ராதே கிருஷ்ணா 21-03-2020
Radhe Krishna 08-03-2020
Radhe Krishna 08-03-2020
இன்று முதல்
பத்ம புராணம் - அறிமுகம்
வேத வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது பத்ம புராணம். இது 55,000 ஸ்லோகங்கள் கொண்டது. வேத வியாசரின் இயற்பெயர் அது இல்லை என்றும், அது அவருக்கு அளித்த விருது என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீபத்ம புராணம் ஒரு சாத்துவிக புராணம், விஷ்ணு புராணம், நாரத புராணம், பாகவத புராணம், கருட புராணம், வராக புராணம் ஆகியவையும் சாத்துவிகப் புராணங்களே.
பிரமனின் ஒருநாள் என்பது ஒரு கல்பமாகும். பிரமனின் ஒருநாள் முடிவில் இந்தப் பேரண்டம் அழிவுற்றது. எங்கும் இருள் சூழ்ந்தது. அடுத்த நாள் காலையில் உலகம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு கல்பத்திலும் ஒவ்வொரு புராணம் இயற்றப்பட்டது. அவை முறையே
1. பிரம புராணம் - பிரம கல்பம்
2. பத்ம புராணம் - பத்ம கல்பம்
3. விஷ்ணு புராணம் - வராக கல்பம்
4. சிவ புராணம் - ச்வேத கல்பம்
5. பாகவத புராணம் - சாரசுவத கல்பம்
6. நாரத புராணம் - வ்ரிஹத் கல்பம்
7. மார்க்கண்டேய புராணம் - ச்வேத வராக கல்பம்
8. அக்னி புராணம் - ஈசான கல்பம்
9. பவிஷ்ய புராணம் - அகோர கல்பம்
10. பிரமவைவர்த புராணம் - ரசுந்த்ர கல்பம்
11. லிங்க புராணம் - கல்பந்த கல்பம்
12. வராஹ புராணம் - மனுகல்பம்
13. கந்த புராணம் - தத்புருஷ கல்பம்
14. வாமன புராணம் - சிவகல்பம்
15. கூர்ம புராணம் - லக்ஷ்மி கல்பம்
16. மத்ஸ்ய புராணம் - கல்பாதி கல்பம்
17. கருட புராணம் - கருட கல்பம்
18. பிரமாண்ட புராணம் - பவிஷ்ய கல்பம்
வேத வியாசர் புராண சம்ஹிதை என்றொரு நூல் எழுதினார் என்றும் இதை அவர் தன் சிஷ்யர் லோமஹர்ஷனுக்கு (அ) ரோம ஹர்ஷனுக்கு உரைத்ததாகவும், அது பின்னர் வாய்மொழியாகவே வழிவழியாக வந்ததெனவும் கூறப்படுகிறது. எனவே, முதல் நூலுக்கும் தற்போது கிடைத்துள்ளவற்றிற்கும் பாட பேதங்கள் (அ) வேறுபாடுகள் இருப்பது இயற்கை என்பதை கற்போர் உணர வேண்டும்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 1
சிவசர்மாவின் கதை
==================
மேற்குக் கடற்கரையில் துவாரவதி (அ) துவாரகையில் சிவசர்மா என்றொரு அந்தணர் சகல சாஸ்திரங்கள், வேதங்கள், யாகங்கள் ஆகியவற்றைக் கற்றவராக இருந்தார். அவருக்கு யஜ்ஞ சர்மா, வேத சர்மா, தர்ம சர்மா, விஷ்ணு சர்மா, சோம சர்மா என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேத சாஸ்திர விற்பன்னர்களாய், சகல சாஸ்திரப் பண்டிதர்களாய், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்றவாறு விளங்கினர். ஆனால், அவர்கள் எந்த அளவுக்குத் தன்னிடம் பயபக்தி உடையவர்களாய் இருக்கிறார்கள் என்று அவர்களைச் சோதித்துப் பார்க்க விரும்பினார் சிவசர்மா.
சகல வேதங்களையும் உணர்ந்த சிவசர்மாவுக்கு பலவகை மந்திர தந்திரங்களும் தெரிந்திருந்தது. அவர்தன் மனைவி இறந்து கிடப்பதாக ஒரு மாயத்தைத் தோற்றுவித்துத் தன் பெரிய மகனான யஜ்ஞ சர்மாவிடம் அந்த உடலை வாள் கொண்டு துண்டு துண்டுகளாக்கி வீசி எறியுமாறு கூற, அவனும் அவ்வாறே செய்தான். அவன் தந்தையிடம் பக்தியுள்ளவனென சிவசர்மா முடிவு செய்தார். அடுத்து ஓர் அழகிய மங்கையை உருவாக்கி, இரண்டாவது மகன் வேதசர்மாவிடம் அவளைத் தன்னை மணக்குமாறு ஏற்பாடு செய்யச் சொன்னார். முதலில் அவள் மறுத்து தந்தைக்குப் பதில் மகன் வேதசர்மாவை மணப்பதாகக் கூற, அவன் தந்தையை மட்டுமே மணக்க வேண்டும் என்றான். அப்போது அவள் வேதசர்மாவிடம், அவன் தன் தலையை வெட்டி அவளுக்கு வெகுமதியாகத் தந்தால் தந்தையை மணப்பதாகக் கூறினாள். அவனும் அவ்வாறே செய்ய அந்த மகனும் தன்னிடம் பக்தி உள்ளவனே என நிச்சயித்தான். சிவசர்மா, வேதசர்மாவின் தலையைக் கொய்து மூன்றாவது மகன் தர்மசர்மாவிடம் கொடுக்க, அவன் தர்ம தேவதையைப் பிரார்த்தித்து வேத சர்மா உயிருடன் எழுமாறு வரம் பெற்றான்.
வேதசர்மாவும், தர்மசர்மாவும் தந்தையை வணங்கினர். எனவே மூன்றாவது மகனும் தன்னிடம் பக்தி உள்ளவனே என்று சிவசர்மா எண்ணினார். பின்னர், நான்காவது மகன் விஷ்ணு சர்மாவைச் சோதிக்க, அவனிடம் தான் ஒரு அழகியை மணக்க விரும்புவதால் தேவலோகம் சென்று இந்திரனிடமிருந்து அமிர்தம் பெற்று தனக்குக் கொடுத்தால், முதுமையும் நோயும் நீங்கும் என்று கூற, அவனும் தேவலோகம் சென்றான். ஆனால், இந்திரன் மேனகை என்னும் தேவலோக மாது, மற்றும் பூதங்கள், பேய்களை அனுப்பி விஷ்ணுசர்மாவை திசைதிருப்ப முயன்றார். எதிலும் தன் உறுதி மாறாமலிருந்த அவன் நிலையை மெச்சி, அவனுக்கு அமுதம் கொடுக்க, அவனும் தந்தைக்கு அமுதம் கொண்டு வந்து கொடுத்தான். மகிழ்ச்சியுற்ற சிவசர்மா அந்த மகனும் தந்தையிடம் உண்மையான பக்தி உள்ளவனே என்று உறுதியாக நம்பினான். அதனால் சிவசர்மா மாயையால் நிகழ்த்தியவற்றை மறைத்துத் தன் மனைவியை மீண்டும் உயிருடன் பிள்ளைகளுக்கெதிரே வரவழைத்து, அவர்களிடம் அவர்களை சோதித்துப் பார்த்ததை எடுத்துக்கூறி அவர்களுடைய தந்தை பக்தியை மெச்சி தனது சக்தியினால் அந்த நால்வரையும் விஷ்ணுலோகத்துக்கு அனுப்பி வைத்தார். எனவே, கடைசி மகன் சோமசர்மா புவியிலேயே இருந்தான்.
சிவசர்மா தன் மகன் சோமசர்மாவிடம் தானும், மனைவியும் க்ஷேத்திராடனம் செல்வதாகவும் திரும்பி வரும் வரையில் அமுதத்தைப் பத்திரமாக வைத்திருந்து திரும்பி வந்தவுடன் கொடுக்குமாறும் கூறி தீர்த்தயாத்திரை சென்றான். சில நாட்கள் கழித்து சிவசர்மாவும், அவன் மனைவியும் தொழுநோயாளிகள் வடிவில் வீடு திரும்பினர். மகன் சோமசர்மா அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு மனம் கோணாமல் சிகிச்சை செய்து வந்தான். சிவசர்மா அமிர்த கலசத்தில் இருந்து அமுதத்தை மாயமாகச் செய்து, தன் மகனிடம் அமுத கலசத்தைக் கொண்டு வருமாறும், அதன் மூலம் அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற முடியும் என்று கூறினான். ஆனால் சோமசர்மா சென்று பார்த்தபோது கலசம் காலியாக இருந்தது. அவன் தந்தை மீதுள்ள பக்தியின் மகிமையால் கலசம் அமுதத்தால் நிறையும்படிச் செய்து அதைக் கொண்டு வந்த கொடுத்தான். சிவசர்மா அவன் பக்தியை மெச்சி, தானும் தன் மனைவியுடன் விஷ்ணுலோகம் அடைந்தான். பின்னர் சோமசர்மா தவம் செய்ய வனம் சென்றான். அவன் தவத்தைக் கெடுக்க அரக்கர்கள் முனைந்தனர். அவர்களைக் கண்ட அவன் அச்சத்தினால் மரணம் அடைந்தான். அரக்கர் அச்சத்தால் இறந்த அவன் மறுபிறவியில் அரக்கர் குலத்தில் பிறந்தான். ஆனால், அவன் செய்த புண்ணியத்தால் விஷ்ணு பக்தனாகத் தோன்றினான். அவனே ஹிரண்யகசிபுவின் மகனான பிரகலாதன்.
தொடரும்...
ஒவ்வொரு பிறவியிலும் நாம்
முற்பிறவிகளில் சேர்த்துக்கொண்ட
வினைகளோடு ஒவ்வொரு
பிறவிகளிலும் வினைகளை
அதிகரித்துகொண்டே போகிறோம்.
வினைகளின் சுமை கூட கூட
நாம் அஞ்ஞானத்தில் மூழ்கி போய்
நம்முடைய ஆன்ம ஸ்வரூபத்தை
அறவே மறந்து போகின்றோம்.
வினைகளை அனுபவிக்கவே
பிறவிகள் போதுவதில்லை.
நாம் செய்யும் செயல்கள்
நம்முடைய எண்ணங்களை பொறுத்து
நல்லவைகளாகவோ அல்லது
தீயவைகளாகவோ அமைகின்றன
இந்து சுழலிலிருந்து நாம்
விடுபடாவிட்டால்
நம் பிறவிகளுக்கு
முடிவே இல்லை
இறைவன் நமக்கு பல கோடி
இன்பங்களை நாம் கேளாமலே
அளித்திருக்கிறான்.
அவைகளை
அனுபவிப்பதில் தவறில்லை
ஆனால் அதற்காகத்தான் பிறவி என்று
நினைத்தோமானால் அது தவறு
அது நமக்கு எண்ணற்ற
தொல்லைகளுடன் முடிவில்லாப்
பிறவிகளைத்தான் தரும்
ஏனென்றால் இவ்வுலக
இன்பங்கள் நிலையற்றவை
ஒரு மரணம் அனைத்திற்கும்
முற்றுப்புள்ளி வைத்துவிடும்
இந்த உடல் நோயுற்றால் உடல் மூலம்
பெரும் இன்பங்கள் அனைத்தும்
நின்றுவிடும்
மனம் உடைந்தால் நாம் இதுவரை
பெற்ற இன்பங்கள் அனைத்தும்
அணை உடைந்தால் வெளியேறும் நீர் போல்
அனைத்தும் வெளியேறிவிடும்
இந்த உலகத்திற்கு நாம் வருவதன்
முக்கிய நோக்கம் நம்மை
படைத்தவனை அறிந்துகொள்வதே.
நம்மை படைத்த இறைவன்
நம் இதயத்திலே நம்மோடு
எப்போதும் இருக்கிறான்.
அவனை தேடி நாம் எங்கும்
செல்ல வேண்டியதில்லை.
ராமனின் பேரை சொல்லுவோம்
நம் மனதில் உள்ள
ஆசைகளை வெல்லுவோம்
பத்ம புராணம் - பகுதி 2
சோமசர்மாவும் ஸுவ்ரதனும்
========================
ரேவா ஆற்றங்கரையில், வாமன தீர்த்தம் என்ற இடத்தில் சோமசர்மா என்பவர் தன் மனைவி சுமனாவுடன் வசித்து வந்தார். அவர்கள் வறியவர்களாயும், புத்திரப் பேறு இல்லாதவர்களாகவும் துயரத்தில் வாழ்ந்து வந்தனர். இது குறித்து வசிஷ்டரை அடைந்து தன் துயரத்தை வெளிப்படுத்தி அதற்கான காரணத்தையும் வேண்டினர். அப்போது வசிஷ்டர் அவன் முற்பிறவி வரலாற்றைக் கூறினார். நீ முற்பிறவியில் விவசாயத்தில் ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்டியும், புனித யாத்திரை மேற்கொள்ளவில்லை. யாருக்கும் தானம் அளித்ததில்லை. சாஸ்திரங்களை அறியவும் இல்லை. அதனால் ஏழையாகப் பிறந்திருக்கிறாய் என்றார். ஆனால் இப்பிறவியில் எப்படி அந்தணனாகப் பிறந்தேன் என்று கேட்க, வசிஷ்டர் முற்பிறவியில் செய்த சில நற்காரியங்களே அதற்குக் காரணம் என்றுகூறி அவற்றை விவரித்தார்.
முற்பிறவியில் நான்காவது வருணத்தில் பிறந்திருந்தாலும் ஓர் படித்த விஷ்ணு பக்தராகிய அந்தணர் உனது இல்லத்தை நாடி வந்தார். அந்த கௌரவ விருந்தினரை வரவேற்று உபசரித்தாய். அந்த நாள் வளர்பிறை ஏகாதசி திதி. அன்று அந்த விருந்தினர் விரதம் அனுஷ்டித்தனர். அதைக் கண்டு நீயும் அனுஷ்டித்தாய். அதுவே இப்பிறவியில் பிராமணனாகப் பிறக்கக் காரணமாயிற்று என்றார். பின்னர் வசிஷ்டர், சோமசர்மாவிடம் இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை புகன்றார். விஷ்ணுவைப் பூசித்து, பிரார்த்தனை செய்தால் புத்திரப் பேறு கிட்டும் என்றார். சோமசர்மா மனைவி சுமனாவுடன் ரேவா ஆற்றங்கரையில் கபில சங்கமம் என்ற இடத்தை அடைந்து விஷ்ணுவைக் குறித்து மந்திரம் உச்சரித்துத் தவம் இருந்தான். அவ்வாறு இருக்கையில் பேய், பிசாசு, பூதம், பாம்புகள், காட்டு மிருகங்களால் தொல்லைகள் ஏற்பட்டன. எதைப் பற்றியம் கவலை கொள்ளாமல் விஷ்ணுவைப் பிரார்த்தித்து வர, விஷ்ணு அவர்கள் முன் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு கூறினார். அப்போது சோமசர்மா தனது ஏழ்மை நீங்கவும், ஒரு புத்திரன் பிறக்கவும், அவனும், அந்த மகனும் என்றும் இடையறாத விஷ்ணு பக்தி உடையவராக இருக்குமாறும் வரம் அருளுமாறு வேண்ட, அவ்வாறே அளித்து பகவான் மறைந்தார். அவர்களுக்குப் பிறந்த குழந்தை ஸுவ்ரதன் எனப்பட்டான்.
