறுவனம், செய்திருந்தது. நபர் ஒன்றுக்கு, 500 டாலர் கட்டணம். இந்திய மதிப்பில், 35 ஆயிரம் ரூபாய். வேன் மற்றும் தங்குமிட செலவுகளை அந்நிறுவனம் செய்யும்.
சாப்பாடு, சுற்றுலா தலங்களில் வசூலிக்கப்படும், நுழைவு கட்டணம் ஆகியவை, நம் பொறுப்பு.
குறிப்பிட்ட நாளில், 16 பேர் பயணம் செய்யும் வகையிலான சொகுசு வேன் வந்தது. கடைசி நிமிடத்தில் பலர், தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டதால், ஆறு பேர் மட்டுமே புறப்பட்டோம்.
சீனாக்காரர் ஒருவர் வழிகாட்டியாக இருக்க, இன்னொரு சீனர், வேனை இயக்கினார். ஐந்து மணி நேர பயணம். அமெரிக்க சாலைகளில், 50 கி.மீ., துாரத்திற்கு ஒரு, 'மோட்டல்' என, ஆங்கிலத்தில் சொல்லப்படும் உணவகங்கள் உள்ளன.
அனைத்து பிரபல உணவு நிறுவனங்களுக்கும் அங்கு கடைகள் உள்ளன. பழங்கள், காய்கறிகள் துவங்கி, வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கின்றன. நாம் கையில் எடுத்து செல்லும் உணவுகளை சாப்பிட, சாப்பாட்டு அறை இருக்கிறது.
நாங்கள் எடுத்து சென்ற புளி சாதத்தை சாப்பிட்டு, காபியை வாங்கி குடித்த பின், பயணத்தை தொடர்ந்தோம். சாப்பாட்டு அறைக்கோ, கழிவறைக்கோ கட்டணம் கிடையாது.
கிட்டத்தட்ட, ஐந்து மணி நேர பயணத்திற்கு பின், டெட்ராய்ட் நகரத்தை அடைந்தோம். ஒரு அழகிய தொழில்நகரம், டெட்ராய்ட்.
இங்கு, ஏராளமான கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், இந்நகருக்கு, 'மோட்டார் சிட்டி' என்ற பெயரும் உண்டு.
அமெரிக்க அதிபர்களுக்கான, பாதுகாப்பான, குண்டு துளைக்காத கார்கள், இந்நகரில் இருந்து தான் தயாராகி செல்கின்றனவாம்.
இங்குள்ள, ஹென்றி போர்டு மியூசியம் பிரபலமானது. கிட்டத்தட்ட, 10 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மியூசியத்தை வலம் வந்தால் போதும்... அமெரிக்க சரித்திரத்தை, கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள முடியும்.
டெட்ராய்ட் நகரில் தான், மிகப் பிரபலமான கார் நிறுவனங்களான, 'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. துறைமுகத்தின் அருகே, வானளாவ நீண்டிருக்கும், அந்த கட்டடம், பிரமிப்பூட்டுகிறது.
நகரின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தோம். இரவு நெருங்கியதால், டெட்ராய்ட்டின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டோம்.
மறுநாள், பயணத்திற்கான மதிய உணவை தயார் செய்த பின், படுக்கைக்கு சென்றோம். காலை, 7:00 மணிக்கே கிளம்ப வேண்டும் என்று வழிகாட்டி கூறியிருந்ததால், சீக்கிரமே எழுந்து, புறப்பட தயாரானோம்.
நாயகரா அருவியை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். 'ஐந்து மணி நேர பயணத்தில் நயாகரா சென்றடையலாம்...' என்று அறிவித்த வழிகாட்டி, அந்த பிரம்மாண்ட அருவியின் அருமை, பெருமைகளை கூறியபடி வந்தார்.
நயாகராவை எங்கள் வேன் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அங்குள்ள ஒரு ஆபத்து குறித்து, வழிகாட்டி கூறியது, அதிர்ச்சியளித்தது.
- தொடரும்.

