ராதே கிருஷ்ணா 16-07-2021
Radhe Krishna 07-03-2020
Radhe Krishna 07-03-2020
#63நாயன்மார்களும்
#அவர்களின்பூசைதினமும் !
சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள்.
1. அதிபத்தர் நாயனார் - ஆவணி ஆயில்யம்
2. அப்பூதியடிகள் - தை சதயம்
3. அமர்நீதி நாயனார் - ஆனி பூரம்
4. அரிவாட்டாயர் - தை திருவாதிரை
5. ஆனாய நாயனார் - கார்த்திகை ஹஸ்தம்
6. இசை ஞானியார் - சித்திரை சித்திரை
7. மெய்ப்பொருள் நாயனார் - கார்த்திகை உத்திரம்
8. இயற்பகையார் - மார்கழி உத்திரம்
9. இளையான்குடி மாறார் - ஆவணி மகம்
10. உருத்திர பசுபதியார் - புரட்டாசி அசுவினி
11. எறிபத்த நாயனார் - மாசி ஹஸ்தம்
12. ஏயர்கோன் கலிகாமர் - ஆனி ரேவதி
13. ஏனாதிநாத நாயனார் - புரட்டாசி உத்திராடம்
14. ஐயடிகள் காடவர்கோன் - ஐப்பசி மூலம்
15. கணநாதர் நாயனார் - பங்குனி திருவாதிரை
16. கணம்புல்லர் நாயனார் - கார்த்திகை கார்த்திகை
17. கண்ணப்ப நாயனார் - தை மிருகசீரிஷம்
18. கலிய நாயனார் - ஆடி கேட்டை
19. கழறிற்றறிவார் - ஆடி சுவாதி
20. காரி நாயனார் - மாசி பூராடம்
21. காரைக்கால் அம்மையார் - பங்குனி சுவாதி
22. கழற்சிங்கர் நாயனார் - வைகாசி பரணி
23.குலச்சிறையார் - ஆவணி அனுஷம்
24. கூற்றுவர் நாயனார் - ஆடி திருவாதிரை
25. கலிக்கம்ப நாயனார் - தை ரேவதி
26. குங்கிலிக்கலையனார் - ஆவணி மூலம்
27. சடைய நாயனார் - மார்கழி திருவாதிரை
28. சிறுத்தொண்ட நாயனார் - சித்திரை பரணி
29. கோச்செங்கட் சோழன் - மாசி சதயம்
30. கோட்புலி நாயனார் - ஆடி கேட்டை
31. சக்தி நாயனார் - ஐப்பசி பூரம்
32. செருத்துணை நாயனார் - ஆவணி பூசம்
33. சண்டேசுவர நாயனார் - தை உத்திரம்
34. சோமாசிமாறர் - வைகாசி ஆயில்யம்
35. சுந்தரமூர்த்தி நாயனார் - ஆடி சுவாதி
36. திருக்குறிப்பு தொண்ட நாயனார் - சித்திரை சுவாதி
37. சிறப்புலி நாயனார் - கார்த்திகை பூராடம்
38. திருநாளைப் போவார் - புரட்டாசி ரோகினி
39. திருஞான சம்பந்தர் - வைகாசி மூலம்
40. தண்டியடிகள் நாயனார் - பங்குனி சதயம்
41. சாக்கிய நாயனார் - மார்கழி பூராடம்
42. நமிநந்தியடிகள் - வைகாசி பூசம்
43. புகழ்ச்சோழ நாயனார் - ஆடி கார்த்திகை
44. நின்றசீர் நெடுமாறர் - ஐப்பசி பரணி
45. திருநாவுக்கரச நாயனார் - சித்திரை சதயம்
46. நரசிங்க முனையர் - புரட்டாசி சதயம்
47. திருநீலகண்ட நாயனார் - தை விசாகம்
48. திருமூல நாயனார் - ஐப்பசி அசுவினி
49. திருநீலகண்ட யாழ்ப்பாணர் - வைகாசி மூலம்
50. திருநீலநக்க நாயனார் - வைகாசி மூலம்
51. மூர்த்தி நாயனார் - ஆடி கார்த்திகை
52. முருக நாயனார் - வைகாசி மூலம்
53. முனையடுவார் நாயனார் - பங்குனி பூசம்
54. மங்கையர்க்கரசியார் - சித்திரை ரோகினி
55. பெருமிழலைக் குறும்பர் - ஆடி சித்திரை
56. மானக்கஞ்சாறர் - மார்கழி சுவாதி
57. பூசலார் நாயனார் - ஐப்பசி அனுஷம்
58. நேச நாயனார் - பங்குனி ரோகினி
59. மூர்க்க நாயனார் - கார்த்திகை மூலம்
60. புகழ்த்துணை நாயனார் - ஆனி ஆயில்யம்
61. வாயிலார் நாயனார் - மார்கழி ரேவதி
62. விறன் மீண்டநாயனார் - சித்திரை திருவாதிரை
63. இடங்கழி நாயனார் - ஐப்பசி கார்த்திகை
திருச்சிற்றம்பலம்!
ஸ்கந்த புராணம் - பகுதி 1
புராணத்தோற்றம்
==============
எல்லாம் அறிந்த பரமேசுவரன் கூற்றுப்படி திருமால் தனது ஒரு கலையினால் பிரம்மனின் வம்சத்தைச் சார்ந்த பராசர முனிவர்க்கும் மச்சகந்தி என்ற பெண்ணிற்கும் கங்கை ஆற்றின் நடுவில் தோன்றி வாத நாராயணன் என்ற பெயரில் வதருக வனத்தில் இருந்தபோது, எம்பிரான் ஆணையால் வேதங்களை நான்காகப் பிரித்து அதன் மூலம் வேத வியாசர் எனப்பெயர் பெற்றார். அவர் ரிக் வேதத்தைப் பைல முனிவர்க்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனர்க்கும், சாம வேதத்தை ஜைமினீ முனிவர்க்கும், அதர்வண வேதத்தை சுமந்து முனிவருக்கும் உபதேசித்தார். அவர் தான் இயற்றிய பதினெண் புராணங்களையும் தன் மகன் சுகப்பிரம்மத்திற்கும் மற்ற சீடர்களுக்கும் போதித்தார்.
நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்கள் சத்ர யாகம் புரிந்து வந்தனர். அங்கு சூதமுனிவர் வந்தடைந்தார். வியாசரின் சீடரான அவரிடம் முனிவர்கள் புராண கதைகளை விவரிக்க வேண்டினர். சூதரும் அவர்களுக்குக் கூற ஆரம்பித்தார். கந்தபுராணமும் அவற்றில் ஒன்று. கந்தபுராணத்தில் கீழ்க்கண்டவாறு ஆறு சங்கிதைகள் உள்ளன.
1. சனற்குமார சங்கிதை
2. சூத சங்கிதை
3. பிரம சங்கிதை
4. விஷ்ணு சங்கிதை
5. சங்கர சங்கிதை
6. ஆர சங்கிதை ஆகும்.
அவற்றுள் சங்கர சங்கிதை 7 காண்டங்களை உடையது. அவை
1. சம்பவ காண்டம்
2. அசுர காண்டம்
3. மகேந்திர காண்டம்
4. யுத்த காண்டம்
5. தேவ காண்டம்
6. தட்ச காண்டம்
7. உபதேச காண்டம் என்பவை அவை.
இவற்றுள் முதல் ஆறு காண்டங்கள் காசியப சிவாசாரியாரின் கந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காண்டமும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழில் மூன்று புராணங்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகக் கருதப்பட்டு வருகின்றன. திருத்தொண்டர் புராணம் (வலது கண்ணாகவும்) திருவிளையாடற்புராணம் (இடது கண்ணாகவும்) கந்த புராணம், (நெற்றிக் கண்ணாகவும்) கருதப்படுகின்றன. இந்தக் கந்தபுராணம் இலங்கையில் அதிகமாகப் பயிலப்பட்டு வருகிறதாக தமிழறிந்த பெரியோர்களால் கூறப்படுகிறது.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
முருகா முருகா ..
*******
அழிகின்ற தேகமதில்
அழியாத ஆன்மாவாய்
ஒளிர்கின்ற உன்னுருவம்
ஒளியாது ஒளிர்ந்திடுவே!
பழிக்கின்ற பாவங்கள்
பண்ணாது படராது
விழியாக வேல்வந்து
வழிகாட்டி நடத்திடுவே!
துளைக்கின்ற துர்எண்ணம்
தோன்றாது தொடராது
தோகைமயில் துணையாகி
தோன்றுபயம் துரத்திடுவே!
செழிக்கின்ற வகையினிலே
செய்தொழில் சிறப்பாகி
சேவற்கொடி செயமாக
செய்த்திட வைத்திடுவே!!!
#முருகாசரணம் #ஷண்முகாசரணம்
ஸ்கந்த புராணம் - பகுதி 2
பார்வதியின் தோற்றமும் தவமும்
====================
ஒருநாள் திருக்கைலாயத்தில் எம்பெருமான் இடபாகத்தில் அமர்ந்திருந்த அம்பிகை திடீரென அவரது அணையிலிருந்து இறங்கி அவரை வணங்கிக் கீழ்கண்டவாறு கூறினாள் : தான் முன்பு ஒருகால் தக்ஷனின் மகளாகத் தோன்றி வளர்ந்து வருகையில் தக்ஷன் அம்பிகையைப் பரமனுக்குத் திருமணம் செய்து வைத்ததையும், ஆனால் தக்ஷன் தான் செய்த வேள்வியில் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமலிருந்ததும், மேலும் சிவநிந்தனை செய்ததாலும், வேள்வி வீரபத்திரனால் அழிக்கப்பட்டது; தக்ஷனும் அழிந்தான். இதனால் தான் பெற்றிருந்த தக்ஷயிணி என்ற பெயரைக் குறித்து விசனமுற்று அது நீங்கிட மறுபிறவி எடுப்பதற்காக அருள்புரிய வேண்டினாள். இவ்வார்த்தைகளைக் கேட்டு மன மகிழ்வுற்றார் பரமன். (தக்ஷயிணி என்றால் சிவநிந்தகன் என்று பொருள்)
எம்பெருமான் தேவியிடம், இமவான் வேண்டிய வரத்தின்படி நீ அவனுக்குத் திருமகளாகத் தோன்றி ஐந்து ஆண்டுகள் வளர்ந்து தவம் இருப்பாயாக. அப்போது உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இமயமலையில் இமவான் அம்பிகை தனக்கு மகளாக வேண்டித் தவம் கொண்டிருந்தான். அங்குள்ள தடாகத்தில் ஆயிரத்தெட்டு இதழ்களுடைய தாமரை மலரில் அம்பிகை குழந்தையாகத் தோன்றினாள். அதுகண்டு வியப்படைந்த இமவான் யாவும் இறைவன் செயல் என்று எண்ணி குழந்தையை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுக்க, அவளும் தாய்மை அடைந்தவருக்கான அறிகுறிகளுடன் குழந்தையை வாரி அணைத்து பார்வதி என்ற பெயரில் வளர்த்து வந்தாள்.
குழந்தைக்கு ஐந்து வயது ஆனவுடன், தாயாகிய மேனையிடம் அம்பிகை தான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்ய வேண்டுவதாகவும் அதற்கான அனுமதியும் வேண்டினார். மேலும் தந்தையிடம் தன் எண்ணத்தைக் குறிப்பிட்டு வேண்டிட இமவான் அம்பிகை தவம் ஆற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தாள். தாயின் மனம் இதற்கு இடம் கொடுக்காததால் அவள் அம்பிகை தவமிருப்பதை ஏற்காமல் தடுக்க முயற்சித்தாள். இதனால் அம்பிகைக்கு உமா என்ற திருநாமம் ஏற்பட்டது. (தவம் வேண்டாம் என்ற பொருளைத் தரும் உமா என்னும் சொல் மேலும் அந்தச் சொல்லை தேவி பிரணவம் என்றும் கூறுவர்)
(குறிப்பு : ஓம் என்ற பிரணவத்தில் அகார, உகார மகாரங்கள் உள்ளது. உமாவில் உகார, மகாரங்கள் முதலினும் அகாரம் இறுதியிலும் உள்ளது. எனவே அது தேவி பிரணவம் எனப்படுகிறது.)
கதற் ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
#ஸ்ரீஅருணகிரிநாதர்_
அருளிய
#திருச்செங்கோடு_
#திருப்புகழ்
#புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு மனையாளும்
#புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத பெருவாழ்வு
#நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு மடியேன்யான்
#நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத நினைவாயே!
#சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி மருகோனே!
#தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி மறையோனே!
#கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர் கொடிகோவே!
#கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர் பெருமாளே!
ஸ்கந்த புராணம் - பகுதி 3
காமதகனம்
=========
திருக்கைலாயத்தில் சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் மோன நிலையில் இருந்து சனகாதி முனிவர்களுக்குச் சின் முத்திரையால் சிவஞானம் அருளினார். சிவபெருமான் மவுன யோகத் தோற்றத்தால் அண்டமனைத்திலும் எல்லா உயிர்களுக்கும் காமம் தோன்றாமல் இயக்கம் தடைபட்டது. சூரபன்மன் என்னும் அரக்கன் சகல வரங்களையும் பெற்று இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் மிகவும் வருந்திய தேவராஜன் மேருமலையை அடைந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்ய, ஈசன் அவன் குறையைக் கேட்டு, விரைவில் குமரன் தோன்றி அரக்கர்களை அழித்து உங்களை எல்லாம் காப்பாற்றுவான் என்று கூறி மறைந்தார். சிவபெருமான் மோன நிலையும், அம்பிகையின் தவமும் நடைபெறுவதால் குமரன் விரைவில் தோன்ற ஆவன குறித்து ஆலோசனை செய்து, இறுதியில் மன்மதன் என்னும் காமனை ரதியுடன் அனுப்பி ஈசனின் மோன நிலை நீங்கி, அம்பிகையுடன் சேர்ந்திட, அவர் மனதில் விரகதாபம் ஏற்படுத்த வேண்டினர். அதனால் தனக்கேற்பட உள்ள ஆபத்தைக் கூறி மன்மதன் இசையவில்லை. ஆனால், இறுதியில் பிரம்மனின் சாபத்துக்குப் பயந்து சிவபெருமான் மீது மலர்க்கணை செலுத்த இசைந்தான்.
திருக்கைலாயம் அடைந்தான் மன்மதன். ஏற்கனவே, மன்மதனை அனுமதிக்க வேண்டாம் என்று ஈசன் கூறியிருந்ததால் நந்திதேவர் அவனைத் தடுத்தார். ஆனால், பின்னர் தான் தேவகாரியமாக வந்திருப்பதை உணர்த்திட நந்தி வழி விலகினார். இதற்குள் பிரமாதி தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். மன்மதன் ஈசனை அணுகி தனது மணம் மிக்க மலர்க்கணைகள் ஐந்தையும் சிவபெருமான் மீது பிரயோகிக்க, ஈசன் அதனை அறிந்து தனது நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்திட அவன் சாம்பலானான். அதுகண்ட தேவர்கள் மேலும் இறைவனைப் பிரார்த்தித்து தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டதோடு காமனையும் உயிர்ப்பிக்க வேண்டினர். கருணைக் கடலாகிய சிவபெருமான் இமயமலை சென்று பார்வதியைத் திருமணம் கொள்வதாகக் கூறித் தேவர்களை அனுப்பிவிட்டார். அப்போது காமனை இழந்த அவன் மனைவி ரதிதேவி, தேவர்களுக்காக அவர்கள் ஏவலினால் தனது பதி செய்த தவறை மன்னித்து, உயிர்ப்பித்து அருள வேண்டி பிரார்த்திருக்க, ஈசனும் கவுரி கல்யாணத்தின்போது மன்மதனை அளிப்பதாகக் கூறிட அவளும் இறைவன் கருணையைப் போற்றிச் சென்றாள். பின்னர் சிவபெருமான் சனகாதி முனிவர்களிடம் மோனமே ஞானநிலை, எம்மை மனத்தில் இருத்தி ஒருமையுடன் நினைப்பதே சாந்தி அளிக்கும் என்று கூறி அவர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பினார்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
#திருப்புகழ்
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
ஸ்கந்த புராணம் - பகுதி 4
அம்பிகையின் தவமும், ஐயன் தரிசனமும்
========================
அம்பிகையின் தவத்தைக் கண்டு அருள்புரிய எண்ணிய சிவபெருமான் வயது முதிர்ந்த வேதியர் உருவில் அம்பிகையின் தவச்சாலையை அடைந்தார். அம்பிகையின் தோழியர்கள் அவரைத் தக்க உபசாரங்களுடன் அழைத்துச் சென்று அம்பிகையின் முன் நிறுத்தினார். அம்பாளின் தவக்கோலம் கண்ட ஈசன் அவளிடம் அவன் ஏன் உடலை வாட்டிக் கொள்கிறாள் என்றும், யாரை மணக்க விரும்புகிறாள் என்றும் அந்தப் பாக்கியசாலி யார் என்றும் வினவ, பார்வதியின் தோழிகள் அவள் குறிப்பறிந்து அம்பிகையின் தவத்தின் குறிக்கோளை எடுத்துரைத்தனர்.
அதுகேட்ட கிழ வேதியர் எள்ளி நகையாடி கீழ்க்கண்டவாறு எடுத்துரைத்தார். சிவபெருமான் உடை தோல், வாகனம் எருது, ஆபரணங்கள் பாம்பு, எலும்பு; தலைமாலை பன்றிக்கொம்பு, உண்கலம் மண்டையோடு, உண்பது நஞ்சு, நடமாடுவது மயானம் என்றெல்லாம் கூறி, பார்வதியை அவ்வெண்ணத்தை விட்டுத் தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு கூறினார். மிகவும் சினமுற்ற உமாதேவியார் கிழ வேதியரை அவ்விடம் விட்டு அகலுமாறு ஆத்திரத்துடன் கூற, மேலும் சில வார்த்தைகளால் உமாவிடம் விளையாடிய சிவபெருமான் இறுதியில் ஈசனாகக் காட்சி தந்தார். எம்பெருமான் தரிசனம் கண்ட உமாதேவியார் தன்
குற்றத்தை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டிட, சிவபெருமானும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறி திருக்கயிலாயம் திரும்பினார். செய்தியறிந்த பார்வதியின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுற்று அம்பிகையைத் தவச்சாலையிலிருந்து தமது அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
கந்தர் அலங்காரம்
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2
தீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப வீட்டை முக்தியை வழங்க வல்ல கூர்மையான வேலினைத் தாங்கிய திருமுருகப் பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிது மின்றி கற்றுக் கொள்ளாமல் ஓதாமல் இருக்கின்றீர்களே.! நெருப்பு மூண்டு எரிவதைப் போல கண்களை உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது) இயலும்
ஸ்கந்த புராணம் - பகுதி 5
பார்வதி பரிணயம்
==============
கைலையை அடைந்த ஈசன் சப்த ரிஷிகளை நினைத்தார். அவர்கள் ஈசனின் எதிரில் வந்து தமக்குரிய ஆணை என்ன? என்று வினவ பரமேசுவரன், பர்வதராஜன் மகள் பார்வதியை மணக்க விரும்புகிறேன். ஆதிபராசக்தியான அவளே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியாவாள். அவள் என்னையே கணவனாக அடைய தவம் செய்து வருகிறாள். நீங்கள் உங்கள் பத்தினிகளுடன் சென்று திருமணம் பேசி முடித்து வரவேண்டும். மற்றும் அவளுடைய தாய் மேனையையும் மனப்பூர்வமாக சம்மதிக்கச் செய்வீராக என்று கட்டளை இட்டார்.
சப்தரிஷிகளும் ஈசனை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு இமயத்தை அடைந்தனர். இமவான் இச்செய்தி அறிந்து வெளிப்போந்து அவர்களை வரவேற்று உபசரித்தான். அவர்கள் பர்வதராஜனிடம் உன் மகள் பார்வதியை எம்பெருமானுக்கு மணம் பேச வந்துள்ளோம். என்று தமது விசயத்தின் காரணத்தைக் கூறினார். உடனே இமவான் தனது சம்மதத்தைத் தெரிவித்திட, இமவானின் மனைவி மேனை ஓர் ஐயப்பாட்டை எழுப்பினாள். ஈசன் தாக்ஷõயாணியை மணந்து, பின்னர் மாமனாராகிய தக்ஷனின் தலையை அறுத்து விட்டார். அது குறித்து அச்சப்படுகிறேன் என்றாள்.
முனிவர்களும் தக்க சமாதானம் தந்தனர். ஆங்கீரசர் கூறினார் தக்ஷன் தனக்கு ஈசன் அளித்த சகல ஐசுவரியங்களையும், பட்டத்தையும் மறந்து ஈசனை ஒதுக்கி வைத்து, மேலும் பரமனைப் பலவிதமாக ஏசினான். தாட்சாயினியும் வர அனுமதிக்கப்படவில்லை. இந்த அலட்சியமும், கர்வமும் தான் அவன் அழிவிற்குக் காரணம். இருப்பினும் மறுபடியும் அவனை உயிர்ப்பித்தருளினார் என்று கூறிட மேனையும் ஐயம் நீங்கினாள். சம்மதம் அளித்தாள். சப்த ரிஷிகளும் மனம் மகிழ்ந்தனர். இமவானையும், மேனையையும் ஆசிர்வதித்து, திருமணத்திற்கான நன்னாளை நிச்சயித்து விடை பெற்றுச் சென்று, கயிலை அடைந்து, எம்பெருமானிடம் நிகழ்ந்ததைக் கூறி தம் இருப்பிடம் சென்றனர். பர்வதராஜன் அம்பிகையின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலானான். அப்போது இமவானின் மகன் மைனாகன் தன்னுடைய தந்தையாரிடம் தேவதச்சனான விசுவகர்மாவை வரவழைத்துச் சொன்னால் அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார் என்று கூறினான். விசுவகர்மாவும் இது கேட்டு மனமகிழ்ந்து எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தார்.
பர்வதராஜன் அனைவர்க்கும் மணஓலை அனுப்பி வைத்தான். கைலைக்குச் சென்று, இறைவனைத் தரிசித்து வணங்கி, என் தவப் பெண்ணை தங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். நாளையே சிறந்த நாள் என்று சப்தரிஷிகள் லக்னம் குறிப்பிட்டுள்ளனர். தேவரீர் தங்கள் பரிவாரங்களுடன் எழுந்தருளி எனது மகளை ஏற்று எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினான். ஈசனும் அவ்வாறே அருள்பாலித்தார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இசைந்த பரமேசுவரன் சர்வாபரணங்களையும் அணிந்தவாறு தோன்றினார். பூதகணங்கள் புடைசூழ, மங்கலவாத்தியங்கள் முழங்க, தேவாதி தேவர்களுடன் இமயமலையை வந்தடைந்தார் சிவபெருமான் அழகிய மணமகனாக. அவர் இமவானின் நகரமாகிய ஓஷதி பிரஸ்தத்தில் நகர்வலமாக வந்தபோது ஐயனின் திருமேனி அழகு கண்டு அனைவரும் மயங்கி நின்றனர். சிவபெருமான் மணமகனாக திருமண மண்டபத்தை அடைந்தபோது இமவானின் மனைவி மேனை மகளிர் பலர் சூழ அவரை வணங்கி திருவடிகளைப் பாலால் கழுவி பக்திப் பெருக்குடன் விளங்கினாள்.
பிரம்மனும், திருமாலும் இருபுரம் கரம் தந்திட ஈசன் மண்டபத்தில் பிரவேசித்து சீரிய சிங்காதனத்தில் அமர்ந்தார். எம்பெருமான், அம்பிகை திருமணம் காணப் பெரும்கூட்டம் கூடியதால் இமயம் உள்ள வடபால் கீழே அழுந்தி, தென்திசை உயர ஆரம்பித்தது. அப்போது ஈசன் அகத்தியரை அருகழைத்து தென்திசை சென்று பொதிகையில் தங்கி, அங்கிருந்தவாறே திருமணத்தைக் காணுமாறு அருள்பாலித்தோம் என்று கூறிட, அகத்தியரும் பொதியமலை சென்றடைய பூமி சமமாகியது. பார்வதி தேவியார் திருமகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு கலைமகள் துதி பாடிட திருமண மண்டபம் அடைந்து சிவபெருமானை வணங்கி நிற்க, ஈசனும் தேவியை ஆசனத்தில் இருக்குமாறு பணித்தார். மணமண்டபத்தில் இவ்வாறு ஈசனும் தேவியும் வீற்றிருக்க, பர்வதராஜன், தன் மனைவி மேனை நீர் வார்த்திட சிவனாரின் திருவடிகளை விளக்கி சந்தனம், மலர் சார்த்தி உபசரித்தான். பின்னர் பார்வதியின் கரத்தை, எம்பிரான் கரத்துள் வைத்து வேத கோஷங்களுடன் தாரை நீர் வார்த்து கன்னிகாதானம் செய்வித்தான். பெண்டிர் எல்லோரும் கவுரி கல்யாணம் வைபோகமே என்று கோஷமிட்டார். மங்கல வாத்தியங்கள் முழங்கின.