ஸுவ்ரதன்: பல ஆண்டுகளுக்கு முன் விதஷரவில், ரித்வஜா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் வாலி. வாலியின் புத்திரன் ருக்மாங்கதன். ருக்மாங்கதன் சந்தியாவலி தம்பதியருக்கு தர்மாங்கதன் என்ற மகன் பிறந்தான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாக வாழ்ந்து விஷ்ணு லோகத்தை அடைந்தான். அவன் பல யுகங்கள் சொர்க்கத்தில் இருந்து பின்னர் ஸுவ்ரதனாகப் பிறந்தான். சிறு வயதிலிருந்தே ஸுவ்ரதன் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்து வந்தான். பெரியவனான பிறகு நர்மதைக் கரையில் உள்ள வைடூரிய மலைக்குச் சென்று நூறு ஆண்டுகள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்தான். அவனும், அவனுடைய பெற்றோர்கள் விஷ்ணு லோகம் சென்று நீண்ட காலம் வாழுமாறு விஷ்ணு வரம் தந்தருளினார்.
தொடரும்...
நாலாயிர திவ்யபிரபந்தம்-திருமொழி 249
பாடல்
திண்ணார் வெண் சங்குடையாய்
திருநாள் திருவோண மின்றேழுநாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப்
பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலஞ் செய்யக்
கறியுங் கலத்த தரிசியு மாக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல்
கோலஞ் செய்திங்கேயிரு
பொருளுரை
நல்ல திடமான வெண்ணிற சங்கை ஏந்தியுள்ள கண்ணா!
இன்றிலிருந்து ஏழு நாட்களில் உன்னுடைய பிறந்த
நக்ஷத்திரமாகிய திருவோணம். அழகான பேச்சையுடைய
பெண்களை அழைத்து உனக்கு மங்கள காரியங்களை
செய்வித்தும், மங்களமும் பாடவைத்தேன். உன்னுடைய
இத்திருக்கல்யாணத்தை கொண்டாட அரிசி, காய் கறிகளை
பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ளேன். நீ நாளை தொடங்க
கன்றுகளின் பின்னே போக வேண்டாம். உன்னை நன்றாக
அலங்கரித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடு.
#ஓம்நமோநாராயணாய
பத்ம புராணம் - பகுதி 3
காசியப முனிவர் மகன் பலனும் விரித்திரனும்
======================
காசியப முனிவரின் மனைவி அதிதி. அவர்களுடைய மக்கள் ஆதித்தியர்கள். காசியபருக்குத் திதி என்றொரு மனைவியும் உண்டு. அவர்களுடைய மக்கள் தைத்தியர்கள் (அரக்கர்கள்). தேவர்கள் அசுரர்களைக் கொன்றனர். திதியின் மக்கள் மரணத்துக்கு விஷ்ணு முக்கிய காரணமானார். அப்போது திதி, முனிவரை அணுகி தன் மக்கள் கொல்லப்படுவதாகவும், பலமும் சக்தியும் வாய்ந்த தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் மகன் ஒருவனை அருளுமாறு வேண்டினாள். அந்த வேண்டுகோளின்படி பலன் (பலம் மிக்கவன்) என்ற மகன் திதிக்குப் பிறந்தான். காசியப முனிவர் பலனுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்தார். அவன் தாயார் மகனிடம் தேவர்களைப் பழிக்குப் பழி வாங்குமாறும், குறிப்பாக விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்றும் கூறினாள். இவற்றைச் செய்வதற்கு முன் தவம் செய்து சக்தி பெற பலன் சிந்து நதிக்கரைக்குச் சென்றான். இந்நிலையில் அதிதி, தேவேந்திரனிடம், பலன் தவம் செய்ய சென்றிருப்பதாகவும், அவன் பலம் பெற்று வந்தால் வெல்ல முடியாது என்றும், எனவே உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறினாள். பலன் தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவேந்திரன் அவனைத் தனது வச்சிராயுதத்தால் கொன்று விட்டான். இவ்வாறு திதியின் பழிவாங்கும் திட்டம் முறியடிக்கப்பட்டது.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 4
விரித்திரனின் அழிவு
================
அத்துடன் திதி நிறுத்தவில்லை. காசியபரிடம் சென்று தியானத்தில் இருந்த தன் மகன் பலனை, இந்திரன் வஞ்சகமாகக் கொன்றதைக் கூறி, அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டாள். அதற்குக் காசியபர் இந்திரன் செய்தது தவறு என்று அவன் மீது கோபம் கொண்டார். மேலும், இந்திரனைக் கொல்ல ஒரு மகனைத் தோற்றுவிக்கிறேன் என்றுகூறி, அவர் தலையிலிருந்து ஒரு முடி எடுத்து எறிந்து அதிலிருந்து விரித்திரன் என்னும் ஒரு கோபமான மகனைத் தோற்றுவித்தார். அவன் இருள் போன்ற கரியவனாய், மஞ்சள் நிறக் கண்களையும் பெற்றிருந்தான். அவன் ஒரு வாளும், கேடயமும் வைத்திருந்தான். விரித்திரன் காசியபரிடம் தன்னை ஏன் படைத்தார் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டான். இந்திரனைக் கொன்று விரித்திரனே தேவேந்திரனாக ஆகும்படி சொன்னார். அவன் போர் வித்தைகளைக் கற்க ஆரம்பித்தான். இந்திரனைக் கொல்லப்போவதாகச் செய்தி இந்திரனை அடைய, அவன் சப்தரிஷிகளை அனுப்பி சமாதானம் பேசுமாறு கூறினார். அவர்கள் விரித்திரனிடம், இந்திரன் அவனுடன் நட்பு கொள்ள விரும்புவதாகவும் தன் ராஜ்ஜியத்தில் பாதி கொடுப்பதாகவும் கூறினர். 'ரிஷிகளிடம் இந்திரன் பேச்சை எப்படி நம்புவது?' என்று விரித்திரன் கேட்டான்.
அதற்கு ரிஷிகள் அவர் தன் வார்த்தையைக் காப்பாற்றாவிடின் ஓர் அந்தணனைக் கொன்ற பாவம் அவரைச் சூழும் என்றனர். பின்னர் சப்தரிஷிகள் விரித்திரனுக்கும், இந்திரனுக்கும் சமாதானம் செய்வித்தனர். பாதி ராஜ்யமும் பங்கிடப்பட்டது. இருப்பினும், இந்திரன் விரித்திரனைக் கொல்ல தக்க சமயத்துக்காக காத்திருந்தார். நந்தனகானனம் என்ற ஓர் அழகிய நந்தவனத்திற்கு ஒரு சமயம் விரித்திரன் சென்றிருந்தான். அதை அறிந்து இந்திரன் ரம்பை என்னும் அப்சர மங்கையை அனுப்பி அவனை வசீகரிக்கச் செய்தார். அவள் அழகில் ஆசை கொண்ட விரித்திரன் அவளைத் தன்னை மணந்து கொள்ள வேண்டினான். அதற்கு அவள் தான் எதைச் சொன்னாலும் செய்ய வேண்டும் என்று அவனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள்.
ஒரு நாள் ரம்பை அவனை மது அருந்தச் சொன்னாள். அவன் தான் ஒரு பிராமணன். மது அருந்துவது பாவம் என்றான். ரம்பை அவனை மேலும் வற்புறுத்த அவன் நன்றாகக் குடித்து மயக்கம் அடைந்தான். அத்தருணம் அங்கு இந்திரன் சென்று விரித்திரனைக் கொன்றார். நிபந்தனைப்படி இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. விரித்திரனைக் கொன்றதால் இந்திரன் விரித்திரக்னன் என்ற பெயர் பெற்றார். அடுத்து, திதி மற்றொரு மகனைப் பெற முயன்றாள். அதிலும் தோல்வியே. அவள் வயிற்றில் தோன்றிய மருத்துக்கள் தேவர்களுடைய நட்பினர் ஆயினர்.
தொடரும்...
எந்த ஒரு மனிதனும் இறை உணர்வில் மட்டுமே எல்லாக் காரியங்களும் செய்யப்பட வேண்டும். அப்பொழுது அதில் சத்தியம் இருக்கும். உண்மை இருக்கும். கடின உழைப்பாலோ, நல்ல அதிர்ஷ்டத்தாலோ அடையும் சிறந்த செல்வங்களை எவ்வாறு நன்முறையில் உபயோகிக்க வேண்டும் என்பதை இறை உணர்வில் மேன்மை அடைந்தவர்களால் மட்டுமே சிந்திக்கவும் செயலாற்றவும் இயலும்.
அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
பத்ம புராணம் - பகுதி 5
சுகலை வரலாறு
=============
கங்கைக் கரையில், வாரணாசியில் கிரிகலன் என்றொரு வைசியனிருந்தான். மனைவி சுகலையுடன் வாழ்ந்து வந்தான். அவள் சாஸ்திரங்கள் அறிந்த உத்தம பத்தினி. கிரிகலன், புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செல்வதால் புண்ணியமும் சேரும் என்று கேள்விப்பட்டுச் செல்ல முற்பட்டான். அவன் மனைவி சுகலையும் உடன் வர ஏற்பாடுகள் செய்ய, அவன் அதற்கு சம்மதிக்காமல், அவள் கோயிலுக்கு சென்றிருந்த சமயம் அவளுக்குத் தெரியாமலேயே யாத்திரை சென்றுவிட்டான். தன்னை ஏமாற்றி விட்டுத் தன் கணவன் யாத்திரை சென்றது குறித்துப் பெரும் துயரம் கொண்ட சுகலை அன்று முதல் பாய், படுக்கை நீக்கித் தரையில் உறங்கினாள். ஒரு வேளையே சுவையற்ற உணவை உண்டாள். அவளை அவளுடைய நண்பர்கள் அவன் தீர்த்த யாத்திரை முடிந்து விரைவில் திரும்புவான் என்றும் அவள் உடலை வருத்தி விரதங்கள் இருக்கக் கூடாது என்றும் கூறினர். ஆனால் அதற்கு அவள், சாஸ்திரப்படி கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே யாத்திரை செய்ய வேண்டும் என்பதை யாரும் உணர்வதில்லை என்றாள்.
சுதேவா கதை மூலம் இதை விளக்குகிறேன் என்று அந்தக் கதையைக் கூறத் தொடங்கினாள். அயோத்தியில் வேதங்களையும், அந்தணர்களையும் பூசிக்கும் இஷ்வாகு மன்னன் இருந்தான். காசி மன்னன் வேதராஜனின் மகள் சுதேவா, இஷ்வாகு மன்னனை மணந்து வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் இஷ்வாகு மனைவியுடன் வேட்டைக்குச் சென்று சிங்கம், காட்டுப் பன்றிகள், குதிரைகள், எருமைகள் ஆகியவற்றை வேட்டையாடினார். ஒரு பன்றிக் குடும்பம் காட்டில் இருந்தது. மன்னன் வேட்டையை அறிந்த பெண் பன்றி, ஆண் பன்றியிடம் வேட்டைக்குப் பயந்து ஓடிவிடலாம் என்றது. அதற்கு ஆண் பன்றி சாதாரண வேட்டைக்காரர்கள் பாவிகள். ஆனால் இஷ்வாகு புண்ணியவான். அவனை எதிர்த்து வெற்றி கொண்டால் அழியாப்புகழ் கிடைக்கும். இல்லை இறந்தால் மோட்சம் கிடைக்கும். மேலும் தான் முன் செய்த பாவங்களாலேயே இந்தப் பன்றி வடிவில் பிறந்ததாகவும், இஷ்வாகு கையில் இறந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்றும், அப்படி மரித்தால் குடும்பத்தைக் காப்பாற்று என்றும் பெண் பன்றியிடம் கூறியது. அதற்குப் பெண் பன்றி, குடும்பத் தலைவனாகிய ஆண் பன்றியே குடும்பத்தைக் காத்திட வேண்டும் என்றும், அது இறந்தால் பெண் பன்றி தானும் இறந்து விடுவேன் என்று கூறி மறுபடியம் ஓடித் தப்பிக்கவே கூறியது. அதற்கு ஆண் பன்றி, தான் அப்படி ஓடுவது தவறு. ஓடும் கோழைகள் குறிப்பாக நரகத்தை அடைவர் என்றது. பின்னர் பெண் பன்றி தன் மகனிடம், தானும் கணவரும் இஷ்வாகுவின் வேட்டைக்குச் செல்வதாகவும், குழந்தைகளைப் பாதுகாப்பது அதன் கடன் என்றும் கூறிற்று. இளம் பன்றிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோரைப் பிரிந்து இருந்தால் மகாரௌத்திர நரகத்தை அடைவோம் என்றன. எனவே, அவை ஒரே கூட்டமாக சென்று ஒரு குன்றில் காத்துக் கிடந்தன. அவற்றைக் கண்ட இஷ்வாகு படையினர் அவற்றைப் பிடிக்க முயல்கையில் ஆண் பன்றி தன் கொம்பால் சேனா வீரர்கள் பலரைக் கொன்றது. அதைக் கண்டு இஷ்வாகு அதனை நெருங்க அது அவன் குதிரையை எதிர்த்திட மன்னன் கீழே விழுந்தான்.
உடனே அவன் கதையால் அடிக்க ஆண் பன்றி இறந்து விட்டது. அப்போது அந்தப் பெண் பன்றி இளம் பன்றிகளை ஓடிப் போகுமாறு கூறி வேட்டைக்கு வந்தவர்களை எதிர்க்கத் தயாராகியது. மூன்று இளம் பன்றிகளும் ஓடிவிட மூத்த பன்றியும், தாய்ப் பன்றியும் எதிர்க்கத் தயாராயின. மன்னன் மூத்தப் பன்றியைக் கொன்றான். ஆனால் பெண் பன்றியைக் கொல்லாமல் விட்டான். ராணி சுதேவா ஏன் பெண் பன்றியைக் கொல்லவில்லை என்று கேட்க பெண்ணைக் கொல்வது பாவம் என்று இஷ்வாகு கூறினான்.
மன்னன் ஆட்களில் ஜார்ஜ்ஹன் என்ற ஒழுக்கமற்றவன் பெண் பன்றியை வாளால் வெட்ட, அது இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தது. ஆனால் இறக்கவில்லை. அதைக் கண்டு இரக்கம் கொண்ட ராணி சுதேவா அந்தப் பெண் பன்றியின் வாயில் தண்ணீர் ஊற்றி, குருதியைத் துடைத்தாள். அப்பன்றி ராணிக்கு நன்றி கூறி, தன் பாவங்கள் நீங்கின என்றும், ராணி ஓர் அதிர்ஷ்டசாலி என்றும் கூறிற்று. பன்றி பேசியதைக் கேட்டு ராணி வியப்பில் ஆழ்ந்தாள். அந்தப் பன்றி யார்? அவள் கணவன் யார்? என்றும் அவற்றின் கதையைக் கூறுமாறும் கேட்டாள்.