* பயணத்தின் போது, சைவ உணவுகள் கிடைப்பது அரிது என்பதால், வீட்டில் இருந்தே இரண்டு, மூன்று நாட்களுக்கான உணவை எடுத்துச் செல்வது உத்தமம். வாழை மற்றும் ஆப்பிள் பழங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும்
* தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்பதால், தண்ணீர் பாட்டில்களை அதிகமாக எடுத்து செல்லலாம். தங்கும் ஓட்டல்களில் அவற்றை நிரப்பிக் கொண்டால், குடிநீருக்காக கூடுதல் பணம் செலவிட அவசியம் இருக்காது
* ஓட்டல்களில், காலை உணவை இலவசமாக கொடுத்து விடுவர். சாப்பிட்ட பின், அங்கு வைக்கப்பட்டுள்ள, பழங்கள், பிரட், பிஸ்கட், தயிர், பால் பாக்கெட்டுகள் மற்றும் உலர் பழங்களை, 'பேக்' செய்து கொண்டால், பயணத்தின் போது கைகொடுக்கும்.

- எஸ்.உமாபதி


ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (3)


பதிவு செய்த நாள்

19மே
2019 
00:00


நயாகரா குறித்து, வழிகாட்டி கூறிய ஆபத்து என்னவாக இருக்கும் என, குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அவரே அது குறித்து கூறத் துவங்கினார்...
'அமெரிக்கா - கனடா நாட்டின் எல்லையில் உள்ளது, நயாகரா. இதனால், நயாகரா பாதையில் சாலையில் செல்வதற்கு பதிலாக பலர், கனடா நாட்டு சாலையில் சென்று, அந்நாட்டிற்குள் நுழைந்து விடுவர். கனடா அதிகாரிகள் அவர்களை பிடித்து, விசா இல்லாமல், நாட்டிற்குள் நுழைந்ததாக கூறி, நடவடிக்கை எடுப்பர்.
'இந்த பிரச்னையில் இருந்து தப்பி வருவது, பெரும் சிக்கல் என்பதால், நயாகரா சாலையில் சரியாக பயணிக்க வேண்டியது அவசியம்...' என்றார்.
அவர் கூறியது உண்மை தான். அமெரிக்கா - -கனடா எல்லையில், சாலைகள் மிகவும் அருகருகே அமைந்திருந்தன. கொஞ்சம் தவறினாலும், கனடா சாலையில் திரும்பி விடும் சூழ்நிலை இருப்பதை பார்த்தோம்.
எங்களின் வேன் டிரைவர், அடிக்கடி நயாகரா சென்று வந்தவர் என்பதால், சரியாக எங்களை அழைத்து போய் சேர்த்தார். அடுத்த எட்டு நாட்களில், குளிர் காலத்திற்காக, நயாகரா அருவி மூடப்பட உள்ளது என்ற நிலையில், நாங்கள் அங்கு இறங்கினோம். குளிர், ஊசியாய் உடம்பு முழுவதும் குத்த, எப்படியும் அந்த பிரமாண்ட அருவியை பார்த்தே தீர்வது என்ற பிடிவாதத்துடன், அருவி நோக்கி புறப்பட்டோம்.
'ஈரி' என்ற பிரமாண்டமான ஏரியில் இருந்து புறப்படும் நயாகரா ஆறு, கிட்டத்தட்ட, 56 கி.மீ., ஓடி, 'ஒன்டாரியோ' என்னும் ஏரியில் கலக்கிறது. இடையில், அமெரிக்க-ா - கனடா எல்லையில், அருவியாக கொட்டுகிறது. அமெரிக்க பகுதியில் ஒன்று, கனடா பகுதியில் இரண்டு என, இந்த பிரமாண்ட அருவி, மொத்தம் மூன்றாக பிரிந்துள்ளது.
அமெரிக்க பகுதியில், நயாகரா அருவி, 53 மீ., பள்ளத்தில் அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் செலுத்திய பின், அருவியை காண, ராட்சத, 'லிப்ட்' மூலம் இறங்கினோம். அங்கு, அருவியின் சாரலில் நனையாமல் இருக்க, தலையையும் மூடிக் கொள்ளும் வகையிலான, 'பிளாஸ்டிக் கோட்' தந்தனர்.
அதை அணிந்து, பிரமாண்ட படகில் ஏறி, நயாகராவை ரசிக்க புறப்பட்டோம். 10 நிமிட பயணத்தில், நயாகரா அருவி காட்சி தந்தது. உலகின் பிரமாண்ட அருவியை பார்த்த அந்த நொடியில், வியப்பின் உச்சத்திற்கே சென்றோம்.
மெல்ல மெல்ல அருவியை ஒட்டிச் சென்றது, படகு. அதிலிருந்து தெறித்த நீர் திவலைகள், எங்கள் மீது ஸ்பரிசித்த போது, ஒப்பற்ற அந்த பேரருவி, பன்னீர் தெளித்து எங்களை வரவேற்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கடும் குளிரான நிலையில், அருவியின் சாரல், குளிரை மேலும் அதிகப்படுத்தினாலும், அதை பொருட்படுத்தாமல் அந்த அற்புத அருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து, ரசித்தோம். 1,100 அடி அகலத்தில், 160 அடி உயரத்தில், நிமிடத்திற்கு, 60 லட்சம் கன அடி என்ற அளவில், விண்ணிலிருந்து கொட்டுவது போல் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.
அரை மணி நேரம் அருவியை ரசித்த பின், படகு, கரை திரும்பியது. பிரிய மனமில்லாமல் நயாகராவை திரும்பித் திரும்பி பார்த்தபடி, கரை சேர்ந்தோம். அந்த வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களை, இந்திய ஓட்டல்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார், வழிகாட்டி. வரிசையாக சிறிதும், பெரியதுமாக கடைகள் இருந்தன.
வட மாநிலத்தவர் தான், குறிப்பாக, குஜராத்தியர் தான் கடை வைத்துள்ளனர். சமோசா, சுண்டல் முதற்கொண்டு, 'சிக்கன் கபாப்' வரை கிடைக்கிறது. சமோசா சாப்பிட்டு, மசாலா டீயை ருசித்தோம்.

