Friday, March 20, 2020

மகாபாரதம்

ராதே கிருஷ்ணா 21-03-2020



Radhe Krishna 20-03-2020



அன்புள்ள நண்பர்களே!
வணக்கம் பல..

மகாபாரதம்-21/2/2020
~~~~~~~~~
முன்னுரை-1

★பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதக் கதைகளை,
மனித வாழ்வின் உயரிய தத்துவங்களான அறம், பொருள், இன்பம், வீடுபேறு போன்ற அனைத்து தத்துவங்களையும் உள்ளடக்கிய உலகின் நீண்ட இதிகாசமான மகாபாரதத்தை
உங்களுக்காக வாட்ஸ்அப் மூலமாக பதிய உள்ளேன்.

★ இந்திய பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம். மகாபாரதம், உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகும்.

★ நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களில் ஒன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே.

 பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் இதிகாச காப்பியமாகும்.

★ மனித வாழ்க்கையில் ஒருவன் எவ்வாறு அறநெறி மற்றும் ஒழுக்கத்தோடு வாழும் முறையை பற்றி கூறுவதே இக்கதையின் நோக்கமாகும். மேலும் மனிதன் எந்த நேரத்திலும் தருமத்தின் வழித் தவறாது நடக்க வேண்டும் என்பதை பற்றியும் கூறுகிறது. அதனால் இக்காவியம் பாரத மகா காவியம் என்றும் கூறப்படுகிறது.

★ வெறும் கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஒன்றிரண்டு மாத காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வாசித்துவிட முடியும். ஆனால் அதிலுள்ள கவித்துவ அழகு, அறச்சிந்தனைகள், பண்பாட்டு சிந்தனைகள் ஆகியவற்றை ஆழ்ந்து படிப்பதற்கு நம்முடைய வாழ்நாள் போதாது.

★ ஆசான்களை அவமதித்தல், பெண்மையை சூறையாடுதல், வினை விதைப்பவனின் விதி பயன், தீய இடத்தில் இருந்தும் நற்குணம் கொண்டவனின் கதி என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் என்ன செயல் செய்தால், அவனுக்கு என்ன பலன் விளைவிக்கப்படும் என வாழ்வியலில் புரிதல் ஏற்பட, நம் மண்ணில் நிகழ்ந்தேறிய மாபெரும் இதிகாசம்.

★ மகாபாரதம், பல தரும நெறிகளை நமக்கு உணர்த்துகின்றது. தருமத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். பல சந்தர்ப்பங்களில் தரும சங்கடங்கள் தோன்றி நம்மை நெறிதவற வைக்கப் பார்க்கும். அத்தகைய தருமசங்கடங்கள் விளையும்போது தீங்கைச் சிறிதும் எண்ணாது தர்மத்தைக் கடைப்பிடித்துப் பண்பால் உயர்ந்து விளங்க வேன்டும் என்பதை மகாபாரதம் பல இடங்களிலும் எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டுகின்றது.

★ குருக்ஷேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அஸ்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது.

★பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் படிக்க உங்களுக்காக வாட்ஸ்அப் மூலமாக இனி தினந்தோரும் பதிய எண்ணியுள்ளேன்.

★மனித வாழ்வின் உயரிய தத்துவங்களான அறம், பொருள், இன்பம், வீடுபேறு போன்ற அனைத்து தத்துவங்களையும் உள்ளடக்கிய உலகின் மிக நீண்ட கதைகளில் ஒன்றான இந்த இதிகாசத்தை நீங்களும் படித்து பயன் பெற வேண்டும்.

★மிக எளிய நடையில் எழுதுவதால் உங்கள் வீட்டு குழந்தைகளும் படிக்கலாம். அல்லது நீங்கள் அவர்களுக்கு கதைகள் கூறலாம்.

★நன்றிcourtsy subbaraj rao salem
-சுபராஜ்


மகாபாரதம்-22/2/2020
~~~~~~~~~~~~~~~~

முன்னுரை - 2

 ★ மகான் ஶ்ரீ வேத வியாசர் சொல்ல முழுமுதற்க்கடவுள் ஶ்ரீ விநாயகரால் எழுதப்பட்ட மகாபாரதத்தை,

★மூதறிஞர் ஶ்ரீ இராஜாஜி அவர்கள் "வியாசர் விருந்து" என்ற பெயரில் எழுதிய மகாபாரதத்தை

★'விஷ்ணு ஸஹஸ்ரநாமம்' மற்றும் 'பகவத்கீதை' ஆகியவற்றை நமக்கருளிய மகாபாரதத்தை

★உலகில் உள்ள எல்லா நல்ல செயல்களும் எல்லா கெட்ட செயல்களும் ஒருங்கிணைந்த மகாபாரதத்தை

★பாரதத்தின் அநேக ஆன்றோர்களாளும் பெரியோர்களாளும் எழுதப்பட்ட மகாபாரதத்தை

★இந்திய மொழிகள் அனைத்திலும் எழுதப்பட்ட மகாபாரதக் கதையினை

★நானும் எனது சிற்றறிவுக்கு ஏற்றதுபோல் எளிய தமிழில் பதிவிட உள்ளேன். குற்றம் குறைகள் இருப்பின் தெரிவித்தால் திருத்திக் கொள்கிறேன். ஏதேனும் பகுதி விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.சேர்த்து விடலாம்.

★எழுத தூண்டிய உள்ளங்களுக்கும் எழுதவும் குறிப்புகளை சரிபார்க்கவும் உதவிய அநேக மகாபாரதப் புத்தக பதிப்புகளுக்கும் நன்றி.

மகாபாரதம்- 23/2/2020
~~~~~~~~~~~~~~~~

வியாசர் பிறந்த கதை!

 ★ வேத வியாசர் தான் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர். இவர் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் கொள்ளுத்தாத்தா ஆவார். அத்தகைய சிறப்புகள் பெற்ற மகாபாரதத்தை உருவாக்கிய வேத வியாசர், பராசர மகரிஷிக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் பிறந்த கதையைப் பற்றி கீழே காண்போம்.

★ இவருடைய தந்தை பராசர மகரிஷி. இவர் தான் முதல் புராணமான விஷ்ணு புராணத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு முறை, யமுனை நதியின் அருகே பயணித்துக் கொண்டிருந்த போது, நதியை கடக்க தன் மரப்படகில் பயனாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்த மீனவ குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கண்டார். அந்த பெண்ணால் பராசர மகரிஷி முனிவர் ஈர்க்கப்பட்டார். அந்த பெண்ணின் அருகே சென்ற அவர், தன்னை அக்கரைக்கு அழைத்து செல்ல சொன்னார். இருவரும் மரப்படகில் அக்கரைக்குச் செல்லும் வழியில் பராசர மகரிஷி, அவள்மீது தான் கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்தினார். அந்தப் பெண்ணின் பெயர் சத்யவதி. 

★அவருடைய விருப்பத்திற்க்கு சத்யவதி முதலில் தயங்கினாலும், பராசர மகரிஷியின் தொடர் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி, என்னுடைய நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்தால் நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன் என்றாள் சத்யவதி. பராசர மகரிஷி, என்ன நிபந்தனை கூறு என்று கேட்டார்.

★சத்யவதி சொன்ன முதல் நிபந்தனையாவது, நம் இருவரையும் யாரும் காணக் கூடாது என்றாள்.

★ இரண்டாவது நிபந்தனையாவது, அவள் உடலில் இருந்து மீன் நாற்றம் வாசனையாக மாற வேண்டும் என்றும், நான் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றினாலும், நான் கற்புள்ளவளாகவே இருக்க வேண்டும் என்றாள். சத்யவதி கேட்ட வரத்தை பராசர மகரிஷி வழங்கினார்.

★ மூன்றாவது நிபந்தனையாக, தன் குழந்தை அறிவாளியாகவும், நன்கு படித்தவனாகவும், மீனவனாக இல்லாமல் ஒரு முனிவனாக இருக்க வேண்டும் என்ற வரத்தையும் கேட்டாள். 

★ இந்த நிபந்தனைக்களுக்கு தலையசைத்த முனிவர், ததாஸ்து என கூறினார். சத்யவதி விதித்த நிபந்தனைகளின்படி நடந்து கொண்டார். பின்னர் இருவரும் அன்றைய தினம் ஒரு தீவில் இல்வாழ்க்கை நடந்தினர். அன்றைய தினமே சத்யவதி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவர்தான் பின்னர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். 

★வேத வியாசர் கருமை நிறத்தில் இருந்ததால், கிருஷ்ணா என்ற பெயரை பெற்றார். மேலும் ஒரு தீவில் பிறந்ததால் அவருக்கு த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. அதனால் வியாசா என்ற சிறுவனின் முழுப்பெயர், கிருஷ்ண த்வைபாயனர் வேத வியாசர் என்றானது. 

★இதுவே மகாபாரதம் என்னும் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கிய வேத வியாசர் பிறப்பின் கதை ஆகும்.(தொடரும்) Courtsy subburaj rao salem

மகாபாரதம் - 24/2/2020
~~~~~~~~~~~~~~~~~

மகாபாரதத்தை எழுதிய விநாயகர்...!

★மகாபாரதம் என்னும் இதிகாசத்தினை உலகத்திற்கு அளித்தவர் வியாசர் ஆவார். மகாபாரதம் என்பது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்கின்ற வேதங்களையும் அடுத்து விளக்கக் கூடிய ஐந்தாவது வேதமாக அனைவராலும் போற்றப்படுகின்ற அளவிற்கு இயற்றப்பட்டது ஆகும்.

★இதில் மனித வாழ்க்கையில் ஏற்படக் கூடிய அனைத்து விஷயங்களையும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூறிய பெருமை வியாசருக்கு உண்டு. இதனை நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என எண்ணம் கொண்டார் வியாசர். பிறகு வியாசர் தாம் சொல்லச் சொல்ல இதனை யாரைக் கொண்டு எழுதச் செய்வது என்கிற எண்ணம் தோன்றியது. அப்பொழுது வியாசருக்கு மனதில் தோன்றியவர் பிரம்ம தேவன்.

★ வியாசர் பிரம்ம தேவனை வைத்து மகாபாரதத்தை எழுதலாம் என நினைத்து பிரம்மனை மனமுருக வழிபட்டார். வியாசரின் வழிப்பாட்டினால் பிரம்மரும் அவர் முன் தோன்றினார். வியாசர் தன் எண்ணத்தினை பிரம்ம தேவரிடம் கூறினார்.

★ பிரம்மர் வியாச முனிவரிடம், நீங்கள் கணபதியை வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணம் ஈடேறத் துணைபுரிவார் எனக்கூறி மறைந்தார். அதன் பின் வியாச முனிவர் கணபதியை மனமுருக வேண்டினார். 

★கணபதி வியாசர் முன்பு தோன்றினார். வியாசர் தன் மனதில் இருக்கும் எண்ணத்தினை விநாயகரிடம் கூறினார். கணபதியும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் கணபதி ஒரு நிபந்தனையை விதித்தார். முனிவரே! பாரதத்தை நீங்கள் தங்குதடையில்லாமல் சொல்ல வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இடையில் நிறுத்தக் கூடாது என்றார். வியாசரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

★ பிறகு வியாசரும், ஒரு நிபந்தனையை விதித்தார். பெருமானே! தாங்களும், ஒரு விநாடி கூட நிறுத்தாமல் எழுத வேண்டும் என்றார். விநாயகரும் இதற்கு சம்மதித்தார். அதாவது தாம் சொல்லுகின்ற பாடலின் கருத்தின் பொருளை உணர்ந்தபடியே எழுதுதல் வேண்டும் என்பதாகும். இதற்கு விநாயகப்
பெருமானும் சம்மதம் அளித்தார்.

★ஒரு நன்னாளில், விநாயகப் பெருமானை முறைப்படி 
பூஜித்து வணங்கி, பாரதக் கதையைக் கூறத் துவங்கினார் வியாசர். வியாசர் பாடலாகச் சொல்ல, கணபதி பொருளினை யோசித்து யோசித்து எழுதத் துவங்கினார். வெள்ளம் போல் வியாசர் சொல்லிக் கொண்டிருக்க, அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதினார், கணபதி. ஒரு கட்டத்தில், விநாயகரின் எழுத்தாணியின் கூர் மழுங்கிப் போனது. உடனடியாக தனது வலக் கொம்பை (தந்தம்) ஒடித்து அதையே எழுத்தாணியாக உபயோகித்து, மகாபாரதத்தை எழுதி முடித்தார்.

★இவ்வாறு மகாபாரதக் காவியம் உருவானது. இதனை தமது புத்திரரான சுகருக்கு வியாசர் கற்றுக் கொடுத்தார். நாரதர் மகாபாரத்தினை கற்று தேவர்களுக்கு தெரியப்படுத்தினார். இவ்வாறு மகாபாரதம் மனிதர்கள் இடையில் சென்று அடைந்தது.


மகாபாரதம் - 25/2/2020
~~~~~~~~~~~~~~~~~

★சிறு அறிமுகம் 1

மகாபாரதத்தில் பாண்டவர்கள் :

★தருமர் :

தருமர், பாண்டுவிற்கும், குந்திக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர் ஆவார். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலமாகப் பிறந்தவர். தருமர், குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராக இருந்தவர். இவர் அஸ்தினாபுரத்தின் அரசர். இவர் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்.

★பீமன் :

பீமன், பாண்டுவிற்கும், குந்திக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். இவர், வாயு பகவானுக்கும், குந்திக்கும் பிறந்தவர். பீமன் மிகுந்த வலிமையுடையவர். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

★அர்ஜூனன் :

அர்ஜூனன், பாண்டுவிற்கும், குந்திக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர். கிருஷ்ணரின் நண்பன். அர்ஜூனன், வில் வித்தையில் சிறந்தவர். இவர், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன் ஆவார்.

★நகுலன் :

நகுலன், பாண்டுவிற்கும், பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாகப் பிறந்தவர். நகுலன் மிகவும் அழகான தோற்றம் உடையவர். வாள் வீச்சில் சிறந்தவர். நகுலனும், சகாதேவனும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள்.

★சகாதேவன் :

சகாதேவன், பாண்டுவிற்கும், பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் மகனாகப் பிறந்தவர். பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். இவர் மிகுந்த புத்திக்கூர்மை உடையவர். நடக்கவிருக்கும் செயல்களை முன் கூட்டியே அறியும் ஞானம் படைத்தவர். சகாதேவன், வாள் வீச்சில் நகுலனைப் போலச் சிறந்தவர். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.

மகாபாரதத்தில் கௌரவர்கள் :

★மகாபாரதத்தில் கௌரவர்களின் பிறப்பு என்பது திருதராஷ்டிரனுக்கும், காந்தார நாட்டு இளவரசியான காந்தாரிக்கும் பிறந்த நூறு மகன்கள் கௌரவர்கள் எனப்படுவர்.

★மகாபாரதத்தில் கௌரவர்களில் முதல் மகனான துரியோதனன், பேராசையும், பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான். அவனை அடுத்து பிறந்த துச்சாதனன் தீமையில் துரியோதனனை விட கொடுமையானவன். கௌரவர்கள் அனைவரும் செல்வ செழிப்போடு பிடிவாத குணம் கொண்டவர்களாக வளர்ந்தனர்.

★இன்னும் ஏராளமான வீரர்கள கதை நெடுகிலும் உள்ளார்கள். அவர்களைப் பற்றி போகப்போக பார்க்கலாம்.


நாளை.....

மகாபாரதம் - 26/2/2020
~~~~~~~~~~~~~~~~~
006

சிறு அறிமுகம் 2

கதையைப்பற்றி...

★மகாபாரதம் படிக்க படிக்க படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு இதிகாசம் ஆகும்.

★ பிதாமகர் பீஷ்மர், துரோனர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமா, விதுரன், சல்லியன், துருபதன், ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு போன்ற ஏராளமான மகாரதிகளை கொண்டது மகாபாரதம்.

★மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையைப் போதித்து வாழ்க்கையின் யதார்த்த நிலையை சுட்டிக்காட்டுகிறார். 

★மேலும் மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள நல்ல குணங்கள் எது? மற்றும் தீய குணங்கள் எது? என்பதை கதாப்பாத்திரங்கள் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

★தீயவர்களின் சூழ்ச்சியில் சிக்கி நாட்டை இழந்தாலும், பின் முயன்று நாட்டை மீட்டெடுப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. தனக்கு உண்டான உரிமையைப் பெற எவ்வாறெல்லாம் பாண்டவர்கள் போராடுகிறார்கள் என்பது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்.

★துன்பம் வரும் சமயங்களில் கிருஷ்ணா என்று அழைத்தால் நம் துன்பத்தைப் போக்க பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஓடி வருவார் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். அதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் திரௌபதி பகவான் கிருஷ்ணர் மேல் கொண்ட பக்தியினால், திரௌபதி கோவிந்தா என அழைத்தவுடன் கிருஷ்ணர் அவள் முன் தோன்றி அளித்த காட்சி மனதை நெகிழ வைக்கும். 

★ சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி படிக்கும் இதிகாசம் என்றால் அது மகாபாரதம் தான் என்றால் மிகையாகாது.

இனி நாளை முதல் மகாபாரதத்திற்குள் செல்வோம்..