ஆண் பன்றி கதை:
எனது கணவர் ரங்கவித்தியாதரன் என்ற கந்தர்வன். அவன் ஒரு சிறந்த பாடகன். ஒரு நாள் சுமேரு மலையில் பாடிக் கொண்டிருக்கையில், அங்கு தவம் செய்து கொண்டிருந்த புலஸ்தியர் என்னும் முனிவர் அவருடைய தவத்தைப் பாடல் கெடுப்பதாகக் கூறி, அவ்விடத்தை விட்டு அகன்று செல்லுமாறு கூறினார். ஆனால், அதற்கு சம்மதிக்காத கந்தர்வன் அந்த இடம் அவனுக்கும் சொந்தமானது என்றும், உண்மைத் தவசிகள் எந்தத் தடை பற்றியும் கவலை கொள்ளாமல் தவம் செய்வர் என்றும் கூற, புலஸ்தியர் கோபத்தை அடக்கிக் கொண்டு வேறிடத்திற்குச் சென்று விட்டதை அறிந்தான். கந்தர்வன் மறுபடியும் முனிவர் இருக்குமிடத்தைப் பன்றி வடிவில் அடைந்து தொல்லை கொடுத்தான். முதலில் பன்றி அறியாமல் செய்வதாக எண்ணிய முனிவர், கந்தர்வன் அந்த வடிவில் வந்து வேண்டுமென்றே உபத்திரவம் செய்தது கண்டு உண்மையிலேயே பன்றி ஆகுமாறு சபித்தார். இது குறித்து என்ன செய்வது என்று அறியாத கந்தர்வன் இந்திரனிடம் சென்று முறையிட இந்திரன் முனிவர் சாபத்தை மாற்ற முடியாதென்றும், இஷ்வாகு மறுபடியும் கந்தர்வன் வடிவம் பெறுவாய் என்றும் கூறி அருளினார். இவ்வாறு ஆண் பன்றியின் வரலாற்றைக் கூறியபின் பெண் பன்றி தன் வரலாற்றைக் கூறத் தொடங்கியது.
பெண் பன்றி கதை:
ஸ்ரீபுரத்தில் வசுதத்தர் என்ற அந்தணன் தன் மகள் சுதேவா என்பவளுடன் வாழ்ந்து வந்தான். அவளை மணம் பேசப் பலர் வந்ததும் அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஒருநாள் அவர் மனைவி அது பற்றி கேட்க அவன் வீட்டு மாப்பிள்ளையாக இருக்கக்கூடிய ஓர் அந்தணனுக்கே அவளை மணம் செய்து வைக்க விரும்புவதாகக் கூறினான். கடைசியில் சிவசர்மா என்ற பெற்றோர்கள் இல்லாத அந்தணனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தான். வசுதத்தரால் செல்லமாக வளர்க்கப்பட்ட சுதேவா தான் பணக்காரி என்றும், தன் கணவன் ஏழை என்றும் அவனை மதிக்காமல் கேவலமாக நடத்த, அவன் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் சென்று விட்டான். இதனால் கோபமடைந்த வசுதத்தர், பெண்ணை வீட்டை விட்டு வெளியே தள்ளி, அவளது தாயாரிடம் குழந்தையை ஐந்து வயது வரையில் பெற்றோர் செல்லமாக வளர்க்க வேண்டும் என்றும், எட்டு வயது வரையில் பெற்றோரிடம் வாழ வேண்டும் என்றும், பின்னர் திருமணம் ஆனதும் கணவனுடன் வாழ வேண்டும் என்றும், அதன் பிறகு தகப்பனார் வீட்டில் இருக்கக்கூடாது என்றும் பெரியோர் கூறுவர் என்று கூறி உக்கிரசேனன் கதையைக் கூறினான்.
மதுரை நகரில் உக்கிரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். விதர்ப்ப நாட்டு மன்னன் சத்தியகேது தன் மகள் பத்மாவதியை மிகவும் நேசித்தான். ஆனால், அவள் செல்வச் செருக்கால் கணவனிடம் அந்த அளவு அன்பைக் காட்டவில்லை. இந்நிலையில் சத்தியகேது உக்கிரசேனரிடம் பெண்ணை அனுப்பி வைக்குமாறு சொல்ல, இஷ்டமில்லாமல் அவளை உக்கிரசேனன் அனுப்பி வைத்தான். செருக்குற்ற பத்மாவதி மறுபடியும் உக்கிரசேனனிடம் செல்ல விருப்பபப்படவில்லை. சத்தியகேதுவின் நகருக்கு அருகில் ஒரு மலை இருக்கிறது. அங்கு ஒரு நாள் சென்ற பத்மாவதி நிதிக்கதிபதி குபேரன் நண்பனாகிய கோவலனைச் சந்தித்தாள். அவன், உக்கிரசேனன் மனைவி பத்மாவதி என்பதையும் அவள் தன்னை மணக்கமாட்டாள் என்றும் எண்ணினான். எனவே, அவன் உக்கிரசேனன் வடிவில் அணுகி தன் பாடலின் மூலம் அவளைக் கவர்ந்திட இருவரும் சுகித்திருந்தனர். சில நாட்களில் அவன் உக்கிரசேனன் அல்ல என்பதை உணர்ந்த பத்மாவதி அவன் நடத்தைப் பற்றிக் குறைகூற அவன் அவள் அழகில் ஈடுபட்டு அவளை அடைந்ததாகவும் அவள் கணவனைப் பிரிந்து இருந்ததே அதற்குக் காரணம் என்றான். இவ்வாறு மோசம் போன பத்மாவதி உக்கிரசேனரிடம் சென்று அவனுடன் வாழ்ந்து வருகையில் அவளுக்கு ஓர் குழந்தை பிறந்தது. கோவலனால் ஏற்பட்ட விளைவு. அவன்தான் கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன்.
இந்தக் கதையைக் கேட்ட வசுதத்தனின் மனைவி, தன் மகள் சுதேவாவைக் கணவன் வீட்டுக்குத் திருப்பி அனுப்பினாள். கணவனால் கைவிடப்பட்ட அவளை அனைவரும் வெறுத்தனர்.
மீண்டும் பெண் பன்றி:
பல ராஜ்ஜியங்களில் அலைந்து திரிந்த சுதேவா சௌராஷ்டிராவில் உள்ள வனஷ்தலாவை அடைந்தாள். அவள் கையில் ஓர் கலயம் ஏந்தி வீடு வீடாகப் பிச்சை எடுத்தாள். அப்போது ஒரு வீட்டில் அவ்வீட்டுத் தலைவன் தன் மனைவி மங்கலாவை அழைத்து, யாரோ உணவு கேட்டு வந்திருக்கிறார்கள். அவருக்கு உணவளி என்று கூறினான். மங்கலா சுதேவாக்கு இனிய உணவு பண்டங்களை அளித்து, அவள் யார்? ஏன் இந்த அவல நிலை? என்று விசாரித்தாள். இரண்டாவது முறை, அவ்வில்லத் தலைவன் குரலைக் கேட்ட சுதேவா, அவர் தன் கணவர்தான் என்பதை அறிந்து வெட்கத்தால் தலைகுனிந்து நின்றாள். அது குறித்து மங்கலா தன் கணவரிடம் கேட்க, அவர் அவள் வசுதத்தனின் மகளும், தன் மனைவியுமான சுதேவா என்று கூறி, அவள் தன்னைத் தேடியே வந்திருக்கலாம் என்றும், அவளை நன்கு நடத்து என்றும் கூறினான். இது கேட்ட சுதேவா வியப்புற்றாள். கணவன் சொல்லும், மங்கலா அவளை நடத்திய விதமும் உணர்ந்த அவள் மிக்க வருத்தத்துடன் உயிரை விட்டாள். அவள் இறந்தவுடன் யமதூதர்கள் அவளை அழைத்துச் செல்ல, அவள் செய்த பாவங்களுக்கேற்ப பல நரக வேதனைகளை அனுபவிக்க நேர்ந்தது. பின்னர் அவள் பல பிறவிகள், பூச்சி விலங்குகளாகத் தோன்றி, மறுபடியும் ஒரு பெண் பிறவியாகப் பிறந்தாள் என்று பெண் பன்றி தன் கதையைக் கூறி முடித்து தான் நற்கதி அடைய உதவுமாறு வேண்ட, ராணி தான் ஓராண்டில் பெற்ற புண்ணியங்களை அளிப்பதாகக் கூற, பன்றி ஓர் அழகிய தேவதை வடிவம் பெற்றது. விண்ணிலிருந்து வந்த விமானத்தில் ஏறி சொர்க்கம் அடைந்தது.
மீண்டும் சுகலை:
தன் கணவன் தனக்குத் தெரியாமல் யாத்திரை சென்றது பற்றி வருந்திய சுகலை, விரதம் இருந்து உடலை வருத்தி கணவனை எதிர்நோக்கி வாழ்ந்திருந்த வாழ்க்கையை எல்லோரும் புகழ்ந்து பேசினர். தேவேந்திரனும் அவளைப் பற்றிக் கேட்டு வியப்புற்று அவளைச் சோதிக்க வர, சுகலை அவனுக்கு உண்மையான மனைவியின் கடமைகளை விளக்கினாள். இந்நிலையில் சுகலையின் கணவன் கிரிகலன் வீடு திரும்பினான். அவன் ஓர் அசரீரி ஒலி கேட்டான். அது அவன் செய்த யாத்திரையால் ஒரு பலனும் இல்லை. பதி விரதையான பத்தினி இன்றி செய்த யாத்திரை புண்ணியம் தராது. உண்மையான மனைவி உள்ள இல்லம் புனிதத் தலங்களை விட உயர்ந்தது, சிறந்தது என்று கூறியது. வீட்டிற்கு விரைந்தான் கிரிகலன். கணவனைக் கண்ட மனைவி அவனைத் தழுவிக் கொண்டாள். அப்போது அங்கே வந்த இந்திரன் அவளைத் தன்னை மணக்குமாறு சோதித்துப் பார்த்ததாகக் கூறி, அவள் உத்தமி என்றும் மகிழ்ந்து அவன் அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்ற கேட்க, அவர்கள் தரும நெறியிலிருந்து நழுவாமலிருக்குமாறும், கடவுளிடமும், ரிஷிகளிடமும் பக்தியுடன் இருக்குமாறும் வரம் வேண்டினர். அந்த வரத்தைப் பெற்றனர் அத்தம்பதியர். அவ்விடம் நரி தீர்த்தம் எனப்படுகிறது.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 6
பிப்பலன்
========
காசியப முனிவருக்குப் பிப்பலன் என்றொரு மகன் இருந்தான். எந்தக் காரணத்தாலும் தடைபடாமல் ஓராயிரம் ஆண்டு அவன் தவம் தொடர்ந்தது. கடவுளர்கள் அவன் மீது பூமாரி பொழிந்து வேண்டிய வரம் யாது என்று கேட்க, அவன் உலகிலுள்ள அனைத்தும் தன் சொல்லுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கேட்க, அவ்வாறே வரம் பெற்றான். இதனால் பெருமகிழ்ச்சி கொண்ட அவன், ஒரு குட்டையின் அருகில் அமர்ந்து பெருமிதம் அடைந்திருக்கையில் ஒரு கொக்கு அவன் முன் தோன்றி அவன் மூவாயிரம் ஆண்டுகளை வீணாக்கிவிட்டான் என்று குறை கூறியது. அது கேட்ட அவன் வியப்புற்று, மும்மூர்த்திகளில் யார் நீ என்று அதனிடம் கேட்டான். அதற்குக் கொக்கு, தன்னைப் பற்றி சுகர்மனிடம் சென்று கேட்குமாறு கூறிற்று.
குந்தலன் என்ற அந்தணனின் மகன் சுகர்மன். அவன் தன் வாழ்நாளில் அவனுடைய பெற்றோர்களுக்குத் தொண்டு ஆற்றுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். சுகர்மன், பிப்பலனை இனிய முகத்துடன் வரவேற்று, உபசரித்தான். பின்னர் அவனைப் பற்றிய விவரங்களையும், கொக்கைப் பற்றியும் அதன் சொல் கேட்டு பிப்பலன் வந்திருப்பது பற்றியும் அறிந்தான். அந்தக் கொக்கு யாரென்று கேட்க, சுகர்மன் அது பிரம்மம் என்று விடை அளித்தான். உலகில் அனைத்தையும் அவனால் கட்டுப்படுத்த முடியுமா? என்று பிப்பலன் சுகர்மனைக் கேட்டான். நீயே பார்த்து அறி என்று சுகர்மன் கூறினான். அவன் தேவர்களைத் தன் முன் வருமாறு அழைக்க, இந்திராதி தேவர்கள் அவன் முன் தோன்றி, எதற்காக அழைத்தாய் என்று வினவினர். அப்போது சுகர்மன் தன் சக்தியைப் பற்றி பிப்பலன் தெரிந்து கொள்ளவே அவ்வாறு அழைத்ததாகக் கூறினான். தேவர்கள் அவனுடைய பெற்றோர்களின் பக்தியை வாழ்த்திச் சென்றனர்.
சுகர்மன் தான் பெற்றோர்களுக்குச் செய்யும் தொண்டே தனது சக்திக்குக் காரணம். தான் எந்தவிதமான தவமும் செய்யவில்லை. மந்திரங்கள் உச்சரிக்கவில்லை. யாகங்கள், தீர்த்த யாத்திரை எதுவும் செய்ததில்லை என்றும் அவை அனைத்தையும் விட பெற்றோர்க்கு செய்யும் சேவையே உயர்ந்தது என்றும், வேதங்கள் கற்றும் தாய் தந்தையருக்குச் சேவை செய்யாவிட்டால் என்ன பயன்? என்றும் கேட்டான். இதுவே நான் உபதேசம் செய்யக்கூடியது என்று கூறி யயாதியின் வரலாற்றைக் கூறினான்.
சந்திரகுல மன்னன் மகன் யயாதி. அவனுக்கு நான்கு புத்திரர்கள். தேவயானி, சர்மிஷ்டை என்று இரண்டு மனைவியர். அவன் பல காலம் அறநெறியில் நின்று நாட்டை ஆண்டுவர, அவன் புகழ் தேவருலகத்தை எட்டியது. தேவேந்திரன் தன் சாரதி மாலதியை அனுப்பி யயாதியை தேவலோகத்திற்கு அழைத்துவரச் சொன்னான். தான் இளைஞன் என்றும் தேவலோகம் வரவேண்டிய அவசியமில்லை என்றும் கூறி தன் நாட்டு மக்களை எல்லாம் தருமநெறியில் ஒழுகுமாறும், விஷ்ணுவிடம் பக்தி கொண்டிருக்குமாறும் கூறினான். யயாதியின் தரும நெறியால் புவியே சொர்க்கமாகியது. யயாதியின் தரும நெறிக்குப் பங்கம் விளைவிக்க காதல் தெய்வம் கந்தர்ப்பன் அனுப்பப்பட்டான். இதனால் யயாதி மனம் மாற ஆரம்பித்தது. அவனும் முதுமை அடைந்தான்.
ஒரு சமயம் அவன் காட்டில் ஒரு மானை வேட்டைக்காகத் துரத்தி வந்தான். அங்கொரு அழகிய நீர் நிலையில் ஒரு பெரிய தாமரை மலரையும் அதன் மீது ஓர் அழகியையும் கண்டு அவள் மீது மோகம் கொண்டு அவளை மணக்க விரும்பினான். அவள் தன் பெயர் அஷ்ருவிந்தமதி என்றும், ரதியின் மகள் என்றும் ஓர் ஆணழகனையே மணக்க விரும்புவதாகவும் யயாதி முதியோன் ஆனதால் மணக்க முடியாது என்றும், அவன் இளமை பெற்று வந்தால் அவனை மணக்கத் தடையில்லை என்றும் கூறினாள். நாடு திரும்பிய யயாதி தன் நான்கு மகன்களில் ஒவ்வொருவரையும் தனக்கு அவர்தம் இளமையை அளித்து முதுமையை ஏற்குமாறு வேண்ட, மறுத்த மகன்களுக்கு அரசு இல்லை என்று சபிக்க பூரு என்ற மகன் மட்டும் மகிழ்வுடன் தன் இளமையை நல்கினான். இளமை பெற்ற யயாதி, கானகத்தில் கண்ட அழகியை அணுகிட அவள் அவனை மணக்க, இரண்டு நிபந்தனைகளை விதித்தாள். ஒன்று, அவன் மணந்திருக்கும் இரு மனைவியரையும் விட்டு விட வேண்டும், இரண்டாவது தான் சொல்லும் எதையும் தட்டாமல் செய்ய வேண்டும் என்றாள். யயாதி அவற்றிற்கு சம்மதம் தெரிவித்து அவளை மணந்தான்.