நயாகராவில், இந்திய - சீன முகங்களே அதிகம் தென்பட்டன. இது குறித்து, வழிகாட்டியிடம் கேட்ட போது, 'இங்கு மட்டுமல்ல, எல்லா சுற்றுலா தலங்களிலும் இந்த இரு நாட்டவர்கள் தான் அதிகம் தென்படுவர். அமெரிக்கர்கள் அதிகம் வரமாட்டார்கள். கை நிறைய சம்பளம் என்பதால், இந்தியர்கள், சீனர்கள் அதிகமாக வருகின்றனர்.
'அமெரிக்கர்கள், ஐந்து ஆண்டு காலம் சேமித்த பின்னரே, சுற்றுலா வர முடியும். இந்திய - சீன நாட்டினர் மீது, அமெரிக்கர்கள் அதிருப்தியடைய இதுவும் ஒரு காரணம்...' என்றார்.

நயாகரா அருவியை பார்த்த திருப்தியுடன், அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டோம். ஆறு மணி நேர பயணம். பார்க்க வேண்டும் என, நான் பல ஆண்டுகளாக கனவு கண்டு கொண்டிருந்த நகரம் அது.
இப்போது, என் கனவு நினைவாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தபோது, எங்கள் டிரைவர், வேனின் வேகத்தை திடீரென குறைத்தார். அவர் முகத்தில் ஒரு பயம்.
அதே நேரத்தில், எங்கள் வேனை தாண்டி, மின்னல் வேகத்தில் இரண்டு போலீஸ் கார்கள், 'சைரன்' ஒலித்தபடி கடந்தன. சில நிமிடங்களில் எங்களுக்கு முன் சென்ற வாகனங்கள் திடீரென நிற்க, எங்கள் வேனும் நின்றது. ஒன்றும் புரியாமல் நாங்கள் வேனுக்குள் அமர்ந்திருந்தோம்.
— தொடரும்.