அடுத்து இமவான் பால், பழம் போன்ற பலவற்றை ஈசனுக்கு அமுதெனப் படைக்க, இறைவன் நன்று எனக்கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவற்றை எடுத்துக்கொள்ளுமாறு இமவானைப் பணித்தார். அடுத்து திருமண நிகழ்ச்சிகள் யாவும் முறைப்படி நடந்தேற எல்லோரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். அதுவே தக்க தருணம் என்று ரதிதேவி சிவபெருமானிடம் தனது கணவரைத் தனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தாள். எம்பெருமானும் கருணை கொண்டு மன்மதனை மன்னித்து ரதிதேவியின் வேண்டுகோளின்படி உனக்கு உயிர் பிச்சை அருளினோம். ஆனால் நீ அவளுக்கு கணவனாக, அவளுக்கு மட்டும் உருவம் கொண்டு விளங்குவாய். மற்றவர்களுக்கு நீ உரு வெளிப்படாமல் அதாவது அனங்கனாக இருப்பாய். உன் ஆட்சி இனி வழக்கம் போல் தொடரும் என்று அருளினார். கல்யாணத்துக்கு வந்திருந்தோருக்கு விருந்தளித்து, தக்க சன்மானங்கள் தந்திட்டான் இமவான். அனைவரும் பார்வதி, பரமேசுவரர்களிடமும், இமவான் மேனையிடமும் விடைபெற்றுத் தம் இருப்பிடம் சென்றனர். சிவபெருமானும் பார்வதி தேவியுடன் ரிஷபம் ஏறி திருக்கைலாயம் அடைந்தார்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி !
திருமுதுகுன்றம்
இத்தலத்தில் இறப்பவருக்கு, இறைவன் அவ்வுயிரைத் தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய, இறைவி முந்தானையால் இளைப்பாற்றுகின்றாள் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்
ஸ்கந்த புராணம் - பகுதி 6
அசுரர்கள் தோற்றம்
===============
இதனை அடுத்து சிவன் பார்வதி திருமணத்திற்கு வந்திருந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களது இருப்பிடமான தேவலோகம் சென்றனர். இதனையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இந்த அசுரர் குலத்தை என்ன முயற்சி செய்தாலும், தேவர்களின் புகழ் நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஆனால், இப்போது அசுரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. தட்சனின் யாகத்தில், சிவன் பங்கேற்காத போது, அவரது அனுமதியின்றி, யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்கச் செய்திருக்கிறார். தேவர்கள் சக்தி இழந்துள்ள இந்த நல்ல சமயத்தில், அசுரர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்யலாம். தட்சனின் மகளும், சிவனின் பத்தினியுமான தாட்சாயணி, தன் தந்தையை அசுரனாகும்படி சபித்திருக்கிறாள். அந்த தட்சனை இப்பிறவியில் நம் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால், இதைச் சாதித்து விடலாம். இந்த சிந்தனை ஓட்டத்தை செயல்வடிவாக்க எண்ணினார் சுக்ராச்சாரியார்.
பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும், அவரது தர்மபத்தனி அதிதிக்கும் பிறந்த அசுரக்குழந்தைகளை 66 கோடி பேரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்த அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் - மங்களகேசினி தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்தார். இவள் சுக்கிராச்சாரியாருக்கு முகமலர்ச்சியுடன் பணி விடை செய்து வந்தவள். அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து, பெயரையும் மாயா என மாற்றிவிட்டார்.
அவளிடம், மாயா! நம் குலம் தழைத்தோங்க வேண்டும் என்பது உன் தந்தை அசுரேந்திரனின் விருப்பம். அவர்கள் தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். இந்த அழிவைத்தடுக்க உன்னால் தான் இயலும். நாம் தேவர்களை அடக்கி, நமது சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்ட வேண்டும். அது உன்னால் முடியும் என்றார். வியப்படைந்த மாயாவிடம், தன் திட்டத்தையும் விளக்கினார். குருநாதரின் கட்டளையை ஏற்ற மாயா, தன் தந்தை அசுரேந்திரனிடம் இதுபற்றி சொல்ல, அவனும் அகமகிழ்ந்து, மகளை வாழ்த்தி அனுப்பினான். சுக்ராச்சாரியாரின் திட்டம் இதுதான். அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்பதே அவரது திட்டம். மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்றாள். தன் மாயசக்தியால், புதிய மாளிகைகளை அந்த கானகத்தில் எழுப்பினாள். அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். மணம் பொங்கும் மலர்கள் அதில் பூத்தன. அந்த கானகத்தின் ஒரு பகுதி அடையாளம் தெரியாமல் போனது. அந்த மாளிகையிலேயே தங்கியிருந்தாள் மாயா.
அவள் எதிர்பார்த்தபடியே, காஷ்யபர் அங்கு வந்தார். இந்த இடம் எப்படி இவ்வளவு அழகாக மாறியது. விஷ்ணு இங்கு வந்திருப்பாரோ? அந்த மாயவன் தான் இப்படி மாயச்செயல்கள் செய்திருப்பானோ ? பிரம்மா தன் பிரம்மலோகத்தை இந்த பூமிக்கு மாற்றி விட்டாரோ? என்று மனதில் கேள்விகள் எழ, ஆச்சரியத்துடன் மாளிகைக்குள் பார்த்தார். அங்கே ஒரு அழகுசுந்தரி நடமாடிக் கொண்டிருந்தாள். பூக்களில் அமரும் பட்டாம்பூச்சிகளை அவளது பட்டுக்கரங்களின் பிஞ்சு விரல்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மான்போல் துள்ளித்துள்ளி, விளையாடுவதைக் கண்ட காஷ்யபர், ஆஹா... உலகில் இப்படி ஒரு அழகியா? இவளைப் போன்ற பேரழகியை இதுவரை பார்த்ததில்லை, இனிமேலும் காண்போமா என்பது சந்தேகம் தான். இனி இப்பூமியில் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதும். ஆனால், இவளோடு வாழ்ந்து விட வேண்டும், என எண்ணியவராய் மாளிகைக்குள் சென்றாள்.
அழகுப்பெண்ணே! நீ யார்? இந்த கானகத்தில் உனக்கென்ன வேலை? இந்த மாளிகையை எப்படி உருவாக்கினாய்? உன் அங்கங்கள் என் மனதைக் குலைக்கிறதே! ஏற்கனவே திருமணமானவன். தவசீலன். அப்படியிருந்தும் என் மனம் உன்னைக் கண்டு அலை பாய்கிறதே, என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவள் காஷ்யபரிடம் நல்லவள் போல் நடித்தாள். தவசீலரே! இந்த மலைப்பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவள். எனக்கு இந்த மாளிகைகள் எப்படி வந்தன எனத் தெரியாது. ஆனால், யாரும் இல்லாததால், இங்கே புகுந்தேன். வேண்டுமானால், இந்த மாளிகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முனிவராக இருந்தும், என் அழகை வர்ணிப்பதில் நியாயமில்லை. நான் இளங்கன்னி. நீங்களோ முதியவர். வயதிற்காவது மரியாதை கொடுங்கள் சுவாமி ! என்றவளை காஷ்யபர் மீண்டும் வற்புறுத்தினார். அவள் மாயா அல்லவா? அங்கிருந்து மறைந்து விட்டாள். காஷ்யபர் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. அழகே! எங்கே போனாய். நீ இல்லாமல் எனக்கு இனி வாழ்வில்லை. எங்கு மறைந்திருந்தாலும் வந்துவிடு. என்னை ஏற்றுக்கொள். நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன், என நாள்கணக்கில் புலம்பிக் கொண்டு, அங்கேயே பசி பட்டினியுடன் கிடந்தார்.
மன்மதனின் வலைக்குள் சிக்கிய பிறகு தவசீலனாயின் என்ன? சாதாரண மனிதனாயின் என்ன? எல்லாரும் ஒன்றும் தான். காஷ்யபர் மயக்க நிலையில் கிடந்தார். அப்போது அவர் முன் மீண்டும் தோன்றினாள் அப்பெண். காஷ்யபர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லை. அவர் பரவசத்துடன் அவளை நோக்கி ஓடினார். தான் ஒரு முனிவர் என்பதையும், பிரம்மாவின் புதல்வன் என்பதையும் மறந்து அவளது காலிலேயே விழுந்து விட்டார். தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.
முனிவரே! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால், உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் பேரழகி. உம்மைப் போன்ற கிழவருடன் உறவு கொள்வதை என் மனம் ஏற்காது. எனவே, உம் தவ வலிமையால் நீர் இளைஞனாக மாறும் பிற உருவங்களை எடுத்துக் கொள்ளும் நானும் பல உருவங்களை எடுக்கும் சக்தி படைத்தவள். அதற்கேற்ப நீரும் மாறிக் கொள்ள வேண்டும், என்றாள். காஷ்யபர் அதற்கும், சம்மதித்து, பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்தார். அந்த சுந்தர அழகன் மாயாவை அடைந்தான். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தாமரை போன்ற மலர்ந்த முகம் உடையவனாக இருந்ததால், பத்மாசுரன் என பெரியரிட்டனர். பத்மம் என்றால் தாமரை எனப் பொருள். இவனே சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர்.
இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடிக்களித்தனர். அப்போது, ஆயிரம் முகம் கொண்டவனும், இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான ஒரு மகன் பிறந்தான். இவனது பெயரே சிங்கமுகன் அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள். மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது, யானை முகம் கொண்ட தாரகாசுரனும், அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர். நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர்.
மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி, கரடி, புலி, குதிரை, மான், காண்டாமிருகம், கழுதை என பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி, மொத்தத்தில் இரண்டுலட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர். இவர்கள் யாரும் குழந்தை வடிவினராகப் பிறக்கவில்லை. காஷ்யபரின் நவசக்தி, மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இளைஞர்களாக பிறந்தனர். இவர்களின் முதல் மகனான சூரபத்மன் பெற்றோர் முன்வந்து வணங்கினான். தாயே தந்தையாரே! லட்சக்கணக்கில் சகோதரர்கள் எனக்கு இருக்கிறார்கள். நாங்கள் ஏன் பிறந்தோம்? எங்களால் உங்களுக்கு ஆக வேண்டியதென்ன? சொல்லுங்கள். தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம், என்றான்.
காஷ்யபர் தன் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார். மக்களே! இவ்வுலகில் தர்மமே என்றும் வெல்லும். நீங்கள் தர்மத்தின் வயப்பட்டு இருங்கள். தர்ம காரியங்கள் பல செய்யுங்கள். சிவபெருமானைக் குறித்து நீங்கள் தவம் செய்யுங்கள். ஆன்மிக சாதனைகளே உங்களுக்கு நிரந்தர இன்பம் தருபவை. குத்ஸர் என்ற முனிவர் இறந்த ஒருத்தியைக் கூட தன் தவ வலிமை மூலம் பிழைக்க வைத்தார். மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயன். சிவனின் திருவருளால் எமனையே வென்று என்றுமே இளைஞனாக இருக்க வரம் பெற்றான். சிவன் தான் இவ்வுலகமே. அவரை வணங்கி தர்மத்தை நிலை நாட்டுங்கள். இதன் மூலம் என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறலாம் என்றார். இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விட்டார். தன் மக்களை தாய் மாயா அழைத்தாள்.
என் அன்புக் குழந்தைகளே! பெற்ற தாய் சொல்வதைக் கேட்பதே பிள்ளைகளுக்கு அழகு. உங்கள தந்தை சொல்வதில் கருத்தும் இல்லை, இன்பமும் இல்லை, சாரமும் இல்லை. இதற்காகவா நான் உங்களைப் பெற்றேன். அவர் சொல்லும் வாழ்க்கை துறவறம் போல் அமையும். முனிவர்களுக்கும், யோகிகளுக்குமே அது பொருந்தும். என் ஆசை அதுவல்ல. நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும். எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இதை அடைவது எளிதல்ல.
பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால், அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் வீரத்தையும், தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். யாகத்திற்கு தேவையான பொருட்களை யாகம் துவங்கும் வேளையில், நானே கொண்டு வந்து தருவேன், என்றாள். தாயின் மொழி கேட்டு சூரர்கள் ஆர்ப்பரித்தனர். அன்னையை வாழ்த்தினர். அவளிடம் விடை பெற்று வடத்வீபம் புறப்பட்டனர். கண்விழித்த காஷ்யபர், அங்கு தன் மக்கள் இல்லாதது கண்டு மாயாவிடம் காரணம் கேட்டார்.
தவசீலரே! அவர்கள் மட்டுமல்ல, நானும் இப்போதே புறப்படுகிறேன். நான் அசுரகுரு சுக்ராச்சாரியாரால் அனுப்பப்பட்டவள். எங்கள் அசுரகுலத்தை தழைக்க வைக்க, வேண்டுமென்றே உம்மை மயக்கி கூடினேன். அதையறியாத நீரும் என்னோடு மகிழ்ந்து இரண்டு லட்சம் அசுரர்களை உருவாக்கினீர். என் பணி முடிந்தது. நானும் செல்கிறேன், என்றவள் மாயமாய் மறைந்து விட்டாள். அவள் மட்டுமல்ல ! அவள் எழுப்பிய மாட, மாளிகை, கூட கோபுரங்களும் மறைந்தன. காஷ்யபர் தான் செய்த தவறை நினைத்து அழுதார். அப்போது அவரது முதுகை வருடிக் கொடுத்து, காஷ்யபா, என் அன்பு மகனே, என அழைத்தது ஒரு குரல். அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர். அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார்.
சூரபதுமன், சிங்கமுகன், தாரகாசூரன் - மூவர் தவமும், சிவபெருமான் அளித்த வரமும்: காஷ்யபா! இதென்ன கோலம்? மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் யாருமுண்டோ? நீயும் அவ்வாறே சிக்கினாய். நடந்ததைப் பற்றி கவலைப்படுவதில் என்றுமே பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கேள். இந்த தந்தையின் சொல்லை மதித்து நட. நீ காமவயப்பட்டு உலகத்திற்கே கேடு இழைத்து விட்டாய். உன்னால் அசுரகுலம் தழைத்து விட்டது. இந்தப் பாவத்தைப் போக்க சிவபெருமானால் தான் முடியும். இந்த பாவ விமோசனத்திற்காக, அவரைக் குறித்து கடும் தவம் செய், புறப்படு, என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். காஷ்யபரும் ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு போய் விட்டார். மாயையால் தூண்டிவிடப்பட்ட பத்மாசுரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அரக்கர்களும் ஆராவாரக்குரல் எழுப்பியபடி, அன்னை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். எதிரே சுக்ராச்சாரியார் வந்து கொண்டிருந்தார்.
அசுரர்களின் குருவாயினும் கூட, இப்படி சிங்கம், ஆடு, யானைத் தலைகளைக் கொண்ட அசுரர்களை அவர் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான குரல்களையும் கேட்டதில்லை. அவரே சற்று ஆடிப்போய் விலகி நின்றார். அப்போது, பத்மாசுரன், அவரிடம், நீர் யார்? எங்களைக் கண்டு ஏன் ஒதுங்கி நின்றீர்? என்றான் உறுமல் குரலுடன்.
சுக்ராச்சாரியார் நடுங்கியபடியே, அடேய்! நீங்கள் யார்? அசுர சிங்கங்களா? என்றார். ஆம்... நாங்கள் அசுரர்கள் தான். ஏன் எங்களைப் பற்றி விசாரித்தீர்? என்ற சூரபத்மனிடம், பிழைத்தேன், நான் அடேய்! சீடர்களே! நான் தான் உங்கள் குலத்திற்கே குரு அசுரேந்திரனின் மகள் மாயாவின் பிள்ளைகள் தானே நீங்கள்? என்றார் சந்தேகத்துடன்.
பத்மாசுரன் ஆம் என்றான். குருவே ! தங்களைக் கண்டது எங்கள் பாக்கியம். எங்களை ஆசிர்வதியுங்கள் என்றான். இரண்டு லட்சம் சூராதி சூரர்களும் அசுர குருவிடம் ஆசிபெற்றனர். பின்னர் சில மந்திரங்களை சூரபத்மனுக்கு உபதேசித்தார். அவை அவர்களுக்கு பலமளிக்கும் மந்திரங்கள் பின்னர், அவர்களிடம் விடை பெற்று புறப்பட்டார். புதிய சக்தி பெற்ற சூரர்கள் இன்னும் வேகமாக நடந்து, வடத்வீபம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கே யாகசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாதராண யாகசாலையா அது ? பத்தாயிரம் யோஜனை பரப்பில் யாகசாலை அமைக்கப் பட்டது. இக்கால அளவுப்படி ஒரு யோஜனை என்றால் 8 மைல் (12.8 கி.மீ). அதாவது ஒரு லட்சத்து 28 ஆயிரம் கி.மீ பரப்பில் இதை அமைத்திருக்கிறான். யாகசாலையின் நடுவில் ஆயிரம் யோஜனை சதுரமும் ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்தான். அதைச் சுற்றி இதே அளவில் 108 அக்னி குண்டங்களையும் அதையும் சுற்றி ஓரளவு சிறிய அளவில் 1008 குண்டங்களையும் நிர்மாணித்தார்.
இப்பணி முடியுவும் இவர்களின் தாய் மாயா யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தாள். அதில் கற்பூரத்தில் குருந்து எருமைகள், ஆடுகள், லட்சம் பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம் இந்த பொருட்கள் இருந்த தூரம் மட்டும் 3 ஆயிரம் யோஜனை பரப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த பொருட்களெல்லாம் அக்னி குண்டத்தில் ஹோமப் பொருட்களாக போடப்பட்டன. யாகம் என்றால் அப்படி ஒரு யாகம்... உண்ணாமல் உறங்காமல் பத்தாயிரம் வருஷங்கள், சிங்கமுகன் 108 குண்டங்களிலும், தாரகாசுரன் 1008 குண்டங்களிலும் யாகத்தை நடத்தினர். அந்த பரமேஸ்வரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. பத்தாயிரம் ஆண்டும் கடந்து விட்டது. பத்மாசுரன் எழுந்தான். தன்னைத் தானே வெட்டிக் கொண்டு அந்த ரத்தத்தை அக்னி குண்டத்தில் பொழிந்தான். அதைப் பார்த்த தாரகாசூரனும், சிங்கமுகனும் அவ்வாறே செய்தனர். சிங்கமுகன் ஒரு படி மேலே போய் தன் தலையை அறுத்து குண்டத்தில் போட்டான்.
தேவர்கள் மகிழ்ந்தார்கள். சிங்கமுகன் தொலைந்தான் என்று. ஆனால், புதுப்புது தலைகள் முளைத்தன. அவற்றைத் தொடர்ந்து வெட்டி அக்னி குண்டத்தில் அவன் போட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். எதற்கும் பரமேஸ்வரன் அசைந்து கொடுக்காதைதைக் கண்டு கோபித்த சூரன், சிவபெருமானே! என் பக்தி நிஜமானதெண்றால் என்னையே ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி, யாக குண்டத்திற்குள்ளேயே குதித்து உயிர்விட்டான். அண்ணனின் துயர முடிவு கண்டு ஏராளமான அசுரர்களும் ஆங்காங்கே இருந்த குண்டங்களில் குதித்தனர். சிங்கமுகன் அக்னி குண்டத்தில் குதிக்கப் போன வேளையில் ஒரு முதியவர் அங்கே வந்தார்.
மக்களே! நீங்களெல்லாம் யார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றார். சிங்கமுகன் அவரை வணங்கி, தங்களைப் பார்த்தால் அந்த சிவனே வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முதியவரே! நாங்கள் காஷ்யபரின் புதல்வர்கள். அசுர சகோதரர்கள் பரமேஸ்வரனிடம் வரங்கள் பெற இங்கே யாகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகள் கடந்தும் அவர் வரவில்லை. நானும் சாகப் போகிறேன். என்றான், கவலை வேண்டாம் மகனே! நீங்கள் நினைத்தது இப்போதே நடக்கப் போகிறது. பரமசிவன் வரும் காலம் நெருங்கி விட்டது, என்றவர் சற்றே தலை குனிந்தார். அவரது தலையில் இருந்து ஒரு நதி பெருக்கெடுத்து ஓடி அத்தனை குண்டங்களில் இருந்த நெருப்பையும் அணைத்தது. அப்போது ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக வந்து கங்கையைச் சிந்தி, யாக குண்டத்தை அணைத்தது சிவபெருமான் தான். அங்கே உமையவளும் வந்து சேர, இருவரும் ரிஷபத்தில் அமர்ந்து அசுரர்களுக்கு காட்சி தந்தனர். அசுரக்குழந்தைகளே என்னைக் குறித்த உங்களது யாகத்தின் மதிப்பு அளவிட முடியாதது.
நீங்கள் கேட்கும் வரங்களைத் தர நான் காத்திருக்கிறேன், என்றார் சிவன். அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும், என்றான்.
சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தார். சூரபத்மனே ! இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய இப்போது உன்னிடமிருக்கும் பலம் போதாது. எனவே உன் சகோதரர்களுக்கும், சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் தருகிறேன். இன்னும் பல கோடி பேர் அடங்கிய நான்கு வகை சேனைகளையும் தருகிறேன். இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய், என்றார். மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும், தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி, ஈசனே! தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்ற தங்கள் வரம் நிலைத்தாலே போதும். இந்த அண்டங்கள் உள்ளளவும் நாங்கள் வாழ்வோம், என்றான் சூரபத்மன். அசுரத்தலைவனே ! என்னாலோ, என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை, என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான். இதற்குள் சிவன் மறைந்து விட்டார். அசுரக்கூட்டம் ஆரவாரத்துடன் சிவனால் தங்களுக்கு அருளப்பட்ட படைகளுடன் கிளம்பியது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி அசுரர்களுடன் புறப்பட்ட அப்படை நேராக காஷ்யபரிடம் சென்றது.
தந்தையே ! நாங்கள் பல்லாண்டுகளாக தவமிருந்து 1008 அண்டங்களையும் ஆளும் சக்தியைப் சிவபெருமான் மூலம் பெற்றோம். இனி தங்கள் வழிகாட்டுதல் படி நடப்போம் என்றான் சூரபத்மன். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றி பெற்றவர்கள் பெருமைப்படுவார்கள் இங்கோ அரக்கி மீது ஆசைப்பட்டு, அசுரப் பிள்ளைகளைப் பெற்ற இந்த தந்தையோ மனம் வருந்தினார். சிவனாரே வரம் கொடுத்த பிள்ளைகளை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடன் மகனே ! நீ இந்த வீரர்களுடன் குலகுரு சுக்ராச்சாரியாரை போய்ப்பார். அவரது வழிகாட்டுதல் படி நடந்து கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார்.
அனைவரும் சுக்ராச்சாரியாரைச் சென்று சந்தித்தனர். சுக்கிராச்சாரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் அன்பு சீடர்களே ! இந்த உலகம் சிவனுக்கு கட்டுப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் இறுதியில் பரமாத்மாவான அந்த சிவனின் உடலில் தான் கலக்கிறது. எனவே, பாவ, புண்ணியம் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படக்கூடாது. உங்களைக் கண்டு எல்லாரும் நடுங்க வேண்டும். அப்படியானால் தான் அசுர ராஜ்யம் பல்லாண்டு வாழும், நீங்கள் அந்த சிவனை மறக்காமல் தினமும் பூஜிக்க வேண்டும். அதே நேரம் எல்லா லோக அதிபதிகளையும் ஓடஓட விரட்டி அண்டங்களை உங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும். கொலை செய்யுங்கள்; தேவப் பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள். கொள்ளையடியுங்கள்; போரிடுங்கள்; இப்படி செய்ய உங்களுக்கு சிவனே அதிகாரம் கொடுத்திருக்கிறார். அண்டமெல்லாம் உங்களுக்கு என வாக்களித்த பிறகு யாரோ ஒருவன் அதில் இருந்து ஆள என்ன தகுதி இருக்கிறது? இவற்றைச் செய்யத் தயங்கினால், உங்களை எவனும் மதிக்கமாட்டான். புறப்படுங்கள் இப்போதே, என்றார். சூரபத்மன் அவரது காலில் விழுந்து பணிந்து புறப்பட்டான். அவர்களின் வாகனம் வித்தியாசமாக இருந்தது.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
ஆடை தோல் விடை ஏறுவது அணிகலம் அரவு என்பு
கேடில் வெண்தலை மாலிகை கேழலின் மருப்பு இன்ன
ஓடு கொள்கலம் ஊண்பலி வெய்ய நஞ்சு உலப்புற்றோர்
காடதே நடம் புரியிடம் கண்ணுதல் கடவுட்கே.