பல காலம் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு அவள் யயாதியிடம் உலக இன்பம் அனுபவித்தது போதும் என்றும், சொர்க்கம் இருவரும் செல்ல வேண்டும் என்று கூற யயாதி பூருவுக்கு அவன் இளமையைத் திருப்பித் தந்து அரசனாக்கினான். பூருவை ஆசிர்வதித்து யயாதி மனைவியுடன் சொர்க்கத்தை அடைந்தான். புத்திரன் என்றால் பூரு மாதிரி இருக்க வேண்டும். பெற்றோர்கள் தொண்டுக்கு வேறு இணை இல்லை என்று சுகர்மன் பிப்பலனுக்கு எடுத்துரைத்தான். தாய் தந்தையர்களுக்குச் செய்யும் சேவையே சிறந்த புண்ணியம் என்று அறிய வேண்டும்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 7
சியவன ரிஷியும் கிளிக்குஞ்சுகளும்
======================
பிருகு முனிவரின் வழிவந்தவர் சியவன ரிஷி என்பவர். யாத்திரை செய்வதன் மூலமே சிறந்த அறிவைப் பெறமுடியும் என்ற உறுதி கொண்ட அவர் நர்மதை, சரசுவதி, கோதாவரி நதிக்கரைகளில் உள்ள தீர்த்தங்களுக்கு யாத்திரை சென்று கடைசியில் நர்மதை ஆற்றின் தென்கரையில் உள்ள அமர கண்டகாவை அடைந்தார்.
யாத்திரையினால் களைப்பு அடைந்த அவர் ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுத்தார். அந்த மரத்தின் மீது கற்ற கிளி ஒன்று வசித்து வந்தது. அதன் பெயர் குஞ்சலா. அதற்கு மனைவியும், உஜ்வலா, சமுஜ்வலா, விஜ்வலா, கபிஞ்ஜ்லா என்ற நான்கு மகன்களும் இருந்தனர். அந்தக் கிளிக்குஞ்சுகள் தினமும் காலையில் வெளியில் சென்று மாலையில் திரும்பியதும் வெளியில் அவை கண்டவற்றையும், கேட்டவற்றையும் கூறுமாறு சொல்வது வழக்கம். அந்த மரத்தின் அடியில் தான் சியவனர் ஓய்வெடுத்தார்.
உஜ்வலா சொன்னது:
அன்று மாலை திரும்பி வந்த முதல் கிளிக்குஞ்சு உஜ்வலா கூறிய செய்தி, பிளக்ஷ தீவுக்கு உணவு தேடிச் சென்றதாகவும், அந்த இயற்கை எழில் நிறைந்த பகுதியை திவோதாசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு திவ்யாதேவி என்ற அழகிய புத்திரி உண்டு. திருமண வயது வந்த அவளை மன்னன் ரூப நாட்டு மன்னன் சித்திரசேனனுக்குத் திருமணம் முடிக்க எண்ணி நிச்சயதார்த்தம் செய்தான். ஆனால் திருமணத்திற்கு முன்பே அந்த சித்திரசேனன் இறந்து விட்டான். திருமணம் நடைபெறாததால் அவளை வேறொருவருக்கு மணம் முடிக்கலாம் என்று அமைச்சர்கள் கூறினர். அடுத்து ரூபசேனனுக்கு நிச்சயதார்த்தம் நடத்த, திருமணத்துக்கு முன் அவனும் இறந்து விட்டான். இவ்வாறு இருபத்தோரு தரம் நிகழ்ந்தது. எனவே, மன்னன் மகளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தான். அப்போது அதற்கு வந்தவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு அனைவரும் இறந்தனர். எனவே, அவள் திருமணம் நடைபெறவில்லை. அவள் தவம் செய்ய காட்டுக்குச் சென்றாள் என்று கூறி அவள் திருமணம் நடைபெறாதது ஏன் என்று கேட்க அதுபற்றிக் கூற ஆரம்பித்தது குஞ்சலக் கிளி.
திவ்ய தேவியின் முற்பிறவி: வாரணாசி என்னும் புனித நகரில் தரும நெறியுடன் சுதீரன் என்ற வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி சித்திராவிடம் அன்பு பூண்டு அனுசரணை உள்ள கணவனாக இருந்தான். ஆனால், சித்திரா தீயகுணம் படைத்தவள். கணவனுக்குக் கீழ்ப்படியாமலும், யாகங்கள் செய்வது பிடிக்காமலும் இருந்ததுடன் ஊர் வம்பு பேசியும், கணவன் மீது குற்றம் சாற்றியும் இருந்து வர, சுதீரன் வெறுப்பு கொண்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டான். சித்திரா கள்ளர்கள், கொள்ளையர்கள் ஆகியோர்களுடன் கூடி தீயசெயல்களைச் செய்து வந்தாள். அவள் இறந்தவுடன் யமபுரத்தில் தண்டனைகள் அனுபவித்துப் பின்னர் திவ்யதேவியாகப் பிறந்தாள். முற்பிறவியில் தன் செயல்களால் மற்ற குடும்பங்களை வாழவிடாமல் செய்ததால் இப்பிறவியில் அவளுக்குக் குடும்ப வாழ்க்கை ஏற்படவில்லை. ஆனால், அவள் எப்படி அரசகுமாரியாகப் பிறந்தாள் என்று குஞ்சு கேட்க அதற்குக் கிளி, முற்பிறவியில் ஒரு நாள் சன்னியாசி சுதீரின் வீட்டுக்கு வர அவரை வரவேற்று நன்கு உபசரித்தாள். அந்தப் புண்ணிய பலனால் தான் இளவரசியாய் பிறந்தாள் என்று கூறியது. அப்படியானால் அவள் தற்போதுள்ள கணவனை எப்படி அடைய முடியும்? பாவப் பிராய்ச்சித்தமாக எப்படித் தவம் செய்ய வேண்டும்? கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்டது. அதற்கு இடைவிடாது விஷ்ணுவை பிரார்த்தனை செய்து, அவரது நாம சங்கீர்த்தனம் செய்தும், விஷ்ணுவுக்கான விரதங்களை அனுஷ்டித்தும் புண்ணியத்தை சம்பாதிக்கலாம் என்றது கிளி. மறுநாள் உஜ்வலா இளவரசியைக் கண்டு அதன் தகப்பனார் கூறியவற்றைச் சொல்ல அவள் நான்கு ஆண்டுகள் அவ்வாறே செய்ய அவளுடைய எல்லாப் பாவங்களும் நீங்கின.
சமுஜ்வலா சொன்னது:
தந்தை கிளி குஞ்சலாவிடம், இரண்டாவது கிளிக்குஞ்சு சமுஜ்வலா தான் கண்டவற்றைக் கூறலாயிற்று. நான் உணவு தேட எப்போதும் இமயமலை பகுதிக்குச் செல்வது வழக்கம். அங்கு ஒரு பள்ளத்தாக்கு உள்ளது. அவ்விடம் கிளிகளும், அப்சரஸுகளும் அடிக்கடி வருவதுண்டு. மானசரோவரம் ஏரியும் அங்குதான் உள்ளது. நான் கண்டதைக் கேட்டதை அப்படியே கூறுகிறேன். நான் ஏரிக்கரையில் இருந்த போது அங்குப் பல அன்னப் பறவைகள் வந்தன. அவை கருப்பு, வெள்ளை, நீலம் எனப் பல நிறங்களில் இருந்தன. அவற்றைப் பின்பற்றி அங்கு நான்கு பெண்மணிகள் வந்தனர். அவர்கள் பற்கள் நீண்டும், ஊசி போன்ற முடியும் கொண்டு கோரமாகக் காட்சி அளித்தனர். கருப்பு நிற அன்னப் பறவைகள் ஏரியில் நீராடி எழுந்தன. உள்ளிருந்து ஒரு பெரிய அன்னம், மேலும் மூன்று அன்னங்களும் வெளிவந்தன. உடனே அவை பறந்து சென்றன. ஆனால், மற்ற அன்னப் பறவைகள் அங்கேயே பறந்து கொண்டிருந்தன. குரூரவடிவப் பெண்களும் அங்கேயே சுற்றி சுற்றி பயங்கரமாகச் சிரித்தனர். அவ்வமயம் அங்கொரு வேட்டைக்காரன் வந்தடைந்தான். சிறிது நேரத்தில் அவன் மனைவியும் வந்து சேர்ந்தாள். ஆனால், அவளுக்கு அவள் கணவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சாதாரணமாக வேட்டைக்காரன் கருப்பாக, குரூர வடிவத்துடன் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது அவன் அழகாக ஒளியுடன் கூடியவனாக விளங்கினான். அவனுக்கு மாறுதல் ஏதும் இல்லாத மனைவியை அறிய முடிந்தது. ஆனால் அவளால் கணவனைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் வேடன் அவளை அணுகி, என்னைத் தெரியவில்லையா? எனக்குப் பசிக்கிறது, உணவு கொடு என்று கேட்டான். அதற்கு அவள், நீ யார்? என் கணவர் கருப்பாக இருப்பார். நீயோ இளமையாக அழகாகக் காணப்படுகிறாய். நீ எப்படி என் கணவன் ஆவாய்? என்று கேட்டாள். அப்போது வேட்டைக்காரன், நான் வேட்டையாடிக் களைத்து போய் நர்மதை சங்கமம் என்ற தீர்த்தத்தில் நீராடினேன். அது நர்மதை, ரேவா என்ற ஆறுகளின் கடல். அதில் நீராடி எழுந்தவுடன் என் தோற்றம் அதிசயமாக மாறிவிட்டது. நீ வா உன்னையும் அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றான். அவர்கள் நர்மதை சங்கமம் தீர்த்தத்திற்குச் செல்ல, அன்னப்பறவைகளும், நான்கு கோரப் பெண்மணிகளும் பின் சென்றனர். அங்கு நீராடிய வேட்டைக்காரனின் மனைவி தேவதை போல் தோற்றமளித்தாள். மானசரோவரத்தில் இருந்து வந்த கருப்பு அன்னங்கள் வெள்ளைப் பறவைகளாக மாறின. மற்ற கருப்பு அன்னங்களும் வெள்ளை நிறம் பெற்றன. அந்த நான்கு கொடிய வடிவம் கொண்ட பெண்மணிகள் மட்டும் கீழே விழுந்து இறந்தனர். இது குறித்து விளக்குமாறு தந்தை குஞ்சலாவிடம் கிளிக்குஞ்சு வேண்டியது.
குப்ஜ தீர்த்தம், நர்மதை, ரேவா சங்கமம்
ஒரு சமயம் இந்திரனைக் காண நாரதர் தேவலோகம் சென்றார். அப்போது இந்திரன் அவரை எங்கெல்லாம் சென்று வருகிறார் என்று கேட்க எல்லாத் தீர்த்தங்களுக்கும் சென்று வருகிறேன் என்று முனிவர் கூற, புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்க நாரதர் எல்லா தீர்த்தங்களும் சிறந்தவையே என்றார். அது கேட்ட இந்திரன் எல்லாத் தீர்த்தங்களையும் உடனே வரும்படி அழைத்தார். கங்கை முதல் வசுபுத்ரிகா வரை எல்லா நதிகளும் வந்து சேர்ந்தன. இந்த நதிக்கரைகளில் பிரயாகை, புஷ்கரம், வாரணாசி, மதுரா என்று பல புண்ணிய நகரங்கள் உள்ளன. தீர்த்தங்கள் இந்திரனிடம் தம்மை அழைத்த காரணம் என்னவென்று கேட்டன. அதற்கு இந்திரன் பசுவதை, பெண் வதை, கணவனைப் பிரிந்து வாழ்தல், மது அருந்துதல், பொன் திருடல், ஆசானைக் குறை கூறுதல், விக்கிரக நிக்கிரகம், தீயிடல், போர்க்களத்தை விட்டு ஓடுதல் போன்ற பல கொடிய பாவங்கள் உள்ளன. அத்தகைய பாவங்களைப் போக்கக் கூடிய தீர்த்தம் எது? என்று கேட்க, அவை அவற்றிற்கேற்ற சக்தியோ, புனிதத் தன்மையோ எங்களிடம் இல்லை என்றும் ஆனால் பிரயாகை, புஷ்கரம் அர்க்கிய தீர்த்தம், வாரணாசி ஆகியவை ஐயமின்றி மிகச் சிறந்தவை ஆகும் என்றும் விடை அளித்தன.
தீர்த்தங்கள் பற்றிய சரிதம்
பாஞ்சால நாட்டில் விதுரன் என்றொரு க்ஷத்திரியன் இருந்தான். அவன் பிராமணக் கொலை போன்ற கொடிய பாவங்களைச் செய்தான். அவன் பல தீர்த்தங்கள் சென்றும் பாவம் ஒழியவில்லை. இவ்வாறு யாத்திரை சென்ற அவன் மாளவ நாட்டை அடைந்தான். அங்கு தன் ஆசானைக் கொன்ற சந்திர சர்மன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். அவனும் தன் பாவம் தொலைய பல தீர்த்தங்களுக்குச் சென்றான். ஆனால் பலன் இல்லை. அடுத்து விதுரனும், சந்திரசர்மாவும் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். வழியில் அவர்கள் தான் மணக்கக் கூடாத ஒருத்தியை மணந்த வேதசர்மா என்ற பிராமணனைக் கண்டனர். அவனும் தன் பாவம் தீர மேற்படி இருவருடன் கலந்து மூவருமாக தீர்த்த யாத்திரை சென்றனர். அவர்கள் வழியில் ஒரு குடிகாரனாகிய வஞ்சுலன் என்ற வைசியனைச் சந்தித்தனர். அவனும் தன் பாவம் தீராததால் வருத்தமுற்றிருந்தான். இப்போது நால்வரும் ஒன்றாகக் கூடி ஒரு முனிவரை நாடி தங்கள் பாவம் தீர வழி கூறுமாறு வேண்டினர்.
அப்போது முனிவர் அவர்களைப் பிரயாகை, புஷ்கரம், அர்க்கிய தீர்த்தம், வாரணாசி ஆகிய இடங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டால் அவர்கள் பாவம் தொலையும் என்று அறிவுரை கூறினார். அவ்வாறே அந்த நால்வரும் அந்த நான்கு தீர்த்தங்களில் நீராடியும் பாவம் தொலையவில்லை. மாறாக, அவர்களின் கொடிய பாவங்களால் அந்தத் தீர்த்தங்கள் மாசடைந்தன. அவை நான்கும், நான்கு கரிய அன்னப் பறவைகளாக மாறி அந்த நான்கு பாவிகளையும் பின் தொடர்ந்தன. அவர்கள் தொடர்ந்து சென்று நீராடிய தீர்த்தங்களும் மாசுபட்டு கரும் அன்னப் பறவைகளாக மாறின.
