Tuesday, March 31, 2020

அத்வைதம் / விசிஷ்டாத்வைதம் / துவைதம்

ராதே கிருஷ்ணா 01-04-2020



ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் 17 முறை சென்று 18வது முறை சென்ற போது ரஹஸ்ய அர்த்தம் கொடுத்தார்.

18 ரஹஸ்யங்கள்

1. சம்சாரம் நசித்து வாரும்

2. அஹங்காரம் மாநகரம் தொலைத்து வாரும்

3. தேஹாத்பிமானம் துறந்து வாரும்

4. ஆத்மஞானம் கைவந்து வாரும்

5. ஐஸ்வர்ய போகங்கள் ஆசையற்று வாரும்

6. பகவத் விஷயத்தில் ஆசை வைத்து வாரும்

7. விஷயீந்திரத்தில் ஆசை அற்று வாரும்

8. பாரதந்திரியத்தில் கைவந்து வாரும்

9. அர்த்த காம ராஜ த்வேஷ அற்று வாரும்

10. ஸ்ரீவைஷ்ணவத்துவம் கிடைத்து வாரும்

11. சாத்வீகர்கள் பரிச்சயம் பெற்று வாரும்

12. பாகவத பரிச்சயம் பெற்று வாரும்

13. பகவத் பரிச்சயம் பெற்று வாரும்

14. அனன்யா சேஷத்வ பிரயோஜனம் பெற்று வாரும் (நாராயணாய)

15. ஓங்காரம் (அவனுக்கே அடிமை) அறிந்து வாரும்

16. அனன்யா சரணம் அறிந்து வாரும்

17.  அதிகார பூஷனாகி வாரும்  (ஆச்சர்ய)

18.  ரஹஸ்ய அர்த்தம் கொடுத்தார்



















ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு இரண்டும் தனித்தனி என்பது மத்வாரின் துவைதம். நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு என்று சொல்லி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பாவிப்பது துவைதம்.
இராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு சிறிய பகுதி. அதாவது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒரே பொருளால் ஆனவைதான். ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்துதான் வெளிப்பட்டது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை என்பது அவர் கருத்து.
ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. இரண்டும் வேறு வேறு அல்ல என்பதாகும். இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம். (துவைதம் அற்ற நிலை, இரண்டற்ற ஒருமை நிலை.)
அத்வைதம், துவைதம் இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது விசிஷ்டாத்வைதம்.(செவ்விருமை)
இது பற்றி எம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பேசும் பொழுது அவர் சொன்ன விளக்கம் என்னவென்றால்,
நமக்கு முன் உணவு (துவைதம்)
வயிற்றுக்குள் உணவு (விசிட்டாத்துவைதம்)
உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை (அத்துவைதம்).
சுவாமி விவேகானந்தர் இந்த மூன்றையும் இணைத்து அருமையான யோக விளக்கத்தை அருளினார்.
ஆன்மிகவாதியின் தொடக்க நிலை துவைதம். இடைப்பட்ட நிலை விசிஷ்டாத்வைதம். முடிந்த முழுமையான நிலை அத்வைதம் என்றார். ஆதியும், அந்தமுமில்லாத, துவக்கமும், முடிவும் இல்லாதவர் பரம்பொருள் என்ற கோட்பாட்டின்படி பார்க்கும் பொழுது, தோன்றுகிற எல்லாம் எங்கிருந்து தோன்றுகிறதோ அங்கே ஒடுங்குகிறது. அப்படியென்றால் முடிவு அத்வைதமாகும் பட்சத்தில், துவக்கமும் அதாகத்தானே இருக்க முடியும். இக்கருத்தைச் சொல்லாமல் சொல்லி மூன்று பிரிவினரையும் இணைத்த பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும்.
வேதம், வேதாந்தம், உபநிடதங்கள் இவற்றால் மெய்யறிவு புலப்படும். ஆனால் மெய்யுணர்வு என்பது அதையும் கடந்து விளங்குவது. அதுவே ஆன அந்தம் - ஆனந்தம். இருளில் தட்டுத் தடுமாறி போய்க் கொண்டிருப்பவனுக்கு மெய்யறிவு என்பது விளக்கைப் போன்றது. அதன் துணையோடு அவன் மெய்யுணர்வை அடைய வேண்டும். எனவே முக்தி அடைய முயற்சி செய்கிற ஜீவாத்மா கடைபிடிக்கும் வழிமுறையே வேதாந்தம். அப்படி பரமாத்மாவை நோக்கி பயணப்படும் போது அந்த ஜீவன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியதிருக்கிறது. அதுவே துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்பவை. துவைதம் என்பது பசு, பதி, பாசம் அல்லது ஜீவன், மாயை, பரம் என்கிற போக்கில் பன்மையைக் குறிப்பது. பொதுவாக ஒன்றல்ல இரண்டு என்பார்கள். விசிஷ்டாத்வைதம் என்பது விசேஷமான அத்வைதம் என்பதே. அதாவது ஜீவனும், மாயையாகிய ஜகத்தும் பரமாத்மாவுக்கு சரீரமாக இருக்கின்றன. சரீரத்தையும் அதை உடையவனையும் இரண்டாகப் பிரிக்க முடியாது. எனவே அவன் இரண்டல்லாத தனிப் பொருள். ஆயினும் அவன் சரீரத்தையும் அதிலுள்ள அங்கங்களையும் பாகுபடுத்தலாம். இதையே பேத, அபேதம் என்பார்கள். அடுத்து அத்வைதம் அதாவது இரண்டற்றது. எல்லாம் ஒன்றுதான். எல்லாம் பரமே. அதற்கு வேறானது எதுவுமில்லை. மாயையின் லீலைகளான தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் யாவும் பரமாத்மாவை எந்த வகையிலும் விகாரப்படுத்தாது. ஏனெனில் அவர் பூரணமானவர். பரமாத்மா பரிபூரணமானவர். எல்லாம் பரசிவமயம். என்பது முடிவு.
இந்த துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்கிற மூன்று நிலைகளை உபநிடதங்கள் அவஸ்தாத்ரயம் என்கிற நிலையில் விளக்குகிறது. அதாவது அவஸ்தைகள். அவைகள் ஜாக்கிரதம், ஸ்வப்னம், சுஷுப்தி( நனவு, கனவு, கனவற்ற உறக்கம்) என்கிற நிலைகள். ஜீவபோதம் படைத்துள்ள அனைவருக்கும் இவை பொதுவானவைகள் மட்டுமல்ல நாள்தோறும் நிகழ்பவை. அதாவது நனவு என்கிற விழிப்பு நிலையில் ஜீவனாகிய நான் வேறு, ஜகத்(வையகம்) வேறு, பரம் வேறு. ஈண்டு முப்பொருளும் உண்மையே என்கிற அவஸ்தை. இது துவைதம். சாதனைகள் புரிவதற்கும், முன்னேற்றம் அடைவதற்கும் இந்த நனவு நிலையாகிய துவைத நிலையே முற்றிலும் பயன்படுகிறது. கனவு நிலை என்கிற ஸ்வப்ன அவஸத்தையில் நான் காணுகின்ற உலகக் காட்சிகள், தெய்வக் காட்சிகள் யாவும் என் மனதின் கற்பனைகளே. என் மனோ விகாரங்கள் புறப் பொருளாகப் பொருள்படுத்தப்படுகின்றன. ஒரு பொருளாகிய மனது கனவில் பல பொருளாகத் தோன்றுகிறது என்கிற நிலை. இதையே பேதாபேதம்(பேத + அபேதம்) என்பார்கள். இதுவே விசிஷ்டாத்வைதம். அடுத்தது கனவற்ற உறக்கம் என்கிற சுஷுப்தி என்ற நிலை. இதிலே, நான் இல்லை. காணப்படுகின்ற புறப் பொருள்கள் எதுவும் இல்லை. வெறும் பிரக்ஞை(உணர்வு) அல்லது பிரக்ஞானம் மட்டும் தன்மயமாக இருக்கிறது. இது இரண்டற்றது. அத்வைத நிலை.
ஆக இந்த மூன்று நிலைகளாலேயே மனிதன் மேன்மை அடைந்து வருகிறான். எனவே இதில் ஒன்றை உயர்த்தியோ மற்றதைத் தாழ்த்தியோ பேசுவதோ, கருதுவதோ ஏற்புடைது அல்ல. சாதனை புரிபவர்களுக்கு இந்த மூன்று நிலைகளும் உதவுகின்றன. மனதின் இந்த மூன்று நிலைகளின் சிறப்பை உணர்ந்தவனே நல்ல சாதகன் ஆகிறான். மெய்ப்பொருள் ஞானம் பெற்ற ஞானிகள் எல்லாம் இந்த மூன்று நிலைகளிலும் திளைத்து மேன்மையடைந்திருக்கிறார்கள்.
''ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி '' - ரிக் வேதம்.
மெய்ப்பொருள் ஒன்றுதான். அதுவே பல பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
















41. ஒன்றுதான் ஆனாலும்...




ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்புத் தகுதியும், கூடுதல் மதிப்பும், சிறப்பு உரிமைகளும் உண்டல்லவா? அதுபோல்தான் வேதாந்தத்தில் பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, சில சிறப்புத்தன்மைகளால் ஜீவாத்மக்களைவிட பரமாத்மா மேலானது என்று வாதிடும் தத்துவம்தான் விசிஷ்டாத்வைதம்.
விசிஷ்டாத்வைதத்தை விசிஷ்ட அத்வைதம் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அத்வைதம் என்பது இருமையற்ற ஒருமை என்பதை அறிவோம். விசிஷ்ட என்றால் விசேஷத் தன்மை வாய்ந்த, அதாவது சிறப்புத்தன்மையுடன் கூடிய என்று பொருள். ஆக, விசிஷ்டாத்வைதம் என்றால் சிறப்புடை ஒருமை என்று கூறலாம்.
பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் வேறு வேறு அல்ல, பரமாத்மாவின் பிரதிபலிப்புதான் ஜீவாத்மா. ஆகையால், இருப்பது பரப்பிரும்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம். விசிஷ்டாத்வைதம் இதில் இருந்து சற்று மாறுபடுகிறது. “பரமாத்மா எனப்படும் பரப்பிரும்மம்தான் அனைத்திலும் வியாபித்திருக்கிறது என்றவகையில் இரண்டும் ஒன்றே என்றபோதிலும், ஜீவாத்மாக்களைவிட மேம்பட்டதாக பரப்பிரும்மம் எப்போதும் இருப்பதால் அது சற்று வேறுபட்டது, சிறப்புடையது” என்கிறது விசிஷ்டாத்வைதம். ஆற்றில் உள்ள நீர்த்துளிகள் எல்லாம் சேர்ந்து ஆறு என்று ஒற்றைச் சொல்லில் அழைக்கப்பட்டாலும், ஆற்று நீர்த்துளியைவிட ஆறு பெரியதும், சிறப்பும் வாய்ந்தது அல்லவா? அதைப்போல்தான் பரமாத்மாவும் ஜீவாத்மாக்களோடு ஒன்றியிருக்கின்றபோதிலும், அவற்றில் இருந்து மேம்பட்ட தனித்தன்மை வாய்ந்த சிறப்புடையதாகவும் திகழ்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.
அத்துடன், பரப்பிரும்மத்தை எவ்வித குணங்களும் அற்ற நிர்குணமாய் அத்வைதம் கூறுவதை விசிஷ்டாத்வைதம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்குண பிரும்மத்துக்குப் பதிலாக நற்குண பிரும்மத்தை முன்வைக்கிறது. அதாவது, ஜீவாத்மாக்கள் தங்களது முக்திக்காக சகுண (நல்ல குணங்கள் நிரம்பிய) பிரும்மத்தை ஆராதிக்கலாம் என்று அத்வைதம் கூறுகிறதல்லவா, அந்த நற்குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றதாகவே பரப்பிரும்மம் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம். மேலும், அத்வைத ஆசார்யர் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகின்ற மாயாவாதத்தை விசிஷ்டாத்வைதம் அடியோடு நிராகரிக்கிறது. பிரும்மம் மட்டுமே உண்மை, உலகம் ஒரு மாயை என்பதே சங்கரரின் அத்வைதம். ஆனால், பிரும்மத்தின் ஓர் அங்கமாகிய உலகமும் உண்மைதான் என்கிறது விசிஷ்டாத்வைதம்.
adi_shankaracharya_wallpaper.jpg 
பிரும்மத்தை நிர்குணமாகக் கூறுவது பிரும்மமே இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும் என்றும், இவ்வாறு கூறுவதும் உலகம் மாயை என்று மாயாவாதம் பேசுவதும் பௌத்தத்தின் தாக்கத்தால் விளைந்தது என்றும் குற்றம் சாட்டுகின்ற விசிஷ்டாத்வைத ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர், இதன் அடிப்படையில் ஸ்ரீ ஆதிசங்கரரை பிரசன்ன புத்தர் (மறைமுக புத்தர்) என்று விமரிசிக்கிறார். அக்காலத்தில், படித்தவர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற தத்துவங்களான பௌத்தம், சமணம், சாங்கியம், மீமாம்சை ஆகியவற்றை ஒருபுறம் வாதத்திறமையால் சமாளித்தும், பாமரர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்து மூர்க்கத்தனம் நிரம்பியவையாக காட்சியளித்த காபாலிகம், தந்திரம் போன்றவற்றை சீர்திருத்தியும் வேத, உபநிஷதங்களின் அடிப்படையிலான வேதாந்தக் கருத்துக்கு பாரதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனிப்பெரும் செல்வாக்கை நிலைநாட்டிய பெருமை ஆதிசங்கரரையே சாரும். இருப்பினும், அவர் வகுத்த பாதையில் சற்று பயணித்து புதிய மார்க்கங்களை பிற்கால வேதாந்திகள் உருவாக்கினர். அவர்களில் முக்கியமானவர், விசிஷ்டாத்வைதத்தை வகுத்தளித்த ராமானுஜர்.
சங்கரரைப் போலவே, ராமானுஜரும் பிரும்மசூத்திரத்துக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். அதற்கு ஸ்ரீ பாஷ்யம் என்று பெயர். மேலும், பகவத்கீதைக்கு கீதாபாஷ்யம் என்ற தலைப்பிலான விளக்கவுரையையும், வேத – உபநிஷதக் கருத்துகளுக்கான விளக்கத்தை வேதாந்த சங்கிரஹ என்ற தலைப்பிட்டும் எழுதியுள்ளார். மேலும் வேதாந்த சார, வேதாந்த தீப, சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் ஆகிய தத்துவ நூல்களையும் நித்ய கிரந்தம் என்ற வழிபாட்டுச் சடங்குகள் சார்ந்த நூலையும் இயற்றியுள்ளார்.
தனக்கு முன்பே விசிஷ்டாத்வைத ஆசார்யர்கள் இருந்ததாக வேதாந்த சங்கிரஹத்தில் ராமானுஜர் கூறுகிறார். போதாயனர், திரமிடர், தங்கர், குஹதேவர், கபர்தீ, பரூச்சி ஆகியோரை விசிஷ்டாத்வைத ஆசார்யர்களாக அவர் குறிப்பிடுகிறார். இவர்களில், போதாயனரின் உபநிஷத பாஷ்யங்கள் போதாயன விருத்தி என்ற பெயரில் தற்போது கிடைக்கப்பெற்றாலும், மற்றவர்களது படைப்புகள் தற்போது காணப்படவில்லை.
சங்கரரைப் போலவே உபநிஷதக் கருத்துகளையே தனது கொள்கைக்கான ஆதாரமாக ராமானுஜர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், தனது சிறப்புடை ஒருமையை (விசிஷ்டாத்வைதத்தை) நிரூபிக்க, அந்த உபநிஷதக் கருத்துகளுக்கும் நேரடியான பொருள் அன்றி சிறப்புத்தன்மை வாய்ந்த விளக்கத்தை எடுத்துரைக்கிறார்.
ramanujar.jpg 
அந்தவகையில், அத்வைதம் சார்ந்ததாகக் கருதப்படும் உபநிஷதங்களின் முக்கியக் கருத்துகளுக்கு ராமானுஜர் விசிஷ்டாத்வைதக் கண்ணோட்டத்தில் தரும் விளக்கங்களை தற்போது காண்போம். ‘சர்வம் கல்வ இதம் பிரும்ம’ என்கிறது சாந்தோக்ய உபநிஷதம். இதன் நேரடிப் பொருள் – ‘இவை அனைத்தும் பிரும்மமே. ராமானுஜர் தருகின்ற சிறப்புப் பொருள் – இங்கே இவை என்பது பரப்பிரும்மம் எனப்படும் ஈஸ்வரன், அதன் அறிவுடை அங்கமாக விளங்கும் அதாவது சித் பிரும்மமாக விளங்கும் ஜீவர்கள், அதன் அறிவற்ற அங்கமாக அதாவது அசித் பிரும்மமாக விளங்கும் பொருள்மய உலகம் ஆகிய மூன்றைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒருங்கிணைந்ததே பிரும்மம்’ என்கிறார் ராமானுஜர். ஆக சித், அசித், ஈஸ்வரன் ஆகிய வேறுபட்ட மூன்று தத்துவங்கள் ஒன்றுபட்டிருப்பதே பிரும்மம், இந்த மூன்றுமே உண்மையானவை, எதுவுமே மாயையோ பொய்யோ அல்ல என்கிறார்.
அயம் ஆத்மா பிரும்ம’ என்பது மாண்டூக்ய உபநிஷதத்தின் மகா வாக்யம். இதன் நேரடிப் பொருள், இந்த ஆன்மாவே பிரும்மம்; அதாவது, ஆன்மாவாக எது திகழ்கிறதோ அதுவேதான் பிரும்மம் என்பதுதான். இதற்கு ராமானுஜர் தரும் சிறப்புப் பொருள் – சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்ததே பிரும்மம் என்பது விளங்கிக்கொண்டபடியால், அதாவது அனைத்துமே பிரும்மம் என்பதை அறிந்துகொண்டபடியால், ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய பிரும்மத்தில் இருந்து வேறுபட்டதல்ல.
சாந்தோக்ய உபநிஷதத்தின் மிகச்சிறந்த மகா வாக்கியம், தத்வமஸி (தத் த்வம் அஸி). இதன் பொருள், அது நீயேதான். இங்கு அது என்பது பிரும்மம், நீ என்பது ஜீவாத்மா. ஆக, ஜீவாத்மாதான் பரமாத்மா, இரண்டும் வேறு வேறு அல்ல என்கிறது அத்வைதம். இதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – அனைத்தின் உள்ளிருப்பாகவும் அந்தப் பிரும்மம் இருப்பதால், உனக்குள்ளும் அந்தப் பிரும்மம் இருக்கிறது என்று இதற்குப் பொருளே அன்றி, நீயே (தானே) பிரும்மம் ஆகிவிட முடியாது என்பதே. அதாவது, உயிரினங்கள் (சித் ஆகிய ஜீவர்கள்), பொருள் மய உலகம் (அசித்) ஆகியவற்றை உடலாகக் கொண்டுள்ள அந்தப் பரப்பிரும்மமே, ஒவ்வொரு ஜீவருக்குள்ளும் உள்முகமான ஆத்மாவாகவும் திகழ்கிறார் என ராமானுஜர் கூறுகிறார்.
இதேபோல் நேதி, நேதி என்ற உபநிஷதக் கருத்துக்கு இதுவன்று, இதுவன்று என்பது நேரடிப் பொருள். இதற்கு அத்வைதம் தரும் பொருள், இதுவா, இதுவா என்று தேடிக்கொண்டே போனால் எந்தவொரு விளக்கத்துக்கும் அகப்படாததே பிரும்மம் என்பதுதான். இதற்கு விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – இது மட்டுமே அன்று, இது மட்டுமே அன்று. அதாவது, பிரும்மம் என்பது இதுமட்டும்தான் என்று வகைப்படுத்திவிட முடியாது, எண்ணிலடங்கா பல குணங்களைப் பூண்டது பிரும்மம்.
இவ்வாறாக, பிரும்மம் என்பது ஒருமைதான் என்றபோதிலும், அதற்கு சித், அசித் ஆகிய விசேஷ குணங்கள் இருப்பதால் அது சிறப்புடை ஒருமை என்கிறது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். மரம் ஒன்றுதான் என்றபோதிலும், அதற்குப் பல கிளைகள் உள்ளன. இந்தக் கிளைகள் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை என்றபோதிலும், அவை மரம் என்ற ரீதியில் ஒன்றாகவே உள்ளன என்பதைப்போல்தான் சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்த வகையில் பிரும்மம் ஒன்றாய் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.
சாங்கிய தரிசனம், பிரகிருதி, புருஷன் என்று கூறுவதைத்தான் விசிஷ்டாத்வைதம் முறையே அசித், சித் என்று கூறுகிறது. சாங்கியம் ஈஸ்வரனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைதம் அசித் (பிரகிருதி), சித் (புருஷன்) ஆகியவற்றுடன் ஈஸ்வரனையும் முன்னிறுத்துகிறது. சித்தும், அசித்தும் புருஷனின் இருவித வடிவங்கள், அதாவது தோற்றங்கள் என்றால், அந்தப் புருஷனின் சாராம்சமாக இருப்பதே ஈஸ்வரன் என்கிறது. அந்தப் புருஷன் நிர்குணமுடையது அல்ல, கல்யாண குணங்கள் (நற்குணங்கள்) நிரம்பியது. இதுவே புருஷனின் முதன்மைக் குணம். அது மாற்றம் இல்லாதது. அதனுடைய இரண்டாவது குணமாகிய சித், அசித் என்ற வடிவத்தில்தான் பரிணாமங்கள் (மாற்றங்கள்) தோன்றுகின்றன.