மகாபாரதம் - 27/2/2020
~~~~~~~~~~~~~~~~~
007

கங்காதேவி...!

★ இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த மன்னன் மகாபிஷக். மகாபிஷக் உலகை நல்லாட்சியுடன் ஆண்டு வந்தான். மகாபிஷக் செய்த புண்ணியச் செயல்களால், மகாபிஷக் இறந்ததும் தேவலோகம் அடைந்தான். மகாபிஷக் தேவர்களுடன் சேர்ந்து, பிரம்ம தேவரை வணங்கச் சென்றான். அப்பொழுது கங்கை நதி, கங்காதேவி வடிவில் அங்கு காட்சி அளித்தாள். 

★ மகாபிஷக், கங்கா தேவியின் அழகைக் கண்டு மோக வயப்பட்டான். மோகவயப்பட்ட மகாபிஷக், கங்கா தேவியை சற்றும் நாணமில்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். இதை பார்த்துக் கொண்டிருந்த பிரம்மன், மகாபிஷக் மீது கடும் கோபம் கொண்டான்.

★ தேவலோகத்தில் இருந்த மகாபிஷக்கை பார்த்து, 
நீ பூவுலகில் மனிதனாகப் பிறந்து, கங்காதேவியால் விரும்பத்தகாத செயல்களை சிலவற்றை சந்தித்து, துன்பமடைந்து சில வருடங்கள் கழித்து, நல்லுலகை அடைவாயாக என சபித்தார். அதன்பின் மகாபிஷக், பூவுலகில் பிரதீப மன்னனின் மகனாகப் பிறக்க நேர்ந்தது. பிரம்மதேவர் அவையில் தன்னை பார்த்த மகாபிஷக்கையும் பிரம்மதேவனின் சாபத்தையும் பற்றி நினைத்துக் கொண்டு திரும்பி வரும்போது கங்காதேவி அஷ்ட வசுக்களை சந்தித்தாள்.

★ அஷ்ட வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் ஆவர். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும். அவர்கள் மனக்கவலையில் இருப்பதைக் கண்ட கங்காதேவி, தங்களின் மனக்கவலைக்கான காரணம் என்னவென்று கேட்டாள். அவர்கள் கங்காதேவியிடம், தேவி! வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க வேண்டும் என்று சபித்து விட்டார். 

★ இது தான் எங்களின் கவலைக்கான காரணம். தாங்கள், எங்களுக்கு 
பூமியில் தாயாகி, எங்களை பெற்றெடுக்க வேண்டும் என வேண்டினர். அதற்கு கங்கா தேவி, உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார். ஆனால், அதற்கு நீங்கள் தந்தையாக விரும்புபவர் யார்? என கங்காதேவி கேட்டாள். தேவி! மண்ணுலகில் பிரதீப மன்னன் என்பவன் புகழுடன் திகழ்கிறான். அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறக்க போகிறான். அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம் என்றனர் வசுக்கள். இதைக்கேட்டு கங்காதேவியும் மகிழ்ச்சி அடைந்தாள். பிறகு வசுக்கள் வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் இருக்கக் கூடாது. அதனால் நாங்கள் பிறந்தவுடன் தண்ணீரில் எறிந்து, எங்களின் ஆயுளை முடித்து விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். 

★அப்பொழுது கங்காதேவி, உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை உள்ளது.
அதாவது, புத்திரப்பேறு கருதி, ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு, மற்றவர்களை நீங்கள் சொல்வது போல செய்கிறேன் என உறுதி கூறினாள், கங்கா தேவி. அதன்பின் வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். 

★பிரம்ம தேவனின் சாபப்படி, பிரதீபனின் மனைவிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு சந்தனு என்று பெயர் 
சூட்டினர். சந்தனு, இளமைபருவத்தை அடைந்தான். அனைத்துக் கலைகளையும் கற்று வல்லவனாகத் திகழ்ந்தான்.

நாளை.......

மகாபாரதம் - 28/2/2020
~~~~~~~~~~~~~~~~~
008

கங்காதேவி-சந்தனு திருமணமும் 
நிபந்தனையும்....


★ பிறகு சில நாட்கள் கழித்து பிரதீப மன்னன், தன் மகனான சந்தனுவிற்கு முடி 
சூட்டி நாட்டிற்கு அரசனாக்கிவிட்டு, காட்டுக்கு தவம் மேற்கொள்ளச் சென்றுவிட்டான். சந்தனுவிற்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஒருநாள் சந்தனு, காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கும்பொழுது, கங்கைநதிக்கரையில் ஒரு அழகிய பெண் வருவதைப் பார்த்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். பார்த்த நொடியில் இருவரும் காதல் கொண்டனர்.

★ பிறகு சந்தனு அப்பெண்ணை பார்த்து, பெண்ணே! உன்னைப் போன்ற அழகுடைய கன்னியை நான் இதுவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றான். மேலும் அப்பெண்ணிடம் சந்தனு, நான் இந்த 
பூவுலகில் மிகச்சிறந்த அரசன். உன்னை மணந்து கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது. ஆகையால் நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று தயங்கியபடி கேட்டான். 

★சந்தனு கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அப்பெண் (கங்காதேவி) வெட்கப்பட்டு தலை குனிந்தபடி மௌனமாக நின்று கொண்டிருந்தாள். கங்காதேவியின் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை உணர்ந்த சந்தனு, பெண்ணே! உன் மவுனத்தைக் கலைத்து நேரடியாக பதில் சொல், என்றான்.

★ அப்பெண் (கங்காதேவி) சந்தனுவிடம், மன்னா! உங்களைத் திருமணம் செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அதற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்றாள். என்னுடைய நிபந்தனைகளுக்கு நீங்கள் சம்மதித்தால், நம் இருவருக்குமான திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றாள். கங்கா தேவியின் அழகில் மயங்கிய சந்தனு, கங்காதேவி விதித்த நிபந்தனைகளை கேட்டான். மன்னா! என்னைப் பற்றி தாங்கள் எதுவும் கேட்க கூடாது. நான் என்ன செய்தாலும் நீங்கள் என்னைக் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. நான் உங்களின் மனம் கஷ்டப்படும்படி நடந்து கொண்டாலும், என்னிடம் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. உலகமே வெறுக்கும் காரியத்தைச் செய்தாலும், ஏன் இப்படி செய்தாய்? என்று கேள்வி கேட்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தாள்.

★இந்த நிபந்தனைகளை கேட்ட சந்தனு மன்னனுக்கு, கங்காதேவி கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் இருந்தது. ஆனால் கங்காதேவியின் மேல் கொண்ட ஆசையினால், அந்த நிபந்தனைகளுக்கு சரியென்று சம்மதம் தெரிவித்தான். அதன்பிறகு ஒரு நன்னாளில் சந்தனுவிற்கும், கங்காதேவிக்கும் திருமணம் நடந்தது. சந்தனு, கங்காதேவியிடம் இன்பமாக வாழ்ந்து வந்தான். பல ஆண்டுகள் கழித்து, கங்காதேவி! ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். பெற்றெடுத்த உடனே, அக்குழந்தையை கங்கையில் வீசினாள். அதைக் கண்டு மன்னன் அதிர்ச்சியடைந்தான். அப்போதுதான் திருமணத்திற்கு முன் கங்காதேவி விதித்த நிபந்தனைகள் சந்தனுவிற்கு நினைவுக்கு வந்தது. அதனால் ஏதும் பேசாமல் 
சூழ்நிலைக் கைதியாக இருந்தான். இதேப்போல் தொடர்ந்து ஏழு குழந்தைகளை கங்கா தேவி, கங்கையில் வீசினாள்.

நாளை.


மகாபாரதம் - 29/2/2020
~~~~~~~~~~~~~~~~~
009

கங்காதேவி சந்தனுவை பிரிதல்...!

★கடைசியாக சந்தனு-கங்காதேவிக்கு எட்டாவதாக ஒரு குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையையும் கங்கையில் வீசி விட்டால் என்ன செய்வதென்று பயந்த சந்தனு கங்காதேவியைப் பார்த்து, நீ யார்? எதற்காக இப்படி செய்கிறாய்? இந்தக் குழந்தையாவது கொல்லாமல் விட்டுவிடு என கூறினான். 

★கங்காதேவி, மன்னா! நான் இந்த குழந்தையை கொல்லமாட்டேன். ஆனால், தாங்கள் என்னுடைய நிபந்தனைப் படி நடக்காமல், என்னை யார்? என்று கேட்டதால் இனி உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறினாள். நான் போகும் முன், நான் யார்? என்பதை தங்களிடம் கூறிவிட்டு செல்கிறேன். நான் ஜன்கு மகரிஷியின் மகள். என்னுடைய பெயர் கங்காதேவி. தேவர்களுக்கு உதவுவதற்காகவே, நான் தங்களின் மனைவியாக இருந்தேன். நமக்கு குழந்தைகளாக பிறந்தவர்கள் எல்லாம் புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள். வசிஷ்டரின் சாபத்தால், மனிதர்களாக பிறந்தனர். தங்களை தந்தையாகவும், என்னை தாயாகவும் அடைய விரும்பினர். அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அவர்களும் வசிஷ்டரின் சாபத்திலிருந்து சாப விமோசனம் அடைந்தனர்.

★எட்டாவது மகனான இவன், பெரிய மகானாக திகழ்வான். இவனை மகனாகப் பெற்றதுடன் என்னுடைய கடமை முடிந்தது. தாங்கள், எனக்கு விடை தரவேண்டும் என்று கேட்டாள். கங்காதேவி கூறியதைக் கேட்ட சந்தனு, ஜன்கு மகரிஷியின் மகளே! புண்ணிய புருஷர்களான வசுக்களுக்கு வசிஷ்டர் எதற்காக சாபம் கொடுத்தார்? எட்டாவது மகனாக பிறந்திருக்கும் இந்த குழந்தை மட்டும் ஏன் மண்ணுலகில் வாழ வேண்டும்? இதற்கான காரணங்களை எனக்கு விளக்கமாக சொல் என்று கேட்டான். 

★கங்கா தேவி, மன்னா! முனிவர்களில் சிறந்தவர் வசிஷ்டர். அவர் வருணனின் புதல்வர் ஆவார். வசிஷ்டர் மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார். அவர் நந்தினி என்ற பசு ஒன்றை வைத்திருந்தார். ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும், அவரவர் மனைவியருடன் மேருமலைச் சாரலுக்கு வந்தனர். அப்போது பிரபாசன் என்ற வசுவின் மனைவி, வசிஷ்டரிடம் இருந்த பசுவான நந்தினியைக் கண்டு, அந்த பசு தனக்கு வேண்டும் என்று கேட்டாள். 

★மனைவியின் விருப்பத்தை அறிந்த பிரபாசன், இந்த பசு வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது. இந்த பசு தெய்வத்தன்மை வாய்ந்தது. இந்த பசுவின் பாலைப் பருகும் மனிதர்கள் இளமையும், அழகும் குறையாமல், நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என்றான். இதைக் கேட்ட பிரபாசனின் மனைவி, தனக்கு மண்ணுலகில் ஜிதவதி என்று ஒரு தோழி இருப்பதாகவும், அவள் அழகும், இளமையும் குறையாமல் இருக்க, அவளுக்கு இந்த பசுவை அன்பளிப்பாக தர விரும்புவதாக கூறினாள். 

★மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன், மற்ற வசுக்களுடன் நந்தினி என்னும் காமதேனுவைக் கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்து, தன் மனைவியிடம் கொடுத்தான். வசிஷ்டர், தன் தவத்தை முடித்துவிட்டு ஆசிரமத்திற்கு வந்தார். அப்பொழுது ஆசிரமத்தில் இருந்த பசுவும், கன்றுகுட்டியும் களவாடப்பட்டிருப்பதை கண்டு மிகவும் கோபங்கொண்டார். தன் பசுக்களை களவாடிச் சென்ற வசுக்கள் மனிதராக பிறக்க வேண்டும் சாபமிட்டார். இதை அறிந்த வசுக்கள் வசிஷ்டரிடம் பசுவையும், கன்றையும் கொடுத்துவிட்டு, எங்களை மன்னிக்க வேண்டும் என அவரின் காலில் விழுந்து வேண்டினர்.

★அப்பொழுது வசிஷ்டர், என் பசுவும் கன்றும் களவாட காரணமாக இருந்த பிரபாசன் தவிர மற்றவர்கள் விரைவில் சாப விமோசனம் பெறுவர். ஆனால் பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான். அவன் பெண் இன்பத்தை துறந்து, சந்ததி இன்றி வாழ்வான். அவன் அனைவருக்கும் நன்மைகள் செய்து, பேரும், புகழும் பெற்று சாஸ்திரங்களில் வல்லவனாக திகழ்வான் என்று வசிஷ்டர் கூறினார் என கங்காதேவி கூறினாள். 

★பிறகு கங்காதேவி, வசுக்களில் ஒருவரான பிரபாசனை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இவன் பெரிவன் ஆன பின் தங்களிடம் ஒப்படைக்கிறேன். தாங்கள் அழைக்கும்போது நான் வருவேன் எனக் கூறிவிட்டு சந்தனுக்கு விடைக் கொடுத்து மகனுடன் மறைந்தாள்.

நாளை......


மகாபாரதம்.- 1/3/2020
~~~~~~~~~~~~~~~~
010

சந்தனு - சத்யவதி

★ கங்காதேவி தன் எட்டாவது குழந்தையுடன் மறைந்தாள். அவன் தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் நற்குணங்களில் சிறந்தவனாக விளங்கினான்.

 ★தன் மனைவியையும், குழந்தையையும் இழந்த சந்தனு  மிகுந்த துன்பப்பட்டான். அதன் பின், அரசாட்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தான். அஸ்தினாபுரத்தை தலை நகரமாக கொண்டு அனைவரும் போற்றி புகழும் வண்ணம் அரசாட்சிப் புரிந்தான். நீதிநெறி தவறாதவனாகவும், இந்திரனுக்கு ஒப்பற்றவனாகவும், சினத்தில் எமனுக்கு ஈடாகவும், வேகத்தில் வாயு பகவானுக்கு ஈடாகவும், அனைத்து கலைகளிலும் சிறந்தவனாகவும், விருப்பு வெறுப்புகள் இன்றி நல்லாட்சி புரிந்து வந்தான்.

★ ஒருமுறை சந்தனு, காட்டில் வேட்டையாடி கொண்டிருக்கும் பொழுது கங்கை நதியைக் கண்டான். நதியில் நீர் குறைவாக ஓடுகிறதே. எதனால் நீர் பெருக்கெடுத்து ஓடவில்லை என எண்ணிக் கொண்டு இருந்தான்.

★ அப்பொழுது வாலிபன் ஒருவன், தன் அம்பு எய்தும் திறமையால் கங்கை நதியை தடுத்து நிறுத்தவதை கண்டான். இதைப் பார்த்த மன்னன் சாந்தனு, அழகும் வீரமும் பொருந்திய சிறுவனே நீ யார் என கேட்டான். அப்போது அங்கு தோன்றிய கங்காதேவி மன்னா! இவனே நமது எட்டாவது மகன் தேவவிரதன். அனைத்து கலைகளையும் நன்கு கற்றவன். இவன் தேவேந்தரனுக்கு இணையானவன். வசிஷ்டரின் வேதங்களையும், வேத அங்கங்களையும் நன்கு கற்றறிந்தவன். நம் மகனை தங்களிடம் ஒப்படைக்கிறேன் எனக் கூறிவிட்டு மறைந்தாள். தன் மகனை கண்ட சந்தனு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். பிறகு ஒரு நன்னாளில் தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான்.

★ நான்கு ஆண்டுகள் கழிந்தது. ஒரு முறை மன்னன் சந்தனு, யமுனை நதிகரைக்கு சென்றான். அங்கு ஓர் அழகிய பெண்ணைக் கண்டான். அவளிடம், பெண்ணே! நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக் கேட்டான்.

★ அப்பெண் மன்னா! நான் செம்படவப்(மீனவன்) பெண். எனது தந்தை செம்படவர்களின் அரசன் ஆவார். நான் இங்கு ஓடம் ஓட்டுகிறேன் எனக் கூறினாள். அப்பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன், அப்பெண்ணை தன்னுடைய மனைவியாக்கி கொள்ள விரும்பி அவளின் தந்தையை காணச் சென்றான். அப்பெண்ணின் தந்தையை கண்ட அரசன், அவனிடம் நான் தங்களின் மகளை மணமுடிக்க விரும்புகிறேன் எனக் கூறினான். அதற்கு அப்பெண்ணின் தந்தை, மன்னா! நான் எனது மகளை தங்களுக்கு மணமுடிக்க சம்மதிக்கிறேன். ஆனால் அதற்கு நிபந்தனை உண்டு என்றான். மன்னன், அந்த நிபந்தனை என்னவென்று கூறு. அந்த நிபந்தனையை என்னால் நிறைவேற்ற முடியாததாக இருந்தால் நான் வாக்குறுதி கொடுக்க மாட்டேன் என்றான். செம்படவன், மன்னா! என் மகள் சத்யவதிக்கு பிறக்கும் குழந்தையே அரசனாக வேண்டும் என்றான். செம்படவனின் நிபந்தனையை ஏற்க முடியாததால் மன்னன் கவலையுற்று திரும்பினான்.

★ மன்னனால் செம்படவப் பெண் சத்யவதியை மறக்க முடியவில்லை. அப்பெண்ணின் நினைவால் மிகவும் வாடி வருந்தினான். மன்னனின் உடல்நிலை சோர்ந்து காணப்பட்டது. தந்தையின் இந்நிலையைக் கண்ட தேவவிரதன், தந்தையிடம் சென்று, தந்தையே! தாங்கள் மிகவும் சோர்வுற்று காணப்படுகிறீர்கள். தங்களின் துன்பத்திற்கான காரணம் என்னவென்று கூறுங்கள் நான் தீர்த்து வைக்கிறேன் என்றான். 

★மகனிடம், தன் விருப்பத்தை சொல்ல வெட்கமடைந்த மன்னன், மகனிடம்! மகனே! நம் குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய். நாளை உனக்கு ஏதேனும் நேர்ந்தால், நம் சந்ததி என்னவாகும். அதை நினைத்து நான் வருந்துகிறேன் எனக் கூறினான். (மகனிடம் செம்படவப் பெண் பற்றி எதுவும் கூறவில்லை) ஆனால் தேவவிரதன் தன் தந்தை ஏதோ மறைக்கிறார் என்பதை உணர்ந்தான். தந்தையின் தேரோட்டியிடம் கேட்டால் விவரம் தெரிந்து விடுகிறது என நினைத்து தேரோட்டியிடம் சென்றான் தேவவிரதன்.

