Thursday, March 19, 2020

காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 திவ்ய தேசங்கள்

ராதே கிருஷ்ணா 20-03-2020



காஞ்சிபுரம் :
வைணவ தலங்கள் எத்தனையோ இருந்தாலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம், அதாவது, அந்தந்த கோவில் பெருமாளை சிறப்பித்து பாடியுள்ள தலங்கள் மட்டும், திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன.
அவற்றில், காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 15 திவ்ய தேசங்கள் உள்ளன. இதையே தொண்டை நாட்டு திருப்பதிகள் என்றும் கூறுவதுண்டு. ஆழ்வார்கள், 12 பேர். அதில் ஆண்டாள் ஒருவரே பெண். இவர்கள், திருமால் மீது அளவு கடந்த அன்பு கொண்டு பாடிய பாடலுக்கு, திருமால் அவர்கள் முன் தோன்றியுள்ளார்.
இறைவனிடம் பேசும் வல்லமை படைத்தவர்கள். அதனால் திருமழிசையாழ்வார், பெருமாளை பாம்பு படுக்கையை மடக்கி கொண்டு, 'என்னுடன் வா...' என கூறியதும், பக்தனின் அன்புக்கு கட்டுப்பட்டு, இறைவன் அவருடன் சென்றார். அத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலங்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளன. காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 முதல், இரவு 8:00 மணி வரையிலும் தரிசிக்கலாம்.
வைகுண்டப் பெருமாள்
இந்த கோவில் மூலவர் விமானம், மூன்று நிலைகளை கொண்டுள்ளது. கீழ்தளத்தில் பெருமாள் அமர்ந்த நிலையிலும், நடுவில் ரங்கநாதன் சயன கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் காட்சியளிக்கிறார்.
மேல் தளத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோவில் மூலவர் பிரகாரம் சுற்றி நுாற்றுக்கணக்கான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் ஒரே கல்லாலான துாண்கள் உள்ளன. இந்த தலத்து பெருமாளை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
விஜயராகவப் பெருமாள்
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. சீதாதேவியை ராவணன் சிறையெடுத்து சென்ற போது, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு, தன் உயிரை நீத்ததாகவும், அதனால், ராமன் அதற்கு மோட்சம் அளித்த தலமாக புராணத்தில் கூறப்படுகிறது.
ராமானுஜர் சிறுவயதில் யாதவ பிரகாசரிடம் கல்வி கற்றது, இந்த கோவிலில் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வறுத்த பச்சை பயிறை ஈர சேலையில் கட்டி முளைக்கும் அதிசயமும், இந்த கோவிலில் நிகழ்கிறது. திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை புகழ்ந்து பாடியுள்ளார்.
வரதராஜப் பெருமாள்
கோவில்ஐராவதமே மலையுருவில் பெருமாளை தாங்கி நிற்கிறது. எனவே, இந்த தலத்திற்கு அத்திகிரி என, மற்றொரு பெயரும் உண்டு. பெருந்தேவி தாயார் அமர்ந்த கோலத்திலும், வரதராஜப் பெருமாள் நின்ற கோலத்திலும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இங்குள்ள அனந்த சரஸ் தீர்த்தத்தில் மூழ்கி இருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வருவார். உடையவர் ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வாருக்கு இத்தலத்து பெருமாள், மீண்டும் கண்களை கொடுத்த சிறப்பும் உண்டு. இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற எம்பெருமானை, பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