அசித் எனப்படுவது உயிரற்ற பொருள்மயமான உலகம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட அனைத்துமே சித் எனப்படும் ஜீவன்கள் ஆகும். அதாவது, ஆத்ம அறிவு கொண்ட அனைத்துமே சித், ஜீவன்கள் ஆகும். இந்த ஜீவன்கள் மூவகைப்படும். முதலாவது, ஒருபோதும் சம்சார சாகரத்தில் (பிறவிப் பெருங்கடலில்) ஆட்படாமல் எப்போதுமே சுதந்தரமாக இருப்பவை. இவற்றுக்கு நித்ய என்று பெயர். இரண்டாவது வகையைச் சேர்ந்தவை, பிறவிகளை எடுத்து, விடுதலையை அடைந்தவை. இவற்றுக்கு முக்த என்று பெயர். மூன்றாமவை, சம்சார சாகரத்தில் கட்டுண்டு கிடப்பவை. இவற்றுக்கு பத்த என்று பெயர்.
சித், அசித் ஆகியவற்றை ஆட்சி செய்வதே ஈஸ்வரன். இந்த மூன்றும் இணைந்த நிலையே பிரும்மம். அதுவே சர்வேஸ்வரன். அந்தப் பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றி, இயங்கி, மீண்டும் ஒடுங்குகிறது. முக்தி அடைவதே ஜீவன்களின் லட்சியம். அதற்கு அந்த சர்வேஸ்வரனிடம் பக்தியும், பிரபத்தியும் (சரணடைதல்) அவசியம் என்கிறார் ராமானுஜர். பிரும்மம், சர்வேஸ்வரன் என்று தான் குறிப்பிடுவது நாராயணன் எனப்படும் விஷ்ணுவே என்கிறார் அவர். அந்த விஷ்ணுவின் ஆற்றலாக (சக்தியாக) இருப்பது ஸ்ரீ எனப்படும் லக்ஷ்மி என்கிறார். ஆகையால், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், ஸ்ரீ சம்பிரதாயம் என்றும் ஸ்ரீ வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பூதூரில் கி.பி. 1017-ம் ஆண்டில் தோன்றியவர் ராமானுஜர். மனிதர்களின் முழுமையான ஆயுட்காலம் என்று மதிக்கப்படும் 120 ஆண்டுகள் வாழ்ந்த பரிபூரணரான இவர், தன்னால் ஸ்ரீவைஷ்ணவத்தின் கோட்டையாக உருவாக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஜீவன்முக்தர் ஆனதாகக் கருதப்படுகிறது. (ஆயினும், ராமானுஜர் 80 ஆண்டுகள் வாழ்ந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்). ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பது ராமானுஜரின் சிலை அல்ல; பல ஆண்டுகளாகக் கெடாமல் இருக்கும் தானாகிய திருமேனி எனப்படும் ராமானுஜரின் உடலேதான் என்று கூறப்படுகிறது.
ராமானுஜர் என்ற பெயருக்கு ராமனின் தம்பி என்று பொருள். லக்ஷ்மணனுக்கு இந்தச் சிறப்புப் பெயர் உண்டு. அந்தவகையில் ராமானுஜர், லக்ஷ்மணனின் அவதாரமாகவும், அதற்கு முந்தைய ஆதிசேஷனின் அவதாரமாகவும் வைஷ்ணவர்களால் மதிக்கப்படுகிறார். வைணவ மதத்தின் தீவிர வளர்ச்சிக்கு வித்திட்ட ராமானுஜர் சைவ, வைஷ்ணவ பேதமில்லாத அத்வைதத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்த பிராமண குலத்தில் வடமர் என்ற உட்சாதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது தந்தை பெயர் கேசவ சோமயாஜி, தாயார் பெயர் காந்திமதி (நெல்லை சங்கரன்கோவில் அம்மனின் பெயர்). ராமானுஜருக்குப் பிறகுதான், ஸ்ரீவைஷ்ணவம் தனிப்பெரும் மதப் பிரிவாக உருவெடுத்தது.
திருமணத்துக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் வேதக் கல்வி பயிலச் சென்ற ராமானுஜர், யாதவப்ரகாசர் என்ற அத்வைதியிடம்தான் பாடம் பயின்றார். ஆனால், அவர் கூறிய அத்வைதக் கருத்துகள் ராமானுஜரின் சிந்தனையோட்டத்துக்கு ஒத்துப்போகவில்லை. ஆகையால், குருவோடு முரண்பட்டு பல வாக்குவாதங்களைப் புரிந்த அவர், தானாகவே வேதங்களைப் படிக்கத் தொடங்கினார். ஸ்ரீவைஷ்ணவரும் வேதாந்தியுமான (ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களை உபயவேதாந்தி என்றே அழைத்துக்கொள்வார்கள்) யமுனாசார்யரின் கருத்துகள் ராமானுஜரைப் பெரிதும் கவர்ந்தன. பின்னர், பெரியநம்பி என்ற குருவிடம் ஸ்ரீவைஷ்ணவ தீட்சை பெற்ற ராமானுஜர், இல்லறத்தைத் துறந்து துறவியானார். பல இடங்களில் ஸ்ரீவைஷ்ணவ மடங்களை இவர் ஸ்தாபித்தார். ஸ்ரீவைஷ்ணவத் துறவிகள் பெரும்பாலும் இல்லறத்தில் இருந்து சன்யாசம் பெறுபவர்களாகவே உள்ளனர். அவர்களில் மடத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் ஜீயர்கள் எனப்படுகின்றனர். ராமானுஜருக்கு யதிராஜர் (அதாவது துறவிகளின் தலைவர்), எம்பெருமான், உடையவர் எனச் சிறப்புப் பெயர்கள் உண்டு.
ராமானுஜருக்கு முன்பே ஓரளவு விசிஷ்டாத்வைதக் கருத்துகளும், விஷ்ணு வழிபாடும் இருந்திருக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி, பெரிய தத்துவமாகவும், மதமாகவும் வளர்த்த பெருமை ராமானுஜரையே சாரும். வேத காலத்தில் உபேந்திரனாக, அதாவது இந்திரனுக்குத் தம்பியாக இருந்த விஷ்ணு, பிற்காலத்தில் காக்கும் கடவுளாகவும், புருஷோத்தமனாகவும், சர்வேஸ்வரனாகவும் உயர்ந்தார். இதேபோல் ராமர், கிருஷ்ணர், பரசுராமர் உள்ளிட்ட 10 அவதாரங்கள் தவிர தத்தாத்ரேயர், சாங்கியம் தந்த கபிலர், ஜைனத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபர், ஏன் புத்தரேகூட விஷ்ணுவின் 21 அவதாரங்களாகக் கருதப்படும் காலம் ஏற்பட்டது.
அதேநேரத்தில், தமிழகத்தில் மாயோன், திருமால் என்ற பெயரில் விஷ்ணு வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்துவருகிறது. (மை, மால் என்ற சொல்லுக்கு கரிய என்று பொருள். உருவகக் கடவுளான விஷ்ணு கரிய நிறம் படைத்தவராகக் கருதப்படுவதுடன், அவரது அவதாரமாக மதிக்கப்படும் கிருஷ்ணரும் கரிய நிறத்தவரே). சங்க இலக்கியமான பரிபாடலில், சேயோன் (சிவந்த நிறத்தவன்) எனப்படும் முருகனையும், மாயோன் எனப்படும் விஷ்ணுவையும் புகழ்ந்து பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பிற்காலத்தில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட 12 வைணவ ஆழ்வார்களின் பாசுரங்களும் (நாதமுனிகள் தொகுத்த நாலாயிர திவ்யபிரபந்தம்) ராமானுஜரின் கருத்துகளுக்கு வலு சேர்த்தன.
வேத, உபநிதஷதக் கருத்துகளோடு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டமைத்தார் ராமானுஜர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தமது மார்க்கத்தில் உரிய பங்களித்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் மதிக்கப்படுகிறார். ராமானுஜரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீவைஷ்ணவத்தில் வடகலை, தென்கலை என்ற முக்கிய வேறுபாடு தோன்றியது. தமிழகத்தின் வடக்கில் உள்ள காஞ்சியைச் சேர்ந்த வேதாந்த தேசிகர் வழிவந்த ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் வடகலையினர் என்றும், தமிழகத்தின் தெற்கில் உள்ள ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிள்ளைலோகாசார்யர், மணவாள மாமுனிகள் ஆகிய ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் தென்கலையினர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அக்காலத்தில் மற்ற தத்துவங்களோடு கடும் விவாதம் நடைபெற்ற காஞ்சியைச் சேர்ந்தவர்கள் அதற்கு உதவிகரமான சம்ஸ்கிருத உபநிஷதங்கள், தத்துவ நூல்களைப் பயின்றதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதேநேரத்தில், பாமரர்கள் நிறைந்த ஸ்ரீரங்கத்தில் பக்தி பஜனைகள், சொற்பொழிவு ஆகியவையே கோலோச்சியதால் அதற்கு உதவிகரமான தமிழில் உள்ள ஆழ்வார் பாசுரங்களை அதிகம் பயின்று அதற்கு முக்கியத்துவம் தந்தனர். ஆகையால், வடகலையினர் வடமொழியான சம்ஸ்கிருதத்துக்கும், தென்கலையினர் தென்மொழியான தமிழுக்கும் முக்கியத்துவம் தருவது முக்கிய வேறுபாடாக உள்ளது. மேலும், தத்துவ அடிப்படையில் வடகலையினருக்கு, முக்தியை வேண்டி தன்னை இறைவனிடம் ஒப்படைக்கும் பிரபத்தி எனப்படும் சரணாகதிதான் முக்கியமானது. ஆனால் தென்கலையினருக்கோ, முக்திக்காக சரணாகதி அடைந்து இறைவனை நிர்பந்திப்பது தகாது; ஆகையால், இறைவனின் விருப்பப்படி நமக்கு எப்போது வேண்டுமானாலும் முக்தி கிடைக்கட்டும், நமக்கு அவரது நினைப்பே போதும் என்ற பக்தியே பிரதானம். வடகலையினருக்கு, விஷ்ணுவின் இணையான ஸ்ரீ எனப்படும் மகாலக்ஷ்மி (திருமகள்), விஷ்ணுவைப் போலவே ஆண்டவன், பரமாத்மா, முக்திக்குப் பரிந்துரைப்பவர். ஆனால் தென்கலையினருக்கோ, மகாலக்ஷ்மி முக்திக்குப் பரிந்துரைப்பவராக இருக்கின்றபோதிலும் அவரும் ஜீவாத்மாவே, அவரே ஆண்டவன் அல்ல.
ராமானுஜரும், அவரது சீடர்களும் சைவனான இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த மேலக்கோட்டைக்குச் சென்று சிலகாலம் வாழ்ந்ததாகவும் வைஷ்ணவ இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், ராமானுஜர் முக்தியடைந்த சில காலத்துக்குப் பிறகுதான் இரண்டாம் குலோத்துங்கச் சோழன், மன்னனாகப் பட்டமேறினார் என்றும் சைவராக இருந்தாலும் அனைத்துச் சமயங்களையும் அவர் போற்றிப் பாதுகாத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாரதத்தின் வட மாநிலங்களில் பக்தி இயக்கம் - குறிப்பாக கிருஷ்ண (விஷ்ணு) பக்தி இயக்கங்கள் உருவானதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயக் கருத்துகளின் தாக்கமே பெரிதும் காரணம். வடமாநிலங்களில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் ஸ்ரீ ராமானந்த சம்பிரதாயம், குஜராத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்வாமிநாராயண் சம்பிரதாயம் ஆகியவையும் வைஷ்ணவ விசிஷ்டாத்வைதத்தையே பின்பற்றுகின்றன. இவற்றுக்கு மாறாக, ஸ்ரீகண்டரால் ஸ்தாபிக்கப்பட்ட சைவ விசிஷ்டாத்வைதம் சிவனைப் பரமாத்மாவாகக் கொண்டு சற்று வித்தியாசமான விசிஷ்டாத்வைதத்தை உரைக்கிறது. (இதுபற்றி பின்னர் காண்போம்).
அதேநேரத்தில், விஷ்ணுவை பரமாத்மாவாக வரித்துக்கொண்டு, ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்றும், பக்தியின் மூலம் பரமாத்மாவின் அருளால் ஜீவாத்மா முக்தி அடைகின்றபோதிலும் பரமாத்மாவுடன் ஒன்றுபடாமல் தனித்தேதான் இருக்கும் என்றும் ஒருமையை மறுதலித்து இருமை பேசுகிறது, மத்வர் நிறுவிய துவைத தத்துவம்.
அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...