-கந்தபுராணம் - (651)
பொருள்:
நெற்றிக்கண் பெற்றுள்ள சிவபெருமானுக்கு ஆடை - தோல்;
வாகனம் - காளை;
ஆபரணம் -பாம்பும், எலும்பும் ;
மாலை - கெடுதல் இல்லாத வெண்மையான மண்டை ஓடும், பன்றி கொம்பும் இவை போன்ற பிறவும்;
பிச்சைப் பாத்திரம் - பிரமனின் மண்டையோடு;
உணவு - கொடிய விஷம்;
நடனமாடும் மன்றம் - இறந்தவர்களுக்கு உரிய சுடுகாடே ஆகும்.
வேய்ந்து கொள்வது வெள்ளெருக்கு அறுகுநீர் வியற் கொன்றை
பாந்தள் நொச்சியே மத்தமென்று இனையன பல உண்டால்
சாந்தம் வெண்பொடி சூலம்மான் மழுத்துடி தழல் அங்கை
ஏந்துகின்றது பாரிடம் சூழ்படை இறையோற்கே.
- கந்தபுராணம் - 652
பொருள்:
அந்த இறைவனான சிவபெருமான் அணிந்து கொள்பவை: வெள்ளெருக்கம்பூ, அறுகம்புல், கங்கையாறு, சிறந்த கொன்றை மலர்கள், பாம்புகள், நொச்சி,ஊமத்தை ஆகிய இவற்றை போல மிகப்பல உள்ளன. அவன் பூசிக்கொள்ளும் சந்தனம், வெள்ளை சாம்பல்! உள்ளங்கையில் ஏந்திக் கொண்டிருப்பவை: சூலம், மான், மழு, துடி(உடுக்கை), அக்கினி(நெருப்பு) ஆகியனவாம். அவனைச் சூழ்ந்துள்ள படைகள்: பூதங்களே!
சிவாயநம.
ஸ்கந்த புராணம் -
பகுதி 7
சூரனின் திக்விஜயம்
=================
சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக அது விளங்கியது. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன என்றால், அந்த ரதத்தின் வேகத்தைக் கேட்கவா வேண்டும். தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். இதர படையினர் கோவேறு கழுதை, ஒட்டகம், யானை, குதிரை என பல மிருகங்களை வாகனமாக்கி ஏறிச் சென்றனர். இந்த படைகள் பறந்து சென்ற தூரம் மட்டும் மூன்றுகோடி யோஜனை அளவுக்கு இருந்ததாம். (அதாவது கிட்டத்தட்ட 40 கோடி கிலோ மீட்டர் தூரம்.) அந்தளவுக்கு பரந்திருந்தது இந்த உலகம்.
ஒருவனுக்கு முதல் தேவை செல்வம். அது இருந்தால் தான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் வயிறார சாப்பிட முடியும். இந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் முதலில் அக்கறை காட்டியது அசுரப்படை. எனவே அவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை. அழகாபுரி அரசன் குபேரன் அசுரப்படையின் அத்துமீறல் கண்டு அதிர்ந்து போனான். அவனுக்கு அசுரர்கள் சிவபெருமானிடம் வரம் பெற்ற வரலாறு முழுமையாகத் தெரியும்.
சூரபத்மனை வெல்ல இயலாது என்பதைப் புரிந்து கொண்ட அவன் பொன்னோடும் மணியோடும் சூரபத்மனைச் சரணடைந்து, பத்மாசுரனே ! நான் இன்று முதல் உங்கள் அடிமை. நீங்கள் விரும்பும் போதெல்லாம் பொருளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டியது என் கடமை. நான் தங்களைச் சரணடைகிறேன், என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த செல்வபுரியின் வனப்பைக் கண்ட அசுரப்படையினர் ஊருக்குள் புகுந்து அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்தனர். தன் நாடு அலங்கோலமானது கண்டு குபேரன் பெரிதும் வருந்தினான். சூரபத்மன் அவனது பேச்சை பொருட்படுத்தவே இல்லை. அனைத்துச் செல்வத்துடனும் படைகள் புறப்படட்டும் என ஆணையிட்டான்.
குபேரபுரியை அடுத்து அவன் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றான். அந்த திசைக்கு அதிபதி ஈசானன். இவனை பார்த்த சூரன். அப்படியே ஒதுங்கிக் கொண்டான். அசுரர்களிடம், வேண்டாம், இவனை வெல்ல நம்மால் இயலும் என எனக்குத் தெரியவில்லை. இவனை உற்று நோக்குங்கள். இவனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. நமக்கு வரமளித்த சிவனும் முக்கண்ணன். ஒருவேளை அவர் தான் இவனோ என எண்ணத் தோன்றுகிறது, வம்பை விலைக்கு வாங்க வேண்டாம், எனப் படைகளை கட்டுப்படுத்தி விட்டு கிழக்கு நோக்கி திரும்பினான். கிழக்கு திசையில் தான் தேவர்களின் தலைமை இடமான இந்திரலோகம் இருந்தது. அசுரப்படை அகோரமாய் கத்திக் கொண்டு அங்கு புகுந்ததோ இல்லையோ, எல்லாரையும் விட்டு விட்டு, இந்திரன் ஓடோடிச் சென்று ஆகாய மேகக் கூட்டங்களிடையே தலை மறைவாகி விட்டான். தேவலோகத் தலைநகரான அமராவதி பட்டணத்தை சூறையாடினார்கள் அசுரர்கள். ஒரு அறையில் பதுங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேவமாதர்கள் அசுரர்கள் கண்ணில் பட, அவர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். ஒளிந்திருந்த தேவர்களை கைது செய்து, அவர்களின் தலையில் அமராவதி பட்டணத்து செல்வங்களை ஏற்றி, சுமந்து வரச்செய்தார்கள்.
இதையடுத்து அக்னியின் கோட்டைக்குள் புகுந்தன அசுரப்படை. அக்னி சாதாரணமானவனா? தைரியசாலியான அவன் அசுரர்களை நோக்கி தன் ஜ்வாலையை வீசி அருகில் நெருங்க விடாமல் செய்தான். ஆனால், சூரபத்மனின் தம்பி தாரகன் அக்னியின் மீது பாசுபதாஸ்திரத்தை எய்தான். இது அவனுக்கு சிவபெருமான் கொடுத்த பரிசு. சிவனின் அஸ்திரத்துக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் அக்னி. காரணம், அந்த அஸ்திரம் நெருப்புக்கே நெருப்பு வைக்கக்கூடியது. தன் அக்னிலோகம் மட்டுமின்றி சர்வலோகங்களும் அந்த அஸ்திரத்தால் அழித்து போய்விடும் என்பதால். அக்னி வேறு வழியின்றி சூரனிடம் சரண்புகுந்தான். தாரகன் அவன் மீது இரக்கப்பட்டான்.
அக்னியே நீ குபேரனைப் போலவோ, இந்திரனைப் போலவோ பயந்து ஓடவில்லை. உன்னால் முடிந்தளவு என்னிடம் போராடினாய். எனவே, இந்த பட்டணத்துக்கு நீயே ராஜாவாக தொடர்ந்து இரு. ஆனால், எங்களைப் பொறுத்தவறை நீ பணியாளன். நாங்கள் வரச்சொல்லும் இடத்துக்கு வர வேண்டும், என்று ஆறுதல் சொன்னான். ஆனாலும், இந்த சமாதான பேச்சுவார்த்தை முடிவதற்குள், அசுரப்படைகள் அக்னி பட்டணத்தை அழித்து, அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர். இதையடுத்து தென்திசை நோக்கி திரும்பியது அசுரப்படை தெற்கே இருப்பது எமலோகம் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வர வேண்டியவர்கள் இதோ! இப்போது வந்து விட்டார்கள். எமன் சாதாரணமான ஆசாமியா? அவனை எமகாதகன் என்றல்லவா சொல்வார்கள். அந்த அதிபுத்திசாலி, தன் லோகத்தில் விளைந்த அரிசி, பயிறு வகை உளுந்து சகிதமான படை ஊருக்குள்,வருவதற்கு முன்பே நுழைவிடத்தில் போய் நின்றுவிட்டான்.
முதலில் வந்த தாரகனின் தாழ் பணிந்து, ஐயனே! நான் நீங்கள் சொல்லும் நபரை மட்டும் தான் பிடிப்பேன். யாருக்காவது விதி முடிந்தால் கூட நீங்கள் கட்டளையிட்டால், அவரை பிடிக்க மாட்டேன், என் பட்டணத்தை மட்டும் ஏதும் செய்து விடாதீர்கள், என்றான். எமன் மீதும் இரக்கம் கொண்ட தாரகன், படைகளை ஊருக்குள் போகக்கூடாது என சொல்லி விட்டான். இப்படியாக நிருதி, வாயு, வருண லோகங்களுக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டினர் அசுரப்படையினர்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
விதியை மதியால் வெல்லாம்
இறைவனின் திருவடி என்னவெல்லாம் செய்யும் என்பதை அருணகிரிநாதர் தெளிவாக கூறியிருக்கிறார்
அருணகிரி நாதர் தலை மேல் மதியாகிய முருகனின் திருவடி பட்டு பிரம்மன் எழுதிய தலையெழுத்து (விதி) அழிந்தது இதனையே
*விதியை மதியால் வெல்லலாம்* என்பர்
இதனையே சேல்பட்டழிந்தது எனும் கந்தர் அலங்காரப்பாடலில் *இங்கு என் தலைமேல் நின் கால் பட்டழிந்தது அயன் கையெழுத்தே *
எனக் குறிப்பிட்டார்
எனவே நாமும் விதியை நொந்திடாது இப்பாடலை பொருள் உணர்ந்தோதி மதியால் வெல்வோமாக
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
......... பதவுரை .........
சேல் என்னும் மீன்கள் குதித்துத்திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானதுசோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும் கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்எழுதப்பட்டிருந்த ['விதி'] என்னும்கையெழுத்தும் அழிந்துபோயிற்று
ஸ்கந்த புராணம் - பகுதி 8
மகாவிஷ்ணுவின் அருள்
===================
அசுரன் தாரகனுக்கு ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்ட லோகத்தை ஜெயிக்கும் எண்ணம் வந்தது. படைகளை வைகுண்டம் நோக்கித் திருப்பினான். தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் படையைப் பார்த்து ஸ்ரீதேவியும், மகாலட்சுமியும் கலங்கிப் போனார்கள். பிரபு ! இது என்ன தூக்கம் ! பாருங்கள். அசுரப்படைகள் நம்மை நோக்கி வருகிறார்கள். அவர்களைத் தடுக்க முற்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே ! உங்களுக்கு இந்த ஆதிசேஷன் மீது படுத்து விட்டால் வீடு, வாசல் பற்றி கவலையே கிடையாது. எழுந்திருங்கள், என்று பதட்டத்துடன் கூறினர்.
மகாவிஷ்ணு சிரித்தார். தேவியே ! என்ன கலக்கம். நான் கண்மூடி இருந்தாலும், உலகத்தில் நடப்பதைக் கவனிக்கத் தவறவில்லை. என்ன செய்வது ? சில சமயங்களில் நாம் பக்தர்களைச் சோதிக்கிறோம். சில சமயம் பக்தன் நம்மைச் சோதிக்கிறான். இந்த அசுரர்கள் பெரும் தவம் செய்து, முக்கண்ணனான என் மைத்துனரிடமே வரம் பெற்றவர்கள். அவர்களை என்னால் ஏதும் செய்ய முடியாது. வேண்டுமானால், நானும் அவர்களுக்கு ஏதாவது பரிசு வேண்டுமானால் கொடுக்கலாம். உம்... உம்... கால் வலிக்கிறது. பிடித்து விடுங்கள். அவர்கள் இங்கு வரட்டும், பார்த்துக் கொள்ளலாம், என்றவராய் கண்களை மீண்டும் மூடிவிட்டார்.
