Friday, May 17, 2019

அன்புடன் அந்தரங்கம்!

ராதே கிருஷ்ணா 18-05-2019



அன்புடன் அந்தரங்கம்!


பதிவு செய்த நாள்

12மே
2019 
00:00
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 29, படிப்பு, பி.காம்., கணவர் வயது, 33. எங்களுடையது, பெற்றோரின் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். என் கணவர் வீட்டில், இத்திருமணத்தில் அவ்வளவாக சம்மதமில்லை. வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டனர்.
மத்திய அரசு பணியில் உள்ளார், என் கணவர். அவருக்கு, இரு தம்பிகள். எங்களுக்கு, ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
கணவரின் ஒரு தம்பிக்கு, சமீபத்தில் திருமணமானது. வீட்டில், சகல மரியாதைகளும் அவருக்கு தான் கிடைக்கிறது. அவரையும், அவர் மனைவியையும் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர், மாமனார் - மாமியார். 
வீட்டு விசேஷமானாலும், அவர்கள் உறவினர் வீட்டு விசேஷமானாலும், தம்பியும், அவர் மனைவிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பர்.
நாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் போல் இருக்க வேண்டும். தனிக்குடித்தனம் போகலாம் என்றால், என் கணவர் மறுக்கிறார். 'என் ஜாதிகார பெண்ணை திருமணம் செய்திருந்தால், வீட்டிலும், உறவினர் மத்தியிலும் மரியாதை கிடைத்திருக்கும்...' என்று, அவர் சொல்லியபோது, சுக்கு நுாறாகிப் போனேன்.
இப்போது, இன்னொரு தம்பிக்கு பெண் பார்த்து வருகின்றனர். அவருக்கும் திருமணமாகி, மூன்றாவது மருமகளும் வந்து விட்டால், எங்கள் நிலை என்னாகுமோ... நினைத்தாலே, 'பகீர்' என்கிறது.
ஒரே வீட்டில், தனி தீவாக இருப்பது, ஒவ்வொரு நாளும் படு இம்சையாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்,


அன்பு மகளுக்கு —
பெரியோரால் பார்த்து நடத்தி வைக்கப்படும் திருமணங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், கவனிப்பும், காதல் திருமணங்களுக்கு ஒரு போதும் கிடைக்காது; அவர்கள், இரண்டாம் பட்சம் தான்.
இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும் மகளே... 
உங்களது காதல் திருமணம் நடந்து, ஆறு ஆண்டுகளாகி விட்டன. காதல் திருமணம் மூலம் வந்தவளோ, பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் மூலம் வந்தவளோ, எப்படி இருந்தாலும், நீ பழைய மருமகள். புதிதாக நடந்த கொழுந்தனார் திருமணத்தை, கணவன் வீட்டார் கொண்டாடுவது, தலையில் வைத்து கூத்தாடுவது, இயல்பான விஷயம் தானே...
உன்னை புறக்கணிப்பதாக, புகார் கூறுவது கூட, உன் தாழ்வு மனப்பான்மையாக இருக்கக் கூடும். நாளை, உன் கொழுந்தனும், அவர் மனைவியும், பழைய ஜோடி ஆகி விடுவர். இளைய கொழுந்தனுக்கு திருமணம் ஆகும்போது, அவனும், அவன் மனைவியும், கணவன் வீட்டாரால் கொண்டாடப்படுவர்.
கடைசி மகனுக்கு திருமணமாகி, மூன்று மருமகள்களுடன் இருந்து பார்த்த பிறகு, யார் சிறந்தவள் என, மனத்தராசில் எடை பார்க்கப்பட்டு, சிறந்த மருமகள் நீ என, கொண்டாடப்படும் காலமும் வரலாம்.
காதல் திருமணம் செய்த உனக்கும், உன் கணவனுக்கும், வெற்றிகரமான தாம்பத்யம் மற்றும் மகளின் ஒளிமயமான எதிர்காலம் முக்கியமா அல்லது புகுந்த வீட்டு வானவில் மரியாதைகள் முக்கியமா என யோசி.
புகுந்த வீட்டு மரியாதைகளும் வேண்டாம், அதே நேரத்தில் உள்ளுக்குள்ளேயே இருந்து, இரு தரப்பும் அவதிப்படவும் வேண்டாம் என்றால், ஏன் ஊமையாய் இருந்து குமைகிறீர்கள்... உறவு சிறை, புழுக்கமாக, புகைச்சலாக இருந்தால், தனிக்குடித்தனம் போய் விடு.
'பெற்றோருக்கும், மனைவி, மகளுக்கும் இடையே, இருதலை கொள்ளி எறும்பாய் ஏன் தவிக்கிறாய் கணவா... வா... தனிக்குடித்தனம் போய் விடலாம்...' என, கணவனை மூளை சலவை செய். காதலிக்கும்போது, செய்த சாகசத்தில் ஒரு பகுதியை திருமணத்திற்கு பின் செய்ய தெரியாதா உனக்கு?
ஆணும், பெண்ணும், ஒவ்வொரு உறவு நிலையில் நின்று, சக உறவுகளிடம் முதல் மரியாதை எதிர்பார்ப்பது, மனித மனங்களின், 'ஈகோ' செய்யும் மாய்மாலம். ஒரு மனிதருக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு, 'ஈகோ' இருந்தால், அது, வாழ்க்கையில் பல சிறப்புகளை கொடுக்கும்; மிதமிஞ்சி இருந்தால், நிம்மதியை கெடுக்கும்.
பணத்தையும், மரியாதையையும் நாம் தேடி போகக் கூடாது... அவை, நம்மை நாடி வரவேண்டும். அமைதியுடன், குடும்ப வாழ்க்கையில் நிரந்தர வெற்றி பெறு, மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், 
சகுந்தலா கோபிநாத்.

No comments:

Post a Comment