    AKOTI.OR


    ஒன்றுதான் ஆனாலும்...

    By பத்மன்  |   Published on : 26th July 2016 05:47 PM  |   அ+அ அ-   |    |  
    ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் 


    LATEST UPDATES

    அத்வைதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)




    ‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். ‘அத்வைதம்’ என்றால் என்ன? ‘த்வி’ என்றால் இரண்டு. two என்பது அதிலிருந்து வந்ததுதான். ‘த்வி’யிலுள்ள த் (d) என்பதே ‘டூ’ வில் ‘ட்’ (t) ஆகிவிட்டது. உச்சரிப்பில் ‘டூ’ என்று சொன்னாலும், ஸ்பெல்லிங்கில் t-க்கு அப்புறம் w வருகிறது w- வுக்கு ‘வ’ சப்தமே உண்டு. ‘த்வி’யில் உள்ள ‘வ’ தான் இங்கே w – ஆகிவிட்டது. ‘த்வி’தான் two – இரண்டு. ‘த்வைதம்’ என்றால் இரண்டு உண்டு என்று நினைப்பது. ‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம்.
    எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது. இதெல்லாம் வெறும் வேஷம்தான். ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் ஸ்வாமி ஒருத்தன்தான். ஜீவாத்மா பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மாதான். ‘நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அநுபவத்தில் அடைந்துவிட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்கமாட்டோம்; ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகிவிடுவோம்’ என்பதுதான் ஆசாரியாள் உபதேசித்த அத்வைத தத்துவம்.
    இந்த அநுபவத்தை அடைந்துவிட்டால், அப்புறம் கஷ்டம், பயம், காமம், துவேஷம், எதுவும் நம்மைக் கட்டுப்படுத்தாது. நமக்குப் புறம்பாக எதுவோயிருப்பதாக நினைப்பதால்தானே அதனிடமிருந்து கஷ்டம், பயம், காமம், குரோதம், இத்யாதிகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன! இது தானே சம்ஸார பந்தம்? நம்மைத் தவிர இன்னொன்றே இல்லாதபோது எவன் கட்டப்படுவான், எது கட்டுப்படுத்தும்? கட்டு என்பதுதான் ஏது? இரண்டாவது வஸ்துவேதான் கிடையாதே! கட்டு என்றும் கட்டுகிற வஸ்து என்றும் நமக்கு வெளி வஸ்து எப்படியிருக்க முடியும்? கட்டிலிருந்து விடுபட்ட (முச்-விடுபடுதல்) இந்த நிலைதான் முக்தி அல்லது மோக்ஷம்.
    ‘இந்த நிலையை எங்கேயோ வைகுண்டத்தில், அல்லது கைலாசத்தில் என்றைக்கோ போய்ப் பெற வேண்டியதில்லை. இதை இங்கேயே இப்போதே அநுபவித்து விடலாம். வாஸ்தவத்தில் இந்த மோக்ஷத்தை நாம் ஒன்றும் புதிதாக அடைவதும் இல்லை. பிரம்மம் என்கிற எல்லையற்ற சத்தியம் எப்போதுமே கட்டுப்படாத மோக்ஷமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது — பிரபஞ்சத்தில் ஆகாயம் (space) எங்கு பார்த்தாலும் கட்டுப்படாமல் இருக்கிற மாதிரி இந்தப் பிரபஞ்சத்திலேயே பல பானைகளை வைத்திருக்கிறோம் என்றால், அவற்றுக்குள் இருக்கிற காலியிடத்திலும் எப்போதும் அந்த ஆகாசம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒன்று எங்கும் பரந்து விரிந்த மஹாகாசம், மற்றது பானைக்குள் (கடத்துக்குள்) உள்ள கடாகாசம் என்று நம் பார்வையில் வேண்டுமானால் பிரித்துச் சொல்லலாமே தவிர, இரண்டு ஆகாசமும் வாஸ்தவத்தில் ஒன்றேதான். பானை என்கிற ரூபத்தை உடைத்துப் போட்டுவிட்டால் நம் பார்வைக்குக்கூட இரண்டும் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. இப்படியே பிரம்மத்தில் தனித்தனி பானைகள் மாதிரி நாம் மாயாசக்தியால் தோன்றியிருக்கிறோம். ஆனாலும் நாம் பிரம்மமேதான். மாயையின் பந்தத்தால் இது நமக்குத் தெரியவில்லை. அதை உடைத்து விட்டால் நாமும் அகண்டமான பிரம்மமே என்ற அநுபவம் வந்துவிடும்.
    அந்த அநுபவம் சித்திப்பதற்குப் படிகளாக கர்மம், உபாஸனை இப்படிப் பல இருக்கின்றன. ஆசாரியாள் நாம் எல்லோரும் ஏறிப்போவதற்கு சௌகரியமாகப் படிக்கட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த உபாயங்களை அநுஷ்டிக்கிற போதே, நாம் பார்ப்பவை யாவும் ஒன்றுதான் என்ற நினைப்பும் நமக்கு உள்ளூர இருந்துகொண்டே இருக்க வேண்டும். ‘எல்லாம் ஒன்று’ என்பது பிரத்தியட்ச அநுபவமாக வருகிறபோது வரட்டும். ஆனால், இதுதான் உண்மை என்ற நினைப்பை இப்போதிலிருந்தே அடிக்கடி உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
    ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டார். ஆனால் உலகத்தில் வேறு வேறாகத் தெரிகிற எல்லாப் பிராணிகளையும் ‘நாமாக’ எப்படிப் பார்ப்பது என்று குழப்பமாக இருக்கிறது.
    ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தை (நிலை)களுண்டு. சாதாரணமாக விழித்துக் கொண்டிருப்பது ஜாக்ரம்; கனாக் காண்பது ஸ்வப்னம்; ஒன்றும் தெரியாமல் தூங்குவது ஸுஷுப்தி. இந்த மூன்று அவஸ்தைகளிலும் ஒருவனேதான் இருக்கிறான். கனாக் கண்டவனும் விழித்துக் கொண்டவனும் ஒருவனே. ஆனால், கனாக் கண்ட பொழுது நடக்கிறவைகளுக்கும், விழித்துக் கொண்டபின் நடக்கிறவைகளுக்கும் முன்னுக்குப் பின் சம்பந்தமே இல்லை. கனவில் வேற விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. விழித்துக்கொண்டபோது வேறே விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. அவஸ்தை வேறுபட்ட போதிலும், மனோபாவம் வேறுபட்ட போதிலும் இரண்டிலும் ஒருவனே இருப்பதுபோல, வேறு வேறு மனோபாவம் கொண்ட பல பிராணிகளிடத்திலும் இருப்பவன் ஒருவனே: அவனே நாம் என்று தெளிய வேண்டும்.
    ஒரு காலத்தில் நமக்குச் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு சமயத்தில் கோபம் இருக்கிறது. ஆனாலும் இரண்டு அவஸ்தையிலும் இருப்பவன் ஒருவனே என்பது அநுபவத்தில் தெரிகிறது. அவஸ்தா பேதங்களில் நம் முகம், கைகால் எல்லாவற்றின் போக்கும் மாறுகின்றன. காலபேதத்தால் குழந்தை கிழமாகிறபோது தேகங்கூட வேறாக மாறுகிறது. இது விவகார உலகத்தில், ஸ்வப்பன உலகத்திலே கேட்கவே வேண்டாம். நம் ஒருவருடைய மனஸிலிருந்தே பல பேருடைய ரூபங்கள், பல வேறு இடங்கள் பல வேறு காலங்கள் எல்லாம் கனவில் உண்டாகின்றன. நாம் செய்யக்கூடாதென்று நினைக்கிற காரியங்களையெல்லாம் கனவில் செய்வதாகக் காண்கிறோம். இம்மாதிரி அவஸ்தா பேதங்களில் ஒன்றுக்கொன்று விரோதமான காரியங்களைச் செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும் மனஸும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவனே என்பது தெரிகிறது. நமக்கு ஜன்னி பிறந்தால் அதற்கு முன் நாம் செய்த காரியங்களுக்கு விரோதமாகச் செய்கிறோம். நாம் முன்பு ஒரு புஸ்தகம் எழுதியிருந்தால் இப்போது அதை நாமே கிழித்து விடுகிறோம். எழுதியவனும் கிழித்தவனும் ஒரே பேர்வழி.
    இந்த உலகமும் ஒரு கனவுதான். உலக வாழ்வும் மாயா ஜுரத்தில் வந்த ஜன்னி என்று தெரிந்து கொண்டால், உண்மையில் எல்லாம் ஒன்று என்று உணர்வோம். நம் கனவில், நம் ஒருத்தரின் மனமே இத்தனை பேரை சிருஷ்டித்த மாதிரி, மகா பெரிய மனசு ஒன்றின் எண்ணங்கள்தான் இத்தனை ஜீவராசிகளும் என்று தெரியும். மற்றொருவன் நாம் எழுதிய புஸ்தகத்தைக் கிழித்தால் அவனும் நாம்தான் என்று உணர்வோம். விவகார உலகத்தில் எழுதியவனும் கிழிப்பவனும் வெவ்வெறு தேகத்தில் இருப்பதனால் வாஸ்தவத்தில் உள்ளேயிருப்பவன் வேறாகி விடமாட்டான். எல்லாவற்றுக்குள்ளேயும் இருப்பது ஒன்றுதான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தப்பு. நாமே நம்மை அடித்துக்கொள்கிறோம் என்பதுதான் சத்தியம்.
    இது சத்தியமில்லை என்றால், ஸ்வாமி அல்லது பிரம்மத்துக்குப் புறம்பாக இன்னொன்று இருக்கவேண்டும். அப்படியானால் அது எங்கிருந்து வந்தது, அது எதைக்கொண்டு பண்ணப்பட்டது, அப்படிப் பண்ணினவன் யார் என்ற கேள்வி வருகிறது.
    இப்போது நாம் அறிவுள்ள (சைதன்யமுள்ள) ஜீவர்கள் என்றும், அறிவில்லாத ஜடப்பிரபஞ்சம் என்றும் இருக்கிறோம். ஜடப்பிரபஞ்சத்தை நாம் உண்டு பண்ணவில்லை. அதே மாதிரி ஜடப்பிரபஞ்சமும் நம்மை உண்டு பண்ணவில்லை—அறிவில்லாத அது எப்படி, தானாக ஒரு காரியத்தைப் பண்ண முடியும்? அதிலும் அறிவில்லாத ஜடம் எப்படி அறிவுள்ள ஜீவனை உண்டாக்க முடியும்? அறிவில்லாத ஜடப் பிரபஞ்சம் அநாதி காலமாக ரொம்பவும் கிரமத்தோடு நடந்து வருகிறது என்றால், அதை ஒரு பேரறிவுதான் படைத்து நடத்தி வர வேண்டும். அப்பேரறிவு வேறு ஏதோ வஸ்துவைக் கொண்டு பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால், அந்த வேறொரு வஸ்து எப்படித் தானே வந்தது என்று கேள்வி வருகிறது. எனவே, பேரறிவேதான் இப்படித் தன்னைத் தானே ஜடப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது என்றாகிறது. அப்புறம், இந்த ஜீவர்கள் இருக்கிறோமே! நாம் நாமாகவா உண்டானோம்? ஜீவ ராசிகளில் ஒவ்வொரு இனமும் ஒரேவிதமான சுபாவங்கள், குண விசேஷங்கள், சரீர அமைப்பு ஆகியவற்றோடு இருப்பதைப் பார்த்தால் அது அதுவும் தனித்தனியாக இப்படி உண்டாகியிருக்க முடியாது என்று நிச்சயமாகிறது. ஆனபடியால், இந்த ஜீவ சமூகம் முழுவதையும் ஒரு பேரறிவுதான் படைத்திருக்கிறது என்றாகிறது. ஜீவனுடைய அறிவு வேறெங்கிருந்தோ வரவில்லை; அந்தப் பேரறிவின் வேலைதான் என்று தெரிகிறது.
    இந்த ஜீவர்களுக்கு உணவு, உடுப்பு முதலியன ஜடப் பிரபஞ்சத்திலிருந்து கிடைக்க வேண்டியிருக்கிறது. ஜடத்தில் உள்ளவற்றை—வாசனை, சுவை, சீதம் உஷ்ணம் முதலியவற்றை—அநுபவிக்க ஜீவனுக்கு இந்திரியங்கள் இருக்கின்றன. இப்படி ஜடப் பிரபஞ்சமும் ஜீவப்பிரபஞ்சமும் ஒன்றுக்கொன்று நெருங்கிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது ஜீவனாக ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தம் அல்ல, இவன் ஜடப்பிரபஞ்சத்திலிருந்துதான் சாப்பாடு, துணி, வீடு, எல்லாம் பெற வேண்டும் என்று இவனா திட்டம் போட்டான்? இவன் போட்டால்தான் அது கட்டுப்படுமா? எனவே அந்தப் பேரறிவுதான் இப்படி சங்கற்பம் செய்து, இவனை அதோடு சம்பந்தப்படுத்தி வைத்திருக்கிறது என்று தெரிகிறது. ஜடப் பிரபஞ்சத்தை ஏதோ ஒரு சக்தி படைத்தது. ஜீவப் பிரபஞ்சத்தை வேறொரு சக்தி படைத்தது என்றால் இவை இரண்டையும் இப்படிச் சேர்த்துப் பிடித்துச் சம்பந்தப்படுத்தி வைக்க முடியாது. எனவே ஜடம், சைதன்யம், இரண்டுக்குமே மூலம் அந்தப் பேரறிவுதான் என்றாகிறது. அது ‘படைத்தது’ என்று சொன்னாலும் வெளி வஸ்துவைக் கொண்டு படைக்கவில்லை என்று பார்த்தோம். எனவே, அதுவேதான் இத்தனை போலவும் தோன்றுகிறது என்பதே பரம சத்தியம். ஆக, இருப்பது ஒன்றுதான். ஒன்றே பலவிதமாகத் தோன்றுகிறது. இப்படிப் பலவகையாகத் தோன்றுவதற்குரிய சக்தி அதற்கு இருக்கிறது. அதைத்தான் மாயை என்பது. ஒரே பிரம்மம் மாயா சக்தியால் பலவற்றைப்போல் தெரிகிறது என்பதுதான் அத்வைதம்.
    ஜகத் முழுவதையும் இந்த மாதிரி ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லாம் ஒன்றானால் தானும் பிறரும் வேறு வேறாக இருக்க முடியாது. இந்நிலையில் ஜகத்தும்கூட அறியப்படுகின்ற வஸ்துவன்று. அறிபவனாகிய தானே அது என்ற அநுபவம் வந்து விடும். இப்பொழுது கை நாமாகத் தோன்றுகிறது. கால் நாமாகத் தோன்றுகிறது. உடம்பு நாமாகத் தோன்றுகிறது. இதுபோல் உலகனைத்தும் நாமாகிவிட வேண்டும். அப்படிப்பட்ட ஞானம் ஒருவனுக்கு அநுபவத்தில் வந்தால், அவன் சண்டாளனாயிருந்தாலும் அவன்தான் பண்டிதன். ஆசார்யாள் இதை “மனீஷா பஞ்சக”த்தில் எடுத்துச் சொல்கிறார். இந்த ஞானம்தான் மாறாத ஆனந்தமான மோக்ஷம்; இந்தச் சரீரத்தில் இருக்கும்போதே அநுபவிக்கக் கூடிய மோக்ஷம்.