நாளை......



மகாபாரதம் - 2/3/2020
~~~~~~~~~~~~~~~~
011

தேவவிரதன் பீஷ்மரான கதை

★ தேவவிரதன், தேரோட்டியை அழைத்து தந்தையின் கவலைக்கான காரணத்தை கேட்டான். தேரோட்டி அரசே! தங்களின் தந்தை ஓடம் செலுத்தும் செம்படவப் பெண்ணை விரும்புகிறார். செம்படவ அரசனின் மகளின் பெயர் சத்தியவதி. அவர் அப்பெண்ணின் தந்தையிடம், தங்களின் மகளை எனக்கு மணமுடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு செம்படவன், உங்களுக்கு மணமுடிக்க வேண்டுமானால் என் மகளின் குழந்தையே நாடாள வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையை ஏற்க முடியாமல் மன்னர் வருத்ததுடன் திரும்பி விட்டார் என்றான். 

★தந்தையின் இந்நிலையைக் கண்ட தேவவிரதன், செம்படவ பெண்ணை எப்படியாவது தந்தைக்கு திருமணம் செய்ய வேன்டும் என எண்ணினான். உடனே கங்கை நதிக்கரைக்குச் சென்று செம்படவ அரசனை சந்தித்தான். செம்படவ அரசன் தேவவிரதனை மரியாதையுடன் வரவேற்றான். தேவவிரதன் செம்படவனிடம், உங்களின் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து தர வேண்டும். அதற்காக தான் இங்கு வந்துள்ளேன் என்றான். செம்படவன், அரசே! எனது மகளை தங்களின் தந்தைக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், எனது மகளின், குழந்தையே அரசாள வேண்டும். இந்த நிபந்தனை தங்களுக்கு சம்மதம் என்றால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறேன் என்றான். 

★தேவவிரதன், செம்படவ அரசே! உங்களின் மகளுக்கு பிறக்கும் மகனே நாடாளுவான். அவனே அரசுரிமை ஏற்பான் என நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றான்.

★ செம்படவன், அரசே! நீங்கள் அரச குலத்தில் பிறந்தவர். நீங்கள் கொடுக்கும் வாக்குறுதியை மீற மாட்டீர்கள். உங்களின் மேல் எனக்கு முழு நம்பிக்கையும் உள்ளது. ஆனால் உங்களுக்கு பின்னால் வரும் சந்ததியினர் உங்களின் வாக்குறுதியை மீறலாம் அல்லவா? என்றான். அதற்கு தேவவிரதன், மீனவ அரசே! நான் எனது அரசுரிமையை சற்று முன் துறந்துவிட்டேன். இப்பொழுது நான் சந்ததியும் துறக்க சபதம் மேற்கொள்கிறேன். இன்று முதல் நான் பிரம்மச்சாரிய விரதத்தை மேற்கொள்கிறேன். நான் உயிர் உள்ளவரை என் சந்ததி உற்பத்தி ஆகாது. இந்த தியாகத்தை நான் என் தந்தைக்காக செய்கிறேன். இது என் சத்தியம். இப்பொழுது என் மேல் எந்த சந்தேகம் இல்லாமல் உங்கள் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்றான்.

★தேவவிரதன் இந்த சபதம் செய்தவுடன் வானிலிருந்து பூமழை பெய்தது. தேவர்கள் 
" பீஷ்ம"  "பீஷ்ம" என்று பாராட்டினர். பீஷ்மர் என்றால் கடினமான, பயங்கரமான பிரதிக்ஞை ஏற்றவர் என்று பொருள். தன் தந்தைக்கு வேண்டி அவர் எடுத்துக் கொண்ட வாழ்நாள் முழுமைக்குமான பிரமச்சரிய விரதத்தையே இது குறிக்கிறது. அன்றிலிருந்து தேவவிரதன் பெயர் மறைந்து அனைவரும் பீஷ்மர் என்றே அழைக்க ஆரம்பித்தனர். இனி நாமும் அப்படியே அழைப்போம்.

நாளை........


மகாபாரதம் - 3/3/2020
~~~~~~~~~~~~~~~~
012

அம்பை,அம்பிகை,அம்பாலிகை

★ அதன் பின் செம்படவ அரசன், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். தேவவிரதனின் இந்த சபதத்தையும், அவனின் மன உறுதியையும் அனைவரும் போற்றி புகழ்ந்தனர். அன்று முதல் அனைவரும் தேவவிரதனை பீஷ்மர் என்று அழைத்தனர். பீஷ்மர், பெரியோர்களின் ஆசியுடன் செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு அரண்மனை வந்தார். 

★சத்யவதியை கண்ட சந்தனு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். அங்கு பீஷ்மர் ஏற்ற சபதத்தை அறிந்து சந்தனு வருத்தம் அடைந்தார். அதன் பின் சந்தனு பீஷ்மருக்கு ஒரு வரம் அளித்தார். இம்மண்ணுலகில் எவ்வளவு காலம் நீ உயிருடன் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு காலம் நீ உயிருடன் வாழ்வாய். எமன் உன்னை நெருங்கமாட்டான் என்றார்.

★ சத்தியவதிக்கும் சந்தனுக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. சேதி நாட்டு அரசனான உபரிசரஸ் என்னும் மன்னனின் மகள் தான் சத்தியவதி. செம்படவ அரசனால் வளர்க்கப்பட்டவள். சந்தனு மற்றும் சத்தியவதிக்கு முதலில் சித்திராங்கதன் என்னும் மகன் பிறந்தான். அதன் பின் விசித்திரவீரியன் என்னும் மகன் பிறந்தான். சில வருடங்கள் கழித்து சந்தனு மரணம் அடைந்தான். அதன் பிறகு சித்திராங்கதனை நாட்டின் அரசனாக பீஷ்மர் முடிசூட்டினார். 

 ★காந்தர்வ நாட்டின் அரசர் பெயரும் சித்திராங்கதன் ஆகும். அதனால் காந்தர்வ நாட்டின் அரசன், சித்திராங்கதன் என்னும் பெயரை மாற்றிக் கொள். அப்படி உன் பெயரை மாற்றிக் கொள்ளாவிட்டால் என்னுடன் போரிட வா என அழைப்பு விடுத்தான். இதனால் காந்தர்வ நாட்டின் அரசனுடன் போர் புரிய நேரிட்டது.

★ இருவருக்கும் நடந்த கடும் போரில் சந்தனுவின் மகன் சித்திராங்கதன் மாண்டான். சந்தனுவின் இரண்டாவது மகனான விசித்திரவீரியனை நாட்டின் அரசனாக பீஷ்மர் முடிசூட்டினார். சில நாட்கள் கழித்து பீஷ்மர், விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்.

★அச்சமயத்தில் காசி நாட்டின் மன்னன் தன் மகள் மூவருக்கும் சுயம்வரம் நடத்துவதை அறிந்தார். காசி நாட்டின் மன்னன் மகள்களின் பெயர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை. உடனே பீஷ்மர் காசி நாட்டுக்குச் சென்று சுயம்வரத்தில் கலந்துக் கொண்டார். சுயம்வரத்தில் பல நாட்டின் அரசர்களும் கலந்துக் கொண்டனர். அங்கு சில அரசர்கள் பீஷ்மரை பார்த்து, நரை கூடிய வயதில் உங்களுக்கு திருமண ஆசையா? எனக் கூறி ஏளனம் செய்தனர்.

★இதனால் கடும்கோபம் அடைந்த பீஷ்மர், காசி மன்னனின் மூன்று மகள்களையும் வலுகட்டாயமாக இழுத்துச் சென்றார். இதை பார்த்த பல மன்னர்கள் பீஷ்மரை தடுக்க முயன்றனர். அவர்கள் அனைவரும் பீஷ்மரிடம் தோற்று போயினர். அப்பொழுது சௌபல நாட்டு மன்னன் சால்வன், பீஷ்மரிடம் கடும் போர் புரிந்தான். முடிவில் சௌபல நாட்டு மன்னன் சால்வன் பீஷ்மரிடம் தோற்று போனான். அதன் பிறகு பீஷ்மர் அப்பெண்களை தன் மகள்கள் போல் அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தடைந்தார். 

★விசித்திரவீரியனுக்கு விரைவில் திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டார். அப்பொழுது அப்பெண்களில் ஒருவளான அம்பை, நான் சௌபல நாட்டு மன்னன் சால்வனை விரும்புகிறேன். நான் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் எனக் கூறினாள்.

★ஆகவே அம்பையை விட்டு மற்ற இருவரான அம்பிகை அம்பாலிகை ஆகியோருக்கும் விசித்திரவீரியனுக்கும் திருமணத்தை சிரப்பாக செய்து வைத்தார் பீஷ்மர்.

★திருமணம் முடிந்ததும் எனக்கென்ன பதில் என பீஷ்மரைப் பார்த்துக் கேட்டாள் அம்பை.

நாளை......

மகாபாரதம் - 4/3/2020
~~~~~~~~~~~~~~~~
013

அம்பையின் ஏமாற்றம்.

★ பீஷ்மர், பெண்ணே! உன் மனம் சௌபல நாட்டு மன்னன் சால்வனை விரும்புகிறது.  நீ அவனையே திருமணம் செய்துக் கொள்ளலாம். எனக்கு தடை ஏதும் இல்லை எனக் கூறினார். அதன் பிறகு அம்பை சௌபல நாட்டு மன்னனை தேடிச் சென்றாள். மன்னன் சால்வனை சந்தித்த அம்பை, தனது விருப்பத்தைக் கூறி இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் எனக் கூறினாள். 

★சால்வன், பெண்ணே! உன்னை பீஷ்மர் கவர்ந்து சென்று அவரது அரண்மனையில் தங்க வைத்துள்ளார். நான் மற்றவரால் கவரப்பட்டு, அவர்களிடம் இருந்து திரும்பி வந்த பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன். அதனால் நீ இங்கிருந்து செல்லலாம் எனக் கூறினான். சால்வனின் இந்த முடிவினால் ஏமாற்றமடைந்த அம்பை, அஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றாள்.

★ அங்கு பீஷ்மரை சந்தித்து, சால்வனின் கூறிய பதிலை கூறிவிட்டு, என்னை சாஸ்திர சம்பரதாயத்தின்படி நீங்களே திருமணம் செய்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள். பீஷ்மர், பெண்ணே! நான் பிரம்மச்சர்யத்தை மேற்கொண்டிருப்பவன். அதனால் உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது எனக் கூறி மறுத்து விட்டார். சால்வனிடமும், பீஷ்மரிடமும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி மாறி மாறி கேட்டு ஆறு வருடங்கள் கழிந்தது. 

★ஏமாற்றமடைந்த  அம்பை, இமயமலை சாரலுக்குச் சென்று, அங்கு பாகீரதி நதிக்கரையில், கால் கட்டை விரலால் ஊன்றி நின்று பன்னிரண்டு வருடங்கள் கடும் தவம் புரிந்தாள். தவத்தின் பயனாய் முருக பெருமான் அம்பைக்கு காட்சி அருளினார். முருகன், அம்பையிடம் ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையால் உன் துன்பம் நீங்கும். இந்த தாமரை மாலையை யார் அணிகின்றாரோ அவரால் பீஷ்மர் மரணமடைவார் எனக் கூறிவிட்டு மறைந்தார்.

★ பிறகு அம்பை அந்த மாலை எடுத்துக் கொண்டு பல அரசர்களிடம் சென்று, இந்த மாலையை அணிபவர் பீஷ்மரை கொல்லும் ஆற்றல் பெற்றவர் ஆவார். பீஷ்மரை கொல்பவரையே நான் திருமணம் செய்துக் கொள்வேன் எனக் கூறினாள். பீஷ்மருக்கு பயந்து பல அரசர்கள் அந்த மாலையை வாங்கி கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் அம்பை தன் முயற்சியை கைவிடாமல் இந்த மாலையை யாராவது வாங்கிக் கொள்ளுங்கள் என பல மன்னர்களிடம் வேண்டினாள். மாலை வாங்கி அணிந்து கொள்ள யாரும் முன் வாராமல் பல ஆண்டுகள் கழிந்தது. 

★அம்பை தன் முயற்சியை கைவிடவில்லை. கடைசியில் அம்பை, பாஞ்சாலா நாட்டு அரசன் துருபதனை சந்தித்து தன் துன்பங்களை கூறி இந்த மாலையை அணிந்துக் கொள்ளுமாறு வேண்டினாள்.

★ ஆனால் துருபதன், பீஷ்மருடன் போராடி வெற்றி பெறும் ஆற்றல் எனக்கில்லை எனக் கூறி மறுத்துவிட்டார். எந்த மன்னனும் மாலையை அணிந்து கொள்ள முன் வராத நிலையில் அம்பை, அந்த மாலையை துருபதனின் அரண்மனையில் போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். இதைப் பார்த்த துருபத மன்னன், பெண்ணே! இந்த மாலையை எடுத்துச் செல் எனக் கூறியும் அவள் செவிகளில் வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நாளை......


மகாபாரதம் - 5/3/2020
~~~~~~~~~~~~~~~~
014

சிகண்டி.

★ என்ன செய்வதென்று தெரியாத துருபதன் அந்த மாலையை தன் அரண்மனையில் வைத்து காத்து வந்தான். அங்கிருந்து சென்ற அம்பை, ஒரு காட்டிற்கு சென்று தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் தன் துன்பங்களை கூறினாள். அந்த முனிவர், பரசுராமரை சென்று சந்திக்கும்படி கூறினார். அதன் பிறகு அம்பை அங்கிருந்து பரசுராமரை தேடிச் சென்றாள். 

★பரசுராமரை சந்தித்த அம்பை தன் துன்பங்களை கூறி, அதனை போக்குமாறு வேண்டிக் கொண்டாள். அதன் பிறகு பரசுராமர், பீஷ்மரை சந்தித்து அம்பையை திருமணம் செய்துக் கொள்ளும் படி கூறினார். ஆனால் பீஷ்மர் திருமணம் செய்துக் கொள்ள மறுத்துவிட்டார். இதனால் கோபடைந்த பரசுராமர் பீஷ்மருடன் போர் புரியச் சென்றார். இருவரும் சமமான ஆற்றல் பெற்றவர். இருவரும் சளைக்காமல் போர் புரிந்தனர்.

★ கடைசியில் பரசுராமர் போரில் இருந்து விலகிச் சென்றுவிட்டார். இதிலும் தோல்வி அடைந்த அம்பை, சிவப்பெருமானை வேண்டி கடும் தவம் இருந்தாள். அம்பையின் தவத்தை மெச்சி சிவபெருமான், அம்பை முன் தோன்றினார். அம்பை, சிவபெருமானிடம் தன் துன்பங்களை கூறினாள். சிவபெருமான், பெண்ணே! இப்பிறவியில் உனது கோரிக்கைகள் நிறைவேறாது. அடுத்த பிறவியில் உன்னை காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் ஏற்படும் எனக் கூறிவிட்டு மறைந்தார். இப்பிறவியில் ஈடேறாத செயலை மறுபிறவியில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அம்பை, தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.

★ மறுபிறவியில் அம்பை துருபதனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் 
சூட்டினர். பல வருடங்கள் கழிந்தது. ஒரு முறை சிகண்டி அரண்மனையில் பாதுகாப்பாக வைத்திருந்த மாலையை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். இதைப் பார்த்த துருவதன், பீஷ்மருக்கு பயந்து தனது மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதன்பிறகு சிகண்டி தவ வாழ்க்கையை மேற்கொண்டாள். ஒரு முறை இஷிகர் என்னும் முனிவருக்கு சிகண்டி பணிவிடை செய்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது முனிவர் சிகண்டியிடம், கங்கை ஆறு உற்பத்தி ஆகும் இடத்தில் விபஜனம் என்னும் விழா நடைப்பெற உள்ளது. அவ்விழாவிற்கு வரும் தும்புரு என்னும் மன்னனுக்கு பணிவிடை செய்தால் உனது எண்ணங்கள் நிறைவேறும் என்றார்.

★இஷிகர் முனிவர் சொன்னதைப் போல், சிகண்டி விபஜனம் விழா நடைப்பெறும் இடத்திற்குச் சென்றாள். அங்கு பல கந்தர்வர்கள் வந்து இருந்தனர். அங்கு சிகண்டியை பார்த்த ஒருவன், அவளிடம் சென்று நாம் இருவரும் நம் உருவத்தை மாற்றிக் கொள்ளலாமா? எனக் கேட்டான். சிகண்டியும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். இருவரும் உருவத்தை மாற்றிக் கொண்டனர். சிகண்டி ஆணாகவும், அவன் பெண்ணாகவும் உருவம் மாறினர். அதன் பின் சிகண்டி பல கலைகளை கற்று சிறந்த வீரனாக திகழ்ந்தாள். சிகண்டி, தன் தந்தை துருபதனிடம் திரும்பிச் சென்று, நடந்த விஷயங்களை விரிவாக எடுத்து கூறினாள். அதன் பின் சிகண்டி தன் தந்தையை பார்த்து! இனி தாங்கள் பீஷ்மரை பார்த்து பயப்பட வேண்டாம் எனக் கூறினாள். துருபதனும் மகனாக மாறி இருக்கும் மகளை அன்புடன் ஏற்றுக் கொண்டான்.

நாளை.....