இப்போது அசுரப்படை வைகுண்டத்தை முற்றுகையிட்டு விட்டது. மகாவிஷ்ணு அனைத்தும் அறிந்தவரல்லவா ? அவர் சயனத்தில் ஆழ்ந்திருப்பதென்ன தூக்கத்திற்கு ஒப்பானதா ? சர்வ வியாபியான அவருக்கு தூக்கம் ஏது ? உலகை பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள அவர் ஆவேசமாய் எழுந்தார். தனது பாஞ்சஜன்யம் என்னும் வெற்றிச்சங்கும், நந்தகம் என்ற கத்தி, கவுமோதகி என்ற கதாயுதம், சுதர்சன சக்கரம், சார்ங்கம் என்ற வில் ஆகிய ஆயுதங்களுடன் அசுரப்படைகளை அழிக்கப் புறப்பட்டார். சிவனிடம் அருள் பெற்ற அசுரர்களைத் தன்னால் அழிக்க முடியாதெனத் தெரிந்தாலும், சிவனின் அருள் பெற்றவர்களுக்கு தனதருளையும் கொடுக்கும் நோக்கத்தில் அவர்களைச் சந்தித்தார். ஆனாலும், அவரருளைப் பெறுவது அவ்வளவு சுலபமானதா என்ன?!
சூரர்களுடன் கடும் போரில் இறங்கி விட்டார் நாராயணன். 12 ஆண்டுகள் கடும் போராட்டம் நடந்தது. எந்த ஆயுதமும் சூரர்களை அழிக்காது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த நாராயணன். அவர்களுக்கு அருளும் நோக்கில் தன் சக்கராயுதத்தை ஏவினார். அது தாரகாசுரனின் மார்பில் பதக்கமாய் பதிந்தது. நாராயணன் தாரகனிடம், சூரனே ! நீ சிவனிடம் வரம் பெற்றதை நான் அறிந்தாலும், உனக்கு அருளும் நோக்கிலேயே சக்ராயுதத்தை பரிசாய் தந்தேன். நீ உன் இஷ்டம் போல் இந்த லோகத்தையும் உனதாக்கிக் கொள்ளலாம் என்றார். தாரகன் அவரிடம் இருந்து விடை பெற்றான். பின்னர் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகிய சகோதரர்கள் நந்திகேஸ்வரரின் அனுமதியுடன் சிவபெருமானைச் சந்தித்து ஆசி பெற்றனர். சகல அண்டங்களையும் வென்றது குறித்து கூறினர். சிவபெருமான் அவர்களை வாழ்த்தி, ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு தலைவரை நியமித்த பின்னர். அவற்றின் நடு நாயகமாக விளங்கும் ஓரிடத்தில் கோட்டை கட்டி ஆட்சி செய்ய அனுக்கிரஹம் செய்தார்.
மகா விஷ்ணுவிடம் தேவர்கள் ஓடினர். பரந்தாமா ! பரமசிவன் தான் அசுரர்களுக்கு வரங்களைத் தந்தார் என்றால் தாங்களும் தங்கள் சக்ராயுதத்தை அவர்களுக்கு வழங்கி விட்டீர்களே ! இது நியாயமா? நம்மை ஆபத்து சூழந்து கொண்டுள்ளதே ! என்றனர்.அவர்களிடம் பரந்தாமன், தேவர்களே முன்பொரு முறை பரமசிவனின் மாமனார் தட்சன் நடத்திய யாகத்திற்கு, அந்த லோகாதி பதியின் அனுமதியின்றிச் சென்றோம். அவன் கொடுத்த அவிர்பாகத்தை ஏற்றுக் கொண்டோம். அந்த பாவத்தின் பலன் உங்களை மட்டுமல்ல, என்னையும் சேர்ந்து கொண்டது. அதன் பலாபலனை இப்போது அனுபவிக்கிறோம். பரமேஸ்வரன் போட்டுள்ள இந்த முடிச்சை அவிழ்க்க அவரால் தான் இயலும். தவறு செய்த நாம் தண்டனையை அனுபவித்து தானே ஆக வேண்டும், என்றார். பரந்தாமனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தேவர்கள் தலை குனிந்தனர். ஒரு நிமிட நேரம் செய்த தவறுக்காக, 108 யுகங்கள் அசுரர்களின் கொடுமைக்கு ஆளாக நேர்ந்ததே என வருந்தினர்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
🙏வெற்றிவேலன் துதி
நீரகத்தேதனை நினையு மன்பினோர்
பேரகத் தலமரும் பிறவி நீத்திடும்
தாரகத் துருவமாந் தலைமையெய்திய
ஏரகத் தறுமுகன் அடிகள் ஏத்துவோம்.
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம்
நன்னெறி ஒழுகச் செய்து நவை அறு காட்சி நல்கி
என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி ஆண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி!
#கந்தபுராணம்
- .
ஸ்கந்த புராணம் - பகுதி 9
சூரனின் முடிசூட்டு விழா
===================
பரமேஸ்வரனை இரண்டாம் முறையாக சிவலோகத்திற்கே சென்று சந்தித்த சூரர்கள் வீரமகேந்திரபுரம் என்ற நகரத்தை ஸ்தாபித்தனர். பிரம்மா அவனுக்கு முடிசூட்டினார். விஷ்ணு முடிசூட்டு விழாவில் பங்கேற்றார். அவரை சூரபத்மன் வைகுண்டத்துக்கே அனுப்பி விட்டான். தேவர் தலைவரான இந்திரன், அசுரன் உமிழும் வெற்றிலை எச்சிலை பிடிக்கும் பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டான். வாயு சாமரம் வீசினான். பணப்பை இருந்த குபேரனின் கையில், அசுரனுக்கு எடுத்துக் கொடுக்க வேண்டிய பாக்குப்பை இருந்தது. வெண்கொற்றக்குடையை சூரிய சந்திரர்கள் பிடித்தனர். இப்படி தேவர்களெல்லாம் ஆளுக்கொரு வேலை செய்ய உத்தரவிட்டான்.
மகேந்திரபுரியை நிர்மாணித்த விஸ்வகர்மாவின் மகள் பத்மகோமளை. பேரழகியான இவளை பத்மாசுரன் திருமணம் செய்து கொண்டான். சந்திரனின் உதவியுடன் உலகிலுள்ள அழகிகளை மயக்கி, தன்னுடன் சேர்த்துக் கொண்டான். கணவன் அசுரனாயினும், அவன் மணம் கோணாமல் பதிபக்தி மிளிர அவனுடன் வாழ்ந்தாள் கோமளை. இவர்களுக்கு நான்கு மகன்கள் பிறந்தனர். பானுகோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என அவர்களுக்கு பெயர் சூட்டினர் அசுரதம்பதியர். பட்டத்தரசிக்கு நான்கு மக்கள் பிறந்தாலும், சூரன் பல இன கன்னிகைகளுடன் கூடினான். மூன்றாயிரம் மகன்கள் பிறந்தனர். இங்கே இப்படியிருக்கும் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் ஆசுரபுரி என்ற நகரை அழைத்துக் கொண்டான். அவன் எமனின் மகள் விபூதிகையை திருமணம் செய்தான். இன்னும் பல பெண்களை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றான்.
தாரகன் மாயாபுரி என்ற நகரை அமைத்தான். அவன் நிருதியின் மகளான சவுரிகை என்பவளைத் திருமணம் செய்ததுடன் மேலும் பல பெண்களையும் சேர்த்துக் கொண்டான். சவுரிகைக்கு அசுரேந்தின் என்ற மகன் பிறந்தான். சூரர்களுக்கு ஆட்டுமுகம் கொண்ட அஜாமுகி என்ற சகோதரி பிறந்தாளோ, அவள் தன் பங்குக்கு இந்த உலகைக் கெடுத்துக் கொண்டிருந்தாள். அழகுள்ளவனோ, அழகில்லாதவனோ யாராயிருந்தாலும் அவள் விரும்பி விட்டால் தன்னை அனுபவித்தாக வேண்டும் என கட்டளையிட்டாள். பல அந்தணர்கள், தேவர்கள் என எல்லோரையும் அனுபவித்தாள். ஒழுக்கம் என்ற சொல்லே அவளுக்கு தெரியாது. போதாக்குறைக்கு தன்னோடு பிறந்த அசுர சகோதரர்களுக்கு லோகத்திலுள்ள அழகான பெண்களை எல்லாம் பிடித்து வந்து இரையாக்கினாள். ஒரு நாள் கோபக்கார முனிவரான துர்வாசரை சந்தித்தாள்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
எந்த ஒரு விடையமும் நிறைவடையும் முன்பு அதன் தாக்கம் அதிகமாகும் விளக்கு கூட ஓங்கியே அனைகிறது அது போல் முருகன் மீதுள்ள கோபத்தை சூரபத்மன் தேவர்கள் மீது காட்ட ஏற்கனவே துன்பத்தில் வாழும் அவர்களால் இத்துயரை தாங்க இயலாது வேகமாக வந்து தம்மை காத்து இரச்சித்திடுமாறு முருகனை வேண்டுகின்றனர்
மூவர் முதல்வா ஓலம் மூக்கண்ணன் புதல்வா ஓலம் வடிவேலழகா ஓலம் சிறந்த சித்பரனே ஓலம் தேவர்கள் தேவை ஓலம் தெய்வநாயனே ஓலம் எம்மை காக்க வந்தவனே ஓலம் ஆறுமுகா ஓலம் ஓலம்
எழும் போதும்
வேலும் மயிலும்
என்பேன்..
தொழும் போதும்
வேலும் மயிலும்
என்பேன்...
தொழுதே உருகி
அழும் போதும்
வேலும் மயிலும்
என்பேன்...
அடியேன் உடலம்
விழும் போதும்
வேலும் மயிலும்
என்பேன்....
செந்தில் வேலவனே......
#முருகா_சரணம் *அருணகிரிநாதர் திருப்புகழ்*
*தலம்: கருவூர்*
*பாடல்*
#மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகிப்
#பதிவாகிச் சிவஞான பரயோகத்து அருள்வாயே
#நிதியே நித்தியமே என் நினைவே
நற் பொருள் ஆயோய்
#கதியே சொற்பர வேளே கருவூரிற் பெருமாளே.
*பொருள்*
அடியேன் பெற்ற பெருநிதியமே பெரும்பொருளே என் நினைவே கதியே சொல்லால் கூற இயலாத பரத்துவம் உடைய செவ்வேளே கருவூறிர் உறையும் முருகப்பெருமாளே
என்னை மதி நிறைந்த அறிவாளியாக்கி மனதால் உத்தமனாக்கி சிவஞானத்தை அளிக்க வேண்டுகிறேன்🙏🏻
ஸ்கந்த புராணம் - பகுதி 11
சிவனிடம் முறையிடல்
================
ஐயனே ! அசுரர்கள் எங்கள் பொருளை கொள்ளையடித்தனர். உலகங்களை ஆக்கிரமித்தனர். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தேவர்களில் பலர் சிறையில் கிடக்கின்றனர். வேதம் கற்ற அந்தணர்களை வாதாபி என்ற அசுரன், கொன்று குவிக்கிறான். நவக்கிரகங்களும் தங்கள் பணியைச் செய்வதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். ஆனால், இப்போது மாற்றான் மனைவி எனத் தெரிந்தும், இந்திராணியை அடைய விரும்புகிறான் பத்மாசுரன். இந்த கேவலத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கேவலத்தை தடுக்க இந்திரனின் மகன் ஜெயந்தன் முயன்றான். இப்போது அவனும் சிறையில் கிடக்கிறான். இனியும் தாங்கள் பொறுத்தால், தேவர் உலகமே இல்லாமல் போய்விடும், என்றனர்.
சிவபெருமான் இதெல்லாம் தெரியாதவரா என்ன?! இருந்தாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார். உலக மாந்தர் என்ன அட்டூழியம் செய்தாலும் பூமியும், வானமும் தாங்கும். ஆனால், விரும்பாத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தும் போது மட்டும் தாங்கவே செய்யாது. பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்படும் இடம் பூலோகமாயினும் சரி, ஏழுலகில் ஏதாயினும் சரி, அங்கே அழிவு துவங்கி விடும். அசுர உலகத்துக்கும் அழிவு துவங்கி விட்டது. சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். தேவர்களே ! கலக்கம் வேண்டாம். என் அனுமதியின்றி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டு, நீங்கள் செய்த பாவத்தின் பலனை இதுவரை அனுபவித்தீர்கள். இனி, நீங்கள் சுகமாக வாழலாம். அந்த சுகத்தை எனக்கு பிறக்கும் மகன் வடிவேலன் உங்களுக்கு தருவான், என்றார்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
நோய்வந்து நானும்
நொடிந்தேனும் போவேனோ?