    Previous
     Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அதுவேதான் இது!

































































































































































    விசிஷ்டாத்வைதம்

    அன்புள்ள ஜெ,
    தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன. விஷ்ணுவிடம் சரணாகதி அடைவதுதான் விசிஷ்டாத்வைதம் என்ற அளவில்தான் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.தத்துவார்த்தமாக தூயநிலையில் நாம் அதை அறியவே முடிவதில்லை. வைணவனாக நின்றுதான் அறியமுடிகிறது. அந்நூல்களில் சங்கரரின் தத்துவங்கள் சாதாரண தளத்தில் நின்று கண்டிக்கப்படுகின்றன. பெரும்பாலான நூல்களில் சங்கரருக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உறவே இல்லை என்ற அளவில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண வாசகனாக நான் வாசிக்கும்போது ஒரே தத்துவதரிசனத்தின் இரு பார்வைகள் அவை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இந்த தத்துவங்களை நான் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு என் மனதில் வரையறைசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் இவற்றை எங்காவது வரையறை செய்து எழுதியிருக்கிறீர்களா?
    ஆர். வெள்ளியங்கிரி
    அன்புள்ள வெள்ளியங்கிரி,
    நீங்கள் குறிப்பிடும் சிக்கல் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது. பல்வேறு தத்துவதரிசனங்கள் இங்கே உள்ளன. ஆனால் அவற்றுக்கு இடையே உரையாடலே இல்லை. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மதமாக ஆகி தங்கள் தரப்பை மட்டுமே குருபரம்பரையாகக் கற்று அதையே நம்பிக்கொண்டு முன்செல்கிறது. வரலாற்று நோக்கே காணக்கிடைப்பதில்லை. ஒட்டுமொத்தப்பார்வை உருவாவதில்லை. ஆகவே விவாதங்கள் பரஸ்பர நிராகரிப்பாகவே நிகழ முடிகிறது. அவை விதண்டாவாதங்களாக ஆகி மனக்கசப்பை நோக்கிச் செல்கின்றன
    பத்தாம் நூற்றாண்டு முதல் கடுமையான மதப்போர்கள் இங்கே நிகழ்ந்து வந்தன. காரணம் பொதுவான மதவிவாத சபைகள் இல்லாமலிருந்ததே. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாயக்க அரசர்கள் சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மூன்றுமதங்களையும் தங்கள் அதிகாரம் மூலம் இணையச் செய்தார்கள். சைவக்கோயிலில் வைணவச் சன்னிதிகளையும் வைணவக்கோயிலில் சைவ சன்னிதிகளையும் அமைத்து வழிபாடுகளை கலந்தார்கள். விளைவாக மதச்சண்டை நடைமுறைத்தளத்தில் இல்லாமலாகியது. ஆனால் தத்துவ தளத்தில் மதநம்பிக்கையாளர்கள் தத்தம் வாசலை இறுக்கி மூடிக்கொண்டு உள்ளே ஒடுங்கித்தான் கிடந்தார்கள்.
    ஒட்டுமொத்தமான பார்வையும் வரலாற்று அணுகுமுறையும் ஐரோப்பிய இந்தியவியலாளர்களாலேயே சாத்தியமாகியது என்பதே உண்மை. கிரிபித், மோனியர் விலியம்ஸ் போன்றவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களே இந்து ஞானமரபை ஒட்டுமொத்தமாக தொகுத்து நமக்களித்தார்கள். அனைத்து தரப்பையும் ஒரு பொதுவாசகன் அறிவதற்கான வாய்ப்பை அளித்தார்கள். அதன் விளைவாகவே இன்றைய இந்திய தத்துவ ஞானம் உருவாகி வந்தது
    இன்றும் மரபான குருபரம்பரை வழியாக இந்து ஞானமரபின் ஏதேனும் கிளைகளை கற்பவர்கள் இந்த வரலாற்று அணுகுமுறையும் ஒட்டுமொத்த நோக்கும் இல்லாத ஒருவகை மூர்க்கர்களாகவே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். தமிழகத்தில் ஆசார வைணவர்களும் ஆசார சைவர்களும் மதக்காழ்ப்பும் குருட்டுநம்பிக்கையும் கொண்டவர்களாகவும் ஆராய்ச்சி மனநிலைக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எழுதிய நூல்களே அதிகமும் தமிழில் கிடைக்கின்றன. அவற்றின் வழியாகச் சென்று நாம் எந்த தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாது.
    அந்நூல்களை நாம் வெளியே நின்று ஆராயலாம். அந்த மதங்களின் சில நுட்பமான உள்விஷயங்களைப் புரிந்துகொள்ள அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இன்றும் ஒட்டுமொத்த பார்வைக்கும் வரலாற்று நொக்குக்கும் நாம் இந்தியவியல் முன்னோடிகளின் நூல்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அவர்களை சார்ந்தே விவேகானந்தரும் அரவிந்தரும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் எல்லாம் சிந்தித்தார்கள். இந்தியவியலாளர்களுக்கு அவர்களுக்கே உரிய புரிதல் சிக்கல்கள் உள்ளன. மனநிலைச்சிக்கல்களும் உள்ளன. அவற்றை கருத்தில்கொண்டபடி அவர்களை துணைகொண்டு மூலநூல்களை நாமே வாசிப்பதே நல்ல முறையாகும். சமநிலை கொண்ட ஒரு குரு அமைவாரென்றால் மேலதிக அதிருஷ்டம்
    விசிஷ்ட்டாத்வைதம்
    பிரம்மமும் சீவங்களும் பிரபஞ்சமும் வெவ்வேறானவை என்றும் பிற அனைத்தையும் பிரம்மமே உருவக்கி தன்னிலடக்கிக்கொண்டுள்ளது என்றும் சொல்லும் பிற்கால வேதாந்த மரபு விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. இதுஅத்வைதத்திலிருந்து முரண்பட்டு கிளைத்தது. விசிஷ்டாத்வைதத்தின் மையகுரு ராமானுஜர். ஆனால் அதன் விளைநிலம் நம்மாழ்வாரின் பாடல்களே.
    விசிஷ்டாத்வைதம் இருமூலங்கள் கொண்டது. சங்கரரின் அத்வைத தரிசனத்தை மறுத்த வேதாந்த கோட்பாடுகள் ஒன்பதாம் நூற்றாண்டுமுதலே இருந்தன. அவர்களில் முக்கியமானவர் பாஸ்கரர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார். இவர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய உரையான பாஸ்கர பாஷ்யத்தில் பிரம்மம் குணங்களுக்கு அப்பாற்பட்ட முற்றொருமை அல்ல என்றும் அது குணவடிவ தன்மை கொண்டு பிரபஞ்சமாகி வருகிறது என்றும் சொன்னார். இவரது கோட்பாட்டை பதினொன்றாம் நூற்றாண்டைசேர்ந்த யாதவபிரகாசர் வளர்த்தெடுத்தார். பிரம்மம் முழுமுதன்மையாக பிரிவுபடாமலும் பிரபஞ்சமாக பிரிவுபட்டும் இருதள இருப்பு கொண்டது இரண்டையும் இணைத்து அறிதலே பிரபஞ்ச உண்மையை அறியும் வழியாகும் என்பது இவர்களின் கோட்பாடு. இது பிரிவொருமைக் கோட்பாடு எனப்பட்டது.
    கி பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவர். நெல்லையருகே ஆழ்வார் திருநகரி [திருக்குருகூர்] என்ற ஊரில் பிறந்தவர். பிற ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் உக்கிரமான பக்தியுடன் தத்துவ நோக்கும் வெளிப்படும்பாடல்கள் அவரால் எழுதப்பட்டவை. பத்தாம் நூற்றாண்டில் நாதமுனி ஆழ்வார்பாடல்களை தொகுத்து அளித்தார். அவரது மாணவரும் மகனுமாகிய யமுனாச்சாரியார் ‘சித்ரத்ரயம்’ என்ற நூலை இயற்றினார். இதுவே ஒருவகையில் விசிஷ்டாத்வைதத்தின் முதல் நூல்.
    பதினொன்றாம் நூற்றாண்டில் காஞ்சீபுரமருகே ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் பிறந்தார். இவர் யாதவப்பிரகாசர் யமுனாச்சாரியார் ஆகிய இருவருக்கும் மாணவர். பிரிவொருமைக் கோட்பாடு மற்றும் ஆழ்வார்பாடல்களில் உள்ள பிரபத்தி – அதாவது உணர்ச்சிப்பெருக்கான அர்ப்பணிப்பு கொண்ட பக்தி- இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டதே ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். ராமானுஜரின் முக்கிய நூல்கள் பிரம்மசூத்திரத்துக்கு எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சம்கிரஹம் ஆகியவை.