மகாபாரதம் - 6/3/2020
~~~~~~~~~~~~~~~~
015

அஸ்தினாபுரத்தில்,

★ பீஷ்மர், விசித்திரவீரியனுக்கு அம்பிகை மற்றும் அம்பாலிகையை திருமணம் செய்து வைத்தார். வருடங்கள் ஓடின. சத்யவதி மகனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லையே என வருத்தப்பட்டாள்.ஏழு ஆண்டுகள் கடந்த பின்னர் விசித்திரவீரியன் கடும் காச நோயால் இறந்தான். சில நாட்கள் கடந்தது. 

★சத்யவதி பீஷ்மரைப் பார்த்து, மகனே! உன் தம்பி, மக்கள் பேறு இன்றி இறந்து விட்டான். சந்தனுவின் குலம் தழைக்க வேண்டும். அதனால் நீ அம்பிகை மற்றும் அம்பாலிகையை திருமணம் செய்து சந்தனுவின் குலம் தழைக்க சந்ததியை உண்டாக்கு என்றாள். பீஷ்மர், அன்னையே! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் கூறியது தருமமே என்றாலும் நான் என் சபதத்தை மீற மாட்டேன் என்றார்.

★ அதற்கு சத்யவதி, மகனே! ஆபத்து காலங்களில் தருமத்தை மீறுவது தவறில்லை. அதனால் நீ அவர்களை திருமணம் செய்துக் கொள் என்றாள். ஆனால் பீஷ்மரோ தன் சபதத்தில் பிடிவாதமாக இருந்தார். அன்னையே! என்னால் சபதத்தை மீற முடியாது. இதற்கு வேறு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் என்றார். அதன் பின் யோசித்த சத்யவதி வியாசர் பிறந்த கதையை கூறினாள். 

★ சேதி நாட்டு மன்னன் உபரிசரஸ் மகள்தான் நான்.அற்ப காரணத்திற்காக என்னை வெறுத்து மீனவ மன்னனுக்கு கொடுத்து விட்டார் அதன் பிறகு செம்படவன் என்னை தன் மகளாக வளர்த்து வந்தான். நான் பருவ வயது அடைந்தவுடன் பரிசல் ஓட்ட ஆரம்பித்தேன்.

★பராசர மகரிஷி ஒரு முறை, யமுனை நதியின் அருகே பயணித்துக் கொண்டிருந்த போது, மீனவ குடும்பத்தை சேர்ந்த என்னை கண்டார். பார்த்த உடனேயே பாரசர முனிவர் என்னை விரும்பினார். அதன் பிறகு அவர் என்னிடம் வந்து தன்னை அக்கரைக்கு அழைத்து செல்ல சொன்னார். இருவரும் மரப்படகில் அக்கரைக்குச் செல்லும் வழியில் பராசர மகரிஷி, என்மீது கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

★ அவருடைய விருப்பத்திற்கு நான் முதலில் தயங்கினாலும், பராசர மகரிஷியின் தொடர் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியின்றி, என்னுடைய நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்தால் நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன் என்றேன். பராசர மகரிஷி, என்ன நிபந்தனை கூறு என்று கேட்டார். என்னுடைய முதல் நிபந்தனையாவது, நம் இருவரையும் யாரும் காணக் கூடாது என்றேன். உடனே அவர் சூரியனை மறைத்து இருளாக்கினார். இரண்டாவது நிபந்தனை, என்மீதுள்ள மீன் வாசனை மாற வேண்டும் என்றேன். உடனே மீன் வாசனையை போக்கி நறுமண சந்தன வாசனை வீசியது.

★ மூன்றாவது நிபந்தனை, நான் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றிய பின் கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும். எனக்கு பிறக்கும் குழந்தை நல்ல அறிவாளியாகவும், ஒரு முனிவனாகவும் இருக்க வேண்டும். முனிவர் அவ்வாறே ஆகும் என்றார். பின்னர் இருவரும் அன்றைய தினம் ஒரு தீவில் இல்வாழ்க்கை நடந்தினோம். அன்றைய தினம் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்தேன். அவன் வேத வியாசர் என அழைக்கப்பட்டான்.

★நீ சம்மதித்தால், வியாசர் அம்பிகை மற்றும் அம்பாலிகைக்கு புத்திர பாக்கியம் கொடுப்பான் என்றாள். பீஷ்மரும் தன் குலம் தழைக்க வேண்டும் என்பதால் அன்னை சத்யவதி கூறியதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்பின் சத்யவதி தன் மகன் வியாசரை மனதில் நினைக்க, வியாசர் அவள் முன் தோன்றினார். வியாசர் சத்யவதியை பார்த்து, அன்னையே! தாங்கள் என்னை அழைத்தற்கான காரணம் என்ன? என்று கேட்டார்.

★ சத்யவதி, மகனே! நீ எனக்கு மூத்த மகனாக பிறந்திருக்கிறாய். பீஷ்மர் உனக்கு அண்ணன் ஆவான். உனது இளைய சகோதரன் விசித்திரவீரியன். அவன் காச நோயால் இறந்து விட்டான். நான் நம் குல விருத்திக்காக உன்னை இங்கு அழைத்தேன். பீஷ்மர் பிரம்மசர்ய விரதத்தை மேற்கொண்டிருப்பதால் அவன் உதவ முடியாமல் இருக்கிறான். உன்னால் என் சந்ததி உருவாக வேண்டும். இது எனது கோரிக்கை என்றாள். உன் இளைய சகோதரனின் மனைவிமார்கள் அம்பிகை மற்றும் அம்பாலிகை. இவர்கள் இருவரும் தேவமாதர்கள் போன்றவர்கள். நீ இவர்கள் மூலம் சந்ததி உருவாக்க வேண்டும் என்றாள்.

நாளை.....

ஸ்ரீ விக்னேஸ்வராய
**********************
நமஹ:
*******
ஸ்ரீ நாராயணீயம்......
***********************
ஓர் அருமருந்து.
******************
தசகம்....2
-----------------
ஸ்லோகம்......10
----------------------------

த்வத்பக்திஸ்து கதாரஸாம்ருதஜரீ நிர்மஜ்ஜநேந ஸ்வயம்
ஸித்யந்தீ விமலப்ரபோத பதவீம் அக்லேச'தஸ் தந்வதீ!
ஸத்ய: ஸித்திகரீ ஜயத்யயீ! விபோ! ஸைவாஸ்து மே த்வத் பத - ப்ரேமப்ரெளடி -ரஸாத்ரதா த்ருததரம் வாதாலயாதீஸ்வர!!

பொருள்:-
***********
விபுவே! உன்னிடம் செலுத்தப்படுகின்ற பக்தியானது ரஸமான சரித்திரங்களாகிய அமுதத்தின் வெள்ளத்தில் முழுகி விளையாடுவதால் அதுவே தூய்மையான பிரம்ம ஞானத்தை எளிதில் கிடைக்கச்செய்கிறது.உடனேயே பிறவிப்பயனைத் தருகிறது.ஆகையால் குருவாயூரின் தலைவனே! அப்படிப்பட்ட உன்திருவடிகளில் அன்புச்சுவையாகிய பக்தி எனக்கு விரைவில் உண்டாக வேண்டும்!
க்ருஷ்ணார்ப்பணம்...
         (தொடரும்......)


மகாபாரதம் - 7/3/2020
~~~~~~~~~~~~~~~~
016

திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் பிறப்பு...!

★வியாசர், அன்னையே! நான் சந்ததி தர வேண்மென்றால் அப்பெண்கள் இருவரும் எனது இந்த விகார தோற்றக் கண்டு அருவருப்புக் கொள்ளக்கூடாது. என்னிடமிருந்து வரும் இந்த நாற்றத்தையும் பொருட்படுத்தக் கூடாது. இவ்வாறு அம்பிகை என்னுடன் ஒன்று சேர்ந்தால் அவளுக்கு பிறக்கும் மகன் 
நூறு யானை பலத்தை பெறுவான் எனக் கூறினார். 

★உடனே சத்யவதி அம்பிகையை அழைத்து, மகளே! நீ ஒரு முனிவருடன் ஒன்று சேர்ந்து புத்திரரை பெற வேண்டும். இதை நீ நம் குல விருத்திக்காக மறுக்காமல் செய்ய வேண்டும் என்றாள். அம்பிகையும், நாட்டின் நலன் கருதியும், குல விருத்திகாகவும் இதற்கு சம்மதித்தாள். அன்றிரவு அம்பிகை மாளிக்கைக்கு வியாசர் சென்றார். வியாசரின் விகாரமான தோற்றத்தைக் கண்டு அம்பிக்கை தன் இரு கண்களையும் மூடிக் கொண்டாள். இரவு முழுவதும் அவள் தன் கண்களை திறக்கவில்லை.

★ மறுநாள் வியாசர் சத்யவதியிடம், அன்னையே! அம்பிக்கைக்கு வீரமுடன் மகன் பிறப்பான். ஆனால் அவள் என்னைக் கண்டு கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்கு பிறக்கும் மகன், கண் இல்லாதவனாக இருப்பான். அவனின் பெயர் திருதராஷ்டிரன் என்றார். சில மாதங்கள் கழித்து அம்பிகை ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். அக்குழந்தை குருடனாக இருந்தது. 

★சத்யவதி வியாசரை நினைத்தாள். வியாசர் சத்யவதி முன் தோன்றினார். சத்யவதி, மகனே! குரு வம்சத்தில் குருடனாக இருப்பவர் எவ்வாறு அரசாள முடியும். அவன் தகுதியற்றவன் என புறக்கணித்து விடுவர். அதனால் நீ அம்பாலிகையுடன் சேர்ந்து ஒரு சிறந்த மகனை தர வேண்டும் என்றாள். அன்றிரவு அம்பாலிகை மாளிகைக்குச் சென்றார் வியாசர். வியாசரின் விகாரத் தோற்றத்தைக் கண்டு அம்பாலிகையின் உடல் வெளுத்து போனது.

 ★மறுநாள் வியாசர் சத்யவதியிடம், அன்னையே! அம்பாலிகை  என்னை கண்டு பயந்ததால் அவளுக்கு  பிறக்கும் மகன் உடலெங்கும் வெண்மை நிறத்துடன் இருப்பான். அவனின் பெயர் பாண்டு. அவனுக்கு ஐந்து குழந்தைகள் பிறப்பார்கள் என்றார். அதே போல அம்பாலிகையும் சில மாதங்களில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அக்குழந்தை வெளுத்து காணப்பட்டது. 

★மறுபடியும் சத்யவதி வியாசரை நினைத்தாள். வியாசர் சத்யவதி முன் தோன்றினார். சத்யவதி, மகனே! இரு குழந்தைகளும் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள். அதனால் அம்பிகைக்கு மற்றொரு குழந்தையை தர வேண்டும் என வேண்டினாள். ஆனால் அம்பிகையோ வியாசரின் விகார உருவத்தைக் கண்டு பயந்து தனது  பணிப்பெண்ணை அனுப்பினாள். வியாசரும், பணிப்பெண்ணும் மகிழ்ச்சியாக இணைந்தார்கள். மறுநாள் வியாசர், இப்பெண்ணின் அடிமைத்தனம் நீங்கியது. இவளுக்கு பிறக்கும் குழந்தை சிறந்த ஞானியாக விளங்குவான். அவனின் பெயர் விதுரன் எனக் கூறி மறைந்தார்.

★ இவ்வாறு வியாசரின் மூலமாக அம்பிகை, அம்பாலிகை மற்றும் பணிப்பெண் மூவருக்கும் திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோர் பிறந்தனர்.

நாளை.....


மகாபாரதம் - 8/3/2020
~~~~~~~~~~~~~~~~
017

சகுனி

★ பீஷ்மர், திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரனை தன் மகன்கள் போல் வளர்த்தார். அனைத்து கலைகளையும், போர் பயிற்சிகளையும், சாஸ்திர கல்வியையும் அளித்தார். பீஷ்மர், நாட்டை கவனித்துக் கொண்டதால் அஸ்தினாபுரத்தில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது. 

★சில வருடங்கள் கழிந்தது. திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் இளமை பருவத்தை அடைந்தனர். பீஷ்மர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். ஒரு நன்னாளின் காந்தார நாட்டின் மன்னான சுபலனின் மகள் காந்தாரரிக்கும், திருதிராஷ்டிரனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் கணவருக்கு பிறவியேலேயே கண் இல்லாததால், தானும் தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டாள். சகுனி, காந்தாரியின் சகோதரன் ஆவான்.

★காந்தார நாட்டின் மன்னன் சுபலனின் கடைசி மகன் தான் சகுனி. ஒருமுறை காந்தாரியின் திருமணம் பற்றி சர்ச்சை எழுந்த போது, பீஷ்மர் அதை விசாரித்து வர ஒற்றர்களை அனுப்பினார். காந்தாரிக்கு வரப்போகும் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்பதால், முதலில் காந்தாரிக்கும் ஆட்டுக்கடாவுக்கும் திருமணம் செய்து வைத்து, பிறகு ஆட்டுக்கடாவை பலிக் கொடுத்துவிட்டனர் என பீஷ்மரிடம் ஒற்றர்கள் தெரிவித்தனர். 

★இதையறிந்த பீஷ்மர் மிகவும் கோபங்கொண்டார். ஜோதிடர்கள் ஆட்டுக்கடாவை பலிக் கொடுக்காமல் இருந்திருந்தால் கௌரவர்களின் தந்தை ஆட்டுக்கடாவாகிருப்பார்  எனக் கூறினர். இது பீஷ்மரை இன்னும் அதிக கோபத்தை தூண்டியது. இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தால் ஏளனம் செய்வார்கள் என நினைத்து, சுபலனையும் அவரது குடும்பத்தையும் அழிக்க நினைத்தார். ஆனால் ஒரு குடும்பத்தை அழிப்பது அதர்மம் என்பதை உணர்ந்த பீஷ்மர் அவர்களை சிறை பிடித்தார்.

★ சிறையில் அவர்களுக்கு தினமும் சாப்பிட ஒரு கைப்பிடி உணவு கிடைத்தது. இன்னும் சிறிது உணவு அதிகம் கேட்பதும், மகள் வீட்டிலிருந்து தப்பி ஓடுவதும் அதர்மம் என சுபலன் நினைத்தார். இவ்வாறு பல நாட்கள் கடந்தது. உணவுக்காக சகோதர்களிடம் சண்டை ஏற்பட்டது. இதைப்பார்த்த சுபலன் கடைசியில் ஒரு முடிவு செய்தார். நம்மில் புத்திசாலியானவன் யாரோ அவன் மட்டும் உணவை உண்டு பீஷ்மரை பழி வாங்கட்டும் என்றான். இந்த யோசனைக்கு அனைவரும் சம்மதித்தனர். 

★இளையவனான சகுனியை தேர்ந்தெடுத்தனர். நாட்கள் செல்ல செல்ல பட்டினியால் குடும்பத்தில் ஒவ்வொருவராக இறக்க தொடங்கினர். சுபலன் இறக்கும் தருவாயில் சகுனியின் கணுக்காலை உடைந்தார். சுபலன், மகனே! நீ இனிமேல் நடக்கும்போது நொண்டுவாய். அப்பொழுது கௌரவர் நமக்கு செய்த அநீதி உனக்கு நினைவுக்கு வரும். அவர்களை நீ மன்னிக்க கூடாது. பீஷ்மரை நீ பழி வாங்கு என்றார்.

★ உனக்கு தாயத்தின் மேல் விருப்பம் உண்டு. அதனால் நான் இறந்த பின் என் கை விரல் எலும்புகளை தாயக்கட்டைகளாக செய்துக் கொள். அந்த தாயக்கட்டைகளில் என் கோபம் முழுவதும் நிறைந்திருக்கும். நீ ஒவ்வொரு முறையும் தாயம் விளையாட நீ தாயத்தை உருட்டும்போது நினைத்த எண்ணிக்கை விழும். அதனால் நீ எப்பொழுது வெற்றி பெறுவாய் என்றார். சில நாட்களில் சகுனியின் குடும்பத்தில் அனைவரும் இறந்தனர். சகுனி மட்டும் பிழைத்து இருந்ததால் அவனை சிறையிலிருந்து விடுவித்தனர். சகுனி பீஷ்மரின் நேரடி கவனிப்பில் வாழ்ந்தான்.

நாளை......


மகாபாரதம் - 9/3/2020
~~~~~~~~~~~~~~~~
018

குந்தி

★ யது குலத்தவரான 
சூரசேனர் வசுதேவருடைய தந்தை. வசுதேவர் கிருஷ்ணரின் தந்தை. குந்தி கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரியுமாவார். 
சூரசேனனின் மகளாகிய பிருதை (பிரீதா) என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார். 

★ஒருநாள்  துர்வாச முனிவர் குந்திபோஜ மன்னனின் அரண்மனைக்கு வந்தார்.
தாம் இங்கு ஒரு வருடம் தங்கி பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்யப் போவதாகவும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தரவேண்டுமாய்க் கேட்டுக் கொண்டார். துர்வாச முனிவர் மிகுந்த கோபம் கொண்டவராதலால் அரசன் உடனே ஏற்பாடுகளைச் செய்து மகள் குந்தியையும் முனிவருக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைத்தார்.

★குந்திதேவி முனிவருக்கு மிகுந்த கனிவோடும், பணிவோடும் ஒரு ஆண்டு முழுவதும் பணிவிடை செய்தாள். குந்தியின் விருந்தோம்பல் மற்றும் சேவையில் மகிழ்ந்த முனிவர் அவரது எதிர்காலத்தை பற்றி கணித்து திருமணத்திற்குப் பின்னர் பாண்டு மூலம் குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல் பற்றி அறிந்து கொண்டதால் அந்த துன்பத்தை தீர்க்க வரம் ஒன்றை அளித்தார்.

★ விரும்பிய கடவுளின் மூலம் குழந்தை பெறலாம் என்ற வரத்தை துர்வாச முனிவர் குந்திக்கு அருளினார். இதனால் குந்தி தனது விருப்பப்படி எந்த கடவுளையும் அழைத்து குழந்தை பெற முடியும். முனிவரின் இந்த வரத்தை சோதிக்க முடிவு செய்த குந்தி மந்திரத்தை உச்சரித்து 
சூரிய பகவானை அழைத்தாள்.