தாய்தந்த வேல்கொண்ட
தகப்பன்சாமி துணையிருந்துமே?
தீயான வல்வினையால்
தீக்குணங்கள் கொள்வேனோ?
ஓயாது ஓம்முருகாவென
உரைத்தபின்னே ஓடாதோ?=பொய்யர்
வாயுரைத்த வசைச்சொல்லும்
வலுவிழக்கச் செய்திடுமோ?
வேயுறு வேலவனின்
விபூதியிருக்க விளைந்திடுமோ?
நாயினும் கீழ்பிறப்பாய்
நான்மீண்டும் பிறப்பேனோ?
ஆயினும் அப்போதும்
அழகனைதொழ மறப்பேனோ?!!!
நம் முன்னோர்கள் வைரஸ் போன்ற கிருமிகள் தாக்காமல் இருக்க திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடி குணமடைவார்களாம்.
தற்போதய புதிய வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால்,
ஒரு தம்ளர் ஆறிய நீரில் சிட்டிகை விபூதியை இட்டு, வலது கையால் மூடிக் கொண்டு இந்தப் பாடலை ஆறு முறை ஓதி, அந்த நீரை அருந்தினால் மேற்கண்ட அவதிகள் தீரும். எந்த வைரஸும் நெருங்காது. சகல ரோக நிவாரணியான அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல், திருத்தணித் தலத்தில் பாடப்பட்டது.
"இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத
தலைவலி சோகை யெழுகள மாலை
யிவையோடே பெருவயி றீளை
யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுள தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப
தாதி மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!"
தற்போதுள்ள சூழ்நிலைக்கு தினமும் இருவேளை ஓதி நீர் அருந்த நலம் பெறலாம்.
இயற்கையாகவே நீருக்கு ஒலி அலைகளை கிரகித்து வைக்கும் தன்மையைக் கண்டறிந்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டமாக இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் தான் நீருக்கு இப்படி ஒரு தன்மை இருக்கிறது என்று கண்டு பிடித்துள்ளனர் தற்போதைய விஞ்ஞானம்
இந்து மதத்தில் இல்லாதது வேறு எங்கும் இல்லை.
ஸ்கந்த புராணம் - பகுதி 12
கந்தன் திருஅவதாரம்
========
தேவர்கள் மகிழ்ந்து, ஐயனே! எங்களை வாழ வைக்கப் போகும் இளவல் வடிவேலன் எப்போது வருவார்? எனக் கேட்டனர். சிவன் அவர்கள் முன்னிலையிலேயே, பார்வதியை ஆசையுடன் பார்த்தார். அப்போது அவருடைய நெற்றியில் இருந்து அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அந்த அனலின் வேகத்தை தாங்க முடியாமல் தேவர்கள் ஓடினர்.
பார்வதி தேவியாலும் அந்த வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் எழுந்து ஓடினாள். சிவனின் நெற்றியிலிருந்து பறந்த நெருப்பு பொறிகள் ஜொலிக்கும் ஆறு நெருப்பு பந்துகளாக மாறின. அவற்றின் அருகே நெருங்க முடியாத தேவர்களை நோக்கி, தேவர்களே ! நீங்கள் உங்கள் கண்ணெதிரே பார்ப்பது வண்ண வடிவேலனின் நெருப்பு முகங்கள். அவன் ஆறுமுகம் கொண்டவனாக இருப்பான். இவனே உங்கள் வினை தீர்ப்பவன், என்றார். தேவர்கள் அந்த நெருப்பு பந்துகளை வணங்கினர். அதே நேரம் இந்நெருப்பு பந்துகளை தங்களுடன் எடுத்துச் செல்வது எப்படி என ஆலோசித்தனர்.
சிவபெருமான் அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு, தேவர்களே! கவலை வேண்டாம். இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் என் மகன் ஆறு குழந்தைகளாக வளர்வான். ஆமாம்... இவர்களை வளர்க்கும் பொறுப்பை யார் ஏற்கப் போகிறீர்கள் ? என்றார். அப்போது ரிஷிபத்தினிகள் ஆறு பேர் சிவபெருமான் முன் வந்து நின்றனர்.
தேவாதிதேவா ! அந்த குழந்தைகளுக்கு நாங்களே தாயாக இருந்து வளர்த்து வருவோம். எங்களிடம் ஒப்படையுங்கள், என்றனர். குழந்தைகளை வளர்க்க முன்வந்த கார்த்திகை பெண்களை சிவபெருமான் பாராட்டினார்.
அப்போது திருமால் அப்பெண்களிடம், தேவியரே ! நீங்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், என்றார். அவர்கள் சரவணப்பொய்கை சென்றனர். தாமரை மலர்களின் மீது குளிர்நிலவாய் காட்சியளித்தனர் குழந்தைகள். அவர்களை குளத்தில் இறங்கி வாரியெடுத்தனர் கார்த்திகை பெண்கள், அப்போது, அவர்களை அறியாமலே அவர்களின் தாய்மை நெஞ்சத்தில் பொங்கிச் சுரந்த பாலை ஊட்டினர். குழந்தைகள் படுசுட்டிகளாக இருந்தன. அவர்களின் விளையாட்டிற்கு அளவே இல்லை, சிறிது காலத்தில் அவர்கள் தத்தி தத்தி நடைபயில ஆரம்பித்தனர். தள்ளாடி விழுந்தனர் ஓடியாடி விளையாடினர். இதைப் பார்த்து தாய்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தது.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
'திருப்புகழ் தலங்கள்'
அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல்களில் மொத்தம் 209 திருமுருகன் தலங்கள்
எளிய மந்திரம்... அரிய பலன்...
முருகனுக்குரிய தமிழ் மந்திரமாக உள்ளது "வேலுமயிலும்'. இதனை "மகாமந்திரம்' என்று பாம்பன் சுவாமிகள் குறிப்பிடுகிறார். கந்தபுராணம் என்னும் கடலையே இந்த மந்திரம் தன்னுள் அடக்கியது என்பர். அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் "வேலு மயிலும்' மந்திரத்தை சூட்சுமமாகக் கூறுகிறார்.
"துங்க அனுகூல பார்வைத் தீர செம்பொன் மயில்' என்றும் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.
இந்தமந்திரத்தை "வேலும் மயிலும்' என்று ஜெபிக்காமல் ஆறெழுத்தாக "வேலுமயிலும்' என்றே ஜெபிக்க வேண்டும்முருகனின் வேலையும், மயிலையும் முன்னிறுத்தி "வேலும் மயிலும் துணை' என்று சொல்வோருக்கு மரணபயம் இருக்காது என்பது ஆன்றோர் வாக்கு.
குறிப்பாக, ஒரே சமயத்தில் பல விஷயத்தில் கவனம் வைக்கும் அஷ்டாவதானிகள், தசாவதானிகள் போன்றோர், தங்கள் அறிவு தடைபடாமல் இருக்க இந்த மந்திரத்தை ஜெபிப்பர் என வாரியார் கூறுகிறார். இதனையே ஆறெழுத்தாக "வேலுமயிலும்' என்றும் ஜெபிப்பதுண்டு.
. முருகன் இருக்கும் இடத்தில் வேலும், மயிலும் வீற்றிருக்கும். வேலை வணங்கினால் நம் தீவினை நீங்கும். மயிலை நினைத் தால் பயம் அகலும்.ஓம்' என்னும் பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்வது மயில். இதன் பார்வை பட்ட இடத்தில் நன்மை உண்டாகும்
.ஓம் சரவணபவ
வேலுமயிலும் உற்ற துணை
ஸ்கந்த புராணம் - பகுதி 13
நவசக்திகள் தோன்றல்
===============
இங்கே இப்படியிருக்க, சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினாள்.. ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டமல்ல, தன் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி விழும் அளவுக்கு ஓடினாள். அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியர் தோன்றினர். அவர்களுக்கு நவரத்தினங்களின் பெயரை சிவபெருமான் சூட்டினார். ரக்தவல்லி (சிவப்புக்கல்), தரளவல்லி (முத்து), பவுஷீவல்லி (புஷ்பராகம்), கோமேதக திலகா, வஜ்ரவல்லி (வைடூரியம்). மரகதவல்லி, பவளவல்லி, நீலவல்லி, வைரவல்லி ஆகிய அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்க்க. அவர்கள் வயிற்றில் கர்ப்பம் தரித்தது.
இதைப் பார்த்த பார்வதிதேவி கோபத்துடன். பெண்களே! நீங்கள் என் மணாளனை மயக்கும் விழிகளால் பார்த்து அவரது மனதைக் கெடுத்து கர்பமானீர்கள். இந்த கர்ப்பம் உங்கள் வயிற்றை விட்டு வெளியேற நீண்டகாலம் ஆகும். இதை சுமந்த படியே வாழ்ந்து வாருங்கள், என சாபம் கொடுத்தாள். அப்பெண்கள் கலங்கியழுதனர்.
சிவன் அவர்களிடம், பெண்களே! ஒரு ஆண்மகன் பிறபெண்களை உற்று நோக்கினால் என்ன தண்டனையோ, அதே தண்டனை பெண்ணினத்திற்கும் உண்டு, ஆண்கள் தங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்திருக்க பெண்ணினமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்வே உலகத்துக்கு உதாரணமாக அமையட்டும். இருப்பினும், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் என் தேவியராகி விட்டதால், உங்களை என் பக்தர்கள் நவகாளிகள் என்றழைப்பர். நீங்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வாருங்கள், என்று உத்தரவிட்டார். பத்துமாதம் கடந்தும் அவர்களுக்கு பிரசவிக்கவில்லை. கர்பத்தின் பாரம் தாங்காமல் அவர்களுக்கு வியர்வை கொட்டியது. அவை அவர்களின் உடலில் முத்துக்களாய் ஊறின (அம்மை). அந்த அம்மை முத்துக்கள் வெடித்து சிதறின. அவற்றில் இருந்து கத்தி, கேடயம், சூலம் ஆகிய ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் தோன்றினர். ஒன்றல்ல... இரண்டல்ல... லட்சம் வீரர்கள் அங்கே இருந்தனர். அந்த குழந்தைச் செல்வங்களைப் பார்த்து சிவன் மிகவும் சந்தோஷப்பட்டார்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
திருப்புகழ் 581
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார ...... வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு ...... மினிநீயே
ஆசை . கோபம் முதலான மாயைகள் மனிதனை ஓயாமல் வாட்டுவதால் பாவம் செய்கிற துர்க்குணம் உள்ளவனாக நான் இருந்தாலும் குருவே -- மாதாவும் பிதாவும் நீயே என உன்னை சரனடைகிறேன் ! .
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு ...... மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச ...... மருள்வாயே
நான்கு வேதங்கள் ஆகமங்கள் ஆதி நூல்களை நான் ஓதியதில்லை ; அப்படியே ஓதினாலும் ஞானம் உண்டாகாமல் வீனே நாள் போகிகிறது ! அப்படி வீனாகாமல் 36 தத்துவங்களையும் உள்வாங்கிய ஞானத்தை எனக்குள் விளைய வைப்பாயாக !
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக ...... அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை ...... வயலூரா
இறைவனின் தூதனே ! சேற்றில் ஒட்டாத தாமரை போல ப்ற்றற்று உலகம் உடைமைகள் மீதும் அதுபோல பாதாளம் ; பூமி உள்ளடக்கிய இந்த பிரபஞ்சம் உற்பத்தி செய்யப்பட்ட போது அதற்கு ஆதாரமாக இருந்த ஆதி கங்கை என்ற ஜலத்தின் மீதும் சூழ்ந்து தேவ ஆவியாய் அசைவாடிக்கொண்டிருப்பவனே !
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத ...... பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் ...... பெருமாளே.
ஞானத்தை உடையவனே ! பலவாய் விரவி ; பரவி அவைகளில் கலந்து இருப்பவனே ! ஜடங்கள் ; உயிரிணங்கள் அனைத்திற்கும் அதிபதியானவனே ! வீரனே ! கொடிய அசுரர்களை வெல்பவனே ! ஞானம் விளைந்த பக்தர்களை வழினடத்தும் இறைவனின் தூதனாகிய யுகபுருசனே !