    விசிஷ்டாத்வைதம் சங்கர வேதாந்தத்தை ஒட்டியும் வெட்டியும் உருவானது. ராமானுஜரின் நூல்களில் சங்கரரை அவர் விரிவாக நிராகரித்தே தன் தரப்பை நிறுவுகிறார். முரண்பாடுகளை ஓர் அட்டவணையாக இப்படி தொகுக்கலாம்.
    1] அத்வைதம்: பிரபஞ்சத்தில் உள்ள ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே . விசிஷ்டாத்வைதம்: ஆத்மாக்கள் ஒன்றல்ல, தனித்தன்மைகள் கொண்ட பல.
    2] அத்வைதம்: இப்பிரபஞ்சம் ஒரு மாயக்காட்சி. ஒன்றேயானபிரம்மத்தை ஆத்மா பலவானபிரபஞ்சமென மயங்குகிறது .
    விசிஷ்டாத்வைத மறுப்பு: பிரம்மத்திலிருந்து உருவாகி பிரம்மத்தின் பகுதியாக நிலைநிற்கும் ஓர் உண்மையே இப்பிரபஞ்சம்
    3]அத்வைதம்: பிரம்மம் மட்டுமே உள்ளது பிறவெல்லாம் பொய்மைகள்.
    விசிஷ்டாத்வைத மறுப்பு: மூவகை உண்மைகள் உண்டு. பிரம்மம், ஆத்மா, பிரபஞ்சம்
    4] அத்வைதம்: பிரம்மமே ஆத்மாவும்.
    விசிஷ்டாத்வைத மறுப்பு: ஆத்மா பிரம்மமல்ல அது தனித்துவம் கொண்ட ஒரு இருப்பு.
    ராமானுஜர் முக்கியமான வினா ஒன்றுடன் தொடங்குகிறார். பிரம்மத்தை ஆத்மா மற்றும்பிரபஞ்சமாக ஆக்குவது எது? மாயை என்பது அத்வைதத்தின் பதில். மாயையை உருவாக்குவது எது ? பிரம்மம் என்றால் பிரம்மம் குறையுடையது என்று பொருள். பிரம்மமே ஆத்மா என்றால் மாயையின் உருவாக்கமான ஆத்மா மாயைக்கு காரணமாக இருக்க முடியாது. இதற்கு பதிலளிக்கும் ராமானுஜர் பிரம்மம் மாயையின் மூலம் பிரபஞ்சமாக ஆவதில்லை, அது பிரபஞ்சமும் கூட என்கிறார்.
    ராமானுஜ கோட்பாட்டை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீன் அறியும் கடல் என்பது அது புழங்கும் சிறிய நீர்ப்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களும் அதுவும் மட்டுமே. ஆனால் அதுவல்ல கடல். அதேசமயம் அது கடலும் கூடத்தான். மீனறியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல. அது உண்மை .கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல்.
    எத்தனை விரிந்தாலும் மீனின் தர்க்கபுத்தி கடலை அறிந்துவிட முடியாது. கடலை மீன் அறிவதற்கான வழி சிறிது சிறிதாக தன்னை ரத்து செய்துகொள்வதே. அதன் தன்னுணர்வுநிலை இல்லாமலாகும் தோறும் அதனால் கடலை உணர முடியும். ஆகவே அதன் முன் உள்ள ஒரே வழி தன் முன் உள்ள சிறிய நீர்வெளியை கடலென எண்ணி மயங்காமலிருப்பது. அப்பால் உள்ள கடலை அறியும்பொருட்டு தன்னை முழுமையாக அதற்கு ஒப்படைத்துவிடுவது. இதுவே ஆழ்வார் பாடல்களில் பிரபத்தி என்று சொல்லப்படும் முழுமையான ஒப்புணர்வு ஆகும். இதன் மூலம் மனம் விரியும் ஒருவர் கடல் என்பது தன்னையும் உள்ளடக்கிய ஒன்று என அறியும் மீன் போல தன்னையிழந்து பிரம்மத்தை உணர்கிறார். எல்லா வேதாந்தக் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கூறு என்பது அனைத்தும் பிரம்மத்தில் தோன்றி பிரம்மத்தில் அடங்குகின்றன என்ற தரிசனமாகும். அதை ராமானுஜரும் சொல்கிறார்.
    விசிஷ்டாத்வைதம் முழுக்கமுழுக்க தமிழ் பண்பாட்டில் உதித்ததும் தமிழ் பண்பாட்டின் குரலாக ஒலிப்பதும் ஆன ஒரு தத்துவக் கோட்பாடு. ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் பிரபத்தியை நாம் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் காண்கிறோம். அதாவது ஆழ்வார்களுக்கு முன்னரே இக்கோட்பாடு நம் நாட்டார் வாய்மொழி மரபில் வாழ்ந்துள்ளது. ஆழ்வார் பாடல்களின் அழகியலும் உணர்வுநிலைகளும் முழுக்க முழுக்க சங்க இலக்கிய அகத்துறையின் நீட்சியே.
    தமிழ்ப் பண்பாட்டின் மூன்று முக்கிய தத்துவ அம்சங்கள் விசிஷ்டாத்வைதத்தில் உள்ளன.
    1] எந்நிலையிலும் ஒருமையை ஏற்காமல் பன்மையை நோக்கி செல்லும் நோக்கு
    2] உலக வாழ்வை நிராகரிக்காமல் அதை கொண்டாடும் நோக்கு
    3] தர்க்கத்துக்குப் பதிலாக அழகியலையும் உணர்வுகளையும் முன்வைக்கும் போக்கு.
    விசிஷ்டாத்வைதமே பிற்பாடு பக்தியியக்கம் மூலம் இந்தியாவெங்கும் பரவிய கிருஷ்ணபக்தி மரபுக்கு அடிப்படையாகும். அவ்வகையில் பார்த்தால் அத்வைதம் ஓர் அறிவார்ந்த பாதிப்பையே உருவாகியது. விசிஷ்டாத்வைதமோ பெரும் மக்களியக்கமாக ஆயிற்று. அதன் பாதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகளில் கூட பலவகைகளில் தொடர்கின்றன. குறிப்பாக காந்தியின் ஆன்மீகம் விசிஷ்டாத்வைத அடிப்படை கொண்டதேயாகும். பாரதியின் ஆன்மீகமும் விசிஷ்டாத்வைதக் கோட்பாடான பிரபத்தியை காட்டுவதே.

    பிரபத்தி
    விசிஷ்டாத்வைதம் திரும்பத் திரும்பச் சொல்லும் மனநிலை பிரபத்தி என்பதாகும். பிரபத்தி என்றால்
    இயல்பான வரம்பற்ற பக்தி. விசிஷ்டாத்வைத நோக்கு இதை அடிப்படை கோட்பாடாக முன்வைக்கிறது. பக்தியானது அறிந்து தெளிந்து நோக்கம் கொண்டு உருவவது. பிரபத்தி தன்னிச்சையானது, கட்டற்றது, நிபந்தனைகள் அற்றது. தாய்ப்பசு மீது கன்றின் பிரியம் போல வேறு சாத்தியங்களே இல்லாதது. செடியில் பூ போல அடிப்படை விதியாலேயே உருவாவது. பிரபத்தி உருவாவதற்கே இறையருள் தேவை என்று ராமானுஜர் சொல்கிறார். பெரியாழ்வார் விஷ்ணுவிடம் கொண்டது பக்தி. ஆண்டாள் கொண்டது பிரபத்தி. நம்மாழ்வார் பாடல்களில் நாயகி பாவமாக பிரபத்திநிலை அழகிய கவித்துவத்துடன் சொல்லப்பட்டுள்ளது
    மண்ணை இருந்து துழாவி
    வாமனன் மண்ணிது என்னும்
    விண்ணைதொழுது அவன் மேவு
    வைகுந்தம் என்று கைகாட்டும்
    கண்னை உள்நீர் மல்க நின்று
    கடல்வண்ணம் என்னும் அன்னே என்
    பெண்ணை பெருமயல் செய்தார்க்கு
    என் செய்கேன் பெய்வளையீரே
    [செவிலி கூற்று]
    செவிலித்தாய் தன் மகள் பெருமாள் மீது கொண்ட காதலைக் கண்டு சொல்கிறள். ‘மண்ணை இருந்து துழாவி அன்று வாமனன் மூன்ரடி வைத்த மண் இது என்கிறாள். விண்னை தொழுது அவனிருக்கும் வைகுண்டம் அது என்கிறாள். கண்ணில் நீர் பெருக கடலைக் கண்டு அவன் வண்ணமல்லவா இது என்கிறள்; எதைக்கண்டாலும் அவன் நினைபபகவே இருக்கிராள். என் பெண்ணிடம் இத்தனை பெருங்காதலை நிறைத்தவனை நான் என்னவென்று சொல்வது? என்ன செய்வது?’
    என்ற நாலாயிர திவ்ய பிரபந்த பாடலை உதாரணமாக காட்டலாம்

    தொடர்புடைய பதிவுகள்


    2 comments

    1. Ramachandra Sarma
      தூய நிலையிலான தத்துவம் என்பது சாத்தியமில்லை,ஆனால் தூய அறிதல் என்பது நிச்சயம் சாத்தியமாகின்றது என்றே நினைக்கிறேன். அறிதல் என்பது எழுதப்பட்டதற்கு மேலதிகமாக நமது அனுபவத்தின், அறிவின் துணைகொண்டு அறிதல் என்று சொல்லலாம். அந்த தூய அறிதலுக்கு அதற்கான உள்ளார்ந்த தேவையும், ஆர்வமும், சமநிலையும் அவசியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வைணவனாகவோ, சைவனாகவோ நின்று ஒரு தத்துவத்தை கற்றுக்கொள்ளமுடியும் என்றால் அதைவிட கற்பதற்கான சுலபமான வழியென்ன இருக்கமுடியும்? அத்தத்துவத்தை கற்கும்தோறும் ஒருவன் சைவனாகவும், வைணவனாகவும் மட்டுமே இருக்கமுடியும். அவற்றை தவிர்த்து இதைமட்டும் ஏன் தரவில்லை என்ற கேள்வி ஆச்சரியமாக இருக்கிறது. அதன்பிறகு அதைத்தாண்டி செல்வதற்கான அனுபவமும், குருவின் அருளும் இருந்தால் தூய அறிதல் நிச்சயம் கைகூடும் என்றே தோன்றுகிறது. ஜெ-வின் பதில் அவர் பலமுறை விளக்கியதன் தொகுப்பு என்றே தோன்றுகிறது. :)