மாசுபடாத தீர்த்தங்கள் வெள்ளை அன்னப் பறவைகளாக மாறி அவர்களைப் பின் தொடர்ந்தன. ஆக மொத்தம் அறுபத்து நான்கு தீர்த்தங்கள் 64 அன்னங்களாக மாறி ஒரு குழுவாகப் பறந்து சென்றன. அந்த நால்வரும், பறவைகளும் மானசரோவரை அடைய, பாவிகள் அக்குளத்தில் நீராட, அந்த ஏரி மாசுபட்டு மிகப்பெரிய கரிய அன்னப்பறவை ஆயிற்று. கடைசியில் அவை அனைத்தும் நர்மதை, ரேவா ஆற்றுக் கூடலான நர்மதை சங்கமம் அடைந்தன. அந்தத் தீர்த்தத்தில் நான்கு பாவிகளும் நீராட அவர்கள் பாவங்கள் தொலைந்தன. அதே தீர்த்தத்தில் கருப்பு நிற அன்னங்கள் நீராடி வெளிவர அவை வெள்ளைநிறப் பறவைகளாகி மாசு நீங்கின. அந்த நான்கு பாவிகளின் பாவங்கள் தான் கொடிய பெண் உருவங்கள். நர்மதை சங்கமத் தீர்த்தத்தில் நீராடி அந்த நால்வரின் பாவங்கள் தொலைந்து விட்டதால் அந்தப் பாவங்களின் உருவங்களான பெண்கள் கீழே வீழ்ந்து மடிந்தன. எனவே பிரயாகை, புஷ்கரம், அர்க்கிய தீர்த்தம், வாரணாசி சிறந்த புகழ்பெற்ற திருத்தலங்கள், யாத்திரைத் தலங்கள் ஆனாலும் இவற்றை எல்லாம் விட நர்மதை, ரேவா கூடலான குப்ஜ தீர்த்தம் மிகச் சிறந்ததாகும்.
விஜ்வலா என்ற மூன்றாவது கிளிக்குஞ்சு சொன்னது:
விஜ்வலா எப்போதும் சுமேரு மலைப்பகுதியில் உள்ள பூக்கள், கனிகள் நிறைந்த ஆனந்த கானகத்துக்குச் செல்வது வழக்கம். அங்கு அப்சரசுகளும், கந்தவர்களும் கேளிக்கைக்காக வருவது உண்டு. அடிக்கடி அங்கு விண்ணிலிருந்து விமானங்கள் வருவதும், போவதுமாக இருக்கும். அங்குள்ள அழகிய ஏரியில் தாமரை மலர்களும், அன்னப் பறவைகளும் காணப்படும். ஒருநாள் விஜ்வலா ஒரு விமானத்தைக் கண்டது. அதிலிருந்து ஓர் அதிசய தம்பதியர் இறங்கி ஏரியில் நீராடி ஒரு ஜதை வாள் எடுத்துக் கொண்டு ஏரிக்கருகில் கிடந்த ஆண், பெண் இரண்டு பிணங்களில் ஆண், ஆண் பிணத்திலிருந்தும், பெண் பெண் பிணத்திலிருந்தும் மாமிசத்தை வெட்டி எடுத்து உண்டனர்.
பிணங்களும், அந்த தம்பதியரும் ஒரே மாதிரியாகவே தோற்றமுடையவராயிருந்தனர். இவ்வாறு இவர்கள் செயல்புரியும் போது அங்கு வந்து சேர்ந்த இரண்டு அழகிகள் அவர்களைக் கண்டு சிரித்தனர். அதே சமயம் இரண்டு அழகற்ற பெண்மணிகளும் அங்கு வந்து தங்களுக்கும் நரமாமிசம் தரும்படி வேண்டினர். விமானத் தம்பதியர் இருவரும் வயிறு நிரம்பியவுடன், நீர் அருந்தி விட்டு விமானத்தில் ஏறிச் சென்று விட்டனர். மற்ற நான்கு பெண்மணிகளும் அகன்றனர். எல்லோரும் சென்ற பிறகு பிணங்களின் வெட்டப்பட்ட மாமிசம் பகுதி நிறைந்து முழு வடிவம் ஏற்பட்டது. இவ்வாறு தினமும் நடப்பதாகக் கூறியது விஜ்வலா. அதுபற்றிய விவரங்களைத் தந்தை கிளியிடம் கேட்டது. அப்போது தந்தை கிளி குஞ்ஜலா, சுவாஹு என்பவள் கதையைக் கூறியது.
சோழ நாட்டில் அழகிய, சிறந்த தருமவானான சுவாஹு என்ற மன்னன் இருந்தான். தார்க்ஷ்யி என்பவள் அவள் மனைவி. சுவாஹு பல யாகங்கள் செய்தான். எனினும், அவனது குரு ஜைமுனி அவற்றால் திருப்தி அடையாமல், தனக்குத் தானங்கள் அளிக்குமாறும் அவையே அழியாப் புண்ணியம் அளிக்கும் என்றும் கூறினார். அரசன் அந்தப் புண்ணியத்தால் தனக்கு என்ன லாபம் என்று கேட்க, அதற்கு குரு அது உனக்கு மோக்ஷம் நல்கும் என அவன், நான் மோக்ஷம் (அ) சொர்க்கத்தில் எப்போதுமே இருக்கமுடியுமா? என்று கேட்டான். அப்போது குரு ஜைமுனி புண்ணியங்கள் இருக்கும் வரையில் அதாவது முழுவதும் செலவழியும் வரையில் இருக்கலாம். பின்னர் மறுபடியும் பூமியில் பிறக்க வேண்டும் என்றார். அதற்கு மன்னன் நிலையற்ற அந்த மோக்ஷம் எனக்குத் தேவையில்லை நான் விஷ்ணுவைப் பிரார்த்தித்து, அவர் அருளால் விஷ்ணு லோகத்தில் நிலையாக இருப்பேன். சொர்க்கத்தை விட அதுவே சிறந்தது என்றான். அரசனும் அரசியும் விஷ்ணுவைக் குறித்துக் கடுந்தவம் இயற்றி விஷ்ணு லோகத்தை அடைந்தனர். அது ஓர் அதிசய உலகம். எனினும், இருவரும் விஷ்ணுவைத் தரிசிக்க முடியவில்லை. மேலும் பசி, தாகம் ஆகியவற்றால் அவர்கள் அவதியுற்றனர். அச்சமயம் அங்கு வாமதேவர் என்ற முனிவரைக் கண்டனர். அவரிடம் தங்கள் நிலையைக் கூறி வருந்தினர். அப்போது முனிவர் நீங்கள் இருவரும் சிறந்த விஷ்ணு பக்தர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் எந்தவிதமான தானங்களும் செய்யவில்லை. குறிப்பாக தான தருமங்களில் சிறந்த அன்னதானம், தீர்த்த தானம் செய்ததில்லை. எனவே உங்களுக்கு அவை இங்கே கிடைக்கவில்லை என்றார். இதற்கு நாங்கள் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் தான் என்ன? என்று அவர்கள் கேட்க, வாமதேவர் உங்கள் இருவரின் பிணங்கள் பூமியில் உள்ள இடத்திற்குச் செல்லுங்கள். அந்தப் பிரேத வடிவங்கள் அழுகிப் போகாமல் அப்படியே இருக்கின்றன. அவற்றிலுள்ள மாமிசத்தை வெட்டி உண்டு வாருங்கள். யாரேனும் ஒருவர் விஷ்ணுவுக்கான பிரார்த்தனையைப் பாடக்கேட்கும் நாளே தங்களுக்கு விமோசன நாள் ஆகும் என்றார்.
எனவே, தேவலோக தம்பதியர் - சோழ மன்னனும், ராணி தார்க்ஷ்யியும் அவர்களைப் பார்த்துச் சிரித்தது ஞானமும், சிரத்தையும் (நம்பிக்கை). அவர்கள் தானம் கொடுக்கத் தவறிய தம்பதியரைக் கண்டு நகைத்தனர். உண்ண மாமிசம் கேட்ட கோரமான பெண்மணிகள், பசியும், தாகமும் ஆகும். அப்போது அவர்களுடைய விமோசனம் என்ன ஆயிற்று என்று கேட்ட விஜ்வலா, விஷ்ணுவுக்கான பிரார்த்தனையைத் தனக்குக் கற்பிக்குமாறும் தான் அதை அவர்களுக்குக் கூறி மோக்ஷத்திற்கு வழிவகுப்பதாகவும் கூற, அவர்கள் பகவான் விஷ்ணுவைப் பிரார்த்தித்து பாவம் நீங்கப் பெற்றனர்.
நான்காவது கிளிக்குஞ்சான கபிஞ்ஜலா சொன்ன கதை:
அசோக சுந்தரி, நஹுஷன் கதை
அழும் பெண்ணும் சிவபூசை செய்யும் முனிவரும்
கங்கை ஆறும் மற்றும் பல ஆறுகளும் பாயும் கைலாய மலைக்குக் கபிஞ்ஜலா செல்வது வழக்கம். அங்கு ஒரு மிகப்பெரிய ஏரி இருந்தது. அதன் கரையில் ஒரு பெரிய பாறை இருந்தது. அதன் மீது ஒரு பெண்மணி உட்கார்ந்து கொண்டு அழுதவண்ணம் இருந்தாள். ஏரியில் விழுந்த அவளது கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு நறுமணமிக்க தாமரை மலராயின. அந்த ஏரிக்கரையில் ஒரு சிவாலயம் இருந்தது. அதில் தினமும் ஒரு முனிவர் வந்து பூசித்து வந்தார். அவர் உலர்ந்த சருகுகளையே உண்டு வந்ததால் எலும்பும் தோலுமாய்க் காட்சி அளித்தார். மேற்கூறிய பெண்ணின் கண்ணீரால் தோன்றிய தாமரை மலர்களைச் சேகரித்துப் பரமனுக்கு அர்ப்பணித்து பின்னர் ஆடியும், பரமன் மீது பக்திப் பாடல்களைப் பாடியும் முடித்து, அங்கேயே உட்கார்ந்து கத்தி அழலானார் என்று தந்தைக் கிளி குஞ்ஜலாவிடம், கபிஞ்ஜலா கூறி, அழுது கொண்டிருக்கும் அப்பெண்மணி பற்றியும், மற்றும் சிவபூஜை செய்து வரும் முனிவரைப் பற்றியும் கேட்டது.
சிவபெருமானும் பார்வதியும் ஒரு நாள் கைலாயத்தில் பார்வதியும், சிவனும் நந்தன கானகம் என்னும் நந்தவனத்துக்குச் சென்றனர். அது ஓர் அழகிய இடம். அங்கு மிகவும் உயர்ந்த ஒரு மரத்தைக் கண்ட அம்மை, ஐயனிடம் அதுபற்றிக் கேட்க, பரமன் அது கற்பக விருக்ஷம் என்றும், வேண்டுவார் வேண்டியதை அளிக்கவல்லது என்றும் கூறினார். பார்வதி அதனைச் சோதித்து அறிய விரும்பி ஓர் அழகிய பெண்மணி வேண்டும் என்று நினைக்க அவ்வாறே ஓர் அழகி தோன்றி, தன்னை தோற்றுவித்தது ஏன்? தனக்கு என்ன கட்டளை? என்று கேட்டாள். தான் சோதனையாகவே அவளை உண்டாக்கியதாகக் கூறி, அவளுக்கு அசோக சுந்தரி என்ற பெயரிட்டாள். மேலும் சந்திர வம்சத்தில் தோன்றி நஹுஷன் என்பவன் அவள் கணவனாவான் என்றும் கூறினாள் பார்வதி. நந்தன கானகத்தில் அசோக சுந்தரி வசித்து வரலானாள்.
விப்ரசித்தி என்னும் அசுரனின் மகன் ஹூண்டா. அன்றாடம் நந்தன கானகம் சென்று வந்த அவன் அங்கு அசோக சுந்தரியைக் கண்டு அவள் மீது மோகம் கொண்டு அவளிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்க, அவள் மன்னன் நஹுஷன் தான் தன் கணவன் ஆவான். அவனைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்று இவ்வாறு பார்வதி கூறிய செய்தியைக் கூறினாள் அவள். ஹூண்டா அரக்கர்க்குள்ள மாயசக்தியால் ஒரு பெண் போல் உருவெடுத்து அசோக சுந்தரியின் முன் தோன்றி கதறி அழ அவள் அழுகைக்கு காரணம் கேட்ட அசோக சுந்தரியிடம் தன் கணவன் ஹூண்டாவால் கொல்லப்பட்டான் என்றும், ஹூண்டாவை அழிக்கத் தான் தவம் செய்யப் போவதாகவும் அசோக சுந்தரியையும் தன்னுடன் ஆசிரமத்துக்கு வருமாறும் அழைத்தாள். அவளும் அவள் மீது இரக்கம் கொண்டு செல்ல அவள் அரக்கனாக உருமாறி அவளைப் பலாத்காரம் செய்ய முனைந்தான். அவனை அசோக சுந்தரி எதிர்த்து கோபம் கொண்டு, தான் தவம் செய்து நஹூஷன் அவனைக் கொல்லுமாறு செய்வதாகச் சூளுரைத்தாள். மன்னன் ஆயுவும், ராணி இந்துமதியும் குழந்தை வேண்டித் தவம் இயற்றினர். அவர்கள் தவத்தை மெச்சிய தத்தாத்திரேயர் அவர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த, தருமநெறி தவறாத ஒரு மகன் பிறப்பான் என்று வரமளித்தார். இதனை அறிந்த ஹூண்டா குழந்தையைக் கடத்திக் கொண்டு வந்து தன் சமையல்காரனிடம் கொடுத்து அதனைக் கொன்று தனக்கு உணவாய் படைக்கும்படி ஆணையிட்டான். ஆனால் சமையற்காரன் குழந்தை மீது கருணை கொண்டு அதனை வசிஷ்டரின் ஆசிரமத்தில் விட்டுவிட்டான்.
அதற்கு பதில் ஒரு முயலைக் கொன்று அது குழந்தைக் கறி என அசுரனை ஏமாற்றி விட்டான். குழந்தையைக் கண்ட வசிஷ்டர் அதனை வளர்க்கலானார். (ஹுஷா என்றால் அச்சம்; நஹுஷா என்றால் அச்சமின்மை) முனிவர் குழந்தைக்கு நஹுஷன் என்றும் பெயரிட்டுச் சகல கலைகளையும் கற்பித்தார். அவன் தக்க வயது அடைந்தவுடன் முனிவர் அவன் பிறப்பைப் பற்றிக்கூறி, ஹூண்டாவைக் கொல்லவும், அசோக சுந்தரியை மணக்கவுமே அவன் பிறந்திருக்கிறான் என்று கூறினார்.
ஹூண்டாவுடன் போர் செய்ய நஹுஷன் செல்ல தேவர்கள் அவனுக்கு சகல ஆயுதங்களையும் அளித்து உதவியாக இருந்தனர். கடுமையான போருக்குப் பின் நஹுஷன், ஹூண்டா என்ற அந்த அரக்கனைக் கொன்று அசோக சுந்தரியை மணந்தான். இவர்களுக்கு யயாதி என்ற ஒரு மகன் பிறந்தான். அடுத்து தந்தைக் கிளி குஞ்சலா அழுது கொண்டிருந்த பெண்மணி பற்றியும், சிவபூசை செய்து வந்த முனிவர் பற்றியும் கூற ஆரம்பித்தது. ஹூண்டாவின் மகன் விஹுந்தன் தன் தந்தை கொல்லப்பட்டதால் நஹுஷனைக் கொல்லத் தவம் செய்யலானான். இதனால் அச்சம் எய்திய தேவர்கள் விஷ்ணுவை நாடித் தங்களைக் காத்திட வேண்டினர். அதற்கு விஷ்ணு அவர்களை அச்சமின்றிச் செல்லுமாறு கூறி, ஓர் அழகிய பெண் வடிவில் நந்தன கானகத்தில் இருக்க அந்த மாயப் பெண்ணைக் கண்டு மோகம் கொண்ட விஹுந்தன் தன்னை மணம் செய்து கொள்ளுமாறு அப்பெண்ணிடம் வேண்டினான். நிபந்தனையுடன் அப்பெண்மணி அவனுடைய வேண்டுகோளை ஏற்றாள். நிபந்தனை ஏழு கோடி காமோத பூக்களைக் கொண்டு சிவபெருமானைப் பூசித்து, அம்மலர்களைக் கொண்டு மாலை செய்து கொடுத்தால் மணம் புரிந்து கொள்வதாகக் கூறினாள்.