சரஸ்வதி தேவி, வேகவதி நதியாய் உருவெடுத்து, பிரம்மன் யாகத்தை தடுக்க முற்பட்ட போது, பெருமாள் ஆற்றின் குறுக்கே படுத்து தடுத்தார். திருமழிசையாழ்வார் சீடனை மன்னன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டான்.
அதனால், திருமழிசையாழ்வாரும் புறப்பட, பெருமாளை, பாம்பு படுக்கையுடன் என்னுடன் புறப்பட்டு வா... என்று கூறினார். பெருமாளும் அவருடன் சென்றதால், மறுநாள் மூலவர் சிலையை காணவில்லை என, மன்னன் வியந்தான்.
பின், திருமழிசையாழ்வாரை தேடி, அழைத்து வர உத்தரவிட்டான்.அதை தொடர்ந்து, பெருமாளும் வந்து மீண்டும் பாம்பு படுக்கையுடன் காட்சியளித்தார். இத்தலத்து பெருமாளை திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடியுள்ளனர்.
நிலாத்திங்கள் துண்ட பெருமாள்
(ஏகாம்பரநாதர் கோவில்)திவ்ய தேச கோவில்கள் பெரும்பாலும் தனித்து இருப்பது வழக்கம். காஞ்சிபுரத்தில் சைவ தலத்தில் இரு திவ்ய தேசம் அமைந்துள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் உள் பிரகாரத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பாற்கடலில் அமுதம் கடைந்து எடுத்த போது, அதனால், ஏற்பட்ட வெப்ப நோயை நீங்குவதற்கு, காஞ்சி ஏகம்பனை தரிசனம் செய்ய பிரம்மன் கூறினார். அங்கு சென்ற பெருமாள் சிவபெருமானை வணங்க, அவர் தலையில் அணிந்திருந்த சந்திர ஒளி பட்டு பெருமாள், வெப்பம் நீங்கியதாக புராணம் கூறுகிறது. அதனால் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என, பெயர் உண்டாயிற்று. திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலம்.
பவள வண்ணப் பெருமாள்
பவளவல்லித் தாயார் சமேத பவளவண்ணப் பெருமாள், காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேச கோவில்களில் பழமையான கோவில். பிரம்மன் வேண்டுகோளை ஏற்று, அரக்கர்களை அழித்த திருமால் உடலில் ரத்தம் தெளித்து விழுந்தது.
அந்த கோலத்தில் காட்சியளித்ததால் அவருக்கு பவளவண்ணப் பெருமாள் என, பெயர் ஏற்பட்டது. இந்த கோவிலுக்குள் பச்சை வண்ணப் பெருமாள் ஆதிசேஷன் மீது காட்சியளிக்கிறார். பிருகு முனிவருக்கு இந்த கோலத்தில் காட்சி அளித்துள்ளார். இத்தலத்து பெருமாளை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருக்கள்வனுார் (காமாட்சி அம்மன் கோவில்)
-காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மூலவர் சன்னதியின் வலது பக்கத்தில் அஞ்சிலை நாச்சியாருடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
பார்வதியும், மகாலட்சுமியும் பஞ்ச தீர்த்த கரையில் அமர்ந்து, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். லட்சுமியை காணவில்லையே என, பெருமாள் தேடி வந்து பார்த்த போது, தேவியர் இருவரும் பேசி கொண்டிருப்பதை கவனித்து, மறைந்திருந்து ஒட்டுக்கேட்டார்.
இதை கவனித்த பார்வதி தேவி, 'கள்வன்' என்று பட்டம் கொடுத்து விட்டார். அதன் காரணமாக, திருக்கள்வனுார் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்து பெருமாளை, திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
அழகிய சிங்கப்பெருமாள் கோவில்
வேளுக்கைவல்லி தாயார் சமேத அழகிய சிங்கப்பெருமாள் பிருகு முனிவருக்கு ஏற்பட்ட நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தலம். இது திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது எப்படி இருந்திருப்பார் என, தனக்கு மட்டும் அந்த காட்சியை காட்ட வேண்டும் என்று தவம் இருந்தார்.