    துவைதம்


    அன்புள்ள ஜெ,
    உங்கள் கீதை உரைகளில் சங்கரர் ராமானுஜர் மத்வர் ஆகிய மூவருடைய உரைகளையும் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் அவ்வரிசையிலேயே உள்ளது. சொல்லப்போனால் மத்வாச்சாரியாரைப்பற்றி கொஞ்சம் மேம்போக்காக சொல்லிச் செல்வதாகவே தெரிகிறது. என் அலுவலகத்தில் இருநண்பர்கள் உடுப்பியைச் சேர்ந்த மாத்வ பிராமணர்கள். அவர்களுடன் நான் உடுப்பி மடங்களுக்கும் சென்றிருக்கிறேன். அவர்கள் மத்வர் ஆத்மாவும் பிரம்மமும் வேறுவேறுதான் என்பதை நிலைநாட்டுவதற்காக உருவாக்கிய தத்துவக்கருவிகள் மற்ற வேதாந்தங்களில் இல்லை என்றும் மத்வர் வெறும் பக்திப்பிரச்சாரகர் அல்ல அவர் மாபெரும் தத்துவ ஞானி என்றும் சொல்கிறார்கள். பிற இரு தரிசனங்களைப்பற்றியும் நீங்கள் எழுதிய கடிதங்களை அவர்களுக்கு வாசித்துக்காட்டினேன். அதனடிப்படையில் இந்த பேச்சு நிகழ்ந்தது. மத்வ வேதாந்தத்தை எப்படி சுருக்குவீர்கள் என்று அறிய ஆசைப்படுகிறேன் [ஆங்கிலக் கடிதத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்]
    ஆர்.வெள்ளியங்கிரி
    அன்புள்ள வெள்ளியங்கிரி,
    நம்மிடையே நடக்கும் இந்த விவாதம் எனக்கே கச்சிதமாகச் சுருக்கிக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கிறது. ஏற்கனவே எழுதி வைத்திருந்த குறிப்புகளை ஒட்டியே நான் இந்த பதில்களை உருவாக்குகிறேன்.
    துவைதம்
    பிரம்மம் பிரபஞ்சம் ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். பிரம்மமே பிற அனைத்தும் என்ற சங்கரவேதாந்தத்தை துவைதம் முற்றாக மறுக்கிறது . இறுதிநிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைதித கொள்கையையும் அது ஏற்பது இல்லை . பிரம்மம் நாம் காணும் அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிரிருப்பு என்பது துவைதத்தின் கொள்கை.
    துவைத மதத்தின் நிறுவனர் மத்வாச்சாரியார். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே பிறந்தார். மத்வர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய மத்வ பாஷ்யம் முக்கியமான நூலாகும். கீதாபாஷ்யம், பாகவத தால்பரிய நிர்ணயம், பாரத தால்பரிய நிர்ணயம் ஆகியவை முக்கிய நூல்கள். ஜய தீர்த்தர், வியாசதீர்த்தர் ஆகிய சீடர்கள் மத்வ தத்துவத்தை விளக்கியுள்ளார்கள். மத்வரும் அத்வைதம் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து தன் தத்துவத்தை அமைத்துள்ளார்.

    மத்வரின் கோட்பாடுகள் இவை.
    1] பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றல்ல. பிரம்மம் அறிபடுபொருள், ஆத்மா அறிவது. அவை இரண்டாக இருப்பதனாலேயெ ஞானம் உருவாகிறது .
    2] பிரம்மம் அனைத்தையும் படைத்து காத்து அழிக்கும் சக்தி. ஆகவே அது அனைத்துமறிந்தது, அனைத்து வல்லமையும் கொண்டது. ஆனால் அது பிரபஞ்சத்தை கடந்த பெரும் சக்தி
    3] ஞானம் பிரம்மத்தை அறியும் வழியாக உள்ளது .புறவுலகு புலன்களில் பதிவதனால்மட்டுமே ஞானம் உருவாகும். ஞானம் உண்மையாக இருக்கவேண்டுமென்றால் புறவுலகும் புலன்களும் உண்மையாக இருந்தாகவேண்டும்.
    4] புறவுலகு என்பது மூலஇயற்கையின் வளர்ச்சி நிலையாக உருவாகியுள்ள உண்மைவடிவமே.
    5] புறவுலகு உருவாக ஆதிஇயற்கையே வேர்நிலைக் காரணம், பிரம்மம் தூண்டுகை காரணம்.
    6] ஆகவே பிரம்மம் தன்னை மூலப்பொருளாக அல்லது மூலக்காரணமாக ஆக்கி பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை. பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் உள்ளன. அக்குணங்கள் பிரம்மத்தில் இருக்க நியாயமில்லை.
    7] எல்லா உயிர்களும் சமமல்ல . ஆத்மாகளின் படிநிலைகள் வேறுபட்டவை. ஆத்மாக்கள் படிப்படியாக தங்களை மேம்படுத்திக் கொண்டு முத்தி நோக்கி செல்கின்றன
    8] முத்தி என்பது இயற்கை உருவாக்கும் அலைகள் அடங்கி பிரம்மத்தை உணர்ந்து அதற்கு முழுமையாக ஆட்பட்டு நிற்கும் நிலையேயாகும்.
    மத்வ தரிசனத்தின் அடிப்படை இதுவே. ஒருமையால் அல்ல பிரிவுகளால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது. ஞானம், கருமம் , முத்தி ஆகியவை அப்பிரிவிலிருந்து உருவாகின்றவை. ஒருமையே உண்மையென்றால் இவை தேவையே இல்லை. மத்வர் ஐவகை பிளவுகளை முன்வைத்து பிரபஞ்ச இயக்கத்தை விªக்குகிறார். முக்தி என்பது அப்பிளவு இல்லாமலாகும்நிலையல்ல, அவற்றை தாண்டி பிரம்மத்தை அறியும்நிலையே. அதற்கு மத்வ மதம் முன்வைக்கும் வழி உணர்ச்சிகரமான தூய பக்தியேயாகும்

    ஐம்பெரும்பிளவு [பஞ்சபேதம்]
    மத்வரின் வேதாந்தத்தின்படி பிரம்மத்துக்கும் ஆத்மா மற்றும் இயற்கைக்கும் இடையே ஐந்து முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
    1]பிரம்மமும் ஆத்மாவுக்கும் கொள்ளும் வேறுபாடு. ஆத்மாவுக்கு காமகுரோதமோகங்கள் உள்ளன. அது மும்மலங்களால் மூடப்பட்டுள்ளது. அது குறைவும் முழுமையும் கொண்டது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்றால் அந்த் இயல்புகள் பிரம்மத்துக்கும் உரியன என்றகிறது. அப்படி அல்ல, பிரம்மம் தூயது, எந்நிலையிலும் முழுமை குறையாதது.
    2] பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்துக்கு குணம்,கருமம்,தர்மம் ஆகியவை உள்ளன. அவ்வியல்புகளுக்கு அது கட்டுப்பட்டது. பிரம்மம் அத்தகைய அறியப்படும் இயல்புகள் கொண்ட ஒன்று அல்ல. அது நிர்ணயிக்க முடியாதது.
    3] ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்தின் இயல்புகளான குணம்,கருமம் ஆகியவற்றுடன் ஆத்மா இணைவதில்லை. ஆத்மா அதன் சாட்சியாகவே உள்ளது, அதன் பகுதியாக அல்ல. ஆகவே பருப்பொருள் ஆத்மாவுக்கு தொடர்பில்லாமல் வெளியே தனித்தியங்குகிறது.
    4] ஒரு ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு. ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் நன்மை தீமை என்பதற்கு வேறுபாடே இல்லாமலாகிவிடும்
    5] ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. எல்லா பருப்பொருட்களும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே குணம்-கருமம் ஆகியவைதானே இருக்கும்? ஆனால் இங்கே ஒவ்வொரு பருப்பொருளுக்கும் அதற்கான குணமும் செயலும் உள்ளது.
    இந்த ஒட்டுமொத்த விவாதமும் ஆயிரம் வருடம் பழமையான கலைச்சொற்களுடனும் கருத்துருவங்களுடனும் அமைந்துள்ளது. அவற்றை இன்றைய விவாதங்களை நோக்கி எளிதில் விரித்துக்கொள்ள முடியும். ஆத்மா என்பதை இன்றைய நவீன உளவியல் மற்றும் மொழியியல் பேசும் தன்னிலை [sujectivity] அல்லது சுயம் [self] அல்லது தன்னுணர்வு [Ego] என்று பொருள்கொள்ளலாம். பருப்பிரபஞ்சம் என்பது புற யதார்த்தம் [ External relaity] அல்லது பொருள் [Matter]. பிரம்மம் என்பது பிரபஞ்ச ஒழுங்கு [cosmic order ]அல்லது பிரபஞ்சமையக்கருத்து [cosmic idea ] அல்லது பிரபஞ்ச மனம் [cosmic mind]
    இவ்வாறு பார்த்தால் இன்றும் நவீன அறிவுத்துறைகள் அனைத்திலும் சாரத்தில் முடிவிலாது விவாதிக்கப்படும் வினாக்களையே மத்வர் எதிர்கொள்கிறார் என்பது புரியும். அந்த தளத்தில் அத்வைதம் ஒருபதிலை அல்லது விளக்கத்தை முன்வைத்து அதற்கான கருவிகளை உருவாக்குகிரதென்றால் துவைதம் அதற்கு நேர் எதிரான விளக்கத்தை முன்வைத்து நிகரான கருவிகளை உருவாக்குகிறது. ஆகவே தத்துவார்த்தமாக பார்த்தால் துவைதம் அத்வைதத்தின் எதிர்இயக்குவிசை. இது அன்றி அது இல்லை என்பதைப்போல அவை இணைந்தவை.
    மத்வர் சில தொன்மையான கருத்துருவங்களை தன்நுடைய விவாதத்துக்காக மறு ஆக்கம் செய்து விரிவாக்கினார். மத்வரின் கேள்வி பெரும்பாலும் இவையனைத்துக்கும் காரணமாக உள்ள அந்த ‘அது’ தான் இதுவாக நம்முன் நிற்கிறதா அல்லது அது இதில் இருந்து விலகி வேறெங்கோ நுண் வடிவில் இருக்கிறதா என்பதே
    இப்படிக் கேட்டுக்கொள்ளலாம். உங்கள் கையில் ஒரு கனி. அதற்கு இனிப்பு மணம் நிறம் போன்ற குணங்கள் உள்ளன. பசியாற்றுதல் முதலிய செயல்களை அது செய்கிறது. இந்தக் கனியின் காரணமாக அமைவது எது? அத்வைதத்தின்படி அப்படி காரணமாக அமைவது எதுவோ அதுதான் இப்போது கனியாக உங்கள் கையில் உள்ளது. இனிக்கும் பழத்தில் இனிப்பதுதான் பழத்தை இனிப்பாக்கிய சக்தி. காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே நீ கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே என பாரதி அதை பாடினார்.
    மத்வரைப் பொறுத்தவரை அந்தக்கனியை இயற்றிய அது கனிக்கு அப்பால் எங்கோ இருக்கிறது. அதை ஒரு கருத்துநிலையாக அல்லது உணர்வுநிலையாக அல்லது ஆற்றலாக நாம் உய்த்துணரவே முடியும். இந்தக்கனி என்பதற்கு உள்ள சுவை முதலிய குணங்களும் பசியாற்றுதல் முதலிய செயல்களும் அந்த மூலகாரணத்துடன் நேரடித் தொடர்புடையனவே அல்ல. இவை நம்முடைய அனுபவம்சார்ந்தவை. இதற்கெல்லாம் முற்றிலும் அப்பாற்பட்டதாக அது இருக்கலாம்
    இந்த கனியின் இப்போதைய குணம் இனிய சுவையாக இருக்கலாம். இப்போதைய நோக்கம் பசியாற்றுதலாக இருக்கலாம். ஆனால் ஒரு பத்தாயிரம் வருடம் என எடுத்துக்கொண்டால் இதன் குணம் விஷமாக இருக்கலாம். இது மானுட மரபணுவில் ஆழமான விஷக்கூறு ஒன்றை புகுத்துவதாக இருக்கலாம். இதன் நோக்கம் மனித இனத்தின் எலும்புகளை பலவீனப்படுத்தி ஒட்டுமொத்தமாக அழியவைத்து அப்போது பிறக்கவிருக்கும் ஒரு புது உயிரினத்தை மேலே கொண்டுவருவதாக இருக்கலாம். எப்படி நாம் சொல்ல முடியும்? நாம் இடம் காலம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவர்கள். பிரபஞ்ச இயக்கத்தையும் அதன் காரணத்தையும் நாம் எப்படி அறிந்து சொல்ல முடியும்?
    ஆக, குணம், கருமம் [இயல்பு,செயல்பாடு] என்பதெல்லாம் முழுமுதலாக அனைத்துக்கும் பின்னாலிருக்கும் அந்த காரணத்தை சுட்டுவதல்ல என்கிறார் மத்வர். குணம் கருமம் என்பதெல்லாம் நம்முடையவை மட்டுமே. இவற்றை ஆக்கும் அந்த காரணத்தின் ஒரு கருவியே நாமும் நாம் இவ்வாறு காரணம் கண்டறியத்துடிப்பதும் எல்லாமே. மேலும் உதாரணத்தை விரித்துக்கொள்ள விரும்பினால் ·ப்ரிஜோ காப்ராவின் உயிரின் வலை[The web of Life ] என்ற நூலை வாசிக்க பரிந்துரைக்கிறேன்.
    துவைதம் முன்வைக்கும் வாதகதிகள் எவராலும் ஒதுக்க முடியாதவை. இன்றைய நவீன அறிவியலில்கூட ஆழமாக செயல்படுபவை. இந்த பெருவெளியின் சாரமான நோக்கம் என்ன என்பதற்கு முழு முற்றான பதிலை இதன் துளியிலும் துளியாக உள்ள நாம் சொல்லிவிட முடியாது. அவ்வாறு சொல்லாதவரை அதைச் சார்ந்த ஆழமான தரிசனங்கள் அவற்றை முன்வைக்கும் தர்க்கங்கள் அனைத்துமே முக்கியத்துவம் கொண்டவையே. அத்வைதம் அவற்றில் ஒன்று துவைதம் நேர்மாறான இன்னொன்று. எல்லாமே சரி எல்லாமே தவறும்கூட.
    மத்வர் உள்ளிட்ட வேதாந்திகள் அடிப்படைக் கருவியாக பயன்படுத்தும் சில கருதுகோள்களை சுருக்கமாகச் சொல்கிறேன். இவை ஒவ்வொன்றையும் தன் கொள்கையை நிலைநாட்ட மத்வர் விரிவாக விளக்கி முன்னெடுத்திருக்கிறார்.
    முதலில் பிரம்மத்தின் மீது உருமயக்கவாதம் , வளர்ச்சிநிலை வாதம் இரண்டையுமே துவைதர்கள் போடுவது இல்லை.பிரம்மம் இவையனைத்துக்குமே அப்பாற்பட்டது என்பதே துவைதத்தின் சாரம்.