ஸ்கந்த புராணம் - பகுதி 14
நவவீரர்கள்
=========
ஒருமுறை பார்வதிதேவி சந்தோஷமாக இருந்த போது, அந்த தேவியர் தங்களது சேவையை ஏற்று, சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டனர். இனியும் கர்ப்பம் தாங்கும் சக்தியில்லை என்று கதறினர். சிவபெருமான் பார்வதியிடம், தேவி ! இந்த உலகின் நன்மை கருதியே என் அம்சமான வடிவேலன் தோன்றினான். அவனுக்கு பக்க பலமாக இருக்க இந்த லட்சம் வீரர்களை உருவாக்கினேன். இவர்களை வழி நடத்திச் செல்ல சேனாதிபதிகள் வேண்டாமா ? அதற்காகத்தான் இவர்களைக் கர்ப்பமுறச் செய்தேன். இது என் திருவிளையாடல்களில் ஒன்று, அவர்களை தவறாகக் கருதாமல், உன் சாபத்தை நீக்கிக் கொள், என்றார். கருணைமிக்க அந்த அன்னையும், சாப விமோசனம் கொடுக்க வரிசையாக குழந்தைகள் பிறந்தனர்.
ரக்தவல்லி பெற்ற பிள்ளை வீரபாகு என பெயர் பெற்றான். தரளவல்லிக்கு வீரகேசரி, பவுஷீவல்லிக்கு வீர மகேந்திரன், கோமேதக திலகாவுக்கு வீரமகேஸ்வரன், வஜ்ரவல்லிக்கு வீரராக்ஷஸன், மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டன், பவளவல்லிக்கு வீராந்தகன், நீலவல்லிக்கு வீரதீரன், வைரவல்லிக்கு வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள், பின்னர் அவர்கள் தங்கள் தாய், தந்தையரை வணங்கி, பார்வதி தேவியின் கடாட்சமும் பெற்று பூரண சக்தியுள்ளவர்கள் ஆயினர். இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான். மற்ற சகோதரர்கள் வீர விளையாட்டுகளுக்கு சென்றால், அவர்களைக் கண்டதுமே போட்டியாளர்கள் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு ஓட ஆரம்பித்தனர்.
சிவன் அவர்களை ஆசிர்வதித்து, மக்களே! உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். என்னிடம் அருள்பெற்ற அவர்கள், எனக்கு பிடிக்காத செயல்களைச் செய்கின்றனர். அவர்களை வெற்றி கொண்டு, உலகில் நன்மை நடக்க நீங்கள் பாடுபட வேண்டும்.
சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன், வாருங்கள், நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம், என்றார். பார்வதிதேவியும் அகம் மகிழ்ந்து, தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச் சென்றாள். கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்த அவர்கள், தாங்கள் சென்ற காளை வாகனத்தில் இருந்து இறங்கினர். பார்வதிதேவி, ஆறுகுழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள், அப்போது அவள் மார்பில் சுரந்த பாலை முருகக்குழந்தைகள் குடித்து மகிழ்ந்தனர்.
அப்போது சிந்திய சில துளிகள் சரவணப்பொய்கையில் கலந்தன. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. குளத்தில் நீந்திய மீன்களில் பல முனிவர்களாக வடிவெடுத்தன. அவர்கள் பற்பல சாபங்களால் மீன்களாக மாறியிருந்தவர்கள். கந்தனுக்கு ஊட்டப்பட்ட பாலின் மகிமையால் அவர்கள் தங்கள் சுயரூபமடைந்து, கந்தக்குழந்தையை வாழ்த்தி விட்டுச் சென்றனர். இளமையில் மகான்களின் ஆசி கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இந்த ஆசி காலம் முழுமைக்கும் நன்மை தரும்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
முருகனை வணங்கி அவன் புகழ் பாடலாம்.
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
ஸ்கந்த புராணம் - பகுதி 15
கார்த்திகேயன் பெயர்க்காரணம்
========================
பார்வதிதேவி தன் மகனை வளர்த்த கார்த்திகை தேவியரை அழைத்தாள். அன்னையரே! தாங்கள் என் மகனை என்னிடமே ஒப்படைத்து விட வேண்டும். இனி அவனை நான் சிவலோகத்தில் வளர்ப்பேன். அவனுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்த தங்களுக்கு நன்றி, என்றாள். கார்த்திகை பெண்களுக்கு கண்ணீர் முட்டியது. பெற்றவள் குழந்தையைக் கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா ? ஆனாலும், தங்கள் ஸ்தனங்களில் இருந்து பாலூட்டியதால் வடிவேலனுடன் ஏற்பட்ட பாசப்பிணைப்பு அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. சிவபெருமான் அப்பெண்களைத் தேற்றினார். மங்கையரே ! பற்றும் பாசமும் தற்காலிகமானவை. அவற்றை உதறி விட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். ஆயினும், உங்கள் பெருமையை இந்த உலகம் அறிய வேண்டும். கார்த்திகை பெண்களான உங்களால் இந்த குழந்தை உங்கள் பெயரால் கார்த்திகேயன் எனப்படுவான். நீங்கள் ஆறுபேரும் ஒருங்கிணைந்து ஒரு நட்சத்திரமாக வானில் ஜொலிப்பீர்கள். உங்கள் திருநட்சத்திர நாளில் கந்தனை வணங்குவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப் பெறுவர். அவர்கள் ஒன்றாய் இணைந்து நட்சத்திரமாய் மாறி, விண்ணில் ஜொலிக்கத் துவங்கினர். பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயமலை வந்தார் சிவபெருமான். பார்வதிதேவி தன்மகனைக் கொஞ்சி மகிழ்ந்தாள்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
வியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, கந்தனின் உன்னதமான 16 பெயர்களைக் கூறி, அதற்கு பலஸ்ருதியும் கூறுகிறார்.
"ஸுப்ரமண்யம் ப்ரணமாம்யஹம்
ஸர்வக்ஞம் ஸர்வகம் ஸதா
அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம்
நாம ஷோடஸ ப்ரதமோ ஞான சக்த்யாத்மா
த்விதியோ ஸ்கந்த ஏவச
அக்னிபூஸ்ச த்ருதீயஸ்யாத்
பாஹுலேய: சதுர்த்தக:
காங்கேய: பஞ்சமோ வித்யாத்
ஷஷ்ட: சரவணோத்பவ:
ஸப்தம: கார்த்திகேய: ஸ்யாத்
குமாரஸ்யாத் அத அஷ்டக:
நவம: ஷண்முகஸ்சைவ
தஸம: குக்குடத்வஜ:
ஏகாதச: சக்திதர:
குஹோ த்வாதச ஏவச
த்ரயோதஸோ ப்ரம்மசாரி
ஷாண்மாதுர: சதுர்தச:
க்ரௌஞ்சபித் பஞ்சதசக:
ஷோடஸ: சிகிவாஹன:'
முருகனின் 16 நாமங்களைக் கூறுவதற்கு முன்பும் பின்பும் பலஸ்ருதி கூறுகிறார்.
கோரிய பொருட்களை அடைவதற்காக, எல்லாம் அறிந்தவனும் எங்கும் உள்ளவனுமான சுப்ரமண்யனை நமஸ்கரித்து முருகனின் 16 நாமங்களைக் கூறுகிறேன்.
1. ஞானசக்த்யாத்மா- ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக இருப்பவன்.
2. ஸ்கந்தன்- சத்ருக்களை அழிப்பவன்; (ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக- பற்றுக்கோடாக இருப்பவன்; சிவஜோதியாக வெளிப்பட்டவன்.
3. அக்னி பூ- அக்னியில் உண்டானவன்; அக்னியால் ஏந்தப்பட்டவன்;அக்னி ஜோதியாக எழுந்தவன்.
4. பாஹுலேயன்- வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன்.
5. காங்கேயன்- கங்கை நதியில் உண்டானவன்.
6. சரவணோத்பவன்- நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின் மறுவுருவம் சரவண மடுவாம்- அதனில் தோன்றியவன்).
7. கார்த்திகேயன்- கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன்.
8. குமாரன்- குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்) இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்; மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்; அஞ்ஞானம் அழித்து ஞானம் ஈபவன்.
9. ஷண்முகன்- ஆறு முகம் உடைய வன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன்.
(அருணகிரியின் திருப்புகழ் பாடல் களைப் படித்தால் இது உண்மையென்று விளங்கும்).
10. குக்குடத்வஜன்- கோழியைக் கொடி யாகக் கொண்டவன்; சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத் திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது.
11. சக்திதரன்- வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு ஆயுதமாயினர்).
12. குஹன்- பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக குஹன், அதிகார குஹன் என்பர்.
(லய குஹன்- உயிரை ஒழிவில் ஒடுக்கி "ஒழிவில் ஒடுக்கம்' என்ற பதவி தருபவன்.
யோக குஹன்- ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன்.
அதிகார குஹன்- பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.)
13. ப்ரம்மசாரி- வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன்.
14. ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக உடையவன்.
15. க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்; அஞ்ஞானம் என்கிற மலையை- இருளை ஞானம் என்கிற வாளால் தகர்ப்பவன்.
16. சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம் முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான்.
மேலும் இந்த 16 நாமங்களை உச்சரிப்பதால் வரும் பலன்களை வியாசர் கூறுகிறார்.
"ஏதத் ஷோடஸ நாமானி
ஜபேத் ஸம்யக் ஸதாதரம்
விவாஹே துர்கமே மார்கே
துர்ஜயே சததைவ ச
கவித்வே ச மஹாஸாஸ்த்ரே
விக்ஞானார்த்தி பலம் லபேத்
கன்யார்த்தி லபதே கன்யாம்
ஜயார்த்தி லபதே ஜயம்
புத்ரார்த்தி புத்ரலாபம் ச
தனார்த்தி லபதே தனம்
ஆயு: ஆரோக்ய வஸ்யம் ச
தன தான்ய ஸுகாவஹம்'
அன்புடன் எப்போதும் இந்த 16 நாமங்களை ஜெபித்தால், திருமணத்திலும், செல்ல முடியாத வழியில் செல்லும்போதும், வெல்ல முடியாத கடினமான காரியத்திலும், கவிஞன் ஆவதிலும், மகத்தான உயர்ந்த சாஸ்திரங்களிலும் வேண்டிய பலனை அடையலாம். கன்னிகை வேண்டுபவன் கன்னிகையையும்; வெற்றியை வேண்டுபவன் வெற்றியையும்; பிள்ளைப் பேறு வேண்டுபவன் புத்திரர்களையும்; பொருள், தனம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், யாவரையும் வசீகரிக்கும் தன்மை, பொருள், தான்யம், சுகம், யாவும் பெற்று இன்புறுவான்..
பிரம்ம- நாரத சம்வாதமாக சுப்ரமண்ய ஸஹஸ்ர (1,000) நாமங்களுக்கு பலஸ்ருதி யாது கூறப்படுகிறது?
"இதிதாம்னாம் ஸஹஸ்ராணி
ஷண்முகஸ்ய ச நாரத
ய: படேத் ஸ்ருணுயாத் வாபி
பக்தி யுக்தேன சேதஸா
ஸஸத்யோ முச்யதே பாபை:
மனோ வாக்காய ஸம்பவை:
ஆயுர் வ்ருத்திகாம் பும்ஸாம்
ஸ்தைர்ய வீர்ய விவர்தனம்
வாக்யேன ஏகேன வக்ஷ்யாமி
வாஞ்சிதார்த்தம் ப்ரயச்சதி
தஸ்மாத் ஸர்வ ஆத்மனா ப்ரம்மன்
நியமேன ஜபத் ஸுதி:'
அன்புடன் இந்த 1,000 பேர்களைப் படித் தாலோ கேட்டாலோ மனம், வாக்கு இவற்றால் உண்டான பாவங்கள் அழியும். வாழ்நாள் அதிகரிக்கும். உடல் பலம் அதிகரிக்கும். ஒரு நாமம் சொன்னாலும் கேட்ட பொருள் அடைய லாம். ஆக, யாவரும் நியமத்துடன் இதனை ஜெபம் செய்ய வேண்டும்.
16 நாமங்கள் சொல்வதன் பலன், 1,000 நாமங்கள் சொல்வதைவிட அதிகமாக உள்ளதே! ஆக 16 நாமங்களே மிக உன்னதம் போலும்
No comments:
Post a Comment