★ சூரிய பகவான், மந்திரத்தின் சக்திக்கு கட்டுப்பட்டு,  குந்தியின் முன்னால் தோன்றி அவருக்கு மகனை அளித்தார். அக்குழந்தை சூரியனைப் போன்றே பிரகாசமாக இருந்தது. சூரிய பகவான் இக்குழந்தை பிறக்கும்போதே போர்க்கவசம் மற்றும் காதுவளையங்கள் (குண்டலம்) அளித்து பாதுகாத்தார். குழந்தை பிறந்த பின்பும் குந்தி தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை. ஆயினும் குந்தி, மணமாகாத நிலையில் ஒரு குழந்தை பெற்றால் உலகத்தார் இகழ்ந்து பேசுவார்கள் என அஞ்சி அக்குழந்தையை தனது தோழியான தத்ரியின் துணையுடன்,  ஒரு கூடையில் வைத்து, புனித நதியான கங்கை நதியில் விட்டாள்.

 ★இதைப் பார்த்த சூரிய பகவான் தன் நெருப்பு மழையால் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். கங்கை நதியில் குழந்தை மிதந்து வருவதைக் கண்ட திருதராஷ்டிரரின் தேரோட்டியான அதிரதன் என்பவன் அக்குழந்தையை காப்பாற்றினான். பிறகு அக்குழந்தையை தன் குழந்தையாக பாவித்து, கர்ணன் எனப் பெயர் சூட்டி அன்போடு வளர்த்தான்.

நாளை......

மகாபாரதம் - 10/3/2020
~~~~~~~~~~~~~~~~~
019

பாண்டுவின் திருமணமும்
வனவாசமும


★ திருதிராஷ்டிரனுக்கு கண் பார்வை இல்லாததால் அவன் நாடாளும் தகுதியை இழந்தான். இதனால் பீஷ்மர் இரண்டாவது மகனான பாண்டுவுக்கு அஸ்தினாபுரத்தின் அரசனாக முடிசூட்டி அரியணையில் அமர்த்தினார்.

 ★பாண்டுவிற்கும் திருமண வயது நெருங்கிவிட்டதால், திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் பீஷ்மர். சுயம்வரத்தில் குந்தி, பாண்டுவை தன் மணாளனாக ஏற்று மாலை 
சூட்டினாள். அதன்பின் சில மாதங்கள் கழித்து, மந்தர நாட்டு மன்னனாகிய சல்லியனின் தங்கையான மாத்ரி என்பவளை இரண்டாவது மனைவியாக பாண்டுவிற்கு திருமணம் செய்து வைத்தார். 

★அதன் பின் விதுரருக்கு தேவகன் என்னும் மன்னனின் மகளை திருமணம் செய்து வைத்தார். இவ்வாறாக மூன்று சகோதரர்களுக்கு திருமணம் நடை பெற்றது.

★ திருமணம் முடிந்தபின் பாண்டு அரசாட்சியில் ஈடுப்பட்டான். அஸ்தினாபுரத்திற்கு கப்பம் கட்ட தவறிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்றான். அந்நாடுகளை வென்று கப்பம் செலுத்த வைத்தான். பாண்டுவின் இந்த வீர செயல்கள் பீஷ்மருக்கு மகிழ்ச்சியை தந்தது. நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். 

★மன்னன் பாண்டுவிற்கு வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. அவன் தன் காலத்தின் பெரும்பகுதிகளை காட்டில் கழித்தான். அவனோடு தன் இரண்டு மனைவிமார்களும் காட்டில் தங்கினர். 

★இவ்வாறு ஒரு முறை பாண்டு வேட்டையாடும் போது, இரு மான்கள் இணைந்திருப்பதை கவனிக்காமல் அம்பை செலுத்தி விட்டான். அங்கு மானின் வடிவில் இருந்தவர் கிந்தமா என்ற  முனிவர் ஆவார். பாண்டு எய்த அம்பு மான் ரூபத்தில் இருந்த முனிவரைத் தாக்கியது. இதனால் கோபங்கொண்ட முனிவர், மன்னரை பார்த்து, மன்னா! நான் மான் வடிவில் இருக்கும் கிந்தமா என்ற பெயர் கொண்ட முனிவன். நான் இந்த காட்டில் சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தேன். நான் என் துணையோடு இணைந்திருக்கும்போது நீ என்னை கொன்று விட்டாய்.

★ என்னைப்போலவே நீயும், உன் மனைவியுடன் ஒன்றாக இணையும்போது உன் உயிர் பிரியும். அப்பொழுது உன்னுடன் இருக்கும் மனைவியின் உயிரும் பிரியும். நான் மகிழ்ச்சியாக இருந்த பொழுது நீ என்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டாய். அதேபோல் நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது துயரம் உன்னை வந்தடையும். இது என் சாபமாகும் எனக் கூறி மறைந்தார். முனிவரின் இந்த சாபத்தை நினைத்து அளவற்ற துன்பம் அடைந்தான், மன்னன் பாண்டு. 

★தன் மனைவிமார்களிடம் ஓடி வந்து முனிவரால் ஏற்பட்ட சாபத்தை பற்றிக் கூறினான். இனி மேல் நான் முக்தியை பெற தவ வாழ்க்கை மேற்கொள்ள போகிறேன். என் மனைவிமார்கள், உற்றார் உறவினர்களை துறந்து காய் கனிகளையும் உண்டு, இனி வன வாழ்க்கையை மேற்கொள்ள போகிறேன். இனி அனைத்து உயிரினங்களையும்  என் பிள்ளைகள் போல் கருதி அன்பாக நடந்துக் கொள்வேன். இனி யார் என்னை மதித்தாலும், மதிக்காவிட்டாலும் என் தவ பயணத்தை மேற்கொள்ள போகிறேன் என்றான்.

★ இதைக் கேட்ட பாண்டுவின் மனைவிகள் குந்தி மற்றும் மாத்ரி அளவற்ற துன்பம் அடைந்தனர். அவர்கள், மன்னா! நாங்களும் எங்கள் உணர்ச்சிகளை அடக்கி, ஆடம்பரங்களை துறந்து, கடும் நோன்புகள் இருந்து உங்களுக்கு துணையாக இருப்போம். நீங்கள் எங்களை கைவிட்டீரானால் நாங்கள் அந்த நொடியே உலகத்தை துறப்போம் என்றனர். அதன் பின் பாண்டு தன்னிடமிருந்த கிரீடம், ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் அந்தணர்களுக்கும் வனத்தில் உள்ள குடிமக்களுக்கும் கொடுத்து விட்டான். 

★பிறகு பாண்டு பணியாட்களை அழைத்து, அஸ்தினாபுரத்தின் மன்னனான பாண்டு, தன் இரு மனைவிகளுடன், ஆசை, இன்பம், ஆடம்பரம், செல்வம் என அனைத்தையும் துறந்து கானகம் சென்றுவிட்டார் என தெரிவியுங்கள் என்றான். இச்செய்தியைக் கேட்டு பணியாட்கள் துன்பம் அடைந்து கண்ணீர் விட்டனர். பிறகு அவர்கள் அங்கிருந்து அஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றனர்.

நாளை....

மகாபாரதம் - 11/3/2020
~~~~~~~~~~~~~~~~~
020

யுதிஷ்டிரன் (தருமர்)பிறப்பு...!

★பணியாட்கள் அஸ்தினாபுரம் அரண்மனைக்கு சென்று அடைந்தனர். பாண்டு தவ வாழ்க்கை மேற்கொண்ட செய்தியை அனைவரிடமும் தெரிவித்தனர். அனைவரும் இதை அறிந்து மிகவும் துன்பம் அடைந்தனர். திருதிராஷ்டிரன் தன் தம்பி தவ வாழ்க்கை மேற்கொண்டதை நினைத்து புலம்பி அழுதான். 

★பாண்டு சித்தர்களும், முனிவர்களும் வாழும் மலைகளிலும், காடுகளிலும் சில காலம் தங்கினான். வெகு விரைவிலேயே பாண்டு தன்னை முழுமையாக தவ வாழ்க்கைக்கு அர்ப்பணித்தான். அங்கு வாழும் முனிவர்களும், சித்தர்களும் பாண்டுவை தங்கள் மகன் போல் அன்பாக பார்த்துக் கொண்டனர். அதே போல் பாண்டுவும் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் இயன்ற அளவு பணிவிடை செய்தான்.

★ஒரு அமாவாசை நாளில் முனிவர்கள் பிரம்ம தேவனைக் காண ஒன்று கூடினர். அதைப் பார்த்த பாண்டு அவர்களிடம் சென்று, தாங்கள் அனைவரும் எங்கு செல்கிறீர்கள்? எனக் கேட்டான். முனிவர்கள், மன்னா! பிரம்ம தேவனின் வசிப்பிடத்தில் தேவர்களும், முனிவர்களும் ஒன்று கூடுவர். நாங்கள் அதைக் காண செல்கிறோம் என்றனர். இதைக் கேட்ட பாண்டு, நானும் தங்களுடன் வருகிறேன் எனக் கூறி தனது இரு மனைவிகளுடன் புறப்பட்டான். 

★முனிவர்கள், மன்னா! நாங்கள் வடக்கு நோக்கி செல்லும் பயணத்தில், அடர்ந்த காடுகளும்,  மலைகளும், நதிகளின் கரைகளும், ஆழமான குழிகளும், மனிதர்களால் செல்ல முடியாத சில பகுதிகளும் இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் பனிகளால் காய்கனிகள் மூடப்பட்டிருக்கும், நாம் பார்த்திடாத பல மிருகங்களும் இருக்கும், அத்தகைய இடத்தில் காற்று மட்டுமே செல்ல முடியும்.

★இத்தகைய இடத்தில் பெரும் முனிவர்களும், சித்தர்களும் மட்டுமே செல்ல முடியும். அங்கு இளவரசிகள் எவ்வாறு வருவார்கள். அந்த இடங்களை இவர்கள் எவ்வாறு கடப்பார்கள். அதனால் ஏற்படும் துன்பங்கள் இவர்கள் எப்படி தாங்குவார்கள். அதனால் மன்னா! நீங்கள் எங்களுடன் வர வேண்டாம் என்றனர். 

★பாண்டு, முனிவர்களே! நான் மகனற்றவன். நான் முனிவர்களுக்கும், சக மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் ஆற்ற வேண்டிய கடன்களை தீர்த்துவிட்டேன். முன்னோர்கள், நாம் பிள்ளைகள் பெறுவதாலும், ஈமக்கடன்கள் செய்வதாலும் கடன் அடைபடுகின்றனர். ஆனால் நான் இந்த கடனில் இருந்து விடுபடவில்லை. அதனால் நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். என் தந்தை என்னை பெற்றெடுத்தை போல நானும் பிள்ளைப்பேறு பெறுவேனா? எனக் கேட்டான்.

★முனிவர்கள், மன்னா! உனக்கு திறமை வாய்ந்த, தேவர்கள் போன்ற சந்ததி உள்ளது. இதை நாங்கள் ஞான கண்ணால் காண்கிறோம். உன் சந்ததி மக்கள் மிகுந்த திறமையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள் என்றனர். முனிவர்கள் கூறியதைக் கேட்ட பாண்டுவின் மனதில், மானாக இருந்த கிந்தமா முனிவரால் ஏற்பட்ட சாபம், அவன் மனதை வருத்தியது. 

★அதன் பிறகு பாண்டு குந்தியை தனியாக அழைத்துச் சென்று, குந்தி! நான் முனிவரின் சாபத்தால் நம் சந்ததி உருவாக தடையாகி விட்டேன். நம் சந்ததி தழைக்கவே தழைக்காதா? வாரிசு உருவாகாதா? என மனம் கலங்கி மிகவும் வருத்தப்பட்டான்.

★ குந்தி, ஒருவருக்கு வாழ்க்கையில் புத்திரர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. புத்திரர் கொடுக்கும் திறனை இழந்த நான், குழந்தைகளை காண வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதுவும் செய்ய முடியாத துர்பாக்யசாலியாகி விட்டேன்.

★குந்தி, மன்னா! என்னை மன்னியுங்கள்.நான் இளமைப் பருவத்தில் 
துர்வாச முனிவருக்கு 
சேவை செய்தேன். அந்த சேவையினால் மகிழ்ந்த துர்வாச முனிவர் எனக்கு 
ஒரு வரம் கொடுத்தார். தேவர்களில் எவரேனும் ஒருவரை மனதில் நினைத்து மந்திரத்தை கூறினால் அவர்கள் மூலம் குழந்தைகள் பிறக்கும் என்பது தான். இன்று உங்களின் விருப்பத்திற்காக நீங்கள் அனுமதி கொடுத்தால் அந்த வரத்தை நான் உபயோகிக்கிறேன் என்றாள். 

★அதை கேட்ட பாண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.குந்தி நல்ல காரியம் செய்தாய். நாம் இந்த வரத்தை இப்போது உபயோகிக்கலாமா எனக் கேட்டான். நான் இப்பொழுது தேவர்களில் யாரை அழைப்பது என்று சொல்லுங்கள் மன்னா என்று குந்தி கேட்க, குந்தியே! நமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள தர்மதேவனை அழைப்பாயாக. தர்மதேவனால் பெறப்படும் மகன் நீதிநெறி தவறாமல், ஒழுக்கத்திற்கு அதிபதியாக இருப்பான். அதனால் மனதார தர்மதேவனை நினைப்பாயாக என்றான். குந்தி, தங்கள் கட்டளையே எனது விருப்பம் என்றாள்.

★அங்கு அஸ்தினாபுரத்தில் காந்தாரி, கருவுற்று ஒரு வருடம் ஆகியிருந்தது. ஆனால் குழந்தை பிறப்பது காலதாமதமாகியது. அதனால் அங்கு அனைவரும் கவலையோடு இருந்தனர்.

குந்தி, தர்மதேவனை மனதில் நினைத்து மந்திரத்தை உச்சரித்தாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தர்மதேவன் குந்தி முன் தோன்றி அழகிய மகனை கொடுத்தான். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தை மனிதர்களில் சிறந்தவனாகவும், அறம் சார்ந்தவர்களில் முதன்மையானவனாகவும், வீரமும், பேச்சில் உண்மையும் கொண்டு இந்தப் பூமியை ஆள்வான். பாண்டுவின் முதல் குழந்தை யுதிஷ்டிரன் என்ற பெயரால் அறியப்படுவான் என்றது.

★பிறந்த குழந்தைக்கு யுதிஷ்டிரன் என பெயரிட்டு முனிவர்களும் சித்தர்களும் ஆசிர்வதித்தனர். அந்த குழந்தையே பின்னாளில் தருமர் என அன்புடன் அழைக்கப்பட்டது.

நாளை....

மகாபாரதம் - 12/3/2020
~~~~~~~~~~~~~~~~~
021

பீமன்,அர்ஜுனன் மற்றும் நகுலன் சகாதேவன் பிறப்பு


★அஸ்தினாபுரத்தில் அனைவருக்கும் பாண்டு புத்திரன் யுதிஷ்டிரன் பிறந்த செய்தி வந்தடைந்தது. சத்யவதி பீஷ்மர் உட்பட அனைவரும் மிக்க சந்தோஷமடைந்தனர். தனக்கு குழந்தை பிறக்கவில்லையே என நினைத்த திருதிராஷ்டிரன் கோபம் வருத்தம் ஆத்திரம் ஆகியவை கொண்டாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்தோஷப்படுவது போல இருந்தான்.

★சில மாதங்கள் கழிந்தன.
குழந்தை யுதிஷ்டிரன் தனது மழலை சொற்கலாலும் நடத்தையாலும் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். ஓர்நாள்
 பாண்டு, குந்தியிடம் சத்தியர்கள் பலம்மிக்கவனாக இருக்க வேண்டும். அதனால் பலம் பொருந்திய ஒரு மகனை கேட்பாயாக என்றான். 

★குந்தி, மனதில் வாயுதேவனை நினைத்து மந்திரத்தை உச்சரித்தாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டு வாயு தேவன் குந்தி முன் தோன்றி பலம் பொருந்திய மகனை கொடுத்தார். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தை பெரும் பலசாலியாக இருப்பான். இவன் பீமன் என்று அறியப்படுவான் என்றது. குழந்தை பீமனை அனைவரும் வாழ்த்தினர். நாட்கள் ஓடின. பீமன் அண்ணன் யுதிஷ்டரனுடன் சேர்ந்து கானகத்தில் விளையாடி மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலம் கடந்தது.

★அதன் பின் பாண்டு தனக்கு உலகப் புகழ் பெறும் மிகச் சிறந்த மகனை நான் எப்போது அடையப்போகிறேன். இந்திரன், தேவர்களுக்குத் தலைவன் ஆவான். நிச்சயமாக, அவனே அளவிட முடியாத பலமும், சக்தியும், வீரமும், புகழும் கொண்டவன். இந்திரனை திருப்திப்படுத்தி, அவனைப் போன்ற பெரும் பலம் கொண்ட மகனை நான் பெறுவேன் என தீர்மானித்தான். பிறகு குந்தியை ஒரு வருடம் இந்திரனுக்காக நோன்பு இருக்க செய்தான். 

★அதன் பிறகு குந்தி மனதில் இந்திரனை நினைத்து மந்திரத்தை உச்சரித்தாள். இந்திரன் அவர்கள் முன் தோன்றி உன் நோன்பு வெற்றி பெற்றது. உனக்கு ஒரு மகனை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறி ஒரு மகனை கொடுத்தார். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தை மிகுந்த திறமை உடையவனாகவும், சாதனை புரிபவனாகவும், பெரும் புகழை அடைபவனாகவும் இருப்பான். இவன் அர்ஜூனன் எனப் பெயரோடு அறியப்படுவான் என்றது.மூன்று சிறுவர்களும் வனத்தில் விளையாடிக் கொண்டு காலம் கழித்தனர்.

★மூன்று குழந்தைகளுக்கு பாண்டு தந்தையானதையும் அச்சிறுவர்களின் பெருமையையும் கேள்விப் பட்ட திருதராஷ்டிரன் மிகுந்த கோபமும் பொறாமையும் அடைந்தான். காந்தாரி கர்பம் தரித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என வருந்தினான். சில நாடகளிலேயே காந்தாரி நூறு குழந்தைகளுக்கு தாயானாள். இது பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.இப்போது மீண்டும் பாண்டு உள்ள வனத்திற்கு செல்வோம்.

★ திருதிராஷ்டிரனனுக்கு நூறு குழந்தைகள் பிறந்த செய்தி பாண்டுவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்து பாண்டுவும், அவனின் மனைவிமார்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு மட்டும் மனதில் கலக்கம் இருந்தது. மாத்ரி பாண்டுவிடம், மன்னவரே! காந்தாரி நூறு மகன்களை பெற்று விட்டாள். குந்தியும் தங்களுக்கு மகன்களை பெற்றுக் கொடுத்து விட்டாள். ஆனால் என்னால் தங்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கவில்லையே என்பதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றாள். 

★அதன் பின் பாண்டு குந்தியிடம் சென்று, தேவி! மாத்ரி தன்னால் குழந்தைப்பேறு கிடைக்கப் பெறவில்லை என்பதை நினைத்து மிகவும் வருத்தம் கொள்கிறாள் என்றார்.
இதை அறிந்த குந்தி மாத்ரியை அழைத்து, மாத்ரி! நீ மனதில் தேவர்கள் யாரேனும் நினைத்து நான் சொல்லும் மந்திரத்தை கூறு என அம்மந்திரத்தை கூறினாள். குந்தி கூறியதை போலவே, மாத்ரி மனதில் அஸ்வினி இரட்டையர்களை நினைத்தாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்ட அஸ்வினி இரட்டையர்கள் மாத்ரி முன் தோன்றி நகுலன், சகாதேவன் என்னும் இரட்டை குழந்தைகளை அருளினர். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தைகள் அழகிலும், வலிமையிலும், சக்தியிலும் ஒப்பற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் நகுலன், சகாதேவன் என்னும் பெயரோடு அன்போடு அழைக்கப்படுவார்கள் என்றது.

★இப்போது பாண்டுவிற்கு ஐந்து குழந்தைகள் ஆயிற்று.
பாணடுவின் புத்திரர்கள் என்பதால் பாண்டவர்கள் என அழைக்கப் பட்டனர்.

நாளை......


மகாபாரதம் - 13/3/2020
~~~~~~~~~~~~~~~~~
022

துரியோதனன் உட்பட கௌரவர்கள் பிறப்பு.