விஹுந்தன் எவ்வளவு முயன்றும் காமோத மலர்கள் கிடைக்கவில்லை. எனவே அவன் அதற்காகச் சுக்கிராச்சாரியாரின் உதவியை நாடினான். சுக்கிராச்சாரியார் விஹுந்தனிடம் காமோத மலர் என்பது மரத்திலிருந்து கிடைப்பதில்லை. காமோதா என்றொரு பெண் சிரித்தால் அதிலிருந்து மஞ்சள் நிற நறுமணப் பூக்கள் மலர்கின்றன. அதைக் கொண்டு ஒருவன் சிவபெருமானைப் பூசித்தால் அவன் நினைத்தது நடக்கும்; கோரியது கிடைக்கும். ஆனால், அவள் அழும்போது அக்கண்ணீரில் இருந்து தோன்றும் மலர்கள் மணமின்றிச் சிவந்த நிறத்தில் இருக்கும். இவற்றைத் தொடவே கூடாது என்று கூறினார். அந்தக் காமோதா என்பவள் யார்? அவள் எங்கிருக்கிறாள்? என்று அரக்கன் கேட்க, அவள் கங்கைக் கரையில் காணப்படுவாள் என்றும், அவள் சமுத்திரத்தைக் கடைந்தபோது பிறந்தாள் என்றும் கூறினார். விஹுந்தன், காமோதாவைச் சந்திப்பதைத் தடுக்க தேவர்கள், காமோதாவை அழ வைத்து அந்தக் கண்ணீர் மலர்களைக் கொண்டே விஹுந்தனை அழிக்கத் திட்டமிட்டனர். அதற்காக நாரதரை காமோதாவிடம் அனுப்பினர். நாரதர் விஹுந்தனைக் கண்டு அவன் காமோதா இருக்குமிடம் செல்லவேண்டாம் என்றும், மலர்கள் கங்கை நீரில் மிதந்து வருவதாகவும் அவற்றைப் பயன்படுத்துமாறும் கூறினார். பின்னர் நாரதர் சூழ்ச்சி செய்து காமோதாவை அழும்படி செய்தார். பகவான் விஷ்ணு பூமியில் அவதாரம் எடுக்கப் போகிறார் என்று கூற அவள் வருத்தமுற்று அழ ஆரம்பித்து அழுது கொண்டே இருந்தாள். இந்த சூழ்ச்சியை அறியாத விஹுந்தன் அந்தக் கண்ணீரால் தோன்றிய மணமற்ற மலர்களை எடுத்து சிவபூஜை செய்து வரலானான். இதனால் கோபமுற்ற பார்வதி வாளால் விஹுந்தனைக் கொன்றாள். இதைக் கேட்டு கபிஞ்ஜலா தன் வினாவுக்கு விடையைப் பெற்றது.
கிளி குஞ்ஜலன் வரலாறு
சியவன முனிவர் கிளியும், அதன் மகன்களும் பேசியவற்றை எல்லாம் கேட்டுத் தந்தைக் கிளியிடம் நீ எப்படி எல்லா விஷயங்களையும் அறிந்துள்ளாய்? என்று வினவினார். அதற்குக் கிளி குஞ்ஜலன் தன் வரலாற்றைக் கூறத் தொடங்கியது. வித்யாதரன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனுக்கு வாசு சர்மா, நாம சர்மா, தர்ம சர்மா என்ற மூன்று புத்திரர்கள் இருந்தனர். அவர்களில் முதல் இருவர் தந்தை வழியில் வேத சாஸ்திரங்கள் பயின்று தர்மநெறியில் நின்றனர். ஆனால், தர்ம சர்மா மட்டும் ஏதும் கற்காமல் சோம்பேறியாய் சுற்றி வந்தான். நாட்கள் செல்லச் செல்ல எல்லோரும் தன்னை வெறுப்பதைக் கண்டு தர்மசர்மா தக்கதோர் ஆசானை அணுகி நல்ல கல்விமானானான். ஒரு சமயம், ஒரு வேடன் ஒரு கிளிக்குஞ்சைத் தர்மசர்மாவிடம் கொண்டு வர, அதைப் பெற்ற பிராமணர் அக்கிளியின் மீது அன்பு, பாசம் பொழிந்திடலானார். அதை ஒரு பூனை கொன்றுவிட அவன் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை. கிளியின் நினைவாகவே இறந்த தர்மசர்மா அடுத்த பிறவியில் கிளியாகவே பிறந்தான். அந்தக் கிளி நானேதான் என்று கூறி முடித்தது குஞ்ஜலன்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 8
கந்தர்வ புத்திரிகள்
================
தேவலோக பாடகர்களாகிய கந்தர்வர்களில் ஐந்து பேர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மகளைப் பெற்றிருந்தனர். சுகசங்கீதி என்ற கந்தர்வனின் மகள் பிரமோகினி, சுசீலனின் மகள் சுசீலை; ஸ்வரவேதியின் மகள் சுஸ்வரா; சந்திர காந்தனின் மகள் சுதாரை; சுப்ரபனின் மகள் சந்திரிகை. இந்த ஐந்து பேர்களும் சிறந்த அழகிகள். நல்ல சினேகிதிகள். வைசாக (வைகாசி) மாதத்தில் ஐந்து சினேகிதிகளும் பார்வதி தேவியைப் பூசை செய்ய முடிவு செய்தனர். அவர்கள் வனத்தில் பூக்கள் சேகரிக்கச் சென்றனர். அங்கொரு ஏரி இருந்தது. அவர்கள் அதில் நீராடி தாமரை மலர்களைச் சேகரித்தனர். களி மண்ணால் பார்வதி பிரதிமை செய்து அதனைப் பூசிக்கத் தொடங்கினர். வேதநிதி என்ற முனிவரின் மகன் தீர்த்தப்ரவரனும் ஒரு முனிவர். ஐந்து பெண்களும் பார்வதி தேவியைப் பூசை செய்து கொண்டிருக்கையில் தீர்த்தப்ரவரன் அங்கு வந்தான். அவன் அழகில் ஈடுபட்டு அந்த ஐந்து பெண்களும் அவனிடம் தங்களை மணந்து கொள்ளுமாறு வேண்டினர். தீர்த்தப்ரவரன் தான் தவம் செய்யப் போவதாகவும், அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாதெனவும் மறுத்தான். அந்தப் பெண்கள் அவனை மேலும் மேலும் வற்புறுத்த அவன் மாயமாக மறைந்துவிட, அவர்கள் வருத்தத்துடன் வீடு திரும்பினர். மறுநாளும் அந்தக் கந்தர்வ பெண்கள் அவனை வற்புறுத்த, அவன் கோபம் கொண்டு அவர்களைப் பெண் பிசாசுகளாக மாறுமாறு சபித்தான். தாங்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தியதைத் தவிர வேறு ஏதும் தவறிழைக்காத போது தங்களைச் சபித்த முனிவரை அவர்களும் ஆண் பிசாசாகச் சபித்தனர். இவ்வாறு ஏற்பட்ட அந்த ஆறு பிசாசுகளும் அங்கு திரிந்து வந்தன. உணவின்றி அலைந்து திரிந்தன. பல ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் லோமஷர் என்ற முனிவர் அப்பகுதிக்கு வந்தார். அவரைக் கண்டவுடன் அவரைக் கொன்று தின்ன பிசாசுகள் அவர் மீது பாய்ந்தன. அவரின் தவ வலிமையால் அவரைப் பிசாசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே அவை அவர் காலில் விழுந்து அவரைப் பிரார்த்தித்தன. நாங்கள் இந்த வடிவிலிருந்து விடுதலை பெற வழிகாட்டுங்கள் என்று வேண்டின. அப்போது லோமஷர், ரேவா என்ற புனித ஆற்று நீரில் நீராடுங்கள் என்று கூறினார். அவ்வாறே அவை செய்து தம் சுயஉருவை அடைந்தன. புனித ரேவா ஆற்று நீரின் மகிமை அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 9
விகுந்தலனின் சரிதம்
================
சத்திய யுகத்தில் ஹேமகுந்தலன் என்னும் ஒரு வைசியன் இருந்தான். அவன் தர்மவான். பிராமண பக்தன். அவன் கோடிக்கணக்கானப் பொருள் ஈட்டினான். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தை அடைந்ததை அறிந்து தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை, ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல், மரம் நடுதல் போன்றவற்றிற்குச் செலவு செய்து, மேலும் பெருந்தொகையை தானங்களுக்காகச் செலவிட்டுப் புண்ணியம் சேர்க்கலானான்.
இவ்வாறு செலவழித்த பின் அவன் மீதிச் சொத்தை தன் இரு மகன்களாகிய ஸ்ரீ குந்தலனுக்கும், விகுந்தலனுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, தவம் செய்ய கானகம் சென்றுவிட்டான். இளைஞர்களாக இருந்த வைசியனின் புத்திரர்கள் மனம் போனபடி வாழ்ந்து, தீய நண்பர்களுடன் கூடி பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்து, கடைசியில் வறியவர் ஆயினர். நண்பர்களும் விலகிவிட்டனர். வறுமையின் காரணமாக உணவுக்காக காட்டுக்கு வேட்டையாடச் சென்றனர். வேட்டையாடி வந்த அவர்களில் ஸ்ரீ குந்தலனை ஒரு புலி கொன்றது. விகுந்தலனைப் பாம்பு கடிக்க அவனும் இறந்தான். அவர்களை யமகிங்கரர்கள் யமன் முன் கொண்டு நிறுத்த, யமன் ஸ்ரீகுந்தலனை கொடிய நரகத்துக்கும், விகுந்தலனை சொர்க்கத்துக்கும் அனுப்புமாறு கூறினான். அது கண்ட விகுந்தலன் யம கிங்கரர்களிடம் நாங்கள் இருவரும் ஒரே குலம். ஒரே பெற்றோர் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். இருவருமே தவறான காரியங்களைச் செய்தோம். இருவருமே எதிர்பாராத விதமாக விபத்தால் இறந்தோம். ஏன் அவருக்கு நரகம், எனக்கு சொர்க்கம்? என்று வியப்புடன் கேட்டான். அப்போது யமதூதர்கள் உண்மை தான். ஆனால் ஒன்றை நீ மறந்து விட்டாய். உனக்கு ஒரு பிராமண நண்பன் இருந்தான். அந்த ஸ்வாமித்திரனுடன் ஒருநாள் யமுனைக் கரையிலுள்ள பாபபிராண ஷணா என்னும் தீர்த்தத்தில் இருவரும் நீராடினீர்கள். அதனால் உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிட்டன. உன் சகோதரன் புனித நீராடவில்லை. அதனால் அவனுக்கு நரகம் என்றனர்.
இதை ஒத்துக்கொள்ள முடியாது. என் சகோதரனைக் காத்திட ஏதேனும் வழியிருக்கிறதா? எனக் கேட்க, யமதூதர்கள் எட்டுப் பிறவிகளுக்கு முற்பட்ட பிறவியில் விகுந்தலன் புண்ணியம் சேர்த்து வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனை நீ உன் சகோதரனுக்கு மாற்றினால் அவன் நரகத்திலிருந்து விடுபடுவான் என்றனர். எனக்கு ஞாபகம் இல்லை. அது என்ன புண்ணியம்? என்று விகுந்தலன் கேட்டான். அதற்கு யமதூதன் சொன்னான். எண் பிறவிகளுக்கு முன் நீ வாழ்ந்த நகருக்கு சகுனி என்ற அந்தணரின் ஒன்பது புத்திரர்களில் நிர்மோகன், தியானகஸ்தன், ஜிதகாமன், குணாதிகன் என்ற நால்வர் முனிவர்களாகி யாசகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு அந்தணனாக இருந்த நீ உண்ண உணவு, இருக்க இடம் தந்து உபசரித்தாய். அதுவே நீ செய்த புண்ணியம். அதனை உன் சகோதரனுக்கு மாற்றிவிட்டால் அவனும் சொர்க்கம் அடைவான். விகுந்தலன் மனமுவந்து அவ்வாறே செய்திட, ஸ்ரீகுந்தலன் நரகத்திலிருந்து விடுதலை பெற்றான். அதனால் சகோதரர்கள் இருவரும் ஒன்றாக சொர்க்கம் சென்றனர். இதுதான் விகுந்தலனின் அபூர்வ சரிதம்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 10
ஆலயம் தூய்மை செய்தல்
=================
துவாபர யுகத்தில் தண்டகன் என்றொரு திருடன் இருந்தான். அவன் மிகவும் கொடியவன். அந்தணர்தம் சொத்தை அபகரித்தான். நண்பர்களுக்குத் துரோகம் செய்தான். புலால் உண்டான். மதுஅருந்தி வந்தான். ஒரு சமயம் அவன் ஒரு விஷ்ணு ஆலயத்திற்குள் திருடச் சென்றான். அவன் காலில் மண்ணும், தூசியும் இருந்ததால் அவற்றை வாயிற்படியில் துடைத்தான். இதன் மூலம் அந்த வாயிற்படி இவன் கால் தோய்த்த இடத்தில் தூய்மையானது. விக்கிரகத்தில் ஒன்றும் பயனில்லை என்று பெருமானின் நகைகள், வெள்ளி, பொன் பாத்திரங்களை ஒரு மூட்டையாகக் கட்டி வெளியேறுகையில் சில பொருள்கள் கீழே விழ, அந்த சப்தம் கேட்டு காவல்காரர்கள் அவனைப் பிடிக்க ஓடி வந்தனர். அவன் தப்பி ஓடினான். வழியில் ஒரு பாம்பின் மீது கால் வைக்க அது அவனைக் கடிக்க அவன் மரித்தான். அவனை யமதூதர்கள் யமன்முன் கொண்டு வந்து நிறுத்திட சித்திரகுப்தன் அவனுடைய பாவ புண்ணியங்களை எடுத்துரைத்தான். இவன் ஒரு திருடன். உலகில் என்னென்ன அக்கிரமங்கள் உண்டோ, அத்தனையும் செய்தவன். எனினும், ஒரே ஒரு புண்ணியம் செய்துள்ளான். அவன் விஷ்ணு ஆலயப் படியைத் தூய்மை செய்தான். அது மற்ற பாவங்களை நீக்கிவிட்டது. அது கேட்ட யமன் தன் இருக்கையை விட்டு இறங்கி வந்து தண்டகனை வணங்கினான். அவனை நரகில் தள்ளக்கூடாது. அவன் செல்ல வேண்டியது விஷ்ணுலோகம் என்று அங்கு அனுப்பி வைத்தான். விஷ்ணு ஆலயம் தூய்மை செய்தல் சாலச் சிறந்தது.