எஸ். உமாபதி

ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (4)


பதிவு செய்த நாள்

26மே
2019 
00:00
நயாகராவில் இருந்து, நியூயார்க் நகருக்கு சென்று கொண்டிருந்த எங்கள் வேன், திடீரென நின்றதும், போலீஸ் கார்கள் மின்னல் வேகத்தில் எங்களை கடந்து சென்றதும், திகைப்பில் ஆழ்த்தியது. என்ன நடக்கிறது என்று பார்த்தோம். 
எங்களை கடந்து சென்ற போலீஸ் கார்களில் இருந்து இறங்கிய போலீசார், முன்னே சென்று கொண்டிருந்த ஒரு காரை மடக்கி, விசாரித்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரத்திற்கு பின், கார்கள் மெல்ல நகரத் துவங்கின. 
விசாரித்ததில், குறிப்பிட்ட அந்த கார் டிரைவர், அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்திற்கு அதிகமாக ஓட்டி வந்ததாகவும், அதனால், போலீசார் மடக்கி, அபராதம் விதித்தனராம்.
இந்த நேரத்தில், அமெரிக்க போலீசை பற்றியும், அங்குள்ளோர், போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்தும் சொல்லியே ஆக வேண்டும்... 
எல்லா சாலைகளிலும், வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்த அறிவிப்பு பலகைககளை, தெரியும்படி வைத்துள்ளனர். என்ன அவசரம் என்றாலும், வாகன ஓட்டிகள் அந்த அளவை மீறுவதில்லை. மீறுபவர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகின்றனர். 
குழந்தைகளுக்கு கண்டிப்பாக, 'பேபி சேர்' எனப்படும், பாதுகாப்பான இருக்கைகள் இருக்க வேண்டும். நம் ஊர் போல, குழந்தைகளை மடியிலோ அல்லது தனி இருக்கையிலோ அமர வைத்து அழைத்துச் சென்றால், அபராதம் நிச்சயம். வாகன ஓட்டியும், முன் சீட்டில் அமர்ந்திருப்பவரும், 'பேபி சேரில்' அமர்ந்திருக்கும் குழந்தையும் கண்டிப்பாக, 'சீட் பெல்ட்' அணிந்திருக்க வேண்டும். 
சிக்னல்களில் கார்கள், எந்த தடத்தில் வந்தனவோ, அதிலேயே, முன் உள்ள வாகனத்திற்கு பின், இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தடம் மாறி, மாற்று தடத்தில் முன் வந்து வாகனத்தை நிறுத்தினால், தண்டனை. விபத்து போன்ற காரணங்களால் போக்குவரத்து நிறுத்தப்பட்டால், எவ்வளவு நேரம் ஆனாலும் வாகனங்கள் காத்திருக்கின்றன.
பாதசாரிகள் குறுக்கிட்டால், அவர்கள் சாலையை கடக்கும் வரையில், வாகனங்கள் பொறுமையாக நிற்கின்றன. சாலை விதிகளை அங்குள்ள அனைவரும் மதிக்கின்றனர். 

நியூயார்க் நகரில் உள்ள, 'டைம்ஸ் ஸ்கொயர்' சர்வதேச அளவில் சுற்றுலா பயணியரை கவரும் இடமாக உள்ளது. 
ஒருபுறம், மின் விளக்குகளின் விஞ்ஞான வித்தை பிரமிப்பூட்டிய நிலையில், மறுபுறம், கலைஞர்களின் தெரு முனை நடனங்கள், சுற்றுலா பயணியரை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது.
ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக பல்வேறு நடன நிகழ்ச்சிகள், யதார்த்தமாக நடக்கின்றன. அவற்றை நீண்ட நேரம், பயணியர் ரசிக்கின்றனர். நள்ளிரவை எட்டிய நிலையில், ஓட்டல் அறைக்கு திரும்பினோம். 