★ காந்தாரி, சிவனை குறித்து செய்த தவத்தின் பலனாக 
 நூறு குழந்தைகள் பெறுவதற்கான வரத்தை பெற்றிருந்தாள். கர்பம் தரித்து இரண்டு வருடங்கள் கழித்த போதும் அவளால் குழந்தையை ஈன்றெடுக்க முடியவில்லை. 

★திருதராஷ்டிரன், பீஷ்மர் முதலிய தலைவர்கள் அவையில் கூடியிருந்தனர். அப்பொழுது ஒற்றர்கள் அங்கு வந்து பாண்டுவுக்கு மூன்றூ மகன்கள் பிறந்துள்ளார்கள். அவர்களின் பெயர்கள் யுதிஷ்டிரன் பீமன் அர்ஜுனன் எனக் கூறினான். இதைக்கேட்டு திருதராஷ்டிரன் கோபம் கொண்டான். பீஷ்மர் மகிழ்ச்சி அடைந்தார். 

★திருதராஷ்டிரன் கோபத்துடன் காந்தாரியின் மாளிகைக்கு சென்றான். இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது. இன்னும் உன்னால் எனக்கொரு மகனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. நீ சிவனிடம் இருந்து பெற்ற வரம் எங்கே போனது என்று கேட்டான் திருதராஷ்டிரன்.

★ அங்கு வனத்தில் பாண்டு, மக்களைப் பெற்று மகிழ்ச்சியில் இருக்கிறான். ஆனால் எனக்கு அந்த மகிழ்ச்சியை எப்போது தரப் போகிறாய் எனக் கோபத்துடன் கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். காந்தாரி, திருதிராஷ்டிரனின் இந்த கடுஞ்சொற்களை கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்று துன்பமடைந்தாள். அப்பொழுது அவளுக்கு குழந்தை பிண்டமாக பிறந்தது. 

★இச்செய்தி திருதராஷ்டிரனுக்கு தெரிவிக்கப்பட்டது. குழந்தை பிண்டமாக பிறந்திருப்பதை கேட்ட திருதராஷ்டிரன் பெரும் அதிர்ச்சி அடைந்தான். பிறகு திருதராஷ்டிரன், பீஷ்மரிடன் சென்று, காந்தாரி பிண்டத்தை குழந்தையாக பெற்றுள்ளாள். எனக்கு இனியும் குழந்தை பிறக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை எனக் கூறினான். இதைக் கேட்ட பீஷ்மர் பெரிதும் கவலைக் கொண்டார். உடனே தன் தாய் கங்கா தேவியிடம் சென்று கூறினார். 

★கங்காதேவி, பீஷ்மா! சிவனின் வரம் என்றும் பொய்யாகாது. ஏற்கனவே குழந்தைகள் நூறு விதைகளாக பிறந்து விட்டனர். அவர்களை மனிதர்களாக பிறக்க வைக்க வியாசரால் மட்டுமே முடியும் என்றாள். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பீஷ்மர், திருதராஷ்டிரனிடம் சென்று வியாசரால் மட்டுமே நூறு குழந்தைகளை நமக்கு தர முடியும் எனக் கூறினார். அதன் பின், சத்தியவதியிடம் செய்தியை தெரிவித்து வியாசரை வரவழைத்தனர்.

★வியாசர் அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்தார். வியாசரை பார்த்த அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். வியாசர், நூறு குழந்தைகளுக்கான 
பூஜையை ஆரம்பித்தார். 
நூறு பானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. வியாசர், அந்த பானைக்களுக்கு பூஜையை செய்தார். பூஜை முடிந்த பின், பலத்த இடியும், காற்றும் மின்னலும் வீசியது. இதைக் கண்டு அனைவரும் பயந்தனர். அப்பொழுது ஒரு பானையிலிருந்து ஒரு குழந்தை வெளிவந்தது. அக்குழந்தையை வியாசர் காந்தாரியிடம் கொடுத்தார்.

★ அதன் பின் வியாசர் இவ்வாறே மீதமுள்ள அனைத்து பானைகளில் இருந்தும் ஒவ்வொரு குழந்தை வெளிவரும் எனக் கூறிவிட்டு அதேபோல வரிசையாக வெளிவந்த குழந்தைகளை காந்தாரியிடம் கொடுத்து பின் அங்கிருந்து சென்றார். குழந்தை பிறந்தது என்பதை அறிந்து திருதராஷ்டிரனின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். குழந்தையை கையில் வாங்கிய திருதராஷ்டிரன், அக்குழந்தைக்கு துரியோதனன் என பெயர் 
சூட்டினான். 

★வியாசர் போகும் முன் பீஷ்மரிடம், இக்குழந்தையினால் இந்த நாட்டிற்கு ஆபத்து ஏற்படக் கூடும். அதற்கான அறிகுறி தான் இந்த இடியும், காற்றும் மின்னலும் என்றார். இதைக் கேட்ட பீஷ்மர் மிகவும் வருத்தம் அடைந்தார்.

★ துரியோதனனுக்குப் பின் இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு துச்சாதனன் எனப் பெயரிட்டனர். மற்றைய குழந்தைகளின் பெயர்கள் நாளை பதிவிடுகிறேன்.

★அதன் பின் பீஷ்மர் திருதராஷ்டிரனிடம், திருதராஷ்டிரா, முதல் குழந்தையினால் நமது நாட்டிற்கும், ஆட்சிக்கும் ஆபத்துக்கள் ஏற்படப் போகின்றன. அதனால் நீ துரியோதனை கொன்றுவிடு எனக் கூறினார். திருதராஷ்டிரன், எனக்கு வெகு நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. என் குழந்தையை நான் எவ்வாறு கொல்வது. என்னால் கொல்ல முடியாது எனக் கூறினார். 

★பீஷ்மர் திருதராஷ்டிரனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினார். கடைசியில் சகுனியின் சூழ்ச்சியாலும், திருதராஷ்டிரனும் காந்தாரியும்  குழந்தையின் மேல் வைத்த பாசத்தாலும், குழந்தையை கொல்ல முடியாது எனக் கூறினான்.

நாளை.......

மகாபாரதம்  – 14/3/2020
~~~~~~~~~~~~~~~~~~
023


கௌரவர்கள் 100 பேர்களின் பெயர்கள்

★அதன் பின் பீஷ்மர் திருதராஷ்டிரனிடம், திருதராஷ்டிரா, முதல் குழந்தையினால் நமது நாட்டிற்கும், ஆட்சிக்கும் ஆபத்துக்கள் ஏற்படப் போகின்றன. அதனால் நீ துரியோதனை கொன்றுவிடு எனக் கூறினார். திருதராஷ்டிரன், எனக்கு வெகு நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. என் குழந்தையை நான் எவ்வாறு கொல்வது. என்னால் கொல்ல முடியாது எனக் கூறினார். 

★பீஷ்மர் திருதராஷ்டிரனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினார். கடைசியில் சகுனியின் சூழ்ச்சியாலும், திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரி  குழந்தையின் மேல் வைத்த பாசத்தாலும், குழந்தையை கொல்ல முடியாது எனக் கூறினான்.

★கௌரவர்கள்  
துரியோதனன்  உட்பட 100 சகோதரர்களின் பெயர்களும், 1 சகோதரியின் பெயரும் கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்து தெரிந்து கொள்ளுங்கள். 
.
இதோ அந்த கௌரவ சகோதரர்களின் பெயர்கள்
.
1 துரியோதனன்
.
2 துச்சாதனன்
.
3 துஸ்ஸகன்
.
4 துஸ்ஸலன்
.
5 ஜலகந்தன்
.
6 சமன்
.
7 சகன்
.
8 விந்தன்
.
9 அனுவிந்தன்
.
10 துர்தர்ஷன் 
.
11 சுபாகு
.
12 துஷ்ப்ரதர்ஷன்
.
13 துர்மர்ஷன்
.
14 துர்முகன்
.
15 துஷ்கர்ணன்
.
16 விகர்ணன்
.
17 சலன்
.
18 சத்வன்
.
19 சுலோசன்
.
20 சித்ரன்
.
21 உபசித்ரன்
.
22 சித்ராக்ஷன்
.
23 சாருசித்திரன் 
.
24 சராசனன்
.
25 துர்மதன்
.
26 துர்விகாஷன்
.
27 விவில்சு
.
28 விகடிநந்தன்
.
29 ஊர்ணநாபன்
.
30 சுநாபன்
.
31 நந்தன்
.
32 உபநந்தன்
.
33 சித்ரபாணன்
.
34 சித்ரவர்மன்
.
35 சுவர்மன்
.
36 துர்விமோசன்
.
37 அயோபாகு
.
38 மகாபாகு
.
39 சித்ராங்கன் 
.
40 சித்ரகுண்டலன்
.
41 பீமவேகன்
.
42 பீமபேலன்
.
43 வாலகி
.
44 பேலவர்தன்
.
45 உக்ராயுதன்
.
46 சுஷேணன்
.
47 குந்தாதரன்
.
48 மகோதரன்
.
49 சித்ராயுதன்
.
50 நிஷாங்கீ
.
51 பாசி 
.
52 வ்ருந்தாரகன்
.
53 த்ரிதவர்மன்
.
54 த்ருதக்ஷத்ரன்
.
55 சோமகீர்த்தி
.
56 அந்துதரன்
.
57 த்ருதசந்தா
.
58 ஜராசந்தன்
.
59 சத்யசந்தன்
.
60 சதாசுவக்
.
61 உக்ரஸ்ரவஸ்
.
62 உக்ரசேனன் 
.
63 சினானி
.
64 துஷ்பராஜா
.
65 அபராஜிதன்
.
66 குந்தசாயி
.
67 விசாலாக்ஷன்
.
68 துராதரன்
.
69 த்ருதஹஸ்தன்
..
70 ஸுஹஸ்தா
.
71 வாதவேகன்
.
72 சுவர்ச்சன்
.
73 ஆதித்யகேது
.
74 பஹ்வாசி
.
75 நாகதத்தன்
.
76 உக்ரசாயி
.
77 கவசி
.
78 க்ரதாணன்
.
79 குந்தை
.
80 பீமவிக்ரன்
.
81 தனுர்தரன்
.
82 வீரபாகு
.
83 அலோலுமன்
.
84 அபயா
.
85 த்ருதகர்மாவு
.
86 த்ருதரதாஸ்ரயன்
.
87 அநாத்ருஷ்யன்
.
88 குந்தபேடி
.
89 விராவை
.
90 சித்ரகுண்டலன்
.
91 ப்ரதமன் 
.
92 அமப்ரமாதி
.
93 தீர்க்கரோமன்
.
94 சுவீர்யவான்
.
95 தீர்க்கபாகு
.
96 சுஜாதன் 
.
97 காஞ்சனத்வாஜன்
.
98 குந்தாசி
.
99 விராஜஸ்
.
100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்)
.
101 துர்ச்சலை (என்ற பெயருடைய ஒரே ஒரு சகோதரி ஆவாள்- இவள் கணவர்தான் மகாபாரதப்போரில் அபிமன்யு மரணமடைய காரணமாக இருந்த ஜெயத்ரதன்)

இவர்களில் விகர்ணன்.மற்றூம் யுயுத்ஸு மட்டும் சிறிது நல்லவர்கள். அடிக்கடி துரியோதநனுக்கு நீதி நேர்மை பற்றி எடுத்தரைப்பவர்கள். மகாபாரதப் போரில் யுயுத்ஸு மட்டும் இறக்கவில்லை. அவன் குணத்திற்க்காக பீமன் அவனை கொல்லவில்லை.

நாளை.........


மகாபாரதம் - 15/3/2020
~~~~~~~~~~~~~~~~~
024

முதல் சதி...!

★ பாண்டுவிற்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். வனத்தில் பாண்டுவும் அவனின் மனைவிகள் இருவரும், குழந்தைகளை அன்போடு வளர்த்து வந்தனர். இவ்வாறு சில வருடங்கள் கழிந்தது. 

★ஒரு சமயம் பாண்டுவும், மாத்ரியும் வனத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாண்டு, மாத்ரியின் அழகை கண்டு மயங்கினான். மாத்ரியை நெருங்க முயன்றான். மாத்ரி எவ்வளவோ தடுக்க முயன்று
தோற்றாள். பாண்டுவிற்கு முனிவர் கொடுத்த சாபம் நினைவிற்கு வரவில்லை. அழகில் மயங்கிய பாண்டு, மாத்ரியுடன் இணைந்தான். அப்பொழுது முனிவர் கொடுத்த சாபத்தினால் இருவரின் உயிரும் அந்த இடத்திலேயே பிரிந்தது.

 ★ இதை அறிந்த குந்தி, ஓடிச்சென்று பாண்டுவையும் மாத்ரியையும் கண்டாள். அவர்களின் நிலையைக் கண்டு அளவற்ற துன்பம் அடைந்தாள். பிறகு அங்கிருக்கும் முனிவர்கள் அனைவருக்கும் பாண்டு இறந்த விட்டான் என்னும் செய்தி பரவியது. இதை அறிந்த முனிவர்கள், பாண்டுவிற்காக மிகுந்த வருத்தம் கொண்டனர். அவர்கள் குந்தியிடம், தேவி! பாண்டு பாவமற்றவன். அவன் மன்னனாக திகழ்ந்து, ஒப்பற்ற தேவர்களின் மகன்களை உனக்கு கொடுத்து சென்றிருக்கிறான் என ஆறுதல் கூறினர். 

★இச்செய்தி அஸ்தினாபுரத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
 பாண்டுவும், மாத்ரியும் இறந்துவிட்ட செய்தியை அறிந்த அனைவரும் அளவற்ற துன்பம் அடைந்தனர்.

★ பீஷ்மர் பாண்டுவை எண்ணி கண்கலங்கினர். அப்பொழுது பீஷ்மர், திருதிராஷ்டிரா! தன் கணவனை இழந்துவிட்ட குந்தி தன் ஐந்து குழந்தைகளை எவ்வாறு தனியாக வளர்ப்பாள். அதனால் குந்தியையும், அவளின் மகன்களையும் அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும் என்று கட்டளையாக கூறினார். திருதிராஷ்டிரனும், பீஷ்மரின் கட்டளைக்கு ஏற்ப அவர்களை அவ்வாறே அழைத்து வரலாமெனக் கூறினார். அதன் பிறகு அஸ்தினாபுரத்தில் இருந்து அனைவரும், பாண்டு மற்றும் மாத்ரியின் ஈமச்சடங்கில் கலந்துக் கொள்ள சென்றனர். 

★வனத்தில் முனிவர்கள் முன்னிலையில், சிறு பிள்ளைகளான பாண்டுவின் புதல்வர்கள் ஐவரும் ஈமச்சடங்குகளை முறைப்படி செய்தனர். சிறுவர்கள் ஈமச்சடங்குகளை செய்வதைப் பார்த்த அனைவரும் கண் கலங்கினர்.

★அதன் பிறகு பீஷ்மர், குந்தியையும், அவளின் மகன்களையும் அஸ்தினாபுர  அரண்மனைக்கு அழைத்து வந்தார். அவர்களை தனது பாதுகாப்பிலேயே வைத்து இருந்தார். 

★திருதிராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் தன் மகனே நாடாள வேண்டும்,  பாண்டுவின் குழந்தைகள் நாடாள கூடாது என்னும் எண்ணம் மனத்தில் இருந்தது. அரண்மனைக்கு வந்த குந்தியிடம், திருதிராஷ்டிரனும், காந்தாரியும் மனதில் வஞ்ச எண்ணம் இருந்தாலும் குந்தியின் முன் அன்போடு நடந்துக் கொண்டனர். பாண்டவர்களும், கௌரவர்களும் சிறு வயது என்பதால்  அன்போடு விளையாடினர். ஆனால் அவர்கள் விளையாடும் விளையாட்டில் அர்ஜூனனும், பீமனும் மட்டுமே வெற்றி பெறுவது துரியோதனனுக்கு கோபத்தை மூட்டியது.

★ இதனால் துரியோதனனுக்கு பாண்டவர்கள் மேல் வெறுப்பும், கோபமும் அதிகமானது.  துரியோதனன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாண்டவர்களை கேலியும், கிண்டலும் செய்வான். பாண்டவர்களின் மனதில் துன்பம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். பீமனின் ஆற்றல் துரியோதனனுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. பீமனுக்கு இணையானவன் யாரும் இல்லை என்பதால் 
சூழ்ச்சியால் வெல்ல முயன்றான். அதற்காக மாமா  சகுனியின் உதவியை நாடினான். சகுனி, பீமன் சாப்பாட்டு பிரியன் என்பதால் அவனுக்கு கொடுக்கும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்தால் அவன் இறந்து விடுவான். அதன் பிறகு மீதம் இருக்கும் சகோதரர்களை நம் அடிமைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறினான்.

★ சகுனியின் யோசனையைக் கேட்ட துரியோதனன் ஒரு திட்டம் தீட்டினான். அடுத்த நாள் அனைவரும் நந்தவனத்தில் விளையாட்டிக் கொண்டிருந்தனர். அங்கு பீமன், நகுலன், சகாதேவன் மூவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய நேரம் ஆனப் படியால் பீமனுக்கு பசி ஏற்பட்டது. மற்ற சகோதரர்கள் வந்தவுடன் ஒன்றாக சாப்பிடலாம் என நினைத்து விளையாடினான். 

★துரியோதனன், நதி ஓரமாக ஒரு குடிலை அமைத்து, அங்கு வித விதமான சுவையான உணவு பண்டங்களை வைத்திருந்தான். அதில் அவன் பாயசத்தில் விஷத்தை கலந்திருந்தான். அதன் பிறகு துரியோதனன் விளையாடிக் கொண்டிருந்த பீமனிடம் சென்று, அன்பாக பேசினான். ஆனால் பீமன், துரியோதனை கண்டவுடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

★ துரியோதனன்! சகோதரா பீமா, நான் செய்த தவறுகளுக்காக மிகவும் வருந்துகிறேன். அறியாமல் செய்த தவறாகையால் என்னை மன்னித்து விடு. அதற்காக உனக்கு விருந்தளிக்க விரும்புகிறேன். அதில் உனக்கு பிடித்தமான நிறைய உணவுகள் பண்டங்களை வைத்துள்ளேன். நீ என்னுடன் வந்து சாப்பிடு எனக் அழைத்தான். 

★துரியோதனனின் பாசாங்கை நம்பிய பீமன், நான் என் சகோதரர்கள் இல்லாமல் எவ்வாறு உண்பது? எனக் கேட்டான். அப்பொழுது நகுலனும், சகாதேவனும், அண்ணா! இங்கேயே காத்திருங்கள் நாங்கள் சென்று அழைத்து வருகிறோம் எனக் கூறி விட்டு சென்றனர். அதன்பின் துரியோதனன், பீமனை குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பண்டங்களை கண்ட பீமனுக்கு பசி இன்னும் அதிகமானது. அப்பொழுது துரியோதனன் விஷம் கலந்த பாயசத்தை எடுத்து பீமனிடம் கொடுத்தான்.

 ★பீமன் அப்பாயசத்தை வாங்கி அருந்தினான். பாயசத்தை அருந்திய சிறிது நேரத்தில் பீமன் மயங்கி விழுந்தான். உடனே துரியோதனன், மறைத்து வைத்திருந்த கயிற்றை எடுத்து பீமனின் கைகளையும், கால்களையும் கட்டினான். பீமனின் வாயையும் துணியால் வைத்து அடைத்தான். அதன் பின் சகுனியின் உதவியால் பக்கத்தில் இருக்கும் நதியில் போட்டுவிட்டனர். பீமனின் உடல் நதியின் ஆழத்திற்கு சென்றது.

★ஒழிந்தான் பீமன் என்று சிரித்தபடியே சகுனி மற்றும் தன் சகோதரர்களுடன் அவ்விடத்தில் இருந்து சென்றான துரியோதனன்.

நாளை.....


மகாபாரதம் - 16/3/2020
~~~~~~~~~~~~~~~~~
025

சதியின் பலன் - பீமனுக்கு பலம்...!

 ★மன்னிப்பு கேட்ட துரியோதனன் நம்மை விருந்துக்கு அழைத்துள்ளான்.உங்களை அழைக்கவே வந்தோம் வாருங்கள் என நகுலனும் சகாதேவனும் கூறக்கேட்ட யுதிஷ்டிரன் "இது சரியில்லையே எனக்கு சிறிது சந்தேகமாக உள்ளது. எதற்கும் சென்று பார்க்கலாம் வாருங்கள்" எனக்கூறி அர்சுனனையும் அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திற்க்கு வந்தான்.

★பீமனை அழைத்துச் செல்ல சகோதரர்கள் நால்வரும் அங்கு வந்தனர். பீமனை அங்கு காணாததால் அவனை அனைத்து இடத்திலும் தேடிச் சென்றனர். பீமனை காணாமல் அனைவரும் கவலையில் இருந்தனர். ஒரு வேளை பீமன் நமக்கு முன் அரண்மனைக்கு சென்றிருக்கலாம் என நினைத்து அனைவரும் அரண்மனைக்கு வந்தனர். அரண்மனைக்கு வந்த சகோதரர்கள் தன் தாய் குந்தியிடம் பீமன் வந்துவிட்டானா? எனக் கேட்டனர். குந்தி, பீமன் இன்னும் இங்கு வரவில்லை. நீங்கள் நால்வர் மட்டும் இங்கு வந்துள்ளீர்கள். பீமன் எங்கே? என பதற்றத்துடன் கேட்டாள். அவர்கள் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினர்.

★ இதைக் கேட்டு வருத்தமடைந்த குந்தி நீங்கள் அனைவரும் பீமனை தேடி கண்டுபிடித்து என்னை வந்து பாருங்கள். இல்லையேல் யாரும் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என கோபத்தில் கூறிவிட்டாள். சகோதரர்கள் அனைவரும் பீமனை தேடச் சென்றனர். குந்தி விதுரரை அழைத்து, பீமனை காணவில்லை. எனக்கு துரியோதனன் மேல் தான் சந்தேகம் இருக்கிறது. ஏனேனில் துரியோதனன் அரியணை ஏற விரும்புகிறான். அதுமட்டுமல்லாமல் பீமனை அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவன், பீமனை ஏதேனும் செய்து இருப்பானோ? என தன் சந்தேகத்தைக் கூறினாள்.

★ விதுரர், தேவி! தாங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. துரியோதனனை பற்றி வேறு எவரிடமும் இவ்வாறு கூறாதீர்கள். பீமன் நிச்சயம் திரும்பி வருவான். நீங்கள் கவலைக் கொள்ளாமல் இருங்கள் என ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். விதுரன் மூலமாக விஷயமறிந்த பீஷ்மரும் கவலைப்பட்டு பீமனைத் தேட ஆட்களை அனுப்பினார்.

★ பீமனை காணாமல் பாண்டவர்களும் பீஷ்மரும் விதுரனும் கலங்குவதையும் பீமனைத் தேடுவதையும் பார்த்த துரியோதனாதிகள் மனதிற்குள் மிகுந்த சந்தோஷப்பட்டனர். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவர்களும் வருத்தப்பட்டு தேடுவதுபோல நடித்தனர்.பீமனை எங்கு தேடியும் கிடைக்காததால் சகோதரர்கள் வருத்தத்துடன் திரும்பினர். 

★பீமனின் உடல் நதிக்கு அடியில் இருக்கும் நாகலோகம் வரைச் சென்றது. அங்கிருந்த விஷப்பாம்புகள் பீமனின் உடலில் ஏறி அங்கும் இங்கும் கடித்தன. பீமனின் உடலில் இருந்த விஷம், பாம்புகளின் விஷத்தால் முறிந்து போனது. அதன் பிறகு பீமன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தன் உடலின் மேல் இருந்த பாம்புகளை தூக்கி எறிந்தான்.

★பாம்புகள், பீமனை மடக்கி தங்கள் அரசனிடம் அழைத்துப் சென்றன. பாம்புகள், பாம்புகளின் மன்னனான வாசுகியிடம், மன்னா! விஷம் அருந்திய இவன் நீரில் மூழ்கி இங்கு வந்தான். இவனை நாங்கள் கடித்ததால் உணர்வு பெற்று, எங்களை துன்புறுத்துகிறான். நீங்கள் தான் இவனை யார்? என்று விசாரிக்க வேண்டும் என்றனர். பீமனிடம் விசாரித்த நாகராஜன் அவன் பிறப்பைப் பற்றியும் ஶ்ரீ கிருஷ்ணரின் உறவினர் என்பதையும் அறிந்தான். பீமனின் ஆற்றலைக் கண்டு நாகராஜன் மகிழ்ச்சி அடைந்தான். பீமன் சாதிக்க பிறந்தவன் என்பதை அறிந்துக் கொண்டான்.

★ பின் நாகராஜன் பீமனிடம், பீமா! எங்களிடம் பலம் கொண்ட அமிர்தகலசங்கள் இருக்கின்றன. உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கலாம் எனக் கூறி கொடுத்தார். பீமன் நாகராஜன் கொடுத்த எட்டு குடம் அமிர்தத்தையும் ஒரே மூச்சில் குடித்தான்.
அமிர்தத்தை குடித்த பீமனுக்கு புது பலம் பெற்றது போல் இருந்தது.  நாகங்கள் அவனுக்கு நீந்தவும், மூச்சு அடக்கவும் கற்றுக் கொடுத்தன.

★அதன் பின் பீமன், வாசுகியிடம் இருந்து விடைப்பெற்றான். நதியின் அடியில் இருந்து பீமன் கரையேறி அரண்மனையை சென்று அடைந்தான். பீமனை கண்ட அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். பீமன் உயிருடன் திரும்பி வந்ததை பார்த்த துரியோதனன் மிகுந்த கோபம் அடைந்தான். சகுனி, மருமகனே! நீ கோபப்படாதே. இவனுடன் சேர்த்து மற்ற சகோதரர்களையும் கொல்வதற்கான வழியைப் பார்ப்போம் என்றான்.

★ தனக்கு விஷம் கொடுத்து நதியில் தன்னை எறிந்த துரியோதனனை மிகவும் கோபங்கொண்டு பீமன் பார்த்தான். அதன் பின் அனைவரும் அவரவர் மாளிகைக்கு திரும்பி சென்றனர். பீமன், குந்தியிடமும், சகோதரர்களிடமும், நடந்தவற்றை விவரமாக கூறினான். யுதிஷ்டிரன், சகோதரர்களே! இனி நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். துரியோதனன் தான் இந்த செயலை செய்தான் என யாரும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். துரியோதனிடமும், நாம் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம். அப்பொழுது தான் அவன் செய்யும் தவறு என்னவென்பது நமக்கு தெரியும் என்றான்.

★அதன்பிறகு தான் துரியோதனனும், சகுனியும் பாண்டவர்களை அழிக்க நிறைய ஆலோசனை செய்கிறார்கள் என்பது யுயுட்சு மூலம் விதுரருக்கும், யுதிஷ்டிரனுக்கும் தெரியவந்தது. ஆகவே பாண்டவர்கள் எல்லா செயல்களிலும் கவனமுடன் செயல்பட்டனர். இச்செய்தி திருதிராஷ்டிரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. திருதிராஷ்டிரன், குழந்தைகள் அனைவரும் விளையாட்டுதனமாக இருப்பதால், அவர்கள் அனைவரும் வில்வித்தை கற்க விரும்பினான். பீஷ்மர் வில்வித்தை கற்பதற்கான ஏற்பாடுகளை ராஜகுரு கிருபாச்சாரியாருடன் கலந்து ஆலோசித்தார். இந்த ராஜகுரு யார்? என்பதனைப் பற்றி பார்ப்போம். 

நாளை....

மகாபாரதம் - 17/3/2020
~~~~~~~~~~~~~~~~~
026

கிருபர்....


★கிருபர் எனப்படும் கிருபாச்சாரியார் மகாபாரத்தில் அஸ்தினாபுரம் அரசவையில் ராஜகுருவாக இருந்தவர். இவருடைய சகோதரியை துரோணர் திருமணம் செய்து கொண்டார். கிருபரைப் பற்றி பார்ப்போம்.

★கௌதமரிஷியின் பேரன் சரத்வான் முனிவர். சரத்வான் பிறக்கும்போதே வில் அம்புகளுடன் பிறந்தவர். இளமைக் காலத்தில் வேதங்களைப் படிப்பதில் நாட்டமின்றி அனைத்து ஆயுதங்களையும் கற்றுத் தேர்ந்தார். அவரை விற்போட்டியில் யாராலும் வெல்லமுடியாதிருந்தது. இன்னும் அறிவை வளர்த்துக் கொள்ள சில முனிவர்களின் ஆலோசனைப்படி பரமசிவனை குறித்து கடும் தவம் மேற்க்கொண்டார்.

★இந்திரன் அவரின் தவ வலிமையைக் கண்டு பிரமித்தார். அவருடைய தவத்தைக் கலைப்பதற்காக ஜனபதி என்னும் ஒரு அப்ஸரஸை (தேவலோகப்பெண்) அனுப்பினார்.

★அப்ஸரஸ் ஜனபதி  சரத்வான் முன் தோன்றி நடனம் ஆடினாள். அந்த நடனத்தால் சரத்வான் தவநிலை கலைந்து, கண்விழித்தார். அப்ஸரஸ் ஜனபதியின்  அழகில் சரத்வான் மயக்கம் கொண்டார். அதன் பிறகு சரத்வான் தவத்தை கலைத்து அவளுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு ஆணும், பெண்ணுமான இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் பிறந்த பின் தன்னிலை உணர்ந்த  சரத்வான் மீண்டும் இழந்த தவவலிமை பெற கடும் தவத்தில் ஆழ்ந்தார். அதன் பிறகு அப்ஸரஸ் ஜனபதியும்  விண்ணுலகம் சென்றாள். ஆணும், பெண்ணும் ஆகிய இரு குழந்தைகளும் வனத்தில் இருந்த முனிவர்களாளும், விலங்குகளால் வளர்க்கப்பட்டனர்.

★ஒருமுறை சந்தனு மன்னன், வனத்திற்கு வேட்டையாட வந்தான். அங்கு இரு அழகிய  குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து மனதை பறிகொடுத்தான். அங்கு வனத்திலிருந்த முனிவர்களிடம் தன்னைப் பற்றியும், தான் குழந்தைகளை வளர்க்க இருப்பதையும் சொல்லி  அவர்களை அரண்மனைக்கு அழைத்து வந்து கிருபர், கிருபி என்று பெயரிட்டு வளர்த்தார். பல வருடங்களுக்கு பின்னர் சரத்வான் தம் குழந்தைகள் இருக்கும் இடத்தை தவவலிமையால் அறிந்து அஸ்தினாபுரம் வந்தார். 

★தன் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியுற்று சரத்வான் முனிவர் தாம் கற்றறிந்த கல்விச் செல்வங்களையும்
 வில்வித்தை,வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் பிற உலக இரகசியங்களையும் அவர்களுக்கு  கற்றுக் கொடுத்தார். இவ்வாறு பல கலைகளிலும் கற்றுத்தேர்ந்த கிருபன் கௌரவர் மற்றும் பாண்டவஇளவரசர்களுக்கு சாஸ்திரங்களையும்  போர்க்கலைகளையும் பயிற்றுவிக்கும் ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். 

★சந்தனுவின் மறைவிற்கு பின் பீஷ்மருடன் சேர்ந்து இராஜ்ஜிய நிர்வாகத்திலும் ஆலோசனைகள் கூறி வந்தார். சில முனிவர்கள் மூலமாக துரோணரைப் பற்றி கேள்விப்பட்டு அவருக்கு தன் சகோதரி கிருபையை மணமுடித்தார். சகோதரிக்கு செய்ய வேண்டியவை அனைத்தையும் சிறப்பாக செய்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார்.
பின்பு கிருபாச்சாரியார் அஸ்தினாபுரத்து ராஜகுரு பதவியேற்றார்.

★மகாபாரதப்போரில் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டார்  கிருபர். போரின் கடைசியில் இறவாமல் இருந்த வெகுசிலரில் கிருபரும் ஒருவர். தனது தந்தை  சரத்வான் முனிவர் மற்றும் இந்திரனால் 'சிரஞ்சீவி' என ஆசிர்வதிக்கப் பட்டார். இறவாதவர்கள் எனக் கருதப்படும் சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவர் கிருபர்.

★ஏழு சிரஞ்சீவிகள்: அஸ்வத்தாமா, பலி, வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஆகியோர். இந்தப் பட்டியலைத் தரும் சுலோகம் ஒன்றுண்டு.

★ “அஸ்வத்தாமா பலிர்                வ்யாஸோ ஹனுமான்ச விபீஷண:க்ருப:  பரசுராமஸ்ச சப்தைதே சிரஞ்ஜீவின:"

★போரின் முடிவில் அபிமன்யுவின் மகன் பரீஷ்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றினார். கிருபரைப் பற்றிய அறிமுகம் போதுமென நினைக்கின்றேன். இனி கதையின் ஓட்டத்தில் அவரை அங்கங்கே காணலாம்.

--நாக சுபராஜராவ்

- நாளை.....


மகாபாரதம் - 18/3/2020
~~~~~~~~~~~~~~~~~
027

சந்திர வம்சம்....

★பீஷ்மரும் கிருபரும் நன்கு ஆலோசித்து பாண்டவ கௌரவர்களுக்கு அஸ்திர பயிற்சி அளிக்க தீர்மாணித்தனர். நல்ல ஆசிரியரைத்தேடி தூதுவர்களை நாலாபக்கமும் அனுப்பினர். தனது தங்கையின் கணவர் துரோணர் என்பவர் இருப்பதாகவும் அவர் வில்வித்தையில் தலைசிறநதவர் என்றும் கிருபர் கூறினார். அவரை வரச்சொல்லுங்கள் பார்க்கலாம் என பீஷ்மர் பதிலுரைத்தார்.

★சிலநாட்கள் கழிந்தன. ஓர்நாள் பீஷ்மர பாண்டவர்கள்யும் கௌரவர்களையும் தனது இருப்பிடத்திற்க்கு வரவழைத்தார். வருகை புரிந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார். குழந்தைகளே! நீங்கள் எல்லோரும் பெருமை மிக்க குருவம்சத்தை சேர்ந்தவர்கள். நமது வம்சத்திற்க்கு பெருமை சேர்க்க வேண்டுமே தவிர சிறுமை சேர்க்கலாகாது. நமது முன்னோர்கள் வீரம் அன்பு கருணை இரக்கம் தியாகம் ஆகிய நற்குணங்களைக் கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்தனர். அவர்களைப் போல் நீங்கள் விளங்க வேண்டும் என்றார்.

★அப்போது யுதிஷ்டிரன் பிதாமகரே நமது முன்னோர்களைப் பற்றி கூறுங்கள் என்றான். பிதாமகர் பீஷ்மர் கூறத் தொடங்கினார்.

★நமது முன்னோர்களில் ஒருவனான 
யயாதி அத்தினாபுரத்தை 
தலைநகராக கொண்டு ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். 
இவனது தந்தை நகுஷன், 
நூறு அசுவமேத யாகங்களை  செய்து முடித்தமையால் 
தேவ உலக பதவியை அடைந்தவன். 

★அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதி -தேவயானி மூலம் யது மற்றும் துர்வசு என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

★அசுர மன்னன்  விருசபர்வன் மகளும், 
தேவயானியின் நெருங்கிய தோழியுமான சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். சர்மிஷ்டைக்கு யயாதி மூலமாக  துருயு, அனு மற்றும் புரு 
எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர்.

★இச்செய்தி கேட்ட தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான  சுக்கிராச்சாரியிடம் தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரியார், தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலேயே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான். கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாதரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார்.

★பின்னர் யயாதி தனது 
முதல் மனைவியான  தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கு அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்று சாபம் இட்டார்.

★பின்னர் மற்ற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்கு 
பிறந்த கடைசி மகனான  புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்று தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து பல ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பமாக வாழ்ந்தான்.

★ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே,  புருவை  அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக் கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவியருடன் கானகம் 
ஏகி நற்றவம் செய்து  தேவலோகம் அடைந்தான்.

★தேவயானியின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள். ஸ்ரீகிருஷ்ணர் இந்த யாதவ குலத்தில்தான் தோன்றினார். யதுவின் வழித்தோன்றல்கள் வடமதுரை, விதர்ப்பம், சேதி, குந்திபோஜம், துவாரகை, 
சூரசேனம், மகதம் போன்ற நாட்டை ஆண்ட சிற்றரசர்களான யாதவர்கள். கம்சன்,  கண்ணன், பலராமர், 
சிசுபாலன், ஜராசந்தன், 
குந்திபோஜன், கிருதவர்மன், சாத்தியகி, உத்தவர் 
ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.

★சர்மிஷ்டையின் இளைய மகன் புருவின் வழித் தோன்றல்கள்தான் நீங்கள். அதாவது  பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆவீர் என்று முடித்தார்.

★மிக்க மகிழ்ச்சி என்று கூறிய யுதிஷ்டிரன், அப்படியே மன்னன் புரூவிற்க்கு பின் இருந்தவர்களைப் பற்றி கூறுங்கள் பிதாமகரே எனக் கேட்டான்.

--நாக சுபராஜராவ்

நாளை......


மகாபாரதம் - 19/3/2020
~~~~~~~
028

யார் இந்த அந்தனர்?

★பீஷ்மரும் கூறத் தொடங்கினார்.நமது வம்சம் சந்திர வம்சம் எனப்படும்.
இந்த வம்சத்தின் ஆரம்பம் சந்திரனிடம் இருந்து தொடங்குகிறது.

★சந்திரன் மகன்
புரூரவன்

★இவரது மக்கள் ஆயு,  தீமந்தன்,  அமவசு, 
சிராயு (தசதாயு),
சுருதாயு (வசுமந்தன்)

★இவர்களுள் ஆயுவின் மக்கள் ரஜி, அரம்பன்,  நகுஷன், க்ஷத்ர விருதன்,அநேநஸ்

★இவர்களுள் நகுஷனுடைய மக்கள் உத்தபன், ஆயதி, 
யயாதி, யதி, சம்யாதி

★இவர்களில் யயாதியின் மக்கள் யது, துர்வசு, துரியு, அனு மற்றும் புரூ

★இவர்களில் புரூவின் மக்கள் துரஸ்வன் மற்றும்
வக்ரி

★இவர்களில் துரஸ்வன் மகன் கோபானன்

★கோபானன் மக்கள் காந்தன்
மற்றும் துர்யசித்தன்

★காந்தனின் மகன் குரு.
இவனுக்கு பின்தான் நாம் குருவம்சம் என்றழைக்கப் பட்டோம்.

★குருவின் மகன் துஷ்யந்தன்.
(துஷ்யந்தன்-சகுந்தலை கதையும் ஶ்ரீமத் பாகவதத்தில் வருகிறது)

★துஷ்யந்தனின் மகன் பரதன்.

★பரதனின் மகன் பிரதிபன்.

★பிரதிபனின் மகன் சாந்தனு.

★சாந்தனுவின் மக்கள் பீஷ்மர், சித்திராங்கதன் மற்றும் விசித்திரவீரியன்.

★விசித்திரவீரியனின் மக்கள் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன். கௌரவராகிய நீங்கள் நூறூ பேரும் திருதராஷ்டிரன் புதல்வர்கள். யுதிஷ்டிரா, நீயும் உன் தம்பிகள் நால்வரும் பாண்டு புத்திரர்கள் என்றார்.

★தங்களது வம்சாவளியைத் தெரிந்து கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

★ ஒருநாள் அஸ்தினாபுரத்தின் இளவரசர்கள் நகரின் வெளியே பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களின் பந்து கிணற்றில் விழுந்து விட்டது. இளவரசர்கள் அதை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அதை எடுக்க முடியாமல் கவலை அடைந்தனர். 

★அப்பொழுது அந்த வழியாக  ஓர் அந்தனர் வந்து கொண்டிருந்தார். கவலையாக நின்று கொண்டிருந்த அரச குமாரர்களைப் பார்த்து விசாரித்தார். பின் அவர்களுக்கு உதவ நினைத்தார். கிணற்றை எட்டிப் பார்த்த அந்தனர் அங்கு முளைத்திருந்த புற்களை பிடுங்கினார்.மந்திரம் உச்சரித்து ஒரு புல்லைக் கிணற்றில் போட்டார்.அப்புல் நீரில் மிதந்து கொண்டிருந்த பந்தின் மேல் ஒட்டிக் கொண்டது. பிறகு அடுத்தடுத்து எல்லா புற்களும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டன.கடைசி புல் கிணற்றின் விளிம்பிற்கு வந்ததும் அதைப பற்றி இழுத்தார்.எலலா புற்களும் ஒட்டிக் கொண்டிருந்த பந்துடன் வெளியே வந்தது. அந்தனர் பந்தை சிறுவர்களிடம் கொடுத்தார். அரச குமாரர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

★அநதனரின் செயலைக் கண்டு இளவரசர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். பிறகு அனைவரும் பீஷ்மரிடம் சென்று நடந்தவற்றை கூறினர். பீஷ்மரும் வில்வித்தை கற்று கொடுக்க சிறந்த பயிற்சியாளரை தேடிக் கொண்டு இருந்தார் அல்லவா?  இளவரசர்கள் இவ்வாறு கூறியதால் அந்த அந்தனரை அழைத்து பேசினார். அவர், தான் கிருபரின் மைத்துனர் எனறு கூறி தன் வாழ்க்கை   பற்றிக் கூறினார். பீஷ்மர், அந்தணரே! நீரே அஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு குருகுல பயிற்சியை கொடுக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்கள் வீடு வந்து சேரும். இனி நீர் தான் எங்கள் இளவரசர்களின் குருகுல தலைவர். இங்கு உங்களுக்கு அனைத்து உரிமையும் கிடைக்கும் என்றார். அந்த அந்தனர்தான் துரோணர் என்கிற துரோணாச்சாரியார்.

--நாக சுபராஜராவ்

--நாளை......

மகாபாரதம் - 20/3/2020
~~~~~~~~~~~~~~~~~
029

துரோணர்...

★ரிஷி பாரத்துவாஜர் தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும் போது க்ருடசி என்ற கந்தர்வக் கன்னியைக் கண்டார். கண்டவுடன் அவள் மீது காதல் கொண்டார். அந்த கந்தர்வக் கன்னியைக் அவள் சம்மதத்துடன் மணந்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தார் துரோணர்.

★பரத்வாஜரிஷியின் நண்பராகிய பாஞ்சால தேசத்து அரசன்  பிரஷதனின் மகன் துருபதன். அக்கினிஹோத்ரி முனிவரின் மாணாக்கன். இவரும் துரோணரும் ஒரே  ஆசிரமத்தில் குருகுல கல்வி பயின்று வந்தனர். துரோணர் வேத சாஸ்திரங்களையும், அஸ்திர பயிற்சிகளையும் நன்கு கற்றார். துருபதன் அஸ்திர பயிற்சியை கற்று வந்தான். இருவரும் சிறுவயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்களின் படிப்பும், பயிற்சியும் முடித்து அனைவரும் ஆசிரமத்தை விட்டு புறப்படும் நேரம் வந்தது.

★துருபதன் தன் நண்பனாகிய துரோணரை விட்டு பிரிவதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டான். துருபதன், துரோணா! நான் பாஞ்சால நாட்டின் மன்னராக பட்டம் 
சூட்டியதும், எனது ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தருகிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட துரோணரின் நெஞ்சம் நெகிழ்ந்து போனது. அதன் பிறகு இருவரும் அவரவர் இருப்பிடத்திற்கு சென்றனர். 

★அந்தணரான துரோணர், கிருபாச்சாரியாரின் சகோதரியான கிருபியை மணந்தார். அவர்களுக்கு அசுவத்தாமன் என்ற மகன் பிறந்தான். அனைத்து கலைகளிலும் வல்லவராக இருந்தும் செல்வம் சேர்க்கும் கலையில் சிறு மாணவராகவே இருந்தார். மனைவியையும், மகனையும் நல்லபடியாக வாழ வைக்க அவருக்கு செல்வம் தேவையாக இருந்தது.

★அப்போது பரசுராமர் தன்னுடைய செல்வம் அனைத்தையும் அந்தணர்களுக்கு தானம் அளித்து விட்டு, துறவு மேற்கொள்ள செல்வதாக துரோணருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் பரசுராமரைச் சந்திக்கச் சென்றார். துரோணர் செல்லும் முன்பாகவே, தன்னுடைய செல்வம் அனைத்தையும் அந்தணர்களுக்கு வழங்கி முடித்திருந்தார் பரசுராமர்.

★துரோணர் தன்னிடம் வந்து நிற்பதைக் கண்ட பரசுராமர், நான் அனைத்தையும் தானம் அளித்து விட்டேன். என்னிடம் இப்போது இருப்பது என் உயிரும், நான் கற்ற அஸ்திர சாஸ்திரங்களும் தான் என்றார். துரோணர், சுவாமி! செல்வம் போனால் என்ன? தங்களிடம் உள்ள அஸ்திர சாஸ்திரங்களை எனக்கு கற்றுத் தாருங்கள் என்றார். பரசுராமரும், தன்னுடைய வித்தைகள் அனைத்தையும் துரோணருக்கு கற்று கொடுத்தார். பரசுராமரிடம்  போர்த் தந்திரங்களைக் கற்றார். என்னுடைய வித்தையை சத்திரியர்களுடன் பகிர்ந்துகொண்டு விடாதே என எச்சரித்தார் பரசுராமர். மாட்டேன் என வாக்குறுதி தந்தார் துரோணர். ஆனால்  பரசுராமர் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததுமே வாக்குறுதியை மறந்தார் துரோணர்.

★அஸ்திரங்களை கற்ற துரோணர் வீடு திரும்பும் நேரம் வந்தது. அப்பொழுது தான் அவருக்கு செல்வம் வேண்டும் என்ற எண்ணம் வந்தது.  துரோணருக்கு துருபதன் நினைவு வந்தது. நண்பனை காண பாஞ்சால நாட்டிற்கு சென்றார். துருபதனை சந்தித்து, சிறு வயதில் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினார்.

★துருபதன், அந்தணரே! தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?  நன்றாக நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். நானோ பாஞ்சாலத்தின் மன்னன். நீங்களோ பஞ்சத்தில் இருந்து மீள்வதற்காக போராடுபவர். நான் உங்களின் நண்பனா? உமக்கு யாசகம் வேண்டும் என்றால் அதை என்னிடம் நேராகவே கேட்கலாம். நான் உன் நண்பன் என்று கூறிக் கேட்க வேண்டாம் என்றான்.

★எல்லோரும் கூடியதுயிருக்கும் அரசவையில் துருபதன் கூறிய இந்த சொற்கள், துரோணரின் மனதில் அம்பாக குத்தியது. மிகுந்த அவமானமும், தலைக்குனிவும்  ஏற்பட்டது. கோபம் கொண்ட துரோணர், அரசே! ஒரு நாள் நான் உங்களுக்கு இணையாக வருவேன். நீர் எமக்கு கொடுப்பதாக சொன்ன நாட்டையும் பெறுவேன் எனக் கூறி விட்டு அங்கிருந்து தன் இல்லத்திற்கு சென்றார். 

★அங்கு சென்றதும் குடும்பத்தின் வறுமைநிலை அவரை கலங்கடித்தது.
அஸ்தினாபுரம் இளவரசர்களுக்கு போர்கலைகளை கற்றுத்தர வரச்சொல்லி தன் சகோதரன் கிருபர் தகவல் அனுப்பியிருப்பதாக மனைவி கிருபி கூறியதைக் கேட்ட துரோணர் அஸ்தினாபுரம் செல்ல முடிவெடுத்தார். சென்றார். 

★துரோணர் அத்தினாபுரம் 
வந்த போது குரு வம்சத்துப் பிள்ளைகள் கிணற்றிலிருந்து ஒரு பந்தை மீட்பதில் மும்முரமாக இருந்தனர். இராச குமாரர்களுக்கு உதவ நினைத்தார் துரோணர். நீண்ட ஒரு புல்லை எடுத்து கிணற்றில் இருந்த பந்தின் மீது வீசினார். இது பந்தைத் துளைத்து ஒட்டிக்கொண்டது. அடுத்தப் புல்லை எடுத்து ஏற்கனவே பந்தின் மீது ஒட்டியிருந்த புல்லின் மீது வீசினார் புல்லின் மேல் நுனியோடு சேர்ந்து ஒட்டிக்கோண்டது. இப்படியே அடுத்து அடுத்து எடுத்து வீச ஒரு சங்கிலித் தொடரைப் போல கோர்த்துக் கொண்டதும் புல்லை மெதுவாக மேலே இழுத்தார் பந்து மேலே வந்தது. துரோணர் அடுத்து தன் மோதிரத்தை எடுத்து கிணற்றில் வீசினார். அம்பை எடுத்து வில்லில் பூட்டி எய்தார். அம்பு பாய்ந்து சென்று மோதிரத்தைச் சேர்த்து எடுத்துக்கொண்டு மேலே வந்தது. இந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போன அரச குமாரர்கள் பீஷ்மரிடம்சென்று நடந்ததை கூறினார்கள்.

★பீஷ்மரும் வில்வித்தை கற்று கொடுக்க சிறந்த பயிற்சியாளரை தேடிக் கொண்டு இருந்தார். இளவரசர்கள் இவ்வாறு கூறியதால் துரோணரை அழைத்து பேசினார். அவர் பெயர் துரோணர் என்றும் கிருபரின் மைத்துனர், பரசுராமரிடம் பயின்றவர் என்றும் அறிந்து அரசகுமாரர்களுக்கு குருவாக இருக்க கேட்டுக் கொண்டார்.

★கௌரவர்களையும்,பாண்டவர்களையும் துரோணர் சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.  வெகு சீக்கிரத்திலேயே தருமன் ஈட்டி எறிவதிலும், அருச்சுனன் வில் வித்தையிலும், பீமனும், துரியோதனனும்,துச்சாதன்னும் 
கதை சுழற்றுவதிலும்,  நகுலன்,சகாதேவன்இருவரும் வாள் வீச்சிலும் தேர்ந்தனர்.

★பிறப்பால் அந்தனராக இருந்தாலும் பரசுராமரின் கட்டளையை மீறி சத்திரியர்களுடன் உறவாடி அவர்களுக்கு எல்லா பயிற்சியும் அளித்தவர். தாழ்ந்த குலத்தில் பிறந்ததிற்காக கர்ணனுக்கும் ஏகலைவனுக்கும் வில்வித்தை கற்றுத்தர மறுத்தவர். அநேகர் அறியாத இவருடைய கதை ஒன்றுண்டு. அதை நாளை அறியலாம்.

--நாக சுபராஜராவ்

--நாளை.....


























No comments:

Post a Comment