திரேதா யுகத்தில் வைகுந்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் ஒரு விஷ்ணு பக்தன். ஒருநாள் அவன் விஷ்ணு ஆலயத்தில் விளக்கு ஏற்றி விட்டு வீட்டுக்குச் சென்றான். நெய் ஊற்றி விளக்கை ஏற்றியதால், அதன் மணம் ஓர் எலியை ஈர்த்தது. அது விளக்குத்திரியைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த அசைவினால் விளக்கு நன்கு பிரகாசிக்கத் தொடங்கியது. அதனால் பெருமான் விக்கிரகமும் ஒளிர்ந்தது. அந்த எலி ஒரு பாம்பினால் இறந்தது. அதனை யம தூதர்கள் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முற்பட்ட போது விஷ்ணு தூதர்கள் அங்கு வந்து அவர்களைத் தடுத்து, விஷ்ணு பக்தர்களை யம தூதர்கள் நெருங்கக்கூடாது என்று தெரியாதா? இது விஷ்ணுவின் விக்கிரகத்தைச் சாந்தி அடையச் செய்தது. எனவே அது விஷ்ணு பக்தனாயிற்று. அதன் பாவங்கள் விலகிவிட்டன. அது எங்களுடன் விஷ்ணுலோகம் அடையும் என்று கூறி அந்த எலியை விஷ்ணு லோகம் எடுத்துச் சென்றனர். அங்குப் பல காலம் இருந்து அது ஒரு இளவரசியாக உலகில் பிறந்தது. விஷ்ணு பிரதிமை ஒளிரச் செய்த அது பெற்ற பேறு சிறந்ததாயிற்று.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 11
ஸ்ரீதரன் செய்த தான பலன்
=================
திரேதா யுகத்தில் ஸ்ரீதரன் என்றொரு மன்னன் ஹேமாபிரபாவதி என்னும் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் வாழ்க்கை நன்றாக இருப்பினும் அவர்கள் புத்திரபாக்கியம் இல்லாதிருந்தனர். ஒருநாள் ஸ்ரீதரன், வேதவியாசர் என்ற முனிவரைத் தரிசித்தான். அவரிடம் தன் குறையை கூறி தனக்கு ஏன் புத்திரப் பேறு இல்லை என்று கேட்டான். அப்போது முனிவர் அவனது முற்பிறவி வரலாற்றை எடுத்துரைத்தார். ஸ்ரீதரன் முற்பிறவியில் சந்திரன் என்ற பெயரில் இருந்த ஓர் அந்தணன். ராணி ஹேமாபிரபாவதி சந்திரன் மனைவி சங்கரி, இருவரும் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு சிறுவன் ஒரு குட்டை நீரில் முழுகிப் போவதைக் கண்டும், அவசர நிமித்தமாக அவனைக் காப்பாற்றாமல் சென்று விட்டனர். அந்தப் பாவத்தினால் இப்பிறவியில் மகப்பேறில்லை என்றார் முனிவர். இதற்கு வழியொன்றும் இல்லையா என்று மன்னன் கேட்க, வேதவியாசர் பிராமணர்களுக்குப் பூசணிக்காய், ஆடை தானம் கொடு. பசுவும், பொன்னும் தானம் அளி. புராணங்களைக் கேள். அதன்மூலம் புத்திரப்பேறு ஏற்படும் என்றார். ஸ்ரீதரனும் ஹேமாபிரபாவதியும் அவ்வாறே பிராமணர்களுக்குத் தானங்கள் செய்தனர். அதனால் அவர்களுக்கு ஓர் அழகிய புத்திரன் பிறந்தான். தானம் பலனளிக்காமல் போகாது.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 12
லீலாவதியும் ராதாஷ்டமி விரதமும்
======================
முன்னொரு காலத்தில் லீலாவதி என்றொரு தீயவள் இருந்தாள். அவளுக்கு நற்காரியங்களில் நாட்டம் ஏதுமில்லை. ஒருநாள் அவள் ஓர் ஆலயத்தின் அருகில் செல்லுகையில் அங்கு எல்லோரும் ராதாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருந்தனர். ராதையின் உருவத்துக்கு பூ, பழம், சாம்பிராணி, வஸ்திரம் எல்லாம் படைத்திருந்தனர். சிலர் ஆடிக்கொண்டும், சிலர் பாடிக் கொண்டும், சிலர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்ட லீலாவதிக்கு அவர்கள், இன்று பாத்ர மாத, சுக்ல பட்ச அஷ்டமி திதி. ராதையின் பிறந்த நாள். எங்கள் பாவங்கள் தொலைய நாங்கள் ராதாஷ்டமி விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம் என்றனர். நானும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறேன் என்று கூறிய அவள் பாம்பு கடித்து இறந்து விட்டாள். அப்போது யமதூதர்கள் அவளை இழுத்துச் செல்ல முற்பட, விஷ்ணு தூதர்கள் லீலாவதி ராதாஷ்டமி விரதம் அனுஷ்டித்ததால் அவள் பாவங்கள் நீங்கின என்றனர். அவள் நேரே விஷ்ணுலோகம் அடைந்தாள். ராதாஷ்டமி விரதம் அத்தகைய பெருமை பெற்றது. கோலோகத்தில் (அ) விஷ்ணு லோகத்தில் கிருஷ்ணனின் உடலில் இடதுபுறத்தில் இருந்து தோன்றிய ராதை அங்கு அவர் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த போது ராதையும் பிறந்தாள். விருஷபானு என்பவர் அவளது தந்தை, கலாவதி அவளுடைய தாயார், அவளை அயன கோஷர் என்பவர் மணந்தார். இந்தியாவில் நாட்டுப்புறப்பாடலாக ராதாகிருஷ்ணர்களின் அன்பு வெளிப்படுத்தப்படுகிறது.
தொடரும்...
🙏🔥 இரத்தமும், சதையும்
மரணமும், பிறப்பும்
ஆபத்தும் நிறைந்த
தீமைமிகு இவ்வுலகில்
எலும்பு மூடியபை உடல்
நெருப்பால் ! தகிக்கப்படும்
அந்நாளிலும்
உன்னை துதிக்கும்
அடியேனின் புத்தி
உனக்கே, ஆட்பட வேண்டும் !
என் நமோ நாராயணாய 🔥🙏
பத்ம புராணம் - பகுதி 13
மகாலட்சுமி விரத மகிமை
===================
துவாபர யுகத்தில் சௌராஷ்டிராவில் பாத்ரச்ரவன் என்றொரு அரசனும், அவன் மனைவி சுரதிசந்திரிகாவும் வாழ்ந்து வந்தனர். அரசன் வேத சாஸ்திரப் பண்டிதன். அத்தம்பதியருக்கு சியாமபாலா என்றொரு மகள் இருந்தாள். சியாமபாலா வெளியே சென்றிருந்த போது மகாலட்சுமி அந்த அரண்மனைக்கு ஒரு கிழவி வடிவில் வந்து வாயிற் காவலனிடம் தான் சுரதி சந்திரிகாவைக் காண வேண்டும் என்று கூற, அவன் ஏன்? எதற்கு? என்று கேட்க, மகாலட்சுமி (கிழவி) தன் பெயர் கமலா என்றும், தனது கணவர் புவனேசன் என்றும், தான் துவாரவதியில் வசிப்பதாகவும் ராணியிடம் அவளுடைய முற்பிறவி வரலாற்றை நினைவு கூற வேண்டுவதாகவும் கூறினாள். (கமலம் என்பது தாமரை. அதில் இருப்பவள் கமலா (அ) லட்சுமி. புவனேசன் என்றால் உலகத் தலைவன் (அ) கடவுள். துவாரவதி என்பது துவாரகை.)
சுரதி சந்திரிகா முற்பிறவியில் வைசிய குடும்பத்தில் பிறந்தாள். அவள் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு விலகிச் சென்றாள். அவளை லட்சுமிதேவி சந்தித்து மகாலட்சுமி விரதம் அனுஷ்டிக்குமாறு அறிவுரை வழங்க, அவளும் அவ்வாறே செய்து வந்ததன் பயனாக விஷ்ணுலோகம் அடைந்து, அங்கு நெடுங்காலம் இருந்தாள். அவளே இப்போது சுரதி சந்திரிகாவாகப் பிறந்திருப்பவள். இதைப் பற்றி ராணியிடம் நினைவூட்டவே வந்தேன். அவள் தற்போது செழிப்பாக மமதை கொண்டு விளங்குகிறாள். அவள் மகாலட்சுமி விரதம் செய்யாதிருப்பது துரதிருஷ்டம் ஆகும் என்று கூறினாள். அது என்ன விரதம்? அதை எப்பொழுது செய்ய வேண்டும்? என்று காவலாளி கேட்டான். அவ்விரதம் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும். அரிசிப் பொங்கல் அமுதை, கற்பூரத்துடன் விஷ்ணுவுக்கும், லட்சுமிக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக லட்சுமியை பூசிக்க வேண்டும். கோதுமை, தயிர், பழம், பூக்கள் தேவிக்குப் படைக்கவேண்டும் என்றாள். அது கேட்ட காவலாளி ராணியிடம் கூறிவருவதாகச் சொன்னான். ராணி அக்கிழவியை லட்சுமி என்று அறியாமலும், பிராண ஸ்திரீ கொடுத்த அறிவுரையை ஏற்காமலும் அக்கிழவியை அடித்து விரட்டினாள். அப்பிராமண ஸ்திரீ அவ்விடத்தை விட்டு கிளம்பிய போது இளவரசி சியாமபாலாவைக் கண்டாள். அக்கிழவி அழுவதைக் கண்டு, அக்கிழவியை விசாரித்து நடந்ததை அறிந்து கொண்டாள். தான் அவ்விரதத்தைச் செய்வதாகக் கூறினாள். சில ஆண்டுகள் கழித்து சியாமபாலாவை, மன்னன் சித்தேஸ்வரனின் மகன் மாலாதரனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
சியாமபாலா கணவன் வீட்டுக்குச் சென்றவுடன் பாத்ரச்ரவன், சுரதிசந்திரிகா வீட்டை விட்டு மகாலட்சுமியும் சென்று விட அவர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். சோற்றுக்கின்றி திண்டாடினர். பாத்ரச்ரவன் தன் மகளைக் காண அவள் இல்லம் செல்ல, தந்தையின் நிலை அறிந்து அவள் திகிலடைந்தாள். தந்தைக்கு உணவளித்து நிறைய பணம் கொடுத்து அனுப்பினாள். ஆனால், அவள் தந்தை வீட்டிற்குள் நுழைந்த உடனே அவன் பெற்ற செல்வங்களெல்லாம் கரியாகி விட்டன. அடுத்து சுரதி சந்திரிகா மகளைப் பார்க்கச் சென்றாள். அந்த சமயம் லட்சுமி விரதம் அனுஷ்டிக்க வேண்டிய நேரம். தாயும், மகளும் சேர்ந்து மகாலட்சுமி விரதம் செய்து முடித்தனர். அதன் பலனாய் சுரதி சந்திரிகா தன் வீட்டிற்கு வர அவளுடைய வீட்டுச் செல்வம் எல்லாம் வந்து சேர்ந்தன. மகாலட்சுமி விரதத்தின் மகிமையே மகிமை!
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 14
தினநாதனும் விசுவாமித்திரரும்
======================
துவாபர யுகத்தில் தினநாதன் என்ற வலிமைமிக்க ஓர் அரசன் இருந்தான். அவனுக்குப் புத்திபேறு இல்லாததால் காலவ முனிவரை வணங்கி தான் மகப்பேறு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். முனிவர் ஒரு யாகம் செய்து அதில் எல்லா வகையிலும் சிறந்த ஒருவரை நரபலி கொடுத்தால் குழந்தை கட்டாயம் பிறக்கும் என்றார். தசபுரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணதேவன் என்ற பிராமணன் தன் மனைவி சுசீலையுடனும், மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்தான். தினநாதன் யாகபலிக்கு ஆள் தேடி வந்தவன், கிருஷ்ண தேவனையும், சுசீலையும் சந்தித்து அவர்கள் மகன்களில் ஒருவனை யாக பலிக்கு அளிக்குமாறு பிரார்த்தித்தான். அவர்கள் மூத்தவனையும், இளையவனையும் கொடுக்க மறுத்ததால் நடுமகனைச் சேவகர்கள் அழைத்துச் சென்றனர். அரசன் பிராமணனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தான். அந்த மகனைப் பிரிந்த துக்கத்தில் அத்தம்பதியர் அழுதழுது கண் குருடாயினர். ராஜதூதர்கள் வழியில் விசுவாமித்திரரின் ஆசிரமத்தைக் கடந்து செல்கையில், அவர்களை விசுவாமித்திரர் மறித்து, யார் இந்த பிராமணச் சிறுவன்? அவனை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்க, அவர்கள் நடந்தவற்றை எல்லாம் கூறினர். அது கேட்ட விசுவாமித்திரர் சிறுவனை விட்டு விட்டு தன்னை யாகபசுவாக அழைத்துச் செல்லுமாறு கூற, அவர்கள் அதை ஏற்கவில்லை. எனவே அவரும் அவர்களுடன் சென்றார். விசுவாமித்திரர் அந்த யாகத்தைத் தானே நடத்தித் தருவதாகவும், நரபலி (அ) யாகபசு தேவையில்லை என்றும், கட்டாயம் மன்னனுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும் என்றும் கூறி, நரபலி இன்றியே யாகம் நடத்தித் தந்தார். மன்னன் பிராமண புத்திரனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைக்க, பையன் திரும்பி வந்த மகிழ்ச்சியில் அவர்கள் இழந்த கண்களைத் திரும்பவும் பெற்றனர். உண்மையிலேயே விசுவாமித்திரர் ஓர் உயர்ந்த ரிஷியாவார்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 15
சித்திரஸேனன்
=============
கிருஷ்ணாஷ்டமி விரதம் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீகிருஷ்ண ஜனன நாளாகிய பாத்ர பதமாதம், கிருஷ்ண பட்சம், அஷ்டமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சித்திரசேனன் என்ற மன்னன் தரும நெறிகளிலிருந்து விலகி, தீயவர்களுடன் சேர்ந்து தீயசெயல்களைச் செய்து வந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அவன் ஒரு புலியைத் தொடர்ந்து சென்றவன் யமுனை ஆற்றங்கரையை அடைந்தான். அன்று ஜன்மாஷ்டமி தினமாகையால் அப்சரசுகள் ஒன்றுகூடி அங்கு கிருஷ்ணாஷ்டமி விரதத்தை அஷ்டித்து ஸ்ரீகிருஷ்ணன் பிறந்தநாளைக் கொண்டாடினர். அதைக் கண்ட சித்திரசேனன் தானும் அவ்விரதத்தைக் கைக்கொள்ள விரும்பினான். அவ்வாறே கிருஷ்ணாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்து அவன் புண்ணியம் சம்பாதித்தான். அதனால் அவன் மரித்த பிறகு அவன் பாவங்கள் நீங்கிட நேராக விஷ்ணுலோகத்தை அடைந்தான். கிருஷ்ணாஷ்டமியை ஜன்மாஷ்டமி என்றும் கிருஷ்ண ஜயந்தி என்றும் கூறுவர்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 16
பீமனும் விஷ்ணு லோகமும்
===================
அனேக ஆண்டுகளுக்கு முன்பு துவாபர யுகத்தில் பீமன் என்ற பெயருடைய நான்காம் வருணத்தினன் இருந்தான். அவன் செய்த பாபங்கள் எண்ணற்றவை. ஒருநாள் அவன் ஒரு பிராமணர் வீட்டில் கொள்ளையடிக்க எண்ணிச் சென்று யாசகம் கேட்டான். அந்த வீட்டில் அந்த அந்தணரைத் தவிர வேறு யாரும் இல்லாததால் அவர் அவனிடம் அவன் உணவை அவனே சமைத்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது பீமன் தனக்கும் யாரும் இல்லை என்று கூறி, அவ்வீட்டிலேயே தங்கியிருந்து அந்தப் பிராமணனுக்குத் தொண்டு செய்வதாகக் கூறி அங்கேயே தங்கினான். இவ்வாறு அந்த வீட்டில் இடம் பிடித்த பீமன் அந்தணருக்குச் சிறு சிறு சேவைகள் புரியலானான். தினமும் உணவு தயாரித்து அளித்தான். அவர் பாதங்களைக் கழுவினான். இதன்மூலம் புண்ணியம் சம்பாதித்தான். ஒருநாள் இரவு வேறொரு திருடன் அந்த அந்தணர் வீட்டிற்கு வந்து கொள்ளை அடித்தான். அதனைத் தடுக்க பீமன் அவனுடன் சண்டையிட அந்தக் கொள்ளையன் வாள்வீசி பீமன் தலையைத் துண்டித்தான். பீமன் இறந்தவுடன் விஷ்ணு தூதர்கள் தோன்றி அவனை விஷ்ணு லோகத்துக்கு அழைத்துச் சென்றனர். நல்லவரோடு இணங்கி இருப்பது நன்றே.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 17
ஹேமாபிரபா விஷ்ணுலோகம் அடைதல்
======================
காஞ்சன் நகரில் வல்லபன் என்பவன் தன் மனைவி ஹேமபிரபாவுடன் வாழ்ந்து வந்தான். அவன் செல்வமுடன் செழிப்பாக வாழ்ந்து வந்த போதிலும் கணவர்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட ஒரு சமயம் அவன் மனைவியை அடித்து விட்டான். அதனால் அவள் மிகவும் மனம் வருந்தி அன்று முழுவதும் உணவும், நீரும் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்தாள். அன்று ஏகாதசி தெரிந்தோ தெரியாமலோ அவள் ஏகாதசி விரதம் இருந்து விட்டாள். அதன் மூலம் அந்த விரதபலன் அவளுக்குப் புண்ணியம் சேர்த்தது. அவள் இறந்தபோது அவளை எமதூதர் அணுக, விஷ்ணு தூதர்கள் அவர்களைத் தடுத்து அவளை விஷ்ணுலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். இது ஏகாதசி விரத மகிமை அல்லவா!