மறுநாள் பொழுது விடிந்ததும், நியூயார்க் நகரின் பிரபலமான, 'நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 
அங்கு ஒரு விஷயம், என்னை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள, எருது சிலை அருகே, தள்ளுவண்டி கடைகளில், பல்வேறு பரிசுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், இந்திய நாட்டின் தேசிய கொடியும் தென்பட்டது.
விசாரித்தபோது, சுற்றுலா வரும் இந்தியர்கள், மூவர்ணக் கொடியை அதிகமாக வாங்குவதாக கூறினர். கடல் கடந்து வசிக்கும் நம்மவர்களின் நாட்டுப் பற்றுக்கு, மனதிற்குள் ஒரு சலாம் போட்டு, நகர்ந்தோம். 

அடுத்ததாக, பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, உருக்குலைந்து, மண்ணோடு மண்ணாகிப் போன, 'டூவின் டவர்' எனப்படும், இரட்டை கோபுரம் இருந்த இடத்திற்கு சென்றோம்.
இறங்கியவுடன், ஒரு இனம் புரியாத சோகம், மனதை அழுத்தியது. எண்ணத்திரையில், வானுயர்ந்து நின்ற இரட்டை கோபுரங்களும், அடுத்தடுத்து, அவற்றின் மீது மோதிய விமானங்களும், அதை தொடர்ந்து கம்பீரமாக நின்ற அந்த கட்டடங்கள், தீயில் வெந்த சருகுபோல் சரிந்து விழுந்ததும், நினைவுக்கு வந்தன. 
இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில், ஒரு நினைவுச் சின்னம் அமைத்துள்ளனர். அதன் பக்கவாட்டுச் சுவர்களில், பலியான, 3,000 பேரின் பெயர்களை பொறித்து வைத்துள்ளனர். அங்கு வரும், அமெரிக்க சுற்றுலா பயணியர், மெழுகுவர்த்தி ஏற்றி, பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய, பிரார்த்தனை செய்வதை பார்த்தபோது, மனம் கனத்தது.
நாங்களும் மவுன அஞ்சலி செலுத்தி, அந்த நினைவிடத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக வர்த்தக மைய கட்டடத்திற்குள் நுழைந்தோம்.
மொத்தம், 104 மாடிகள் உடைய அந்த கட்டடத்தின், 100வது மாடிக்கு, ஒரு ராட்சத லிப்ட், 49 வினாடிகளில் எங்களை அழைத்து போய் சேர்த்தது. அங்கு, இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் புதிய கட்டடம் கட்டப்பட்டது குறித்து விளக்கம் அளித்தனர். 100வது மாடியில் இருந்து பார்க்கும் போது, நியூயார்க் நகரின் பிரமாண்டம் தெரிந்தது.
ஒரு புறம் கடல், மறுபுறம் விண்ணுக்கு சவால்விடும் வகையிலான கட்டடங்கள். பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது. சிற்றுண்டி சாலை மற்றும் புத்தக சாலை ஆகியவை, அந்த மாடியில் அமைந்துள்ளன.
உலக வர்த்தக மைய கட்டடத்தை அணு அணுவாக ரசித்த பின், அடுத்ததாக, சுதந்திர தேவி சிலையை பார்க்க கிளம்பினோம்.
- தொடரும்.

எஸ். உமாபதி 



ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம் (5)