    உருமயக்கவாதம் [விவர்த்த வாதம்]
    பிரம்மம் எந்நிலையிலும் இன்னொன்றாக மாறுவதில்லை அதன் பிற தோற்றங்களெல்லாம் மாயையே என்று வாதிடும் கொள்கை. அத்வைதத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று இது. பிரம்மம் கடல். அலைகள், துளிகள், துமிகள் என பிற. அலைகளையே நாம் பார்க்க முடிகிறது, ஆனால் அதுதான் கடல் என்பது சங்கரரின் உவமை.
    இன்றைய சொற்களில் சொல்லப்போனால் நாம் காணும்,நாம் பகுதியா உள்ள இப்பிரபஞ்ச வெளியை உருவாக்கிய ஆற்றல் எதுவோ அதுவேதான் இப்பிரபஞ்சமாகவும் உள்ளதா அல்லது அது இப்பிரபஞ்சத்தை உருவாக்கியபின் இதற்கு அப்பாற்பட்டதாக உள்ளதா என்ற கேள்வி. உருமயக்க வாதத்தைப்பொறுத்தவரை பிரபஞ்ச சாரம் எப்போதும் அதுவாகவே உள்ளது நாம்தான் அதை இப்பிரபஞ்சத்தின் விரிவான தோற்றமாக எண்ணிக்கொள்கிறோம்
    உருமயக்கவாதத்தின் நவீன உதாரணமாக இப்படிச் சொல்லலாம். பிரபஞ்சத்தில் உள்ளது ஆற்றல் மட்டுமே. அதையே நாம் துகள்களாக அணுக்களாக மூலக்கூறுகளாக பொருட்களாக கோள்களாக விண்மீன்களாக பால்வழிகளாக பர்க்கிறோம். அது ஆற்றல் என்ற வடிவிலேயே உள்ளது, அதை பொருண்மையாக பார்ப்பது நாம்தான்.

    வளர்ச்சிநிலை வாதம் [பரிணாமவாதம்]
    பிரம்மம் தன்னை பிரபஞ்சமாக ஆக்கிக் கொள்கிறது என்று வாதிடும் கொள்கை. பண்டையவேதாந்தத்தின் கொள்கை இது . சிலந்தி தன் உடலில் இருந்து வலையை பின்னுவதுபோல பிரபஞ்சம் பிரம்மத்தால் உருவாக்கப்படுகிறது என்பது இக்கொள்கை. அதாவது பிரபஞ்சத்தின் மூலமாக இருப்பது தன்னை இப்பிரபஞ்சமாக மாற்றிக்காட்டுகிறது. ஒரு நடிகன் கதாபாத்திரமாக ஆவதுபோல , விதை மரமாக ஆவது போல.
    உதாரணமாக இப்பிரபஞ்சத்தின் சாரம் ஆற்றல் என்றால் ஆற்றல்தான் பருப்பொருளாக மாற்றம் அடைந்து இந்தப்பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கிறது என்ற வாதம் வளர்ச்சிநிலை வாதம் எனலாம்.
    இந்தபிரபஞ்சம் ஒரு காரியம், அதாவது விளைவு. நாம் காணும் இயற்கையும் ஒரு விளைவே. இவற்றை விளைவித்தது முதற்பொருள். அதை காரணம் என்கிறார்கள் வேதாந்திகள். அந்த காரணம் முதன்மையாக இருவகை

    வேர்நிலைக் காரணம் [உபதான காரணம்]
    ஒன்றை உருவாக்க அடிப்படையான பொருட்களை, கருத்துக்களை அளிக்கும் முதற்பொருள் வேர்நிலைக் காரணம். மோருக்கு பால் வேர்நிலைக் காரணம். சாங்கிய மரபுப்படி ஆதி இயற்கையே பிரபஞ்சத்துக்கு வேர்நிலைக் காரணம். ஆதிப்பேரியற்கையில் இருந்து நாம் காணும் இந்த இயற்கை உருவாகி வந்தது. மத்வவேதாந்தமும் அதை ஏற்கிறது

    தூண்டுகைக்காரணம் [நிமித்திக காரணம்]
    ஒன்றை உருவாக்குவதற்கான விதியாகவோ, முகாந்தரமாகவோ, முன்னோடியாகவோ, தீர்மானிக்கும் வல்லமையாகவோ உள்ள இன்னொரு பொருள் அல்லது கருத்து தூண்டுகைக் காரணம். புயல் என்ற நிகழ்வுக்கு காற்றழுத்தத்தில் உள்ள ஏற்றதாழ்வு தூண்டுகைக்காரணம் எனலாம். புயலை நிகழ்த்தும் பருண்மையான அனைத்தும் வேறாக உள்ளன. ஆனால் காற்றழுத்தம் அதிகமான இடத்தில் இருந்து காற்றழுத்தம் குறைவான இடம் நோக்கி காற்று சென்றாகவேண்டும் என்று இயற்கையில் உள்ள விதியே புயலுக்கான காரணம்.
    ஆதிஇயற்கை குணங்கள் ஏதும் அற்ற ஒரு பருப்பொருள் வெளி. அதில் மூன்று குணங்களும் அந்த குணங்கள் கொண்ட தனித்தனிப் பொருட்களும் உருவாக புருஷன் காரணமாக அமைகிறான். மத்வவேதாந்தம் அந்த ஆதிஇயற்கை உருவாக தூண்டுகைக் காரணம் பிரம்மமே என்கிறது
    இன்றைய சொற்களில் சொல்வதாக இருந்தால் மத்வர் சொல்வது இதுவே. இந்த பிரபஞ்சவெளியை உருவாக்கிய மூலகாரணமானது தன்னை இதுவாக நமக்கு காட்டவில்லை. தன்னை உருமாற்றிக்கொள்ளவும் இல்லை. இந்தபிரபஞ்சம் வேறு அது வேறு. அது இப்பிரபஞ்சம் உருவாவதற்கான ஒரு தூண்டுதல்தான். அதாவது இப்பிரபஞ்சத்தை ஒரு நாற்காலி என்று வைத்துக்கொள்வோம். நாற்காலி என்ற கருத்தை உருவாக்கிய மனமே அதற்கான மூலகாரணமாகிய பிரம்மம்.
    பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றம் அல்ல, உண்மை. அந்த உண்மை உருவாவதற்கான கருத்தாகவும் விதிகளாகவும் உள்ளதே பிரபஞ்ச சாரமான பிரம்மம். அது எந்தவகையிலும் மானுடனின் தர்க்கத்தால் அறிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அப்படி ஒன்று உள்ளது என்பதற்கு இந்தபிரபஞ்சத்தின் செயல்முறையே சான்றாகும் – இதுவே மத்வரின் வாதம். இது இன்றும்கூட பிரபஞ்சவியலில் ஒரு
    முக்கியமான தரப்புதான்.
    கருத்துக்கள் jeyamohan.writer@gmail என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பவும்

    தொடர்புடைய பதிவுகள்


    1 ping

    1. துவைதம் « ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்"
      […] ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது […]









    No comments:

    Post a Comment