அவரின் தவத்தை மெச்சி, அவருக்காக நரசிம்ம மூர்த்தியாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இத்தலத்தில் யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்து பெருமாளை பேயாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர்.
அஷ்டபுஜப் பெருமாள்
கோவில்பிரம்மன் யாகத்தை அழிக்க, சரஸ்வதி அசுரர்களை அனுப்பினார். இதனால், கோபம் கொண்ட பெருமாள், எட்டு கரம் கொண்டு அசுரர்களை அழித்தார். அதன் காரணமாக, அஷ்டபுஜப்பெருமாள் என, பெயர் ஏற்பட்டது.
மகாசந்த முனிவர் திருமாலை நோக்கி தவம் செய்தார். அதை இந்திரன் கலைக்க முற்பட்ட போது, முனிவர் யானையாக மாறினார். யானை உருவில் அருகில் உள்ள குளத்தில் இருந்து தினமும் தாமரை பறித்து, பெருமாளை பூஜித்தார். ஒரு நாள், குளத்தில் இருந்த முதலை, யானை காலை, பற்றியது.
அதன் அலறல் சத்தம் கேட்டு, பெருமாள் தன் கையில் உள்ள சக்கராயுதத்தால் முதலையை கொன்று, யானையை காப்பாற்றினார் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவனை, திருமங்கையாழ்வார், பேயாழ்வார் பாடியுள்ளனர்.
விளக்கொளி பெருமாளகோவில்
மரகதவல்லி தாயார் சமேத விளக்கொளி பெருமாள் கோவில், வைணவ தலங்களில் சிறப்பு மிகுந்த கோவில். பிரம்மன், சரஸ்வதி தேவி துணை இல்லாமல் யாகம் நடத்தி, பெருமாளை நேரடியாக தரிசனம் செய்ய துவங்கினார்.
அதை தடுப்பதற்கு மாயநலன் என்ற அசுரனை அனுப்பி, உலகை, முழுவதும் இருட்டாக்கி விட்டார் தாயார்..
இந்த செயலை கண்ட பெருமாள், தன் கையில் ஒளி விளக்கை ஏற்றி, இருட்டை நீக்கி, பிரம்மாவுக்கு உதவினார்.அதனால் இத்தலத்து பெருமாளுக்கு, விளக்கொளி பெருமாள் என்ற பெயர். இத்தலத்து பெருமாளை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
நான்கு திவ்ய தேசம் கொண்ட உலகளந்த பெருமாள் கோவில்
இக்கோவில், நான்கு திவ்ய தேசம் தலம் கொண்டது சிறப்பு. திருமால் வாமனன் அவதாரம் எடுத்து, மகாபலி மன்னனிடம், 3 அடி நிலம் கேட்டு, 2 அடியில் உலகத்தை அளந்து, மூன்றாவது அடிக்கு, மகாபலி மன்னன் தலையில் கால் வைத்து அழுத்த அவன் பாதாள உலத்திற்கு சென்று வீழ்ந்தான்.
பாதாள உலகத்தில், பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக காண தவம் இருந்தான். அதற்காக உலகளந்த திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தந்தார்.
இத்தலத்தில், ஊரகத்தான், காரகத்து பெருமாள், நீரகத்து பெருமாள், கார்வானப்பெருமாள், என நான்கு சன்னதிகள் உள்ளன. இந்த நான்கு பெருமாளை திருமங்கையாழ்வார், திருமழிமையாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள் ஆகியோர் பாடியுள்ளனர்.
பாண்டவத் துாதப் பெருமாள்
பாண்டவர்களின் பக்க பலமாக இருந்தவர் கிருஷ்ணன். அவரை கொன்று விட்டால், பாண்டவர்களை எளிதில் அழித்து விடலாம் என, துரியோதனன் திட்டம் தீட்டினான். அதற்காக கண்ணனை கவுரவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, பாதாளத்தில் தள்ளி, வீரர்களை வைத்து அழித்துவிட நினைத்தான்.
அதன்படி, பகவான் கண்ணன், அவர்கள் அழைப்பை ஏற்று, அவருக்காக அமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார். அந்த நாற்காலி பாதாளத்தில் விழுந்தது.
அங்கு வீரர்கள் கண்ணனை கொல்ல முயன்றனர். கண்ணன் விஸ்வரூபம் எடுத்து அவர்களை அழித்தார். அந்த காட்சியாக பாண்டவதுாதப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் பாடியுள்ளனர்.



No photo description available.

No comments:

Post a Comment