பதிவு செய்த நாள்

02ஜூன்
2019 
00:00
அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற, சுதந்திர தேவி சிலையை பார்க்க புறப்பட்டோம். தங்கள் நட்பை வெளிப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டு மக்கள், அன்புடன் அளித்த இச்சிலை, 1886ல் நிறுவப்பட்டது. பிரமிப்புடன், அந்த வரலாற்றுச் சின்னத்தை பார்த்த மன நிறைவுடன் திரும்பினோம். 
அடுத்து, வாஷிங்டன் நகருக்கு பயணித்தோம். 'உலக போலீஸ்காரன்' என்று அழைக்கப்படும், அமெரிக்காவின் இன்றைய தலைநகரம், எங்களை அன்புடன் வரவேற்றது. ஒட்டு மொத்த அமெரிக்காவின் அதிகார மையமான, வெள்ளை மாளிகை, ஆப்ரகாம் லிங்கன் நினைவரங்கம், அமெரிக்க காங்கிரஸ் கட்டடம் என, பல புகழ் பெற்ற இடங்கள் உள்ள, வாஷிங்டன் நகரை வலம் வந்தோம். 
அங்கிருந்து, பிலடெல்பியா நகருக்கு பயணமானோம். அமெரிக்க புரட்சிக்கு வித்திட்ட, இந்நகரத்துக்கு, அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் உள்ளது. அமெரிக்காவின் முதல் தலைநகராக விளங்கிய, இந்நகரில், சுதந்திர பூங்கா, அங்குள்ள, 'லிபர்ட்டி பெல்' என்றழைக்கப்படும், பழமை வாய்ந்த மணி ஆகியவை, சுற்றுலா பயணியரை அதிகமாக கவர்கின்றன. 
சிகாகோ ஒரு அழகான நகரம். அமெரிக்காவின் பல பெரிய நகரங்களை பார்த்திருந்தாலும், சிகாகோவின் அழகிற்கு ஈடு இணை இல்லை என்றே கூறலாம். அங்குள்ள, 'பிக் பஸ்' மூலம், நகரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களை, இரண்டே மணி நேரத்தில் கண்டு ரசிக்கலாம். 'பிக் பஸ்' எனப்படும், மாடி பஸ்சில் அமர்ந்து, வானுயர்ந்து நிற்கும் கட்டடங்களை பார்த்து ரசிக்க, ஆயிரம் கண்கள் போதாது. 
அமெரிக்க பயணம் முடிந்து, நாடு திரும்புவதற்காக, சிகாகோ விமான நிலையத்தில் இருந்து, 'எமிரேட்ஸ்' விமானம் மூலம் புறப்பட்டோம். விமானம் பறக்கத் துவங்கியதும், என் சிந்தனை முழுவதும் எல்லா வளங்களும் இருந்தும், இந்தியா ஏன், அமெரிக்கா போல வளர்ச்சி காணவில்லை என்ற கேள்வியிலேயே இருந்தது.
மிகப்பெரிய ஞானிகள், விஞ்ஞானிகள், அரசியல், சட்ட மேதைகளை உருவாக்கி, உலகிற்கு தந்துள்ளது, இந்தியா. ஆனால், ஏன் இன்னும் வளர்ச்சி காணாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது...
அமெரிக்காவின் செல்வச் செழிப்பு பிரமிக்க வைக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே சீரான நடைமுறை காணப்படுகிறது. அரசு அலுவலகங்கள், காவல்துறை, தனியார் நிறுவனங்கள், திட்டமிட்டு செயலாற்றுகின்றன; எங்கேயும் விதிமீறல் இல்லை. இந்த ஒழுக்கம் தான், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணம் என்று எண்ணத் தோன்றியது.
இது எப்படி சாத்தியம், என்ன காரணம் என்று யோசித்தபோது, ஒரே ஒரு அம்சம் தான், நினைவுக்கு வந்தது. அது, தண்டனை; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை நிச்சயம் என்பது, அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாலை விதிகளில், சிறு மீறல் என்றால் கூட, சிறு தண்டனை நிச்சயம் என்பதால், மக்கள் அங்கு சட்டத்தை மதிக்கின்றனர்; எதற்கும் தங்களை சமரசம் செய்து கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்று தருகின்றனர், சட்டத்தை செயல்படுத்துவோர். 
ஆனால், இந்தியாவில், சட்டத்தை செயல்படுத்த வேண்டிய ஆளும் வர்க்கமும், அதிகாரிகளும், சோடை போய் விடுகின்றனர். தண்டனையில் இருந்து தப்ப, ஏராளமான வழிமுறைகள் இங்குள்ளன. மக்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். விளைவு, எல்லாவற்றிலும் ஊழல்.
இந்தியாவிலும் சட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்காவை விட, பன்மடங்கு வளர்ச்சி பெறுவது உண்மை. அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொண்டிருந்த நிலையில், விமானம் சென்னையில் இறங்கியது.
பெட்டிகளை சேகரித்து, மின்சார ரயிலில், சென்னை மக்களோடு மக்களாக கரைந்து போனோம். 
முற்றும்

எஸ். உமாபதி

No comments:

Post a Comment