இம்மாதிரி பல நிகழ்ச்சிகள் பற்றி விவரிக்கிறது பத்ம புராணம்:
1. திரேதா யுகத்தில் சுதர்சனன் என்ற பிராமணன் வருணாசிரம தருமம் தவறி வாழ்ந்ததால் அடுத்த பிறவியில் பன்றியாகவும், அதை அடுத்து காகமாகவும் தோன்றினான். காகமாக இருந்த போது விஷ்ணு, திருமஞ்சனம் செய்த நீரை அது உட்கொண்டது. அந்தப் புண்ணிய பலனாக சுதர்சனன் மோட்சம் அடைந்தான்.
2. திரேதா யுகத்தில் சௌராஷ்டிராவில் சங்கரன் என்பவன் தன் மனைவி காளிப்பிரியாவுடன் வாழ்ந்து வந்தான். அவள் கணவனை விரும்பாமல் அவன் எப்போது மடிவான் என்று காத்துக் கிடந்தாள். ஒருநாள் அவளே தன் கணவரைக் கொன்றுவிட்டு வேறொரு நகரத்திற்குச் சென்றுவிட்டாள். அங்கு அவளுக்கு விஷ்ணு பக்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால் பல விரதங்களை அவள் அனுஷ்டிக்க அவள் பாவங்கள் நீங்கிட, புண்ணியவதியாகி நேராக விஷ்ணுலோகம் அடைந்தாள்.
3. துவாபர யுகத்தில் வாழ்ந்த ஆதித்தியன் என்ற அந்தணன் துளசிச் செடிகளுக்குத் தினமும் நீரூற்றி வளர்த்து வந்தான். அந்த ஊரிலேயே ஒரு சண்டாளன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் நீர் வேட்கை அடைந்த அவன் துளசிப் பாத்தியில் இருந்த துளசி நீரை எடுத்து அருந்தினான். இதனால் புண்ணியமடைந்தான். அவன் அஸ்மந்தனன் என்ற வேடனால் கொல்லப்பட்டான். அவன் இறந்தவுடன் துளசிதீர்த்த மகிமையால் பாவங்கள் நீங்கி அவன் விஷ்ணுலோகம் அடைந்தான்.
4. திரேதா யுகத்தில் வாழ்ந்த தண்டகரன் என்பவன் மது, மாது, புலால் உண்ணல் மற்றும் வேதங்களைத் தூஷணை செய்தல் போன்ற பாவங்களைச் செய்ததால் அவன் உற்றார், உறவினர், நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்கினர். மேலும் காட்டில் அவன் வழிப்பறிக் கொள்ளை செய்தும் வந்தான். ஒருநாள் அவன் விஷ்ணு பக்தர்களாகிய பிராமணர்களைத் தற்செயலாகச் சந்தித்தான். அவர்கள் அவனுக்குச் சில விரதங்கள் பற்றிக்கூறி அனுஷ்டிக்குமாறு அறிவுரை கூறினர். அவனும் அவ்வாறே விஷ்ணுவுக்குப் பிரியமான விரதங்களை அனுஷ்டித்து பாவங்கள் நீங்கப் பெற்று நல்லுலகம் அடைந்தான்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 18
மது கைடபர்கள்
==============
எங்கும் நீர்மயம். மகாவிஷ்ணுவின் யோகதுயில். தன் நாபியிலிருந்து ஒரு கமலத்தைத் தோற்றுவித்தார். பிரமன் உலகையும், அதிலுள்ள ஜீவராசிகளையும் படைக்க முற்பட்டார். அப்போது சாதுக்களிலிருந்து மது கைடபர்கள் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் சகல லோகங்களில் வசிப்பவர்களையும் நடுங்குமாறு அக்கிரமங்கள் செய்து வரலாயினர். பிரம்மனையே எதிர்க்க முற்பட, அவர் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். பலகாலம் போர் செய்தும் ஸ்ரீவிஷ்ணு அவர்களை வெல்ல முடியவில்லை. எனவே திருமால் மாய உபாயம் செய்து அவர்கள் மனதில் மோகத்தை உண்டாக்கினார். அந்த மோகத்தில் மூழ்கிய அவர்கள் விஷ்ணுவை நோக்கி, உன்னுடைய யோகத்திறன் கண்டு மெச்சினோம். வேண்டும் வரம் கேள் என்றனர். உடனே விஷ்ணு, நீங்கள் இருவரும் என் கையால் மரணமடையும் வரம் வேண்டும் என்றார். அப்போது எங்கும் நீர் சூழ்ந்திருந்ததால், அவர்கள் நீரில்லா இடத்திலானால் உம் எண்ணம் நிறைவேறும் என்றனர். உடனே விஷ்ணு அவர்களைத் தொடை மீது அமர்த்தி சக்கரத்தால் அவ்விருவர் தலைகளையும் அறுத்தார். இவ்வாறு மது கைடபர்கள் அழிந்தனர்.
தொடரும்...
பத்ம புராணம் - பகுதி 19
கங்கை ஆறு உற்பத்தியாதல்
=====================
சூதர் கங்கோற்பத்தி பற்றி முனிவர்களுக்குக் கூறினார்.
கங்கை நதி விஷ்ணு பாதத்தில் தோன்றி விஷ்ணு பதி என்று பெயர் பெற்றது. சகர சக்கரவர்த்தி அஸ்வமேத யாகத்தை முன்னிட்டு ஒரு குதிரையைத் தன் புத்திரர்கள் ஆயிரம் பேர்களுடன் உலகைச் சுற்றி வர ஏற்பாடு செய்தான். பல நாடுகளைக் கடந்து சென்றது அசுவம். சகரச் சக்கரவர்த்தியாக வெற்றியினைக் கண்டு அஞ்சி, இந்திரன் யாகக்குதிரையை யாரும் அறியாமல் கபிலர் ஆசிரமத்தில் கட்டி வைத்தார். கபிலர் தவம் செய்து கொண்டிருந்ததால் அவர் ஒன்றும் அறியார். பின்னர் சகரப் புத்திரர்கள் பாதாள உலகம் சென்று கபிலரையும், குதிரையையும் கண்டு கபிலர் கபடநாடகம் ஆடுவதாக எண்ணி அவர் தவத்தைக் கெடுக்க முயல அவர் கோபத்துடன் அவர்களை நோக்க அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பல் ஆயினர். சில காலத்திற்குப் பின், பகீரதன் பிறந்து தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர முயற்சித்தான். பிரமனை நோக்கியும், பின்னர் அவர் சொல்படி மகாதேவனைக் குறித்தும் தவம் செய்ய சிவபெருமான் தோன்றிட பகீரதன் மோக்ஷம் பெற வழி காண விரும்புவதாகக் கூற, அவர்கள் மீது கங்கை பிரவகித்தால் அவர்கள் உய்வர் என்று கூறினார் சிவபெருமான். அதை அறிந்த பகீரதன் கங்கையை நோக்கி தவம் செய்தான். அவள் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்க, மூதாதையர் சாம்பல் மீது பாய்ந்து அவர்களை மோக்ஷமடையச் செய்யுமாறு வேண்டிட, கங்காதேவி தான் மேலுலகிலிருந்து புவியில் இறங்கும் போது தன்னைத் தாங்க வல்லவர் ஒருவர் தேவை என்றும், இல்லாவிட்டால் பூமியைத் துளைத்து பாதாளம் சென்று விடுவேன் என்று கூறி, அதற்கு வல்லவர் சிவபெருமான் ஒருவரே என்றும், அவர் உதவியை நாடுமாறும் கூறினாள். பகீரதன் மறுபடியும் சிவபெருமானை வேண்டி உதவுமாறு கேட்டான். அவரும் கங்கையை வருமாறு வேண்டு என கங்கை ஆவிர்ப்பவித்து வந்தாள். பரமன் அவளைத் தாங்கி நின்றார். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக பூமியில் விட கங்கை பாதாளத்தில் கபிலரால் மரணமடைந்து சாம்பலாகியுள்ள இடத்தில் பெருக்கெடுத்து ஓட அவர்கள் புனிதம் பெற்று மோக்ஷம் அடைந்தனர். எனவே, கங்கையை நினைத்து அதில் நீராடினாலும், அந்த நீர் காற்று மேலே பட்டாலும் புண்ணியங்கள் பெற்று புண்ணியலோகம் அடைவர்.
தொடரும்...
நாளையுடன் முடிகிறது அதனை தொடர்ந்து விரைவில் 27.03.2020
வெள்ளிக்கிழமை முதல் லிங்க புராணம் தொகுப்பு
பத்ம புராணம் - பகுதி 20
இன்று முடிவடைந்து அதனை தொடர்ந்து நாளை முதல்
லிங்க புராணம் தொகுப்பு
கால கல்பனின் சரிதம்
================
முன்னொரு காலத்தில் மதுரை நகரில் சோமசேகர சர்மா என்ற ஒரு பிராமணர் விசாலாட்சி என்ற தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் புனித தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். அவர்கள் கங்கை ஆற்றை அடைந்து கங்காஸ்நானம் செய்து, கங்கை நீரைக் கலசத்தில் நிரப்பிக் கொண்டு அதனை துளசி தளத்தின் நடுவில் வைத்துக் கொண்டு கால்நடையாக வந்து கொண்டிருந்தனர். அவருக்கெதிரில் மேல் நாட்டிலிருந்து வந்த வர்த்தகன் ஒருவன் சாக்குகளுடன் வந்து கொண்டிருந்தான். அவன் தனது இரட்டை மாட்டு வண்டியில், காலகல்பன் என்பவன் வண்டி ஓட்ட அம்மாடுகளில் ஒன்று கிழட்டு மாடாகவும், மற்றது பலமுடையதாகவும் இருந்தது. காலகல்பன் அந்தக் கிழட்டு மாட்டைத் திருப்பித் திருப்பி அடித்து ஓட்ட அதற்குள் வண்டியும் உடைந்து அதன் மேல்பட அது கீழே விழுந்தது. பின்னர் ஒருவாறு தெளிந்து தன் கூரிய கொம்புகளால் காலகல்பனைப் பலமுறை குத்திட அவன் மூர்ச்சித்து விழுந்து இறுதியில் மரணாவஸ்தையில் இருந்தான். அப்போது அவ்வழியில் வந்து கொண்டிருந்த சோமசேகர சர்மா அவனுடைய நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். அவன் வாயில் கங்கை நீரை ஊற்றினார். ஸ்ரீஹரியைப் பூஜித்து அவன் உடலில் தெளித்தார். துளசியை உடல்மீது வைத்து விட்டுத் தன் வழியே சென்றார். அந்த காலகல்பன் அந்த இடத்திலேயே உயிரை விட்டான். பின்னர் சோமசேகர சர்மா வழியில் சிலர் நன்கு உதைபட்டு, அடிபட்டு நடக்க முடியாமல் அவதிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்களை விசாரிக்க அவர்கள் தாங்கள் யமதூதர்கள் என்றும், அவர்களுக்கும் விஷ்ணு தூதர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே இதற்குக் காரணம் என்றனர். காலகல்பன் உயிரைக் கொண்டு போக வந்த எங்களைத் தடுத்து விஷ்ணு தூதர்கள் அவன் பாவி அல்ல என்றும், புண்ணியாத்துமா என்றும் எந்தப் பாபமும் அவனுக்குத் தெரியாதென்றும் மரணா வஸ்த்தையிலிருந்த போது கங்கை நீரும், துளசியும் அருந்தினான் என்றும், அவன் உடல்மீது துளசிகளை வைத்துக் கொண்டான் என்றும், நாராயண நாமஸ்மரணம் கேட்டான் என்றும் கூறி காலகல்பனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றும் கூறினர். அதுகேட்ட சோமசேகர சர்மா கங்கையின் மகிமை, துளசியின் பவித்ரம், அந்திம காலத்தில் நாராயண நாம ஸ்மரணம் ஆகியவற்றின் பலனைக் கண்களுக்கு எதிரிலேயே அறிந்தார்.
திருமால் உடற்கூறும், புராணங்களும்
1. பிரம்ம புராணம் - தலை
2. பத்ம புராணம் - இதயம்
3. விஷ்ணு புராணம் - வலது கை
4. சிவ புராணம் - இடது கை
5. பாகவத புராணம் - தொடைகள்
6. நாரத புராணம் - நாபி
7. மார்க்கண்டேய புராணம் - வலது பாதம்
8. அக்னி புராணம் - இடது பாதம்
9. பவிஷ்ய புராணம் - வலது முழங்கால்
10. பிரம்மவைவர்த்த புராணம் - இடது முழங்கால்
11. லிங்க புராணம் - வலது
12. வராஹ புராணம் - இடது
13. கந்த புராணம் - உடல் ரோமம்
14. வாமன புராணம் - தோல்
15. கூர்ம புராணம் - முதுகு
16. மத்ஸ்ய (மச்ச) புராணம் - உடற்கொழுப்பு
17. கருட புராணம் - எலும்பில் உள்ள ஊன்
18. பிரம்மாண்ட புராணம் - எலும்புகள்
இவ்வாறு புராணங்கள் அனைத்தும் திருமால் உருவிலே அறியப்படுவதால் இவற்றைப் படிப்பதால் புண்ணியம் சேரும்!
[பத்ம புராணம் முற்றிற்று]
------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment